search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணக்கோலத்தில் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்த சிங்கப்பூர் என்ஜினீயர்
    X

    மணக்கோலத்தில் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்த சிங்கப்பூர் என்ஜினீயர்

    • அப்பகுதி மக்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று மாட்டு வண்டியில் வந்த மணமக்களை கண்டு ரசித்தனர்.
    • மணமகனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக நண்பர்களின் இந்த சிறப்பான ஏற்பாட்டை அனைவரும் பாராட்டினர்.

    பேராவூரணி:

    பொதுவாகவே திருமணங்களில் குதிரை சாரட் வண்டிகளிலும், ஜானவாச காரிலும், மணமக்களை ஊர்வலமாக அழைத்து வருவது வழக்கம். ஆனால், இங்கு மணமக்கள் தனது திருமணம் பாரம்பரிய முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்தனர். இந்த சுவாரஸ்யமான நிகழ்வை பற்றி இங்கு காண்போம்.

    தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லை பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன்- பழனியம்மாள் தம்பதியின் மகன் வெங்கடேசுக்கும், நடுவிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பாதகுமார்- விஜயராணி தம்பதியின் மகள் நாகஜோதிக்கும் பெரியோர்களால் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டு, இவர்களது திருமணம் நேற்று ஆத்தாளூர் வீரமாகாளியம்மன் கோவிலில் நடைபெற்றது.

    மணமகனான வெங்கடேஷ் சிங்கப்பூரில் எலக்ட்ரிக்கல் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். திருமணத்தையொட்டி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த அவர் தான் விவசாய குடும்பத்தில் பிறந்ததால் தனது திருமணம் பாரம்பரிய முறையில் இருக்க வேண்டும் என நினைத்தார்.

    அதற்காக, விவசாய குடும்பங்களுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளும் தனது திருமணத்தில் பங்கு பெற வேண்டும் என வெங்கடேஷ் அவரது நண்பர்களிடம் கூறினார்.

    அதன்படி, அவரது நண்பர்கள் வெங்கடேஷின் திருமணத்தில் மாடுகளை வைத்து வெகு விமர்சையாக ஊர்வலம் நடத்த வேண்டும் என திட்டமிட்டனர்.

    அதன்படி, திருமணம் முடிந்ததும் ஆத்தாளூர் வீரமாகாளி அம்மன் கோவில் வெளியே தயார் நிலையில் இருந்த அலங்கரிக்கப்பட்ட ரேக்ளா மாட்டு வண்டியில் மணமக்கள் இருவரும் ஏறினர். பின்னர், மணக்கோலத்தில் மணமகன் மாட்டுவண்டியை ஓட்ட அருகில் மணப்பெண் புண்சிரிப்புடன் அமர்ந்திருந்தாள்.

    தொடர்ந்து, மாட்டு வண்டியானது சுமார் 2 கி.மீ. தூரம் ஊர்வலமாக சென்று பேராவூரணி அண்ணாசிலை அருகில் உள்ள திருமண மண்டபத்தை வந்தடைந்தது. வரும் வழி எல்லாம் அப்பகுதி மக்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று மாட்டு வண்டியில் வந்த மணமக்களை கண்டு ரசித்தனர்.

    மேலும், மணமகனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக நண்பர்களின் இந்த சிறப்பான ஏற்பாட்டை அனைவரும் பாராட்டினர்.

    Next Story
    ×