என் மலர்tooltip icon

    சென்னை

    • எங்களுக்கு நம்பிக்கை இருக்கு.
    • நம்முடைய குரல், மய்யத்தின் குரல் மாநிலங்களவையில் ஒலிக்க வேண்டும்.

    சென்னை:

    'தக்லைப்' பட பணி நிமித்தம் காரணமாக மலேசியாவுக்கு செல்ல நடிகர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    'தக்லைப்' படம் நல்லா இருக்கும் என்று நம்பிதான் மக்கள் முன்னாடி விடுகிறோம். எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. மக்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிற எல்லா ஆதாரங்களும் எங்க கிட்ட இருக்கு. இப்பகூட ப்ரோமோஷனுக்காக மலேசியா, துபாய் செல்ல உள்ளேன். அதன்பிறகு வெளியீட்டுக்கு தயாராகி வருவேன்.

    நம்முடைய குரல், மய்யத்தின் குரல் மாநிலங்களவையில் ஒலிக்க வேண்டும். அது ஒரு பாரபட்சம் இல்லாத தமிழர்களுக்கான குரலாக இருக்க வேண்டும் என்றார்.

    இதனிடையே, தமிழகத்தில் நிறைய புதிய கட்சி தொடங்கியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதும், நானே புதிய கட்சி தான். புதிய கட்சிகள் குறித்து விமர்சிக்கக் கூடாது என்று கூறி விட்டு சென்றார்.

    • கல்லூரி பேராசிரியர்களை பொறுத்தவரை ஏ பிரிவிலும், ஆசிரியர்களை பொறுத்தவரை பி பிரிவு ஊழியர்களாக இருப்பார்கள்.
    • சென்னை தலைமை செயலகத்தில் மட்டும் 30 பேர் வரை இன்று ஓய்வு பெறுகிறார்கள்.

    சென்னை:

    தமிழக அரசின் துறைகளில் தற்போதைய நிலையில் 9 லட்சத்து 42 ஆயிரத்து 941 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சுமார் 7 லட்சத்து 33 ஆயிரம் ஊழியர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். தமிழகத்தில் மாநில அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது 58-ல் இருந்து 60 ஆக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உயர்த்தப்பட்டது.

    அதன்படி தற்போது மாநில அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆகும். ஒவ்வொரு மாதமும் ஊழியர்கள் தாங்கள் பணியில் சேர்ந்த மாதத்தின் அடிப்படையில் ஓய்வு பெற்று வருவார்கள். குறிப்பாக மே மாதங்களில் தான் அதிகம் பேர் ஓய்வு பெறுவார்கள்.

    அதற்கு முக்கிய காரணம், அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அந்த முழு ஆண்டு முடிவு பெறும்போது மே மாதங்களில் தான் ஓய்வு பெறுவார்கள். அந்த அடிப்படையில் மே மாதம் 31-ந்தேதி இன்றுடன், ஒரே நாளில் சுமார் 8 ஆயிரத்து 144 பேர் ஓய்வு பெறுகின்றனர்.

    அதாவது மாநில அரசின் குரூப்-ஏ பணியிடங்களில் 424 பேரும், பி பணியிடங்களில் 4 ஆயிரத்து 399 பேரும், சி பணியிடங்களில் 2 ஆயிரத்து 185 பேரும், குரூப்-டி பணியிடங்களில் 1,136 பேரும் ஓய்வு பெறுகிறார்கள்.

    கல்லூரி பேராசிரியர்களை பொறுத்தவரை ஏ பிரிவிலும், ஆசிரியர்களை பொறுத்தவரை பி பிரிவு ஊழியர்களாக இருப்பார்கள். இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் அதிகம் பேர் ஓய்வு பெறுவது இந்த மாதத்தில்தான். இந்த எண்ணிக்கை மொத்த அரசு ஊழியர்களில் 0.86 சதவீதம் ஆகும்.

    சென்னை தலைமை செயலகத்தில் மட்டும் 30 பேர் வரை இன்று ஓய்வு பெறுகிறார்கள். கடந்த மாதத்தில் (ஏப்ரல்) 22 பேர் ஓய்வு பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தபால் மூலமாகவோ தெரிவிக்கலாம்.
    • tc.tn@nic.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் 3 வார காலத்திற்குள் கருத்து தெரிவிக்கலாம்.

    சென்னை:

    பஸ் கட்டண உயர்வு குறித்து கருத்து கூற பொதுமக்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து போக்குவரத்து ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    தனியார் பஸ் உரிமையாளர்கள் கூட்டமைப்பு, சென்னை மற்றும் ஈரோடு பஸ் உரிமையாளர்கள் சங்கம் ஆகியோர் கட்டண உயர்வு கோரி வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுப்படி தமிழ்நாடு அரசு பஸ் கட்டண உயர்வு குறித்து ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க நிபுணர் குழு அமைத்துள்ளது.

