என் மலர்tooltip icon

    தெலுங்கானா

    • காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை டெல்லியில் சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
    • சட்டசபை அலுவலகத்தில் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் கட்சியை சேர்ந்த மல்காஜ்கிரி எம்.எல்.ஏ மைனம்பள்ளி அனுமந்த ராவ், முன்னாள் எம்.எல்.ஏக்கள் வெமுல வீரேஷம், குப்பம் அணில் குமார் ரெட்டி ஆகியோர் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை டெல்லியில் சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

    இதேபோல் ஜி.எச். எம்.சி முன்னாள் மேயர் போந்து ராம் மோகன், விஹாராபாத் மாவட்ட தலைவர் சுனிதா ரெட்டி, ஸ்ரீதேவி, பி.ஆர்.எஸ் தலைவர் சந்திர சேகர் ரெட்டி, பிரபல திரைப்பட நடிகர் அல்லு அர்ஜுன் மாமனார் ஆகியோர் தெலுங்கானா காங்கிரஸ் பொறுப்பாளர் தீபா தாஸ் முன்ஷி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர்.

    பின்னர் ஐதராபாத்தில் உள்ள சட்டசபை அலுவலகத்தில் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    • நண்பரிடமிருந்து ஷேக் முஸமில் அகமது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • உடலை உடனடியாக மீட்டு ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் ஷேக் முஸமில் அகமது (வயது 25). இவர் கனடா நாட்டில் ஒன்டாரியோவில் உள்ள கிச்சனர் சிட்டி கோனெஸ்டோகா கல்லூரியில் முதுகலை ஐ.டி. படித்து வந்தார். கடந்த பல நாட்களாக இவர் காய்ச்சலில் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு தற்போது இறந்துவிட்டதாக அவரது நண்பரிடமிருந்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


    இந்தச் செய்தியைக் கேட்டு அவரது பெற்றோர், குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஷேக் முஸம்மில் அகமது உடலை விரைவில் ஹைதராபாத்திற்கு அனுப்புமாறு அவரது மாமாவும், தெலுங்கானா மஜ்லிஸ் பச்சாவ் தெஹ்ரீக் என்ற அரசியல் கட்சி தலைவரான அம்ஜத் உல்லா கான் 'எக்ஸ்' இணையதளத்தில் பதிவிட்டு உள்ளார். மேலும் , இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கருக்கு ஒரு கோரிக்கையும் விடுத்துள்ளார். அதில் மாணவனின் உடலை உடனடியாக மீட்டு ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • மாநில எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ். கட்சி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
    • அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் தெலுங்கானா அன்னையின் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சிலை அமைக்க முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அடிக்கல் நாட்டினார்.

    இதற்கு அந்த மாநில எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ். கட்சி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ராஜீவ் காந்தி சிலை வைக்க அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் தெலுங்கானா அன்னையின் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

    அந்த இடத்தில் ராஜீவ் காந்தி சிலையை அமைக்க கூடாது. தெலுங்கானா அன்னை சிலை மாநிலத்தின் கலாச்சார அடையாளத்தை குறிக்கிறது. எனவே தலைமைச் செயலக வளாகத்தில் ராஜீவ் காந்தி சிலை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்.

    அந்த இடத்தில் தெலுங்கானா அன்னை சிலையை வைக்க வேண்டும் என சந்திரசேகர ராவின் மகள் கவிதா வலியுறுத்தி உள்ளார்.

    • தெலுங்கானாவில் 17 எம்.பி. தொகுதிகள் உள்ளன.
    • காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்.பி. சீட் கேட்டு வருகின்றனர்.

    தெலுங்கானாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை பிடித்து பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தது.

    இதனால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி அல்லது பிரியங்கா காந்தி ஆகியோர் மேடக் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சியினர் விரும்புகின்றனர்.

    மேலும் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் இளைஞர் அணியினர், மகளிர் அணியினர் தேர்தலில் சீட் பெற போட்டி போட்டு வருகின்றனர். தெலுங்கானாவில் 17 எம்.பி. தொகுதிகள் உள்ளன.

    காங்கிரஸ் சார்பில் போட்டியிட 309 பேர் விருப்பம் தெரிவித்து மனு அளித்து உள்ளனர்.

    ஒரு சில கட்சி நிர்வாகிகள் தங்களுடைய பலத்தை காண்பிப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி ஊர்வலமாக சென்று விருப்ப மனு அளித்து வருகின்றனர்.

    இதேபோல் சந்திரசேகர ராவ் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பலரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்.பி. சீட் கேட்டு வருகின்றனர்.

