என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பாகிஸ்தானில் தங்கியிருந்த பிரபல பைக் யூடியூபர் சென்னை விமான நிலையத்தில் கைது
- இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடங்கியபோது அவர் பாகிஸ்தானில் இருந்ததாக என்.ஐ.ஏ. வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன.
- சன்னி யாதவ் உட்பட மேலும் 3 யூடியூபர்களின் நடமாட்டம் குறித்த தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது இந்திய ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்டதற்காக யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா மற்றும் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனைதொடர்ந்து, இதுபோன்ற வீடியோ பதிவர்கள் மீதான கண்காணிப்பை என்.ஐ.ஏ. அதிகரித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடந்த போது தெலுங்கானாவை சேர்ந்த யூடியூபர் சன்னி யாதவ் என்பவர் பாகிஸ்தானில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் பல்வேறு இடங்களுக்கு பைக்கில் சென்று வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரை தீவிரமாக கண்காணித்தனர். இந்த நிலையில் நேற்று சென்னை விமான நிலையத்தில் சன்னி யாதவை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.
தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் உள்ள நூதன்கல் மண்டலத்தை சேர்ந்த சன்னி யாதவ், இவர் பந்தய செயலிகளை ஊக்குவித்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற முயன்றார்.
அது பலனளிக்காததால், அவர் துபாய் சென்றார். அதன் பிறகு சன்னி யாதவ் துபாயில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார்.
இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கியபோது அவர் பாகிஸ்தானில் இருந்ததாக என்.ஐ.ஏ. வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன.
அவர் கடந்த காலத்தில் 5 முறை பாகிஸ்தானுக்கு பைக்கில் பயணம் செய்துள்ளார். சன்னி யாதவ் தனது பாகிஸ்தான் பயணத்தையும் பெரிய அளவில் விளம்பரப்படுத்தினார்.
சன்னி யாதவ் கைது செய்யப்பட்டது குறித்து தங்களுக்குத் தெரியாது என்றும், அவர் தொடர்ந்து பைக் பயணங்களுக்குச் செல்வதாகவும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
டி.வி.யில் பார்த்த பிறகுதான் இந்தத் தகவல் பற்றித் தெரிந்து கொண்டதாக அவர்கள் கூறினர்.
பைக்கில் நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று, அங்குள்ள நிலைமைகளை விவரிக்கும் வீடியோக்களை எடுத்து சன்னி யாதவ் வெளியிட்டார்.
சன்னி யாதவ் உட்பட மேலும் 3 யூடியூபர்களின் நடமாட்டம் குறித்த தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சன்னி யாதவ் ஏன் பாகிஸ்தானுக்குச் சென்றார்? பதற்றமான சூழ்நிலையில் பாகிஸ்தான் நாட்டிற்குச் செல்வதற்கான காரணம் என்ன? இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.