    எனவே பஸ் கட்டண உயர்வு குறித்து அனைத்து நுகர்வோர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை போக்குவரத்து ஆணையர், கிண்டி, சென்னை-600032 என்ற முகவரிக்கு நேரில் அல்லது தபால் மூலமாகவோ தெரிவிக்கலாம். மேலும், tc.tn@nic.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் 3 வார காலத்திற்குள் கருத்து தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    தமிழ்நாட்டில் கடந்த 2018-ம் ஆண்டு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நேற்றைய கூட்டத்தில் 6 மாவட்டத்தை சேர்ந்த 22 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.
    • மாலையில் அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், திருச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவருடைய மகனும் கட்சியின் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

    இதனிடையே திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் நேற்று முன்தினம் பேட்டியளித்தார். அப்போது அவர் அன்புமணிக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார்.

    இதனிடையே கட்சி தலைவரான அன்புமணி, சென்னை சோழிங்கநல்லூரில் பா.ம.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம், மே 30-ந்தேதி முதல் (அதாவது நேற்று முதல்) 3 நாட்கள் நடக்கும் என்று அறிவித்தார்.

    அதன்படி, சோழிங்கநல்லூரில் உள்ள மகாராஜா மகாலில், டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில், பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் அடங்கிய முதல் நாள் ஆலோசனை கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டத்தை சேர்ந்த 22 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில், பா.ம.க.வின் புதுப்பித்த உறுப்பினர் அட்டையை, மாவட்ட நிர்வாகிகள் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு வழங்கினர். உறுப்பினர் அட்டையில் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் உருவப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

    இந்த நிலையில், இன்று 2-வது நாளாக பா.ம.க. பொறுப்பாளர்களை சந்தித்து அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்துகிறார். காலையில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    மாலையில் அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், திருச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார். 

    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
    • இன்று காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

    சென்னை:

    தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக இதமான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த நிலையில், இன்று காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், தேனி, தென்காசி, திருப்பூர், கோவை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. 

    • தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல் வரும் 19-ம் தேதி நடக்கிறது.
    • இந்த தேர்தலில் வேட்பாளர்களை அறிவிப்பதில் அ.தி.மு.க. மவுனம் காத்து வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல் வரும் 19-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் ஒரு எம்.பி. வெற்றி பெற வேண்டுமென்றால் 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. அந்த அடிப்படையில் தி.மு.க.விற்கு 4-ம், அ.தி.மு.க.விற்கு 2 இடங்களும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

    இதற்கிடையே, தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களாக வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகிய 3 பேர் அறிவிக்கப்பட்டனர். மீதமுள்ள ஒரு இடம் மக்கள் நீதி மய்யத்திற்கு தி.மு.க. ஒதுக்கியது. அதில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது.

    அ.தி.மு.க. சார்பாக மாநிலங்களவை எம்.பி. வேட்பாளர்கள் யார் என இன்னும் அறிவிக்கப்படவில்லை. வேட்பாளர்களை அறிவிப்பதில் அ.தி.மு.க. தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது. அதேநேரம் தங்களுக்கு ஒரு இடம் வேண்டும் என கேட்டு தே.மு.தி.க, பா.ம.க. நெருக்கடி கொடுத்து வருகின்றன.

    வேட்பாளர்கள் தேர்வு குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக அந்த கட்சியினர் கூறுகின்றனர்.

    இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்துப் பேசினார்.

    சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. மாநிலங்களவை எம்.பி சீட் வழங்குவது தொடர்பாக அதிமுக - தேமுதிக இடையே பிரச்சனை நீடித்து வரும் நிலையில் இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    • தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • கொரோனா பாதிப்பால் சென்னையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் 60-க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

    இதற்கிடையே, கொரோனா பாதிப்பால் சென்னையில் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியாக தமிழகத்தில் மக்கள் கூடும் இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

    மேலும், கொரோனா பரவாமல் தடுக்கவும், வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    • மகளிர் விடியல் பயணத் திட்டம் குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
    • பயணம் 7,671 பேருந்துகளில் இப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தமிழக அரசு பெண்களின் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதில் மிக முக்கிய திட்டமாக, மகளிர் விடியல் பயணத்திட்டம் உள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் அரசு மாநகர பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணித்து வருகின்றனர்.

