என் மலர்
சென்னை
- மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு மட்டுமே அசைவ உணவு ஆப்சன் காட்டப்படுகிறது.
- இது குறித்து தெற்கு ரெயில்வே தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
சென்னையில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, மைசூரு, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு வந்தே பாரத் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,சென்னையில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரெயிலில் விருப்பமான உணவை தேர்ந்தெடுக்கும் பகுதியில் காலை உணவிற்கான மெனுவில் அசைவ உணவிற்கான ஆப்சனை முன் அறிவிப்பின்றி ரெயில்வே நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக தெற்கு ரெயில்வே மற்றும் ஐஆர்சிடிசி தரப்பில் இருந்து முன்கூட்டியே எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஐ.ஆர்.சி.டி.சி. செயலியில் வந்தே பாரத் ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு செய்யும் பகுதியில் மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு மட்டுமே அசைவ உணவு ஆப்சன் காட்டப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தெற்கு ரெயில்வே தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. தொழில்நுட்பக் கோளாறு ஏதேனும் ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
- புனேவுக்கு 19 மாதிரிகள் அனுப்பி வைத்து பரிசோதனை செய்யப்பட்டது.
- மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தக் கூடாது, வதந்தி பரப்புவது சமூகத்திற்கு இழைக்கப்படும் கேடு.
சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* 2019-ம் ஆண்டில் கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
* கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பல பெயர்களில் உலா வருகிறது.
* இந்தியாவில் தற்போது பரவி வரும் கொரோனா வீரியம் இல்லாதது.
* முகக்கவசம் அணிவது போன்ற வழக்கமான வழிமுறைகளையே மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
* தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* இணை நோய் இருப்பவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிவது நல்லது.
* பொதுமக்கள் அடிக்கடி கைகளை கழுவுதல், சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது எப்போதும் உள்ள நடைமுறை.
* தமிழ்நாட்டில் போதுமான அளவு மருந்துகள் தயார்நிலையில் உள்ளன.
* புனேவுக்கு 19 மாதிரிகள் அனுப்பி வைத்து பரிசோதனை செய்யப்பட்டது.
* வீரியம் குறைந்த பாதிப்பே இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
* பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. அறிவுறுத்தல்தான்.
* 2, 3 நாள் இருமல், காய்ச்சல், சளி என்பதுடன் பாதிப்பு சரியாகி விடும். மக்கள் அச்சப்பட வேண்டாம்.
* கொரோனா பாதிப்பு குறித்து யாரும் வதந்தி பரப்பக்கூடாது.
* மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தக் கூடாது, வதந்தி பரப்புவது சமூகத்திற்கு இழைக்கப்படும் கேடு.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒவ்வொரு நிறுவனமும் ஒரு வருடாந்திர அறிக்கையை தயாரிக்க வேண்டும்.
- டாஸ்மாக் அதிகாரிகள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கை தொடர்ந்து 8-வது ஆண்டாக வெளியிடப்படாதது பேசுபொருளாகி உள்ளது. கடைசியாக 2016-17-ம் நிதியாண்டிற்கான 34-வது ஆண்டு அறிக்கையை டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது.
நிறுவனங்கள் சட்டத்தின் கீழ், ஒவ்வொரு நிறுவனமும் ஒரு வருடாந்திர அறிக்கையை தயாரிக்க வேண்டும். இது அதன் செயல்பாடுகள் மற்றும் நிதி செயல்திறன் பற்றிய விரிவான கண்ணோட்டத்தை அதன் பங்குதாரர்களுக்கு வழங்கும் ஒரு விரிவான ஆவணமாகும்.
உதாரணமாக, அரசுக்கு சொந்தமான மற்றொரு நிறுவனமான தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் 2023-24ம் ஆண்டிற்கான அதன் வருடாந்திர நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மதுவிலக்கு மற்றும் கலால்துறை அமைச்சர் முத்துசாமி கூறுகையில், டாஸ்மாக்கின் ஆண்டு அறிக்கைகளை 2023-24ம் நிதியாண்டு வரை முறையாக சட்டமன்றத்தில் சமர்பிக்கப்பட்டதாகவும், 2024-25-ம் ஆண்டிற்கான ஆண்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறிய அவர், ஏன் அவை வெளியிடப்படவில்லை என்பதை சரிபார்க்கிறேன் என்று தெரிவித்தார்.
