என் மலர்tooltip icon

    ஈரோடு

    மூதாட்டியை கொலை செய்ததாக ஒப்புக்கொள்ளுமாறு போலீசார் வற்புறுத்தியதால்தான் பரமசிவம் தற்கொலைக்கு முயன்றதாக அவரது உறவினர்கள் புகார் கூறுகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கொடுமுடி:

    கொடுமுடி அருகே உள்ள கரட்டாம்பாளையத்தை சேர்ந்த மூதாட்டி ராமலட்சுமி (வயது 73) கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் துப்பு துலங்காமல் இருந்து வந்தது.

    போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கொலை வழக்கு தொடர்பாக அதே ஊரை சேர்ந்த சதீஷ் (20) மீது தனிப்படை போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

    டிப்ளமோ படித்து பாதியில் நின்ற சதீசின் வங்கி கணக்கு புத்தகத்தை எடுத்து போலீசார் விசாரித்தனர். அப்போது பட்டுக்கோட்டையில் இருந்து சதீசின் வங்கி கணக்குக்கு ரூ. 2 ஆயிரம், ரூ. 3 ஆயிரம், ரூ. 5 ஆயிரம் என பணம் போடப்பட்டு இருந்தது.

    எனவே போலீசாருக்கு சதீஷ் மீது சந்தேகம் அதிகரித்தது. சதீஷை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். பட்டுக்கோட்டையில் இருந்து அவருக்கு பணம் போட்டவரிடமும் விசாரணை நடந்தது.

    அப்போது அந்த நபர் சதீஷ் ஏழை மாணவன் என்பதால் பணம் அனுப்பியதாக தெரிவித்தார். இந்த நிலையில் விசாரணைக்கு வந்து சென்று கொண்டிருந்த சதீஷை திடீரென காணவில்லை.

    எனவே சதீஷ் தாயின் அண்ணன் பரமசிவத்திடம் சதீஷை பற்றி விசாரித்தனர். திருப்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரியும் பரமசிவத்திடம் சதீஷை எங்கே? என்று கேட்டு விசாரணை நடந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பரமசிவத்தை போலீசார் மீண்டும் விசாரணைக்கு அழைத்து வந்தனர். சிவகிரி போலீஸ் நிலையத்தில் அவரிடம் விசாரணை நடந்தது.

    அப்போது சதீஷை எங்கே? என்று கேட்டு போலீசார் தங்கள் பாணியில் விசாரித்தனர். மேலும், ‘‘சதீஷை அழைத்து வா. இல்லாவிட்டால் மூதாட்டியை நான்தான் கொன்றேன்’’ என எழுதி தருமாறு கேட்டு மிரட்டியதாக தெரிகிறது.

    பின்னர் வெள்ளிக்கிழமை (அதாவது இன்று) சதீஷை அழைத்து வருமாறு கூறி பரமசிவத்தை போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை வீட்டில் இருந்த பரமசிவம் வி‌ஷ மாத்திரை தின்றார். இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கொடுமுடி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பரமசிவம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூதாட்டியை கொலை செய்ததாக ஒப்புக்கொள்ளுமாறு வற்புறுத்தியதால்தான் பரமசிவம் தற்கொலைக்கு முயன்றதாக அவரது உறவினர்கள் புகார் கூறுகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



    கோர்ட்டால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை சட்ட சபையில் திறக்க ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோட்டில் ஈ.பி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். சட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறக்கும் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது தவறான செயல்.

    கோர்ட்டால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஒருவரின் படத்தை சட்ட சபையில் திறக்கலாமா? அவ்வாறு செய்யக்கூடாது. அதை தவிர்க்க வேண்டும்.

    அப்படி இல்லை என்றால் ஐ.ஜி. அலுவலகங்களில் வீரப்பன், ஆட்டோ சங்கர் போன்றவர்களின் படங்களை வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.

