என் மலர்tooltip icon

    தெலுங்கானா

    • வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வெடிகுண்டு கண்டறியும் கருவிகளுடன் ஓட்டலுக்கு விரைந்து வந்தனர்.
    • ஓட்டலில் இருந்த ஊழியர்கள் மற்றும் உணவு சாப்பிட வந்தவர்களை வெளியே அனுப்பிவிட்டு சோதனையை நடத்தினர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த செகந்திராபாத் ரெயில் நிலைய வளாகத்தில் நட்சத்திர ஓட்டல் உள்ளது.

    வாலிபர் ஒருவர் அவசர எண் 100-க்கு போன் செய்து ஓட்டலில் வெடிகுண்டு இருப்பதாகவும், சிறிது நேரத்தில் வெடித்து சிதறும் என மிரட்டல் விடுத்து விட்டு போனை துண்டித்தார்.

    வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வெடிகுண்டு கண்டறியும் கருவிகளுடன் ஓட்டலுக்கு விரைந்து வந்தனர். ஓட்டலில் இருந்த ஊழியர்கள் மற்றும் உணவு சாப்பிட வந்தவர்களை வெளியே அனுப்பிவிட்டு சோதனையை நடத்தினர்.

    இதனால் செகந்தராபாத் ரெயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது. நள்ளிரவு வரை சோதனை நடந்தது. இறுதியில் வதந்தி என தெரிய வந்தது.

    போலீசார் வழக்கு பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபரை தேடி வருகின்றனர்.

    • 11 ஆயிரத்து 717 எக்டேர் பரப்பளவில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.
    • மரங்களை வெட்டுவதில் நாட்டிலேயே தெலுங்கானா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் கடந்த 2014-ம் ஆண்டு உருவாக்கப்பட்டதிலிருந்து பல்வேறு அரசு மற்றும் அரசு சாராவளர்ச்சி திட்டங்களுக்காக காடுகள் அழிக்கப்படுகிறது.

    இதனால் 11 ஆயிரத்து 717 எக்டேர் பரப்பளவில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

    சராசரியாக ஒரு எக்டேர் பரப்பில் 104 மரங்கள் வெட்டப்பட்டது. இந்த மரங்களை வெட்ட அனுமதி அளித்ததன் மூலம் வனத்துறையானது ரூ.2,058 கோடி வருவாய் ஈட்டியது. இந்த வருவாய் மாநிலத்தின் தற்காலிக இழப்பீடு கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிதி காடு வளர்ப்பு மற்றும் வனவிலங்குகளின் வாழ்விடத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    மாநில வனத்துறை 5 ஆண்டுகளுக்குள் 12 லட்சத்திற்கும் அதிகமான மரங்களை வெட்ட அனுமதித்துள்ளது.

    இதன் மூலம் மரங்களை வெட்டுவதில் நாட்டிலேயே தெலுங்கானா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

    • ஐதராபாத் அணி வீரர் தன்மய் அகர்வால் ரஞ்சி போட்டியில் முச்சதம் அடித்து அசத்தினார்.
    • அதிவேக இரட்டை சதம் மற்றும் அதிவேக முச்சதம் சாதனைகளை முறியடித்தார்.

    ஐதராபாத்:

    இந்தியாவில் உள்ளூர் போட்டிகளில் ஒன்றான ரஞ்சி டிராபி தொடர் நடந்து வருகிறது.

    அதில் ஐதராபாத், அருணாச்சல பிரதேசம் அணிகளுக்கு இடையே ஆன போட்டியின் முதல் நாள் ஆட்டம் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த அருணாச்சல பிரதேசம் 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதையடுத்து, ஐதராபாத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரர்களாக தன்மய் அகர்வால், கேப்டன் ராகுல் சிங் இறங்கினர். இருவரும் சேர்ந்து அருணாச்சல் அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். ராகுல் சிங் 105 பந்துகளில் 185 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    தன்மய் அகர்வால் அதிரடியாக ஆடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவர் 119 பந்துகளில் இரட்டை சதம் கடந்தார். இதன்மூலம் முதல் தர கிரிக்கெட் (உள்ளூர் டெஸ்ட் போட்டிகள் மற்றும் சர்வதேச டெஸ்ட் போட்டிகளை சேர்த்து) வரலாற்றில் அதிவேக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்திய தன்மய் அகர்வால் 147 பந்துகளில் முச்சதம் கடந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 160 பந்துகளில் 323 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக முச்சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் தன்மய் அகர்வால் படைத்தார்.

    ஒரே நாளில் 300 ரன்கள் குவித்த முதல் இந்திய வீரர், இரண்டாவது ஆசிய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். 21 சிக்சர், 33 பவுண்டரிகள் விளாசி இருந்தார்.