மேலும், இதுதொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
முன்னதாக, டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி இருந்தது. மேலும் இதுதொடர்பாக நடைபெற்ற சோதனை தொடர்பான வழக்கும் தற்போது நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- டாக்டர் ராமதாசுக்கும், அவருடைய மகன் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
- தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ம.க. நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை நடத்தி வருகிறார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவருடைய மகனும் கட்சியின் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
இதனிடையே கட்சி தலைவரான அன்புமணி, சென்னை சோழிங்கநல்லூரில் பா.ம.க. நிர்வாகிகளுடன் நேற்று முதல் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த சந்திப்பு கூட்டம் நாளை வரை நடக்க உள்ளது.
சோழிங்கநல்லூரில் உள்ள மகாராஜா மகாலில், டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில், பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் அடங்கிய முதல் நாள் ஆலோசனை கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டத்தை சேர்ந்த 22 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், பா.ம.க.வின் புதுப்பித்த உறுப்பினர் அட்டையை, மாவட்ட நிர்வாகிகள் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு வழங்கினர். உறுப்பினர் அட்டையில் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் உருவப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
இதனை தொடர்ந்து இன்று 2-வது நாளாக தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ம.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் சென்னையில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடக்கும் கூட்டத்தை சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள் புறக்கணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
- மெட்ரோ குடிநீர் லாரிகள் சென்னை மாநகர் முழுவதும் மக்களுக்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன.
- ஒப்பந்தம் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவு பெற்றது.
சென்னை:
சென்னையில் மெட்ரோ குடிநீர் ஒப்பந்த லாரிகள் சுமார் 450 இயங்குகின்றன. இந்த லாரிகள் 6 ஆயிரம், 9 ஆயிரம், 12 ஆயிரம் மற்றும் 18 ஆயிரம் லிட்டர் கொள்ளளவை கொண்டவை. மெட்ரோ குடிநீர் லாரிகள் சென்னை மாநகர் முழுவதும் மக்களுக்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன.
அவ்வாறு இயக்கப்படக் கூடிய லாரிகளின் உரிமையாளர்கள் ஒப்பந்தம் அடிப்படையில் லாரிகளை இயக்கி வருகின்றனர். ஆனால் அந்த ஒப்பந்தம், கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவு பெற்றது. மீண்டும் புதிய ஒப்பந்தத்தை அறிவிப்பதிலும், அதனை இறுதி செய்வதிலும் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் தாமதம் காட்டியதாக சொல்லப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதத்துக்குள் ஒப்பந்தம் போடப்படும் என சொன்னதை நம்பி, லாரி உரிமையாளர்கள் பலர் புதிய லாரிகளை வாங்கியுள்ளனர். ஆனால் நவம்பரில் ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, இதுவரை அது இறுதி செய்யப்படவில்லை.
இதையடுத்து ஒப்பந்தத்தை இறுதி செய்து பணி ஆணைகளை வழங்கக் கோரி மெட்ரோ குடிநீர் ஒப்பந்த லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நிர்வாகிகள் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய தலைமை அலுவலகத்துக்கு அதிகாரிகளை சந்திக்க வந்தனர். ஆனால் அதிகாரிகள் யாரும் இல்லை.
இதனால் வாரியத்துக்கு முன்பு வெகு நேரம் காத்திருந்த பின்னர் அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
இதுதொடர்பாக மெட்ரோ குடிநீர் ஒப்பந்த லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தரம், செயலாளர் கேசவராவ் கூறுகையில், 'ஒப்பந்தத்தை நம்பி புதிதாக வாங்கிய லாரிக்கான முதலாம் ஆண்டு காப்பீடு கட்டணத் தொகை செலுத்துவதற்கான நாட்களே வந்துவிட்டது. ஆனால் இதுவரை ஒப்பந்தம் இறுதியாகவில்லை.