    மெரினா கடற்கரையில் ஜெயலலிதா சமாதி உள்ளது. அப்படி இருக்கும்போது தமிழக அரசு செலவில் ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்ட முடிவு செய்துள்ளனர். ஒரு குற்றவாளிக்கு எப்படி மணி மண்டபம் கட்டலாம்? இதையும் தவிர்க்க வேண்டும்.



    ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அமைச்சர் சரோஜாவை கடந்த 10 நாட்களாக காணவில்லை. அவர் எங்கு இருக்கிறார்? என்ன செய்கிறார்? என தெரியவில்லை.

    அவர் மீது தஞ்சாவூரை சேர்ந்த ஒரு பெண் அரசு அதிகாரி லஞ்ச குற்றச்சாட்டு கூறி இருந்தார். அமைச்சர் சரோஜா இதுவரை கைது செய்யப்படாதது ஏன்? அவரை ராஜினாமா செய்ய ஏன் வற்புறுத்தவில்லை? அமைச்சர் சரோஜாவை உடனடியாக கண்டு பிடித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    டெல்லியில் தமிழக விவசாயிகள் 41 நாட்களாக இரவும், பகலும் போராடினார்கள். அவர்களை ஒரு நாள் கூட பிரதமர் மோடி சந்திக்கவில்லை. இது குறித்து பிரதமரிடம் கேட்டபோது, விவசாயிகள் சட்டை அணியவில்லை. அதனால் தான் சந்திக்க வில்லை என்று கூறி இருக்கிறார்.



    பிரதமர் மோடி போல விவசாயிகள் 10 லட்சம் ரூபாய் கோட்-சூட் போட்டு இருந்தால்தான் சந்தித்து பேசி இருப்பாரா? விவசாயிகளை சந்திக்க மாட்டேன் என்பது ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய அவமானம்.

    தனியார் பாலில் ரசாயனம் கலந்திருப்பதாக அமைச்சர் குற்றச்சாட்டு கூறி உள்ளார். இதை யார்-யார்? செய்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே சமயம் அரசு பால் சுத்தமாகத் தான் இருக்கிறது என்கிற உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

    ரஜினி பொதுவானவர் அவர் அரசியல் கட்சி ஆரம்பித்து சிறிய வட்டத்துக்குள் சிக்கி கொள்ளமாட்டார் என்று நான் நம்புகிறேன்.



    கடந்த சில நாட்களாக எம்.எல்.ஏ.க்கள் முதல்வரை சந்தித்து வருகிறார்கள். அவர்கள் உண்மையிலேயே தொகுதி வளர்ச்சிக்காகவோ மக்களுக்காகவோ சந்திக்கவில்லை. அமைச்சர் பதவி போன்றவற்றை குறி வைத்து சென்று சந்தித்திருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கல்வி முறையில் அமைச்சர் செங்கோட்டையன் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளாரே. அது பற்றி உங்கள் கருத்து என்ன? என்று நிருபர்கள் கேட்டனர்.

    அதற்கு, ‘‘ஒவ்வொரு நாளும் அவர் ஒரு அறிவிப்பு வெளியிடுகிறார். அவர் என்ன சொல்ல வருகிறார் என்றே எனக்கு புரியவில்லை’’ என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
    கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டதால் தம்பதியினர் விஷம் குடித்தனர். பொதுமக்கள் இருவரையும் மீட்டு ஈரோடு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பவானி:

    கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி வாகராம் பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (55). இவரது மனைவி பாரதி (50). விசைத்தறித் தொழிலாளர்கள்.

    இவர்கள் கருமத்தம் பட்டியில் உள்ளவிசைத்தறிப் பட்டறையில் முன்பணமாக ரூ.80ஆயிரம் பெற்றுக் கொண்டுவேலைசெய்து வந்தனர். இந்நிலையில் போதிய வேலை இல்லாததால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் வாங்கிய பணத்தைத்திரும்பச் செலுத்த முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

    மேலும் இவர்கள் நாமக்கல் மாவட்டம்,பள்ளி பாளையத்தை அடுத்தஆலம் பாளையத்தில்உள்ள பட்டறையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வேலைக்கு வந்துள்ளனர்.