    இதனால் ஒவ்வொரு தொகுதிக்கும் 3 வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தேர்வு செய்யப்படும் வேட்பாளர்கள் பட்டியலை கட்சி மேல் இடத்திற்கு அனுப்பி வைத்து அதில் வெற்றி வாய்ப்பு உள்ள ஒருவரை தேர்ந்தெடுத்து சீட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    தெலுங்கானா மக்களவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் கடும் போட்டி நிலவி வருவதால் பரபரப்பாக உள்ளது.

    • இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 17 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்.
    • 2020 ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தவர் வருண் குமார்.

    இந்திய ஹாக்கி அணி வீரர் வருண் குமார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலிப்பாக கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம்பெண் பெங்களூருவில் உள்ள ஞானபாரதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அந்த புகார் அடிப்படையில் ஹாக்கி வீரர் வருண் குமார் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் வருண் குமார் இடம் பெற்றிருந்தார். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்தார்.

    2021-ல் அர்ஜூனா விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. போக்சோ தவிர்த்து மோசடி பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    புகார் அளித்த பெண் ஐதராபாத்தை சேர்ந்த கைப்பந்து வீராங்கனை ஆவார். இவருக்கு 17 வயதாக இருக்கும்போது இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதன்பின் திருமணம் செய்வதாக உறுதி அளித்து ஏமாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாடு TN என்றும் கர்நாடகா KA என்றும் குறியிடப்பட்டுள்ளது
    • டிஆர்எஸ் கட்சியை குறிப்பிடும் வகையில் டிஎஸ் இருந்ததாக காங்கிரஸ் கூறி வந்தது

    1963லிருந்து, அரசாங்கங்களுக்கு இடையே இந்திய மாநிலங்கள் சம்பந்தப்பட்ட பதிவுகளின் போது, மாநிலங்களை குறிப்பதற்கு ஆங்கில எழுத்துக்கள் இரண்டினை கொண்டு குறிக்கும் முறை வழக்கத்தில் இருந்து வருகிறது.

    எடுத்துக் காட்டாக, கர்நாடகா - கேஏ (KA), கேரளா - கேஎல் (KL), தமிழ்நாடு - டிஎன் (TN) என குறிப்பிடப்பட்டு வருகின்றன.

    2014ல் ஆந்திர பிரதேச மாநிலத்திலிருந்து தெலுங்கானா எனும் தனி மாநிலம் உருவானது. அப்போது முதல், தெலுங்கானா டிஎஸ் (TS) எனும் இரு ஆங்கில எழுத்துக்களால் குறிப்பிடப்பட்டு வந்தது.

    கடந்த 2023 நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் தெலுங்கான மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வென்றது. அக்கட்சி சார்பில் முதல்வராக ரேவந்த் ரெட்டி (54) பொறுப்பேற்று கொண்டார்.

    தெலுங்கானா சட்டசபையின் பட்ஜெட் கூட்டம், பிப்ரவரி 8 அன்று மாநில கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் உரையுடன் தொடங்க உள்ளது.

    இந்நிலையில், நேற்று ரேவந்த் ரெட்டி தலைமையிலான கேபினெட் அமைச்சரவை, தெலுங்கானாவிற்கான ஆங்கில குறியீடை "டிஎஸ்" என்பதற்கு பதில் "டிஜி" (TG) என மாற்றியிருப்பதாக அறிவித்தது.

    இனி தெலுங்கானா மாநிலம், அரசு கோப்புகளிலும், வாகனங்களின் நம்பர் பிளேட்களிலும் டிஜி என குறிப்பிடப்படும்.

    முன்னர் ஆட்சியில் இருந்த பாரத் ராஷ்டிரிய சமிதி (BRS) கட்சியின் முந்தைய பெயரான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (TRS) எனும் பெயரை குறிப்பிடும் விதமாகவே முந்தைய அரசு, "டிஎஸ்" என உருவாக்கியிருந்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

    அண்டே ஸ்ரீ இயற்றிய "ஜய ஜய ஹே தெலுங்கானா" எனும் பாடலை தெலுங்கானா மாநில கீதமாக அங்கீகரித்து கேபினெட் முடிவெடுத்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆட்டோ டிரைவர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • போலீசார் ஆட்டோ டிரைவைர் தேவாவை கைது செய்தனர்.

    திருப்பதி:

    தெலங்கானாவில் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பஸ் பயண சேவை வழங்கப்படுகிறது.

    இந்த திட்டம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் ஆட்டோ டிரைவர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் மஹ்பூப்நகரை சேர்ந்த தேவா (வயது 45) குடிபோதையில் தனது ஆட்டோவுடன் முதல் மந்திரி முகாம் அலுவலகமான ஐதராபாத் பிரஜா பவனுக்கு வந்தார்.


