என் மலர்
சென்னை
- தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல் வரும் 19-ம் தேதி நடக்கிறது.
- இந்த தேர்தலில் வேட்பாளர்களை அறிவிப்பதில் அ.தி.மு.க. மவுனம் காத்து வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல் வரும் 19-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் ஒரு எம்.பி. வெற்றி பெற வேண்டுமென்றால் 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. அந்த அடிப்படையில் தி.மு.க.விற்கு 4-ம், அ.தி.மு.க.விற்கு 2 இடங்களும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இதற்கிடையே, தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களாக வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகிய 3 பேர் அறிவிக்கப்பட்டனர். மீதமுள்ள ஒரு இடம் மக்கள் நீதி மய்யத்திற்கு தி.மு.க. ஒதுக்கியது. அதில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது.
அ.தி.மு.க. சார்பாக மாநிலங்களவை எம்.பி. வேட்பாளர்கள் யார் என இன்னும் அறிவிக்கப்படவில்லை. வேட்பாளர்களை அறிவிப்பதில் அ.தி.மு.க. தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது. அதேநேரம் தங்களுக்கு ஒரு இடம் வேண்டும் என கேட்டு தே.மு.தி.க, பா.ம.க. நெருக்கடி கொடுத்து வருகின்றன.
வேட்பாளர்கள் தேர்வு குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக அந்த கட்சியினர் கூறுகின்றனர்.
இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்துப் பேசினார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. மாநிலங்களவை எம்.பி சீட் வழங்குவது தொடர்பாக அதிமுக - தேமுதிக இடையே பிரச்சனை நீடித்து வரும் நிலையில் இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- கொரோனா பாதிப்பால் சென்னையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் 60-க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதற்கிடையே, கொரோனா பாதிப்பால் சென்னையில் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியாக தமிழகத்தில் மக்கள் கூடும் இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், கொரோனா பரவாமல் தடுக்கவும், வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- மகளிர் விடியல் பயணத் திட்டம் குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
- பயணம் 7,671 பேருந்துகளில் இப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக அரசு பெண்களின் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதில் மிக முக்கிய திட்டமாக, மகளிர் விடியல் பயணத்திட்டம் உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் அரசு மாநகர பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணித்து வருகின்றனர்.
இந்தத் திட்டத்துக்கு தமிழக பெண்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இந்தப் பேருந்துகளில் பயணிக்கும் பெண் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
மகளிர் விடியல் பயண பேருந்துகளில் நாள்தோறும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயணம் செய்வதாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் மகளிர் விடியல் பயணத் திட்டத்தில் (நேற்று) 29.05.2025 வரை தமிழ்நாடு முழுவதும் மகளிரால் 700.38 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த பயணம் 7,671 பேருந்துகளில் இப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.
- பள்ளிச் சீருடையுடன் மாணவர்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து பள்ளி வரை, கட்டணமில்லாமல் பயணிக்கலாம்.
- பள்ளி துவங்கும்-முடியும் நேரம் வரை பேருந்துகள் சரியாக இயங்குவதை கண்காணித்திட குழுக்கள் நியமனம்.
கடந்த கல்வியாண்டில் வழங்கப்பட்ட பஸ் பாஸ் அல்லது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அல்லது பள்ளிச் சீருடையுடன் மாணவர்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து பள்ளி வரை, கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, வரும் 02.06.2025 முதல் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டும், அதன் பின் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால், 2024-25-ஆம் கல்வி ஆண்டுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பயண அட்டை /புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அல்லது பள்ளிச் சீருடையுடன் மாணவ / மாணவிகள் தத்தம் இருப்பிடத்திலிருந்து தாம் பயிலும் பள்ளி வரையிலும் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம் என போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் .சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
மாணவ மாணவிகள் கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டை அவர்தம் கல்வி பயிலும் பள்ளி / கல்லூரியிலேயே அவர்களின் இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்யும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
அதற்குன்டான கால அளவினை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் 2024-25-ஆம் கல்வி ஆண்டிற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பயண அட்டை, பள்ளி மாணவ/மாணவியர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்திலிருந்து தாம் பயிலும் பள்ளி வரையிலும் சென்று வருவதற்கு, அதே போன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ/மாணவியர்கள் 2024-25 கல்வி ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டை அல்லது தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.