    இவர்களுக்கு கடன் கொடுத்தவர்கள் தற்போது பணத்தை உடனடியாக திருப்பித் தருமாறு கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், என்ன செய்வது என்றறியாமல் தவித்த கணவன், மனைவி இருவரும் பவானி கூடுதுறை பகுதிக்கு நேற்று மாலை வந்தனர். அங்கு ஏற்கெனவே தயாராக வைத்திருந்த எலிமருந்தைத் தின்று தற்கொலை செய்ய கொள்ள முயன்றனர். இதைக் கண்ட பொதுமக்கள் அவர்கள் இருவரையும் மீட்டு பவானி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    முதலுதவி சிகிச்சைக்குப்பின்னர் இருவரும் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். கடன் தொல்லையால் கணவன், மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பவானி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து பரவலாக கோடை மழை பெய்து வருகிறது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது.

    கர்நாடக மாநில எல்லையில் உள்ள தாளவாடி, தலமலை, சிக்கள்ளி போன்ற வனப்பகுதிகளில் தொடர்ந்து கோடை மழை பெய்தது. இந்த மழையால் வன ஓடைகளில் தண்ணீர் ஓடுகிறது. காட்டாறுகளிலும் செந்நிறத்தில் தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது.

    ஆனால் இந்த தண்ணீர் எல்லாம் அப்பகுதி விவசாயிகளுக்கு பயன்படாமல் கர்நாடக மாநிலத்துக்கு பாய்ந்து எல்லையில் உள்ள கர்நாடகாவின் சிக்கல்லோ அணையில் போய் சேருகிறது.

    இது அப்பகுதி மக்களையும் விவசாயிகளையும் வேதனை அடையச் செய்துள்ளது. இந்த நீர்நிலை ஓட்டத்தை திருப்பி பவானிசாகர் அணையில் தண்ணீர் சேருமாறு செய்ய வேண்டும்.

    அதற்கு சாத்தியமில்லையென்றால் தாளவாடி பகுதியில் அந்த தண்ணீரை நிறுத்தி, சேமிக்க சிறிய அணை கட்ட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். தாளவாடியை போல் நேற்று இரவு கோபி, சத்தியமங்கலம், கவுந்தப்பாடி பகுதிகளிலும் மழை பெய்தது.
    மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் கணவர் கண்முன்னே மனைவி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஈரோடு

    நாமக்கல் மாவட்டம் ஏ.எஸ்.பேட்டை, கே.கே.பி.வீதியை சேர்ந்தவர் இளங்கோ(வயது40). இவரது மனைவி பூவிழி என்கிற தேவி(32).

    சம்பவத்தன்று இளங்கோ தனது மனைவியுடன் தனது மோட்டார்சைக்கிளில் ஈரோட்டிற்கு வந்து கொண்டிருந்தார். ஈரோடு மேட்டூர் ரோட்டில் வந்த போது ஒரு வளைவில் திரும்பிய போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராத வகையில் இளங்கோ வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் வண்டி நிலை தடுமாறி பின்னால் உட்கார்ந்து வந்த தேவி ரோட்டில் விழுந்தார். அப்போது லாரியின் பின் பக்க சக்கரம் தேவி மீது ஏறி இறங்கியது.

    இதில் பலத்த காயம் அடைந்த தேவியை அருகில் இருந்தவர் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்கைக்காக கொண்டு சென்றனர். தேவியை பரிசோதித்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இந்த விபத்தில் இளங்கோ அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தன் கண் முன்னே மனைவி இறந்து போனதை ஜீரணிக்க முடியாமல் இளங்கோ கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை பதனீர் - கள் விற்பனை நிலையமாக மாற்ற வேண்டும் என்று கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    ஈரோடு:

    பவானிசாகர் அணை 120 அடியை கொண்டது. அதன் மத்திய பகுதியில் 15 அடி சேறும் சகதியும் கொண்டது. தற்போது அணையின் நீர்மட்டம் 40 அடியாக உள்ளது.