உரிமையாளர்களில் சிலர் மனவேதனையில் உயிரிழந்தும் போயுள்ளனர். மேலும் பலர் லாரிக்கான மாத தவணை செலுத்த முடியாமல் திணறுகிறார்கள்.
இதற்காக நாளை முதல் நாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். எனவே இதில் வாரியம் உடனடியாக முடிவெடுத்து, ஒப்பந்தத்தை இறுதி செய்து ஆணைகளை வழங்க வேண்டும்' என்றனர். வேலைநிறுத்தத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபடும் பட்சத்தில் சென்னை மாநகரில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
- தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் அனைத்துத் துறைகளிலும் ஒப்பந்தப் பணியாளர்களை நியமிக்கும் வழக்கம் தீவிரமடைந்திருக்கிறது.
- பல்கலைக்கழகங்களில் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், தொழில்துறையினர் உள்ளிட்டோரை தற்காலிக அடிப்படையில் நியமிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்.
சென்னை :
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் உள்ள 22 பல்கலைக்கழகங்களில் 50%க்கும் கூடுதலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அவற்றில் 30% பணியிடங்களை இட ஒதுக்கீடு இல்லாமல் தற்காலிக அடிப்படையில் நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சி அளிக்கின்றன. திராவிட மாடல் அரசின் இந்த நடவடிக்கை தமிழ்நாட்டில் சமூகநீதியை சவக்குழியில் போட்டு புதைப்பதற்கு ஒப்பானதாகும். இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.
சென்னையில் கடந்த சில நாள்களுக்கு முன் நடைபெற்ற பல்கலைக்கழக பதிவாளர்கள் கூட்டத்தில், பல்கலைக்கழகங்களின் மொத்தப் பணியிடங்களில் 10% பணியிடங்கள் ஓய்வுபெற்ற பேராசிரியர்களையும், 10% பணியிடங்கள் தொழில்துறையினரையும், 10% பணியிடங்கள் வெளிநாட்டு ஆசிரியர்களைக் கொண்டும் நிரப்பப்பட வேண்டும் என்றும் உயர்கல்வித்துறை செயலாளர் சமயமூர்த்தி அறிவுறுத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது மிகவும் தவறான, பிற்போக்கான முடிவு ஆகும்.
பல்கலைக்கழக பேராசிரியர்களை நிரந்தரமாக நியமிக்காமல் ஓய்வு பெற்றவர்களையும், தொழில்துறையினரையும் நியமிக்கும் போது முனைவர் பட்டம் வரை படித்து, தகுதித்தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்றுள்ளவர்களின் வாய்ப்புகள் பறிக்கப்படும். பேராசிரியர்களை தற்காலிகமாக நியமிக்கும் போது அதில் இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படாது. இந்த இரண்டுமே சமூகநீதிக்கு எதிரான செயல்கள் ஆகும். ஒருபுறம் சமூகநீதி என்று பேசிக் கொண்டு இன்னொருபுறம் சமூகநீதிக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதன் மூலம் திராவிட மாடல் அரசின் முகத்திரை கிழிந்து விட்டது.
மத்திய அரசின் இணைச் செயலாளர், இயக்குனர் உள்ளிட்ட பணிகளுக்கு இந்திய ஆட்சிப் பணி அல்லாத, ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் வல்லுனர்களை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்த போது அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது. அதைத் தொடர்ந்து திமுகவும் மத்திய அரசின் முடிவை எதிர்த்தது. ஒரு கட்டத்தின் மத்திய அரசு அதன் முடிவைக் கைவிட்டது. அப்போது மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதற்கான காரணம் அந்த நடைமுறையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படாது என்பது தான்.
