என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்- போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு
    X

    மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்- போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு

    • பள்ளிச் சீருடையுடன் மாணவர்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து பள்ளி வரை, கட்டணமில்லாமல் பயணிக்கலாம்.
    • பள்ளி துவங்கும்-முடியும் நேரம் வரை பேருந்துகள் சரியாக இயங்குவதை கண்காணித்திட குழுக்கள் நியமனம்.

    கடந்த கல்வியாண்டில் வழங்கப்பட்ட பஸ் பாஸ் அல்லது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அல்லது பள்ளிச் சீருடையுடன் மாணவர்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து பள்ளி வரை, கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, வரும் 02.06.2025 முதல் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டும், அதன் பின் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால், 2024-25-ஆம் கல்வி ஆண்டுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பயண அட்டை /புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அல்லது பள்ளிச் சீருடையுடன் மாணவ / மாணவிகள் தத்தம் இருப்பிடத்திலிருந்து தாம் பயிலும் பள்ளி வரையிலும் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம் என போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் .சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    மாணவ மாணவிகள் கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டை அவர்தம் கல்வி பயிலும் பள்ளி / கல்லூரியிலேயே அவர்களின் இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்யும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

    அதற்குன்டான கால அளவினை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் 2024-25-ஆம் கல்வி ஆண்டிற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பயண அட்டை, பள்ளி மாணவ/மாணவியர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்திலிருந்து தாம் பயிலும் பள்ளி வரையிலும் சென்று வருவதற்கு, அதே போன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ/மாணவியர்கள் 2024-25 கல்வி ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டை அல்லது தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

    மேலும் பள்ளி துவங்கும்/முடியும் நேரம் வரை பேருந்துகள் சரியாக இயங்குவதை கண்காணித்திட அலுவலர்கள் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

    மேலும், உரிய பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி மாணவ / மாணவியர்களை பாதுகாப்பாக ஏற்றி, இறக்கி செல்ல அனைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நடத்துநர் / ஓட்டுநர்களுக்கும் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×