    இந்த நிலையில் பவானிசாகர் அணையில் வண்டல் மண் அள்ள விவசாயிகளுக்கு அரசும் மாவட்ட நிர்வாகமும் அனுமதி அளித்துள்ளது.

    ஆனால் இதனால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை என கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக அச்சங்க கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. சங்க தலைவர் செ.நல்லசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில், வரும் 30-ந்தேதி தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இந்த நிலையில் பவானிசாகர் நீர் தேக்கத்தில் இருக்கும் வண்டல் மண்ணை எடுத்துக்கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு முன்பு இதனை அறிவித்திருந்தால் ஓரளவு தூர்வாரப்பட்டிருக்கும். ஆகவே இந்த அறிவிப்பால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அரசியல் அமைப்பு சட்டத்தை மதித்து தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை மூட முன் வர வேண்டும். அதே நேரத்தில் மது அல்லாத கள்ளுக்கு விதித்திருக்கும் தடையை நீக்கி அறிவிக்க வேண்டும். டாஸ்மாக் மதுக்கடைகளை பதனீர் மற்றும் கள் விற்பனை நிலையங்களாக மாற்றி அமைக்க வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    கவுந்தபாடி அருகே பைக் மோதி தனியார் பள்ளி மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கவுந்தபாடி:

    கவுந்தபாடி அருகே உள்ள சலங்கபாளையம், செந்தாம்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவர் ஈரோட்டில் உள்ள புரோட்டா கடையில் புரோட்டா மாஸ்டராக உள்ளார்.

    இவரது மகன் பூபதி (வயது 16). இவர் சித்தோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு முடித்து 12-ம் வகுப்புக்கு செல்ல இருந்தார்.

    நேற்று இரவு 7.30 மணி அளவில் இவர் சைக்கிளில் சலங்கபாளையத்தில் இருந்து பவானி ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது கோபியில் இருந்து பவானி நோக்கி வெங்கட்ராமன் என்பவர் ஓட்டி வந்த பைக், பூபதி ஓட்டி வந்த சைக்கிளின் பின்புறமாக மோதியது.

    இதில் பூபதியும், வெங்கட் ராமனும் தூக்கி வீசப்பட்டனர். பூபதி சம்பவ இடத்திலேயே பலியானார். வெங்கட்ராமன் காயம் அடைந்தார்.

    வெங்கட்ராமன் பவானியில் உள்ள ஆட்டோ மொபைல் கடையில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவர் கோபியில் இருந்து பவானி நோக்கி புதிய பைக் எடுத்து வரும்போது இந்த விபத்து நடந்துள்ளது.

    இது குறித்து கவுந்தபாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காதல் விவகாரம் தெரிந்ததால் மாயமான திருப்பூர் கல்லூரி மாணவர் மன உளைச்சலில் இருப்பதாக பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவரை தேடி வருகிறார்கள்.
    கோபி:

    திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தை சேர்ந்தவர் குமார். ரெயில்வேயில் மெக்கானிக்காக உள்ளார். இவரது மகன் சுபாஷ் (வயது 23).

    சுபாஷ் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படிக்கிறார். இவரது அக்கா வீடு ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ளது.

    கடந்த 22-ந் தேதி சுபாஷ் கோபி வந்தார். அதன் பிறகு திருப்பூர் போனவர் வீட்டுக்கு போய் சேரவில்லை. மாயமாகி விட்டார். அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று தெரியவில்லை.

    இந்த நிலையில் சுபாஷ் தனது பேஸ்புக்கில், ‘‘நான் தமிழரசி என்ற பெண்ணை காதலித்து வந்தேன். இந்த காதல் விவகாரம் அவரது பெற்றோர் வீட்டுக்கு தெரிந்து விட்டது. இதனால் நான் மன உளைச்சலில் இருக்கிறேன்’’ என்று கூறி உள்ளார்.