    21 சிக்சர் அடித்ததன் மூலம் இந்திய முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். ஏற்கனவே, இஷான் கிஷன் 14 சிக்ஸ் அடித்ததே சாதனையாக இருந்தது. அதை தன்மய் அகர்வால் உடைத்தார்.

    முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஐதராபாத் அணி 48 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 529 ரன்கள் குவித்தது.

    அருணாச்சல பிரதேசம் அணி 172 ரன்கள், ஐதராபாத் அணி 527 ரன்கள் எடுத்த நிலையில் ஒரே நாளில் 701 ரன்கள் குவிக்கப்பட்டது.

    விஸ்டன் அல்மனாக்கின் கூற்றுப்படி, முதல் தர கிரிக்கெட் போட்டி 1772-ல் விளையாடப்பட்டது. சுமார் 252 ஆண்டுகளில் இந்த சாதனையை எட்டியது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இந்தியா 2வது நாள் முடிவில் 421 ரன்கள் எடுத்துள்ளது.

    ஐதராபாத்:

    இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பென் ஸ்டோக்ஸ் பொறுப்புடன் ஆடி 70 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 119 ரன்கள் எடுத்தது.

    இந்நிலையில், 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஜெய்ஸ்வால் 80 ரன்னில் அவுட்டானார். கே.எல்.ராகுல் சிறப்பாக ஆடி 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் 34 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து இறங்கிய ஜடேஜாவுடன் ஸ்ரீகர் பரத் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 68 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்ரீகர் பரத் 41 ரன்னில் அவுட்டானார். அஸ்வின் ஒரு ரன்னில் ரன் அவுட்டானார். தொடர்ந்து இறங்கிய அக்சர் படேல் நிதானமாக ஆடினார்.

    இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் குவித்துள்ளது. ஜடேஜா 81 ரன்னுடனும், அக்சர் படேல் 35 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதனால் இந்திய அணி இங்கிலாந்தை விட 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    • மாநில முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    • பார்வையாளர் இருக்கையில் அமர்ந்திருந்த, முன்னாள் துணை முதல்வர் மயங்கி சரிந்தார்.

    நாட்டின் 75-வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலம் தெலுங்கானா பவனில் இன்று காலையில் குடியரசு தின விழா கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடந்து கொண்டிருந்தது. இவ்விழாவில் தெலுங்கானா மாநில முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கலைநிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தபோது பார்வையாளர் இருக்கையில் அமர்ந்திருந்த, தெலுங்கானா முன்னாள் துணை முதல்வர் மஹ்மூத் அலி திடீர் உடல்நலக்குறைவால் மயங்கி சரிந்தார். அப்போது அவரை அருகில் இருந்தவர்கள் கைத்தாங்கலாக உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.



    2018-ஆம் ஆண்டில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி சார்பில் மஹ்மூத் போட்டியிட்டு முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்ததுடன், துணை முதலமைச்சராகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹனுமான் நாயக் சேக் பேட்டையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் கடைக்குச் சென்றார்.
    • இதனைக் கண்டு சூப்பர் மார்க்கெட் மேலாளர் அதிர்ச்சி அடைந்தார்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சேக் பேட்டையை சேர்ந்தவர் ஹனுமான் நாயக் (வயது 22). இவர் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகி வருகிறார்.

    இந்த நிலையில் ஹனுமான் நாயக் சேக் பேட்டையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் கடைக்குச் சென்றார்.

    அங்கிருந்து மாட்டிக்கொள்ளாமல் சாக்லேட் திருடி சாப்பிடுவது எப்படி என்று பேசியபடி ஒரு சாக்லேட்டை நைசாக திருடி சாப்பிட்டார். இதனை அவரது நண்பர் ஒருவர் வீடியோ எடுத்தார்.

    அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர். இதனைக் கண்டு சூப்பர் மார்க்கெட் மேலாளர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சாக்லேட் திருடியது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அனுமான் நாயக் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பரை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் வன்முறையை ஏவி விட்டுள்ளனர்.
    • சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள மாநில வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் புதிய கோர்ட்டு அலுவலகம் கட்ட மாநில அரசு முடிவு செய்தது.

    பல்கலைக்கழக வளாகத்தில் புதிய கட்டிடம் கட்ட உள்ள இடத்தில் ஏராளமான மரங்கள் வெட்டப்பட உள்ளது.

    புதிய கட்டிடத்திற்கு வேறு இடம் ஒதுக்க வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது வந்த போலீசார் மாணவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை விரட்டியடித்தனர்.

    அப்போது கல்லூரி மாணவி ஒருவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். பைக்கில் வந்த 2 பெண் போலீசார் மாணவியை துரத்தி சென்றனர்.

    மாணவியின் அருகில் சென்ற பெண் போலீஸ் ஒருவர் மாணவியின் நீண்ட தலை முடியை பிடித்து கொண்டார். இதனால் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.

