search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deepak Jacob"

    • மாவட்ட கலெக்டர் தலைமையில் வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
    • மொத்தம் 400 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்தனர். 700 காளைகள் பதிவு செய்யப்பட்டன.

    தஞ்சாவூா்:

    தஞ்சை அடுத்த மாதாக்கோட்டையில் பொங்கல் விழாவை முன்னிட்டு லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு மாதாக்கோட்டையில் இன்று காலை நடைபெற்றது.

    போட்டியை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் தொடங்கி வைத்தார். முன்னதாக அவரது தலைமையில் வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    ஜல்லிக்கட்டை முன்னிட்டு காளைகள் திறந்துவிடப்படும் வாடிவாசலில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை 1 அடி உயரத்துக்கு தென்னை நார்கள் பரப்பப்பட்டு இருந்தன. அதேபோல் காளைகள், பார்வையாளர் பகுதிக்குள் சென்றுவிடாதபடி தடுக்க இரும்பு கம்பிகள், சவுக்கு கட்டைகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன.

    ஜல்லிகட்டில் பங்கேற்க தஞ்சை, திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் நேற்று இரவு முதலே தஞ்சைக்கு சரக்கு லாரி மூலம் அழைத்து வரப்பட்டன. இதேப்போல் மாடுபிடி வீரர்களும் அதிகாலை முதலே வரத் தொடங்கினர். மேலும் காளையை அடக்க வந்த வீரர்கள் மது அருந்தி உள்ளனரா? புகையிலை பொருட்கள் வைத்திருக்கிறார்களா? என்ற வழக்கமான பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

    இதேப்போல் காளைகளுக்கு கால்நடை பராமரிப்பு துறை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வன் தலைமையில் கால்நடை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். மொத்தம் 400 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்தனர். 700 காளைகள் பதிவு செய்யப்பட்டன.

    இதையடுத்து ஒவ்வொரு காளையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அவைகள் துள்ளிக்குதித்து களத்துக்குள் வந்து சீறிப்பாய்ந்தது. காளைகள் வீரர்களை நோக்கி சீறி பாய்ந்தபோது சிலர் தரையில் படுத்து கொண்டனர்.

    காளைகள் களத்தில் நின்று விளையாடியதை பார்வையாளர்கள் மெய்மறந்து கண்டு ரசித்தனர். பலர் வீடுகளின் மாடியில் நின்று கண்டு ரசித்தனர். இதேப்போல் காளையை வீரர்கள் அடக்கும் போது கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்தினர்.

    களத்தில் நின்று விளையாடிய காளைகளை ஆக்ரோஷத்துடன் வீரர்கள் அடக்கினர்.

    காளைகளின் திமிலைப் பிடித்து அடக்கிய வீரர்களுக்கு சைக்கிள், அண்டா, பாத்திரம் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இதேப்போல் வெற்றி பெற்ற காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் பரிசை பெற்றுக் கொண்டனர்.

    காளைகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் சிலருக்கு அங்கேயே மருத்துவ குழுவினர் முதலுதவி அளித்தனர். பலத்த காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. 

    ×