மேலும் பள்ளி துவங்கும்/முடியும் நேரம் வரை பேருந்துகள் சரியாக இயங்குவதை கண்காணித்திட அலுவலர்கள் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும், உரிய பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி மாணவ / மாணவியர்களை பாதுகாப்பாக ஏற்றி, இறக்கி செல்ல அனைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நடத்துநர் / ஓட்டுநர்களுக்கும் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- திரைத்துறையினரின் நீண்டகால கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அறிவிப்பு.
- வரிக்குறைப்பு திரைப்படத் துறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் கேளிக்கை வரி 8 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு அறிவித்துள்ளது.
இது திரைத்துறையினரின் நீண்டகால கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இன்று வெளியிட்ட அரசாணை மூலம் அமலுக்கு வந்துள்ளது.
இந்த வரிக்குறைப்பு திரைப்படத் துறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும், இது டிக்கெட் விலைகளைக் குறைக்கவும், திரையரங்க வருவாயை மேம்படுத்தவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடங்கியபோது அவர் பாகிஸ்தானில் இருந்ததாக என்.ஐ.ஏ. வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன.
- சன்னி யாதவ் உட்பட மேலும் 3 யூடியூபர்களின் நடமாட்டம் குறித்த தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது இந்திய ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்டதற்காக யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா மற்றும் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனைதொடர்ந்து, இதுபோன்ற வீடியோ பதிவர்கள் மீதான கண்காணிப்பை என்.ஐ.ஏ. அதிகரித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடந்த போது தெலுங்கானாவை சேர்ந்த யூடியூபர் சன்னி யாதவ் என்பவர் பாகிஸ்தானில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் பல்வேறு இடங்களுக்கு பைக்கில் சென்று வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரை தீவிரமாக கண்காணித்தனர். இந்த நிலையில் நேற்று சென்னை விமான நிலையத்தில் சன்னி யாதவை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.
தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் உள்ள நூதன்கல் மண்டலத்தை சேர்ந்த சன்னி யாதவ், இவர் பந்தய செயலிகளை ஊக்குவித்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற முயன்றார்.
அது பலனளிக்காததால், அவர் துபாய் சென்றார். அதன் பிறகு சன்னி யாதவ் துபாயில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார்.
இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கியபோது அவர் பாகிஸ்தானில் இருந்ததாக என்.ஐ.ஏ. வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன.
அவர் கடந்த காலத்தில் 5 முறை பாகிஸ்தானுக்கு பைக்கில் பயணம் செய்துள்ளார். சன்னி யாதவ் தனது பாகிஸ்தான் பயணத்தையும் பெரிய அளவில் விளம்பரப்படுத்தினார்.
சன்னி யாதவ் கைது செய்யப்பட்டது குறித்து தங்களுக்குத் தெரியாது என்றும், அவர் தொடர்ந்து பைக் பயணங்களுக்குச் செல்வதாகவும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
டி.வி.யில் பார்த்த பிறகுதான் இந்தத் தகவல் பற்றித் தெரிந்து கொண்டதாக அவர்கள் கூறினர்.
பைக்கில் நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று, அங்குள்ள நிலைமைகளை விவரிக்கும் வீடியோக்களை எடுத்து சன்னி யாதவ் வெளியிட்டார்.
சன்னி யாதவ் உட்பட மேலும் 3 யூடியூபர்களின் நடமாட்டம் குறித்த தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சன்னி யாதவ் ஏன் பாகிஸ்தானுக்குச் சென்றார்? பதற்றமான சூழ்நிலையில் பாகிஸ்தான் நாட்டிற்குச் செல்வதற்கான காரணம் என்ன? இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
- 2026 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் புதிய விதிகளை செயல்படுத்தலாம் என்பது சலுகை அல்ல.
- ரூ.2 லட்சம் வரையிலான கடன்களுக்கு மட்டும் புதிய விதிகளில் இருந்து விலக்கு என்பது பயனளிக்காது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
நகைக்கடன் விதிகள் குறித்த தளர்வுகள் போதுமானவை அல்ல: இப்போதுள்ள நடைமுறையே தொடர வேண்டும்!
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக்கடன் வழங்குவதற்கான 9 வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்த நிலையில் அவற்றில் இரு தளர்வுகளை செய்யும்படி மத்திய நிதியமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
புதிய விதிகள் நடைமுறைக்கு 2025-ஆம் ஆண்டு வரை செயல்படுத்தக்கூடாது; ரூ. 2 லட்சம் வரையிலான நகைக்கடன்களுக்கு இந்த விதிகளில் இருந்து விலக்களிக்கப்பட வேண்டும் என்பது தான் அந்த பரிந்துரைகள் ஆகும். இவை போதுமானவை அல்ல.