    இதை வைத்து பார்க்கும் போது காதல் வி‌ஷயம் தெரிந்து விட்டதால் சுபாஷ் மனம் உடைந்து மாயமாகி விட்டது தெரிய வந்தது.

    இது குறித்து அவரது தந்தை குமார் கோபி அருகே உள்ள சிறுவலூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவரை தேடி வருகிறார்கள்.
    2 நாளில் 30 அடியாக இருந்த பவானிசாகர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 9 மணி நிலவரப்படி 40 அடியை தொட்டது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை 120 அடியை கொண்டது. இதில் 15 அடி சேறும்- சகதியும் கொண்டது. மீதி 105 அடியில் தண்ணீரை சேமிக்கலாம்.

    வறட்சி காரணமாகவும் அணைக்கு தண்ணீர் வரத்து இல்லாததாலும் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. மேலும் இருக்கும் தண்ணீரை குடிநீருக்காக திறந்து விட்டதாலும் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து 30 அடியாக சுருங்கியது.

    இந்த நிலையில் நீர் பிடிப்பு பகுதியான ஊட்டி மலையில் 2 நாட்களாக கோடை மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. நேற்று முன் தினம் வினாடிக்கு 1433 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் நீர் மட்டம் உயர்ந்தது.

    இந்த 2 நாளில் 30 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் இன்று காலை 9 மணி நிலவரப்படி 40 அடியை தொட்டது.

    அதே சமயம் இன்று நீர் வரத்து நேற்றை விட குறைந்துள்ளது. நேற்று வினாடிக்கு 1433 கன அடி தண்ணீர் வந்தது. ஆனால் இன்று குறைந்து வினாடிக்கு 628 அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    இதில் குடிநீருக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 150 கன அடி தண்ணீரும் வாய்க்காலுக்கு 5 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
    இந்தி திணிப்பு, இந்துத்துவா கொள்கை என தமிழகத்தில் போர் நடந்துகொண்டு இருப்பது ரஜினிக்கு தெரியவில்லை என ஈரோட்டில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பழ.கருப்பையா பேசினார்.
    பு.புளியம்பட்டி:

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94-ம் ஆண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி திரு.வி.க. திடலில் நடைபெற்றது.

    நகர செயலாளர் சிதம்பரம் தலைமை தாங்கினார். ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், முன்னாள் நகராட்சித் தலைவர் அன்பு முன்னிலை வகித்தனர். முன்னாள் நகர துணைச்செயலாளர் ஈஸ்வர முர்த்தி வரவேற்றார்.

    கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா கலந்து கொண்டு பேசியதாவது:-

    அண்ணா நாமம் வாழ்க, எம்.ஜி.ஆர். நாமம் வாழ்க, ஜெயலலிதா நாமம் வாழ்க என கூறியவர்கள் இன்று மோடி நாமம் வாழ்க என்று டெல்லி சென்று பிரதமரை சந்திக்கின்றனர்.


    ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமரை சந்தித்தால் உடனே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்கிறார். அ.தி.மு.க. எடப்பாடி, ஓ.பி.எஸ்., தீபா அணி என பிரிந்து கிடக்கிறது.

    நடிகர் ரஜினிகாந்த் போர் துவங்கட்டும் என்கிறார். தமிழகத்தில் இந்தி திணிப்பு, இந்துத்துவா கொள்கை என போர் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அது தெரியவில்லையா?

    சினிமாக்காரர்களால் தமிழ்நாடு குட்டிச்சுவரானது. முதலில் எம்.ஜி.ஆர். வந்தார். பின்னர் ஜெயலலிதாவால் தமிழகம் பின்தங்கியது. விஜயகாந்த் எங்கு போனாரென்று தெரியவில்லை.

    1937-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கியது. தி.மு.க. ஆட்சியில் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகள் மட்டுமே இருக்க வேண்டும் இந்தி வேண்டாம் என அண்ணா அறிவித்தார்.