    இந்தத் திட்டத்துக்கு தமிழக பெண்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இந்தப் பேருந்துகளில் பயணிக்கும் பெண் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

    மகளிர் விடியல் பயண பேருந்துகளில் நாள்தோறும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயணம் செய்வதாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் மகளிர் விடியல் பயணத் திட்டத்தில் (நேற்று) 29.05.2025 வரை தமிழ்நாடு முழுவதும் மகளிரால் 700.38 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

    மேலும், இந்த பயணம் 7,671 பேருந்துகளில் இப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.

    • பள்ளிச் சீருடையுடன் மாணவர்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து பள்ளி வரை, கட்டணமில்லாமல் பயணிக்கலாம்.
    • பள்ளி துவங்கும்-முடியும் நேரம் வரை பேருந்துகள் சரியாக இயங்குவதை கண்காணித்திட குழுக்கள் நியமனம்.

    கடந்த கல்வியாண்டில் வழங்கப்பட்ட பஸ் பாஸ் அல்லது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அல்லது பள்ளிச் சீருடையுடன் மாணவர்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து பள்ளி வரை, கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, வரும் 02.06.2025 முதல் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டும், அதன் பின் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால், 2024-25-ஆம் கல்வி ஆண்டுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பயண அட்டை /புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அல்லது பள்ளிச் சீருடையுடன் மாணவ / மாணவிகள் தத்தம் இருப்பிடத்திலிருந்து தாம் பயிலும் பள்ளி வரையிலும் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம் என போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் .சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    மாணவ மாணவிகள் கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டை அவர்தம் கல்வி பயிலும் பள்ளி / கல்லூரியிலேயே அவர்களின் இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்யும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

    அதற்குன்டான கால அளவினை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் 2024-25-ஆம் கல்வி ஆண்டிற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பயண அட்டை, பள்ளி மாணவ/மாணவியர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்திலிருந்து தாம் பயிலும் பள்ளி வரையிலும் சென்று வருவதற்கு, அதே போன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ/மாணவியர்கள் 2024-25 கல்வி ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டை அல்லது தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

    மேலும் பள்ளி துவங்கும்/முடியும் நேரம் வரை பேருந்துகள் சரியாக இயங்குவதை கண்காணித்திட அலுவலர்கள் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

    மேலும், உரிய பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி மாணவ / மாணவியர்களை பாதுகாப்பாக ஏற்றி, இறக்கி செல்ல அனைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நடத்துநர் / ஓட்டுநர்களுக்கும் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • திரைத்துறையினரின் நீண்டகால கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அறிவிப்பு.
    • வரிக்குறைப்பு திரைப்படத் துறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் கேளிக்கை வரி 8 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு அறிவித்துள்ளது.

    இது திரைத்துறையினரின் நீண்டகால கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இன்று வெளியிட்ட அரசாணை மூலம் அமலுக்கு வந்துள்ளது.

    இந்த வரிக்குறைப்பு திரைப்படத் துறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    மேலும், இது டிக்கெட் விலைகளைக் குறைக்கவும், திரையரங்க வருவாயை மேம்படுத்தவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடங்கியபோது அவர் பாகிஸ்தானில் இருந்ததாக என்.ஐ.ஏ. வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன.
    • சன்னி யாதவ் உட்பட மேலும் 3 யூடியூபர்களின் நடமாட்டம் குறித்த தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது இந்திய ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்டதற்காக யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா மற்றும் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதனைதொடர்ந்து, இதுபோன்ற வீடியோ பதிவர்கள் மீதான கண்காணிப்பை என்.ஐ.ஏ. அதிகரித்துள்ளது.

    ஆபரேஷன் சிந்தூர் நடந்த போது தெலுங்கானாவை சேர்ந்த யூடியூபர் சன்னி யாதவ் என்பவர் பாகிஸ்தானில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் பல்வேறு இடங்களுக்கு பைக்கில் சென்று வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

    என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரை தீவிரமாக கண்காணித்தனர். இந்த நிலையில் நேற்று சென்னை விமான நிலையத்தில் சன்னி யாதவை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

    தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் உள்ள நூதன்கல் மண்டலத்தை சேர்ந்த சன்னி யாதவ், இவர் பந்தய செயலிகளை ஊக்குவித்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற முயன்றார்.

    அது பலனளிக்காததால், அவர் துபாய் சென்றார். அதன் பிறகு சன்னி யாதவ் துபாயில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார்.

    இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கியபோது அவர் பாகிஸ்தானில் இருந்ததாக என்.ஐ.ஏ. வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன.