    பின்னர் பெண்களுக்கான இலவச பஸ் பயணத்தால் எங்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

    இதனைத் தொடர்ந்து ஆட்டோவுக்கு திடீரென தீ வைத்தார். இதனை பார்த்த பிரஜா பவன் ஊழியர்கள் மற்றும் போலீசார், ஆட்டோவில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர்.

    இருப்பினும் தீ பரவியதில் ஆட்டோ முழுவதும் எரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் ஆட்டோ டிரைவைர் தேவாவை கைது செய்தனர்.

    • ஆதார் கார்டு இல்லாவிட்டால் 10 ரூபாய்க்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்றார்.
    • அவரையும் தலைமுடியை கெட்டியாக பிடித்து இழுத்து, பஸ் கம்பியில் அடித்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் எல்.பி. நகரில், அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. கண்டக்டர் கங்காதரன் பயணிகளிடம் டிக்கெட் கொடுத்து கொண்டிருந்தார்.

    தில்சுக் நகர் செல்வதற்காக, அந்த பஸ்சில் இளம் பெண் ஒருவர் ஏறினார்.

    கண்டக்டர் கங்காதரனிடம், அந்த பெண் இலவச பயண டிக்கெட் கேட்டார்.

    உடனே கண்டக்டர், ஆதார் அட்டையை காண்பிக்கும்படி கேட்டார்.

    இதைக் கேட்டதுமே அந்த பெண்ணுக்கு கோபம் வந்துவிட்டது. யாரை பார்த்து ஆதார் அட்டை கேட்கிறாய்? என்று கேள்வி கேட்டு, கண்டக்டரை சரமாரியாக திட்டினார்.

    இதனால், திடுக்கிட்ட கண்டக்டர், அடையாள அட்டை இல்லாமல், பஸ்சில் பயணிக்க முடியாது, ஆதார் கார்டு இல்லாவிட்டால் 10 ரூபாய்க்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்றார். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் கண்டக்டரை எட்டி உதைத்து தாக்க தொடங்கினார். அப்போதுதான் அந்த பெண், குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.

    பிறகு, அந்த பெண், திடீரென ரூ.500 நோட்டை கண்டக்டரிடம் தந்து டிக்கெட் கேட்டார்.

    500 ரூபாய்க்கு சில்லறை இல்லை என்று கண்டக்டர் கூறினார்.

    இதைக் கேட்டதும், அந்த பெண்ணுக்கு மீண்டும் கோபம் அதிகமாகிவிட்டது. அதனால், கண்டக்டரை எட்டி காலால் உதைத்தார். பிறகு, அவரது முகத்திலேயே எச்சிலை துப்பினார்.

    சினிமாவில் வரும் சண்டை காட்சி போல கண்டக்டரை காலால் உதைத்து புரட்டி எடுத்தார்.

    இதனை பார்த்து, பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ந்து போனார்கள் யாருமே அந்த பெண்ணிடம் நெருங்கவில்லை. ஒரு பெண் இதனை தடுக்க அருகில் வந்தார்.

    அவரையும் தலைமுடியை கெட்டியாக பிடித்து இழுத்து, பஸ் கம்பியில் அடித்தார்.

    பஸ்சை அருகில் உள்ள போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். இது குறித்து கண்டக்டர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் போதையில் கண்டக்டர் மற்றும் பெண்ணை தாக்கியது தொடர்பாக இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேண்ட் சட்டை அணிந்து இளம்பெண் பஸ்சில் கண்டக்டரை தாக்கும் காட்சிகளை பயணிகள் வீடியோ எடுத்துள்ளனர் .

    அது தெலுங்கானாவில் தற்போது வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • ஆட்டோ மீது பூச்செடிகள் வளர்ந்துள்ளதால் ஆட்டோவில் உள்பகுதியில் குளுமையாக உள்ளது.
    • அஞ்சுக்கு அதிக அளவில் சவாரி கிடைப்பதால் கணிசமான அளவில் வருமானம் ஈட்டி வருகிறார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், மெகபூபாபாத்தை சேர்ந்தவர் அஞ்சி. இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.

    வாகன பெருக்கத்தின் காரணமாக சுற்றுச்சூழல் மாசு அடைந்து வருவதால் வித்தியாசமாக ஏதாவது செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என விரும்பினார்.

    அதன்படி அஞ்சு தனது ஆட்டோவின் மேற்கூரையில் வித்தியாசமான முறையில் பல்வேறு பூச்செடிகளை நட்டு நகரும் தோட்டம் அமைத்து உள்ளார். அஞ்சுவின் ஆட்டோ மேற்கூரையில் பூச்செடிகள் பூத்து குலுங்குவது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.

    வித்தியாசமான முறையில் ஆட்டோ மீது பூந்தோட்டம் அமைத்துள்ளதை அப்பகுதி மக்கள் அதிசயமாக பார்க்கின்றனர். மேலும் அவரது ஆட்டோவில் உள்பகுதியில் மின்விசிறியும் பொருத்தியுள்ளார்.