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வரைவு விதிகளுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை; அவை இன்னும் இறுதி செய்யப்படவில்லை; அவை எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இத்தகைய சூழலில் 2026 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் புதிய விதிகளை செயல்படுத்தலாம் என்பது சலுகை அல்ல.
அதேபோல், கிராமப்புறங்களில் கல்வி, குடும்பத் தேவைகள் மற்றும் வங்கிக் கடன் பெற முடியாத பல தேவைகளுக்கு நிதி ஈட்டுவதற்கான ஒரே வாய்ப்பு நகைக்கடன் தான். அவ்வாறு கடன் பெறும் போது ரூ.2 லட்சம் வரையிலான கடன்களுக்கு மட்டும் புதிய விதிகளில் இருந்து விலக்கு என்பது பயனளிக்காது.
இவை அனைத்தையும் விட பாட்டாளி மக்கள் கட்சி எழுப்ப விரும்பும் வினா என்னவென்றால், புதிய விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கான தேவை எங்கிருந்து வந்தது? ஒவ்வொரு தனிநபரும் எவ்வளவு நகைக்கடன் பெறுகிறாரோ, அதை விட குறைந்தது 40% கூடுதல் மதிப்பு உள்ள நகைகளை ஈடாக வைக்கிறார்.
நகைக்கடனை குறித்த காலத்தில் செலுத்தத் தவறினால் அவற்றை ஏலத்தில் விட்டு பணமாக்கவும் விதிகளில் வகை செய்யப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும்போது புதிய விதிகள் தேவையற்றவை. அதனால், எந்த பயனும் இல்லை, பாதிப்புகள் தான் அதிகம்.
தங்க நகைக்கடன் என்ற தத்துவமே நடைமுறை சிக்கல்கள் இல்லாமல் எளிதாக கடன் வாங்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான். புதிய விதிகளின் மூலம் அதை சிக்கலாக்கக்கூடாது.
எனவே, நகைக்கடன்கள் தொடர்பாக இப்போதுள்ள நடைமுறைகளே தொடர வேண்டும். அது சாத்தியமில்லை என்றால், வரைவு விதிகளின் பிரிவுகள் 2, 4, 6 ஆகியவற்றை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் ஜூன் மாதம்திறக்கப்படுகிறது.
- பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை விழகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் ஜூன் 9ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தகவல் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் பள்ளிகள் திட்டமிட்டபடி ஜூன் 2ம் தேதி திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, 1ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 2ல் பள்ளிகள் திட்டமிட்டப்படி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.
மேலும், கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ம் தேதி பள்ளிகளை திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நான் எத்தனையோ பதவிகளை பார்த்துவிட்டேன். என்னை தலைவனாக எண்ணவில்லை. தலைமை தொண்டனாகவே இருக்கிறேன்.
- மனதில் நிறைய உள்ளன. ஆனால் பேச முடியவில்லை. என் கடிதம்தான் செல்லும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்-க்கும், அவரது மகனும் அக்கட்சி தலைவருமான அன்புமணிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சோழிங்கநல்லூரில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு அன்புமணி பேசியதாவது:-
சில குழப்பங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இதெல்லாம் தற்காலிக குழப்பம்தான். எல்லாமே சரியாகிவிடும். சரிப்படுத்திடுவிடுவோம். சரிப்படுத்திவிடுவேன். பொருளாளர் திலகபாமாவுக்கு எதிராக ஒரு கடிதம் வந்தது. அதற்கு எதிராக நான் திலகபாமா பொருளாளராக தொடருவார் என கடிதம் வெளியிட்டேன்.
அவரை நீக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. பொதுக்குழுவிற்குதான் அதிகாரம் உள்ளது. நாங்கள் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டவர்கள். பொதுக்குழு நினைத்தால்தான் நீக்க முடியும். இதுதான் கட்சியின் விதி.