    அவர் கடந்த காலத்தில் 5 முறை பாகிஸ்தானுக்கு பைக்கில் பயணம் செய்துள்ளார். சன்னி யாதவ் தனது பாகிஸ்தான் பயணத்தையும் பெரிய அளவில் விளம்பரப்படுத்தினார்.

    சன்னி யாதவ் கைது செய்யப்பட்டது குறித்து தங்களுக்குத் தெரியாது என்றும், அவர் தொடர்ந்து பைக் பயணங்களுக்குச் செல்வதாகவும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

    டி.வி.யில் பார்த்த பிறகுதான் இந்தத் தகவல் பற்றித் தெரிந்து கொண்டதாக அவர்கள் கூறினர்.

    பைக்கில் நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று, அங்குள்ள நிலைமைகளை விவரிக்கும் வீடியோக்களை எடுத்து சன்னி யாதவ் வெளியிட்டார்.

    சன்னி யாதவ் உட்பட மேலும் 3 யூடியூபர்களின் நடமாட்டம் குறித்த தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    சன்னி யாதவ் ஏன் பாகிஸ்தானுக்குச் சென்றார்? பதற்றமான சூழ்நிலையில் பாகிஸ்தான் நாட்டிற்குச் செல்வதற்கான காரணம் என்ன? இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

    • 2026 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் புதிய விதிகளை செயல்படுத்தலாம் என்பது சலுகை அல்ல.
    • ரூ.2 லட்சம் வரையிலான கடன்களுக்கு மட்டும் புதிய விதிகளில் இருந்து விலக்கு என்பது பயனளிக்காது.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    நகைக்கடன் விதிகள் குறித்த தளர்வுகள் போதுமானவை அல்ல: இப்போதுள்ள நடைமுறையே தொடர வேண்டும்!

    வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக்கடன் வழங்குவதற்கான 9 வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்த நிலையில் அவற்றில் இரு தளர்வுகளை செய்யும்படி மத்திய நிதியமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

    புதிய விதிகள் நடைமுறைக்கு 2025-ஆம் ஆண்டு வரை செயல்படுத்தக்கூடாது; ரூ. 2 லட்சம் வரையிலான நகைக்கடன்களுக்கு இந்த விதிகளில் இருந்து விலக்களிக்கப்பட வேண்டும் என்பது தான் அந்த பரிந்துரைகள் ஆகும். இவை போதுமானவை அல்ல.

    இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வரைவு விதிகளுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை; அவை இன்னும் இறுதி செய்யப்படவில்லை; அவை எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இத்தகைய சூழலில் 2026 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் புதிய விதிகளை செயல்படுத்தலாம் என்பது சலுகை அல்ல.

    அதேபோல், கிராமப்புறங்களில் கல்வி, குடும்பத் தேவைகள் மற்றும் வங்கிக் கடன் பெற முடியாத பல தேவைகளுக்கு நிதி ஈட்டுவதற்கான ஒரே வாய்ப்பு நகைக்கடன் தான். அவ்வாறு கடன் பெறும் போது ரூ.2 லட்சம் வரையிலான கடன்களுக்கு மட்டும் புதிய விதிகளில் இருந்து விலக்கு என்பது பயனளிக்காது.

    இவை அனைத்தையும் விட பாட்டாளி மக்கள் கட்சி எழுப்ப விரும்பும் வினா என்னவென்றால், புதிய விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கான தேவை எங்கிருந்து வந்தது? ஒவ்வொரு தனிநபரும் எவ்வளவு நகைக்கடன் பெறுகிறாரோ, அதை விட குறைந்தது 40% கூடுதல் மதிப்பு உள்ள நகைகளை ஈடாக வைக்கிறார்.

    நகைக்கடனை குறித்த காலத்தில் செலுத்தத் தவறினால் அவற்றை ஏலத்தில் விட்டு பணமாக்கவும் விதிகளில் வகை செய்யப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும்போது புதிய விதிகள் தேவையற்றவை. அதனால், எந்த பயனும் இல்லை, பாதிப்புகள் தான் அதிகம்.

    தங்க நகைக்கடன் என்ற தத்துவமே நடைமுறை சிக்கல்கள் இல்லாமல் எளிதாக கடன் வாங்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான். புதிய விதிகளின் மூலம் அதை சிக்கலாக்கக்கூடாது.

    எனவே, நகைக்கடன்கள் தொடர்பாக இப்போதுள்ள நடைமுறைகளே தொடர வேண்டும். அது சாத்தியமில்லை என்றால், வரைவு விதிகளின் பிரிவுகள் 2, 4, 6 ஆகியவற்றை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×