சில ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசின் முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்ன காரணத்திற்காக எதிர்ப்பு தெரிவித்தாரோ, அதே தவறை இப்போது அவரே செய்கிறார். மத்திய அரசே எதிர்ப்புக்கு அஞ்சி கைவிட்ட சமூகநீதிக்கு எதிரான முடிவை, இப்போது சமூகநீதி பேசும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு திணிக்கிறது என்றால் அதன் இரட்டை வேடத்தின் தீவிரத்தை புரிந்து கொள்ள முடியும்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் அனைத்துத் துறைகளிலும் ஒப்பந்தப் பணியாளர்களை நியமிக்கும் வழக்கம் தீவிரமடைந்திருக்கிறது. இப்போது பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்கள் நியமனத்திலும் சமூக அநீதி தொடர அனுமதிக்க முடியாது. எனவே, பல்கலைக்கழகங்களில் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், தொழில்துறையினர் உள்ளிட்டோரை தற்காலிக அடிப்படையில் நியமிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியிடங்களையும் இட ஒதுக்கீட்டைக் கடைபிடித்து நிரந்தரமாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
- தங்கம் நேற்று ஒரு கிராம் ரூ.8,920-க்கும், ஒரு சவரன் ரூ.71,360-க்கும் விற்பனையானது.
- வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது.
கடந்த 2 நாட்கள் குறைந்து விற்பனையான தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்தது. நேற்று ஒரு கிராம் ரூ.8,920-க்கும், ஒரு சவரன் ரூ.71,360-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் சென்னையில் தங்கம் விலையில் இன்று மாற்றம் இல்லை. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.8,920-க்கும், ஒரு சவரன் ரூ.71,360-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.110-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி ரூ.1000 குறைந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
30-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,360
29-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,480
28-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,480
27-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,960
26-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,600
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
30-05-2025- ஒரு கிராம் ரூ.111
29-05-2025- ஒரு கிராம் ரூ.111
28-05-2025- ஒரு கிராம் ரூ.111
27-05-2025- ஒரு கிராம் ரூ.111
26-05-2025- ஒரு கிராம் ரூ.111
- இன்றைய முக்கிய செய்திகள்...
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- எங்களுக்கு நம்பிக்கை இருக்கு.
- நம்முடைய குரல், மய்யத்தின் குரல் மாநிலங்களவையில் ஒலிக்க வேண்டும்.
சென்னை:
'தக்லைப்' பட பணி நிமித்தம் காரணமாக மலேசியாவுக்கு செல்ல நடிகர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
'தக்லைப்' படம் நல்லா இருக்கும் என்று நம்பிதான் மக்கள் முன்னாடி விடுகிறோம். எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. மக்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிற எல்லா ஆதாரங்களும் எங்க கிட்ட இருக்கு. இப்பகூட ப்ரோமோஷனுக்காக மலேசியா, துபாய் செல்ல உள்ளேன். அதன்பிறகு வெளியீட்டுக்கு தயாராகி வருவேன்.
நம்முடைய குரல், மய்யத்தின் குரல் மாநிலங்களவையில் ஒலிக்க வேண்டும். அது ஒரு பாரபட்சம் இல்லாத தமிழர்களுக்கான குரலாக இருக்க வேண்டும் என்றார்.
இதனிடையே, தமிழகத்தில் நிறைய புதிய கட்சி தொடங்கியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதும், நானே புதிய கட்சி தான். புதிய கட்சிகள் குறித்து விமர்சிக்கக் கூடாது என்று கூறி விட்டு சென்றார்.
- கல்லூரி பேராசிரியர்களை பொறுத்தவரை ஏ பிரிவிலும், ஆசிரியர்களை பொறுத்தவரை பி பிரிவு ஊழியர்களாக இருப்பார்கள்.
- சென்னை தலைமை செயலகத்தில் மட்டும் 30 பேர் வரை இன்று ஓய்வு பெறுகிறார்கள்.
சென்னை:
தமிழக அரசின் துறைகளில் தற்போதைய நிலையில் 9 லட்சத்து 42 ஆயிரத்து 941 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சுமார் 7 லட்சத்து 33 ஆயிரம் ஊழியர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். தமிழகத்தில் மாநில அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது 58-ல் இருந்து 60 ஆக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உயர்த்தப்பட்டது.
அதன்படி தற்போது மாநில அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆகும். ஒவ்வொரு மாதமும் ஊழியர்கள் தாங்கள் பணியில் சேர்ந்த மாதத்தின் அடிப்படையில் ஓய்வு பெற்று வருவார்கள். குறிப்பாக மே மாதங்களில் தான் அதிகம் பேர் ஓய்வு பெறுவார்கள்.