    கீழே விழுந்த மாணவியின் தலைமுடியை பிடித்துக் கொண்டு தரதரவென இழுத்துக் கொண்டு பைக்கை ஓட்டி சென்றனர்.

    இதனால் மாணவி சிறிது தூரம் தரையில் விழுந்து உரசியபடி சென்றதால் காலில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அப்பகுதியில் இருந்த சில மாணவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து சந்திரசேகர ராவின் மகள் கவிதா தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அதில் இந்த சம்பவம் ஆழ்ந்த கவலைக்குரியது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

    இதுகுறித்து மகளிர் ஆணையம் மற்றும் மனித உரிமை ஆணையம் விரிவான விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் வன்முறையை ஏவி விட்டுள்ளனர் எனக் கூறியுள்ளார். 

    • 100 கோடிக்கு மேலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    • வங்கி லாக்கர் மற்றும் வெளியிடப்படாத சொத்துக்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் .

    தெலுங்கானா மாநில ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலாளர் சிவ பாலகிருஷ்ணா. இவர் வருமானத்திற்கு அதிகமாக பல நூறு கோடி ரூபாய் சொத்துக்களை சேர்த்திருப்பதாக தகவல் கிடைத்தது.

    இதன் அடிப்படையில் ஊழல் தடுப்பு பிரிவினர் சிவ பாலகிருஷ்ணாவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் உறவினர்கள் வீடுகள் என மொத்தம் 20 இடங்களில் நேற்று காலை 5 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் சிவ பாலகிருஷ்ணா வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இருந்து 100 கோடிக்கு மேலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    அவருடைய வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டுகட்டாக பணம், தங்க கட்டிகள் நகைகள், 60 உயர் ரக கைக்கடிகாரங்கள், சொத்து ஆவணங்கள், 14 செல்போன்கள், 10 லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

    அவரது வீடுகளில் இருந்து ரூ.40 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் நகைகளை அதிகாரிகள் எண்ணும் வீடியோ காட்சி சமூக வலைதளகளில் பரவி வருகிறது.

    தங்க நகைகள், செல்போன்களை குவித்து வைத்து வீடியோவாகவும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

    சிவபாலகிருஷ்ணா மீது கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தனது பதவியை பயன்படுத்தி பெரும் அளவில் சொத்துக்களை குவித்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

    தொடர்ந்து அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனை நாளை வரை நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வங்கி லாக்கர் மற்றும் வெளியிடப்படாத சொத்துக்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் .

    ஒரு அதிகாரியின் வீட்டில் கட்டு கட்டாக பணம் மற்றும் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • தெலுங்கானா அரசு சார்பில் டெல்லி குடியரசு தின விழாவில், 7 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    • நேரம் கிடைக்கும் போதெல்லாம், ராமாயணம், பகவத் கீதை குறித்து நாட்டு பாடல்களை பாடி அசத்தி வருகிறார்.

    டெல்லி குடியரசு விழா அணிவகுப்பில், ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் அம்மாநிலத்தின் பெருமையை விளக்கும் வகையில் வாகன ஊர்வலம் நடைபெறும்.

    இந்த முறை தெலுங்கானா அரசு சார்பில் டெல்லி குடியரசு தின விழாவில், 7 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    அதில், கடந்த 22 ஆண்டுகளாக ஐதராபாத் மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளராக பணியாற்றும் நாராயணம்மா என்பவரும் கலந்துகொள்கிறார்.

    ரங்காரெட்டி மாவட்டம், யாச்சாரம் பகுதியை சேர்ந்த இவர் கடந்த 22 ஆண்டுகளில் நாள் தவறாமல் பணியாற்றி வருவதுடன், கூடுதல் நேரம் ஒதுக்கி துப்புரவு தொழிலை அக்கறையுடன் செய்து வருகிறார்.

    மேலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம், ராமாயணம், பகவத் கீதை குறித்து நாட்டு பாடல்களை பாடி அசத்தி வருகிறார். இதற்காக நாராயணம்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இதேபோன்று, சூர்யாபேட்டை மாவட்டம், கோதாடா பகுதியை சேர்ந்தவர் நாகலட்சுமி. பட்டதாரியான இவர் தினமும் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஒரு ஆட்டோவில், கூண்டு போல் ஏற்பாடு செய்யப்பட்ட மொபைல் கழிப்பறையை இணைத்து ரெயில் நிலையம், பஸ் நிலையம், மார்க்கெட், சினிமா அரங்குகள் போன்ற மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் நிறுத்தி வைப்பார். இது பெண்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடியதாகும்.

    இதை யார் வேண்டுமானாலும் இலவசமாக உபயோகிக்கலாம். இதுபோன்ற சேவையை நாகலட்சுமி தவறாமல் செய்து வருகிறார்.