உடனடி இலக்கு, நம் கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெற வேண்டும். வெற்றிபெறும். அடுத்தக்கட்டம் நம்முடைய ஆட்சி தமிழ்நாட்டில் நடக்க வேண்டும். மாற்றம், முன்னேற்றம், அன்புமணி. ஒரு வருடம் இந்த பிரசாரத்தை செய்தோம். இந்தியா முழுவதும் சென்றடைந்தது. பிரசாரம் வெற்றி பெற்றது. நாம் வெற்றி பெற முடியவில்லை. அப்போது கலைஞர் ஒருபக்கம், ஜெயலலிதா அம்மையார் ஒரு பக்கம் இருந்தார்கள். 2019-ல் அந்த பிரசாரத்தை செய்திருந்தால் இன்று ஆளுங்கட்சியாக இருந்திருப்போம். ஆனால் பிரசாரம் செய்ய முடியாத சூழல்.
என்னுடைய வாழ்க்கையில் எவ்வளவோ சோதனைகளை சந்தித்து இருக்கிறேன். அவமானங்களை சந்தித்து இருக்கிறேன். அபாண்டமான பழிகளை சந்தித்து இருக்கிறேன். இவைகள் என்னை மென்மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறது.
வேகமாக முன்னேற வேண்டும் என்ற வைராக்கியத்தை கொடுத்திருக்கிறது. அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு முன்னதாக யார் யாரோ பழி போட்டார்கள். அதையெல்லாம் எளிதாக தூசி தட்டுவதுபோல் தட்டிவிட்டு சென்றுவிடுவேன்.
ஆனால், உலகில் நான் அதிகமாக நேசிப்பது என்னுடைய அம்மாதான். அதேபோல் அவர் அதிகமாக நேசிப்பது என்னைதான். எங்க அம்மா மீது ஒரு துரும்பு கூட பட விடமாட்டேன். இந்த பழியை மட்டும் தாங்க முடியவில்லை.
நான் எத்தனையோ பதவிகளை பார்த்துவிட்டேன். என்னை தலைவனாக எண்ணவில்லை. தலைமை தொண்டனாகவே இருக்கிறேன்.
மனதில் நிறைய உள்ளன. ஆனால் பேச முடியவில்லை. என் கடிதம்தான் செல்லும். நேற்றுதான் எனக்கு விடுதலை கிடைத்தது. இனி நாம் வேகமாக செல்லலாம்.
எந்தத் தடை வந்தாலும் அதை உடைத்தெறிந்து முன்னேறுவோம். பாமக-வை அடுத்தக் கட்டத்துக்கு நாம் கொண்டு வருவோம். நமக்கு இருந்து தடைகள் நேற்று முதல் அகன்று விட்டன.
இவ்வாறு அன்புமணி பேசினார்.
- சரியான நேரத்தில் மற்றும் அணுகக்கூடிய கடன் கிடைப்பதை உறுதி செய்வது எனது நிலையான கோரிக்கையாகும்.
- எந்த கொள்கையாக இருந்தாலும் மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பிறகே முடிவெடுக்க வேண்டும்.
நகைக் கடன் விதிகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு ஒன்றிய நிதியமைச்சகம் பரிந்துரை செய்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அப்போது அவர்," ஒன்றிய நிதியமைச்சருக்கு நான் எழுதிய கடிதம் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது. ஏழைகளின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்த கொள்கையாக இருந்தாலும் மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பிறகே முடிவெடுக்க வேண்டும்" என்றார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ரிசர்வ் வங்கியின் தங்கக் கடன்கள் தொடர்பான வரைவு வழிகாட்டுதல்கள் குறித்து மத்திய நிதியமைச்சருக்கு நான் எழுதிய கடிதத்தில் எழுப்பிய கோரிக்கைகளுக்கு மத்திய நிதி அமைச்சர் பதிலளித்துள்ளது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.
சிறு கடன் வாங்குபவர்களின் நலன்களைப் பாதுகாப்பது, குறிப்பாக விவசாயிகள் மற்றும் தினசரி வருமானம் ஈட்டுபவர்கள் போன்ற ரூ. 2 லட்சத்திற்கும் குறைவான கடன்களை நாடுபவர்களின் நலன்களைப் பாதுகாப்பது மற்றும் சரியான நேரத்தில் மற்றும் அணுகக்கூடிய கடன் கிடைப்பதை உறுதி செய்வது எனது நிலையான கோரிக்கையாகும்.
இந்தப் பிரச்சினையில் கொடுக்கப்பட்ட நேர்மறையான பரிசீலனையைப் பாராட்டுகையில், ஏழைகள் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் இத்தகைய கொள்கைகள் மாநிலங்களுடன் உரிய முன் ஆலோசனைக்குப் பிறகு எட்டப்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நீட் தாண்டி மிகப்பெரிய வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கு என்பது எல்லோருக்கும் தெரியும்.