    இவரது ஆட்டோ மீது பூச்செடிகள் வளர்ந்துள்ளதால் ஆட்டோவில் உள்பகுதியில் குளுமையாக உள்ளது.

    அஞ்சுவின் ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளுக்கு வெப்பம் தெரியாமல் சில்லென்ற காற்று வீசுவதால் பயணிகள் இவரது ஆட்டோவில் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

    அஞ்சுக்கு அதிக அளவில் சவாரி கிடைப்பதால் கணிசமான அளவில் வருமானம் ஈட்டி வருகிறார். தற்போது கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் அஞ்சுவுவின் ஆட்டோவில் பயணிக்க பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவார்கள் என கூறப்படுகிறது.

    அஞ்சுவை அப்பகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் எம்.பி.க்கள் உள்ளிட்டோர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தனர். இவரது ஆட்டோவின் படங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு ஏராளமானோர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

    • பல்லாயிரக்கணக்கான லைக்குகளையும், பார்வைகளையும் குவித்து வருகிறது.
    • 498 ரூபிக்ஸ் கியூப்ஸ்களை பயன்படுத்தி ஹிருதய் படேல் ராமர் படத்தை உருவாக்கி உள்ளார்.

    அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஐதராபாத்தில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் ஹிருதய் படேல் என்ற 11 வயது சிறுவன் ரூபிக் கன சதுரத்தை பயன்படுத்தி கியூப்பில் ராமபிரானின் உருவத்தை வரைந்து அசத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பல்லாயிரக்கணக்கான லைக்குகளையும், பார்வைகளையும் குவித்து வருகிறது.

    498 ரூபிக்ஸ் கியூப்ஸ்களை பயன்படுத்தி ஹிருதய் படேல் ராமர் படத்தை உருவாக்கி உள்ளார். சிறுவனின் இந்த வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் அவரது திறமையை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர், நம்ப முடியவில்லை! என்ன ஒரு அசாத்திய திறமை உங்களிடம் உள்ளது, கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.

    மற்றொரு பயனர் என்ன ஆச்சரியம், ஜெய் ஸ்ரீராம் என பதிவிட்டுள்ளார். இதுபோன்று பயனர்கள் பலரும் ஹிருதய் படேலின் திறமையை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பாம்பை தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்தனர்.
    • கடந்த 4 நாட்களாக கோவில் வளாகத்தில் நாகப்பாம்பு உள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஹுசூராபாத் நகரில் உள்ள ராமர் கோவிலில் நாகப்பாம்பு ஒன்று புகுந்தது. கோவிலில் உள்ள சிவன் சன்னதிக்குள் நுழைந்தது. அங்கிருந்த சிவலிங்கத்தை சுற்றி சுற்றி வந்தது.

    மேலும் சிவலிங்கத்தின் மீது உடலை சுற்றியபடி படமெடுத்து ஆடியது. இது பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    கோவிலில் நாகப்பாம்பு இருப்பதாக தகவல் பரவியதையடுத்து, பக்தர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பாம்பை தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்தனர்.

    சிவலிங்கம் மீது நாகப்பாம்பு கண்டதால், சிவன் கோவிலில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்

    அவர்களில் சிலர் பூஜை செய்து வழிபட்டனர். பாம்பின் காட்சிகளை தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். கடந்த 4 நாட்களாக கோவில் வளாகத்தில் நாகப்பாம்பு உள்ளது. இதனால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.

    • இந்தியா முதல் இன்னிங்சில் 436 ரன்களை குவித்தது.
    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்னும், 2வது இன்னிங்சில் 420 ரன்னும் எடுத்தது.

    ஐதராபாத்:

    இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக ஆடி 70 ரன்களை குவித்தார்.

    தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 436 ரன்களை குவித்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பரத் மற்றும் அக்சர் பட்டேல் பொறுப்பாக விளையாடினர்.

    அடுத்து 2வது இன்னிங்சை தொடர்ந்தது இங்கிலாந்து. ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் ஒல்லி போப் நிதானமாக ஆடி சதமடித்தார். 3-ம் நாள் முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்களை குவித்துள்ளது. போப் 148 ரன்களுடனும், ரெஹான் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதன்மூலம் அந்த அணி 126 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது.

    இந்நிலையில், இன்று நான்காம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடக்கம் முதல் இங்கிலாந்து வீரர்கள் அதிரடியாக ஆடினர். இதனால் 400 ரன்களை கடந்தது. இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் ஒல்லி போப் 196 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 420 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா வெற்றிபெற 231 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட், அஸ்வின் 3 விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டும், அக்சர் பட்டேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    ×