அதற்கு முக்கிய காரணம், அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அந்த முழு ஆண்டு முடிவு பெறும்போது மே மாதங்களில் தான் ஓய்வு பெறுவார்கள். அந்த அடிப்படையில் மே மாதம் 31-ந்தேதி இன்றுடன், ஒரே நாளில் சுமார் 8 ஆயிரத்து 144 பேர் ஓய்வு பெறுகின்றனர்.
அதாவது மாநில அரசின் குரூப்-ஏ பணியிடங்களில் 424 பேரும், பி பணியிடங்களில் 4 ஆயிரத்து 399 பேரும், சி பணியிடங்களில் 2 ஆயிரத்து 185 பேரும், குரூப்-டி பணியிடங்களில் 1,136 பேரும் ஓய்வு பெறுகிறார்கள்.
கல்லூரி பேராசிரியர்களை பொறுத்தவரை ஏ பிரிவிலும், ஆசிரியர்களை பொறுத்தவரை பி பிரிவு ஊழியர்களாக இருப்பார்கள். இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் அதிகம் பேர் ஓய்வு பெறுவது இந்த மாதத்தில்தான். இந்த எண்ணிக்கை மொத்த அரசு ஊழியர்களில் 0.86 சதவீதம் ஆகும்.
சென்னை தலைமை செயலகத்தில் மட்டும் 30 பேர் வரை இன்று ஓய்வு பெறுகிறார்கள். கடந்த மாதத்தில் (ஏப்ரல்) 22 பேர் ஓய்வு பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- தபால் மூலமாகவோ தெரிவிக்கலாம்.
- tc.tn@nic.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் 3 வார காலத்திற்குள் கருத்து தெரிவிக்கலாம்.
சென்னை:
பஸ் கட்டண உயர்வு குறித்து கருத்து கூற பொதுமக்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து போக்குவரத்து ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தனியார் பஸ் உரிமையாளர்கள் கூட்டமைப்பு, சென்னை மற்றும் ஈரோடு பஸ் உரிமையாளர்கள் சங்கம் ஆகியோர் கட்டண உயர்வு கோரி வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுப்படி தமிழ்நாடு அரசு பஸ் கட்டண உயர்வு குறித்து ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க நிபுணர் குழு அமைத்துள்ளது.
எனவே பஸ் கட்டண உயர்வு குறித்து அனைத்து நுகர்வோர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை போக்குவரத்து ஆணையர், கிண்டி, சென்னை-600032 என்ற முகவரிக்கு நேரில் அல்லது தபால் மூலமாகவோ தெரிவிக்கலாம். மேலும், tc.tn@nic.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் 3 வார காலத்திற்குள் கருத்து தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2018-ம் ஆண்டு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- நேற்றைய கூட்டத்தில் 6 மாவட்டத்தை சேர்ந்த 22 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.
- மாலையில் அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், திருச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவருடைய மகனும் கட்சியின் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.
இதனிடையே திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் நேற்று முன்தினம் பேட்டியளித்தார். அப்போது அவர் அன்புமணிக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார்.
இதனிடையே கட்சி தலைவரான அன்புமணி, சென்னை சோழிங்கநல்லூரில் பா.ம.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம், மே 30-ந்தேதி முதல் (அதாவது நேற்று முதல்) 3 நாட்கள் நடக்கும் என்று அறிவித்தார்.
அதன்படி, சோழிங்கநல்லூரில் உள்ள மகாராஜா மகாலில், டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில், பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் அடங்கிய முதல் நாள் ஆலோசனை கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டத்தை சேர்ந்த 22 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், பா.ம.க.வின் புதுப்பித்த உறுப்பினர் அட்டையை, மாவட்ட நிர்வாகிகள் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு வழங்கினர். உறுப்பினர் அட்டையில் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் உருவப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த நிலையில், இன்று 2-வது நாளாக பா.ம.க. பொறுப்பாளர்களை சந்தித்து அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்துகிறார். காலையில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
மாலையில் அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், திருச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார்.