    இன்று தமிழ்நாட்டில் வெற்றிடம் உள்ளது. அதை நிரப்ப பல பேர் ஆசைப்படுகின்றனர். தி.மு.க. ஒரு ஆலமரம். இன்னும் 50 ஆண்டுகளுக்கு யாரும் அசைக்க முடியாத சக்தியாக தமிழகத்தை வழிநடத்தும் வலிமையான இயக்கமாக ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. இயங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் ரோட்டோரம் உள்ள மரங்கள் முறிந்து ரோட்டில் விழுந்தது. இதனால் ஈரோடு-கோவை ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களை மகிழ்ச்சி அடைய வைக்கும் வகையில் கடந்த 3 நாட்களாக கோடை மழை கொட்டி வருகிறது.

    நேற்று வழக்கம்போல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. 102 டிகிரி வரை வெயில் அடித்தது. மாலை 5 மணிக்குப் பிறகு சீதோ‌ஷண நிலை தலைகீழாக மாறியது. மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் திடீரென கருமேகக் கூட்டங்கள் சூழ்ந்தது. பிறகு திடீரென சுழட்டி... சுழட்டி சூறாவளி காற்று வீசியது. சுமார் 10 நிமிடம் கழித்து மழை பெய்யத் தொடங்கியது. சாரல் மழையாக பெய்யத் தொடங்கிய மழை பிறகு வலுத்து பெய்யத் தொடங்கியது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு கோபி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் அதிகபட்சமாக 33 மி.மீட்டர் மழை பெய்தது.

    பெருந்துறை பகுதியிலும் சூறாவளி காற்றுடன் நேற்று இரவு மழை பெய்தது. பெருந்துறை அடுத்த மகாராஜா கல்லூரி அருகே நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் ரோட்டோரம் உள்ள 2 மரங்கள் முறிந்து ரோட்டில் விழுந்தது.

    நல்ல வேளையாக அந்த நேரத்தில் ரோட்டில் யாரும் போகாததால் அசம்பாவித சம்பவம் நடக்கவில்லை. ரோட்டில் அடுத்தடுத்து 2 மரங்கள் விழுந்ததால் ஈரோடு-கோவை ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

    மேலும் பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் பாஸ்கரன் தலைமையில் தீயணைப்பு வீரர்களும் விரைந்தனர். அவர்கள் ரோட்டில் கிடந்த மரங்களை வெட்டி அகற்றினர்.

    சுமார் 1 மணி நேரத்துக்குப் பிறகு மரங்கள் அகற்றப்பட்டது. இதையொட்டி போக்குவரத்து சீரானது.
    அண்ணனின் அஸ்தியை கரைக்க வந்த தம்பி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பவானியில் இன்று காலை பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

    பவானி:

    சேலம் மாவட்டம் ஏற்காடு கண்ணங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 65). இவரது அண்ணன் நாராயணன் கடந்த வாரம் இறந்துவிட்டார்.

    அவரது அஸ்தியை கரைக்கும் நிகழ்ச்சி இன்று நடப்பதாக இருந்தது. இதற்காக நாராயணனின் மகன்களுடன்,கிருஷ்ணன் பவானி கூடுதுறைக்கு வந்தார்.

    அவர்கள் அஸ்தியை கரைக்க தண்ணீரில் இறங்கினர். அங்கு தண்ணீர் குறைவாக உள்ளதால் அதிக தண்ணீருக்காக அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது.

    அப்போது கிருஷ்ணன் கால் தடுமாறி தண்ணீருக்குள் விழுந்தார். இதில் அவர் நீரில் மூழ்கி காணாமல் போனார். இதனால் உடன் சென்றவர்கள் சத்தமிட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தனர்.

    ஆனால் கிருஷ்ணனை மீட்க முடியவில்லை. பின்னர் பரிசல்களில் சென்று தேடும் பணி நடந்தது. அப்போது கிருஷ்ணன் பிணமாக மீட் கப்பட்டார். இது குறித்து தகவல் கிடைத்ததும் பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணனின் உடல் பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பவானியில் இன்று காலை பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

    ×