- அயோக்கியக் கூட்டத்தின் அங்கம் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டீர் விஜய் அவர்களே.
நீட் தேர்வு குறித்து கருத்து தெரிவித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராஜீவ் காந்தி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
உங்களைப் போலச் சந்தர்ப்பவாத அரசியலுக்கான பகடைக்காயாக மாணவர்களைப் பயன்படுத்தும் அயோக்கியர்களுக்கு கல்வி என்பது அடிப்படை உரிமை எனப் புரியப் போவதில்லை விஜய் அவர்களே.
நீட் மட்டும்தான் உலகம்னு இங்க யாரும் சொல்லல… நீட் தாண்டி மிகப்பெரிய வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கு என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஆனால், நீட் என்ற பெயரில் எங்கள் பிள்ளைகள் தாங்கள் ஆசைப்படும் கல்வியை பெறுவதில் சமவாய்ப்பை மறுக்கும் ஆர்.எஸ்.எஸ்-இன் அயோக்கியத்தனத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அதை எதிர்த்துத்தான் தொடர்ந்து திராவிட மாடல் அரசு சட்டப்போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறது.
கல்வியில் எங்கள் பிள்ளைகளுக்கான சமநீதி மறுக்கப்படும்வரை அதற்கு எதிரான எங்களின் குரல் ஓங்கி ஒலிக்கும்.
ஆனால், எல்லோரும் மருத்துவம் படிச்சா யாரு நோயாளியா இருப்பாங்கன்னு கேக்குற தற்குறி சீமானின் குரலாகவும், எல்லோரும் படிச்சா யாரு மத்த வேலைகளைப் பார்ப்பது என்ற சங் பரிவாரின் சிந்தனையாகவும் உங்கள் குரல் ஒலிக்கத் தொடங்கியிருப்பதன்மூலம் நீங்களும் அந்த அயோக்கியக் கூட்டத்தின் அங்கம் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டீர் விஜய் அவர்களே.
உங்களைப் போலச் சந்தர்ப்பவாத அரசியலுக்கான பகடைக்காயாக மாணவர்களைப் பயன்படுத்தும் அயோக்கியர்களுக்கு கல்வி என்பது அடிப்படை உரிமை எனப் புரியப் போவதில்லை.
உங்களின் தற்குறித்தனம் இன்னும் இன்னும் இந்த இளைய சமூகத்தின்முன் அம்பலப்படுவதைப் பார்க்கத்தான் போகிறோம்…
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- புதிய ஒழுங்குமுறை விதிமுறைகளிலிருந்து ரூ.2 லட்சத்திற்கு கீழ் கடன் பெறும் சிறு தொகை கடன் பெறுநர்களை விலக்க பரிந்துரை செய்திருக்கிறது.
- அனைத்து தங்க நகைக்கடன்களுக்கும் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் செயல்படும் நிதி சேவைகள் துறை, தங்கக்கடன் பெறும் நடைமுறைகள் குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட வரைவுத் தரநெறிகளை முறைப்படுத்த வேண்டி பரிந்துரைகள் வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.
புதிய ஒழுங்குமுறை விதிமுறைகளிலிருந்து ரூ.2 லட்சத்திற்கு கீழ் கடன் பெறும் சிறு தொகை கடன் பெறுநர்களை விலக்க பரிந்துரை செய்திருக்கிறது.
இருப்பினும் விவசாயிகள், சிறு வியாபாரிகள் மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள மக்கள், தங்களின் அவசரத் தேவைகள், மருத்துவ மற்றும் கல்வி நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒன்றாக தங்க நகைக்கடன்கள் இருப்பதால், அனைத்து தங்க நகைக்கடன்களுக்கும் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
ஏழை மற்றும் நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் நம்பிக்கையுடன் பயன்படுத்தும் வழியாக தங்க நகைக்கடன்கள் இருப்பதால், மத்திய நிதி சேவைகள் துறை வழங்கியுள்ள இந்த முக்கிய பரிந்துரைகளுக்கு ரிசர்வ் வங்கி பரிசீலிப்பதுடன், தங்க நகைக்கடன்களுக்கான பழைய நடைமுறையையே தொடர வேண்டுமென அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