    சிறப்பாக செயலாற்றி வரும் சைலஜா, அனிதா ராணி, சுரேகா, ரமாதேவி, லட்சுமி ஆகிய 5 பெண் ஊராட்சி மன்ற தலைவிகளையும் தெலுங்கானா அரசு தேர்வு செய்துள்ளது.

    • காரில் வந்த 4 பேர் லேசான காயம் அடைந்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம், மஹபூபாபாத் மாவட்டம், சின்ன எல்லாபுரம், அமுதண்டாவை சேர்ந்தவர் இஸ்லாவத் ஸ்ரீனு (வயது 40). ஆட்டோ டிரைவர்.

    இவரது தாய் பாப்பா (60), மகள் ரித்விக் (6), ரித்விகா (4). அவரது அத்தை சாந்தி, மைத்துனர் சர்தார் ஆகியோருடன் தனது மகன் ரித்விக்கிற்கு முடி காணிக்கை செலுத்துவதற்காக நல்கொண்டா மாவட்டம், நாகார்ஜுன சாகர் அருகே உள்ள கோவிலுக்கு ஆட்டோவில் சென்றனர்.

    இரவு மீண்டும் வீடு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அப்போது மஹபூபாபாத் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஆட்டோ மீது மோதியது.

    இதில் ஸ்ரீனு அவரது தாய் பாப்பா, மகன் ரித்விக், மகள் ரித்விகா ஆகியோர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    சாந்தி, மைத்துனர் சர்தார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதேபோல் காரில் வந்த 4 பேர் லேசான காயம் அடைந்தனர்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • துபாய் செல்லும் பயணிகளிடம் அவர்கள் அதிரடி சோதனை நடத்தினர்.
    • எங்கிருந்து யாருக்கு வைரங்கள் கடத்தி செல்கிறார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு வைரங்கள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

    துபாய் செல்லும் பயணிகளிடம் அவர்கள் அதிரடி சோதனை நடத்தினர். சந்தேகத்திற்கு இடமாக பதிலளித்த 2 பயணிகளின் உடமைகளை சோதனையிட்டனர். அவர்கள் வைத்திருந்த ஒரு பையில் சாக்லேட் கவர்களால் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்த வைரங்கள் இருந்தன.

    மொத்தம் 5 ஆயிரத்து 569.64 காரட் வைரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு 6.03 கோடி ஆகும். மேலும் அவர்களிடம் இருந்து 9.8 லட்சம் வெளிநாட்டு கரன்சி ரூ.1 லட்சம் இந்திய பணம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    இவர்கள் எங்கிருந்து யாருக்கு வைரங்கள் கடத்தி செல்கிறார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ்சில் சண்டை சேவலை விட்டுச் சென்றவர் வந்து சேவலை மீட்டு செல்லலாம் என விளம்பரம் செய்தனர்.
    • சண்டை சேவலை இன்று மாலை ஏலம் விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


    தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் இருந்து வெமுலவாடா பஸ் நிலையத்திற்கு அரசு பஸ் வந்தது.

    பயணிகள் அனைவரும் பஸ்சில் இருந்து இறங்கியதும் டிரைவர் மற்றும் கண்டக்டர் உணவு சாப்பிடுவதற்காக சென்றனர்.

    அப்போது பஸ்சில் இருந்து சேவல் கூவும் சத்தம் கேட்டது. இதையடுத்து டிரைவர், கண்டக்டர் இருவரும் பஸ்சில் ஏறி பார்த்தனர். பயணிகளின் சீட்டுக்கு அடியில் ஒரு பை இருந்தது. பையை திறந்து பார்த்தபோது அதில் சண்டை சேவல் இருந்தது. பயணிகள் அதனை மறந்து விட்டு சென்றுள்ளனர்.

    இதுகுறித்து பஸ் மேலாளர் மல்லையாவுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சண்டை சேவலை கரீம் நகர் பணிமனைக்கு கொண்டு சென்றனர். இரும்பு கூண்டில் அடைத்து சேவலுக்கு உணவு வழங்கினார்.

    பஸ்சில் சண்டை சேவலை விட்டுச் சென்றவர் வந்து சண்டை சேவலை மீட்டு செல்லலாம் என விளம்பரம் செய்தனர்.

    ஆனால் 3 நாட்களாக சேவலுக்கு சொந்தம் கொண்டாடி யாரும் வரவில்லை.

    இதனால் சண்டை சேவலை இன்று மாலை ஏலம் விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    தெலுங்கானாவில் பந்தய சேவலுக்கு ஏகப்பட்ட வரவேற்பு உள்ளதால் ஏராளமானோர் கலந்து கொண்டு சண்டை சேவலை ஏலம் எடுப்பார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×