என் மலர்
நீங்கள் தேடியது "free travel"
- ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் 3.36 கோடி பெண்கள் இலவச பயணம் செய்கின்றனர்.
- திருக்குறளை திருவள்ளுவர் படத்துடன் அனைத்து அரசு பஸ்களிலும் இடம் பெறும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ராமநாதபுரம்
முதல்-அமைச்சராக மு. க. ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் 5 திட்டங்களை செயல்படுத்து வதற்கு கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்று பெண்களுக்கு டவுன் பஸ்களில் இலவச பயண திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் பெண்களுக்கு நிதிசுமை குறைந்து பயனடைவார்கள்.
இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள், அவருடன் ஒரு உதவியாளர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களும் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் இலவசமாக பயணம் செய்பவர்களுக்கு அரசு டவுன் பஸ்களில் கட்டணமில்லா தனி பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் கீழ் 6 டெப்போக்கள் செயல்பட்டு வருகின்றன. டவுன் பஸ்கள் ஏறத்தாழ 120 வழித்தடங்களிலும், புறநகர் பஸ்கள் 200க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் இதுநாள் வரை 3 கோடி 36 லட்சத்து 52 ஆயிரத்து 835 பெண்கள், 2 லட்சத்து 32 ஆயிரத்து 613 மாற்றுத்திறனாளிகள், 10 ஆயிரத்து 411 மாற்றுத்திறனாளிகள் உடன் வரும் உதவியாளர்கள், 12 ஆயிரத்து 767 மூன்றாம் பாலினர்கள் இலவசமாக பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர். நாளொன்றுக்கு சராசரியாக 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை பெண்கள் இத்திட்டத்தின் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் இயங்கும் பஸ்களில் கட்டணமில்லாமல் பயணம் செய்து பயனடைந்து வருகின்றனர்.
அதே போல, தமிழ்மொழியின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் உலகப் பொதுமறையாம் திருக்குறளை அய்யன் திருவள்ளுவர் படத்துடன் அனைத்து அரசு பஸ்களிலும் இடம் பெறும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி. உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) வினோத் தெரிவித்துள்ளார்.
இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி.) இணையதளம் மூலம் ரெயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. ரெயில் பயணத்தின்போது எதிர்பாராமல் ஏற்படும் விபத்துகளில் சிக்கி இறப்பவர்களுக்கும், படுகாயமடைபவர்களுக்கும் உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக ரெயில்வே நிர்வாகம் பயணிகளிடம் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ரூ.1 மட்டும் காப்பீடு தொகையாக வசூலித்து வருகிறது. இணையதளம் மூலம் பெறப்படும் இ-டிக்கெட்டுகளுக்கு மட்டும் இந்த வசதி செய்யப்பட்டு வருகிறது. ரெயில்வே கவுண்ட்டர்களில் எடுக்கப்படும் டிக்கெட்டுகளுக்கு காப்பீடு கட்டண திட்டம் நடைமுறையில் இல்லை.
இந்தநிலையில் வருகிற 1-ந்தேதி முதல் இணையதளம் மூலம் இ-டிக்கெட்டுகள் பெறுபவர்களுக்கு அவர்களது விருப்பத்தின் பேரிலேயே காப்பீடு செய்யப்பட உள்ளது. இதற்காக காப்பீடு வேண்டுமா? வேண்டாமா? என்று ஒரு பகுதி இடம்பெற்றிருக்கும். அதில் பயணிகள் தங்கள் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
காப்பீடு செய்தவர்கள் விபத்து ஏற்படும் பட்சத்தில் இறக்க நேரிட்டால் ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தால் ரூ.7.50 லட்சமும் இழப்பீடு தொகையாக வழங்கப்படும்.
இந்த தகவலை ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். #IRCTC #Insurance
சென்னையில் நேரு பூங்கா-சென்டிரல் மற்றும் சின்னமலை இடையிலான மெட்ரோ ரெயில் சேவையின் புதிய வழித்தடம் கடந்த 25-ந் தேதி தொடங்கப்பட்டது. இதனையடுத்து அன்றைய தினம் இலவச பயணத்துக்கு மெட்ரோ ரெயில் நிறுவனம் அனுமதித்தது. கூடுதலாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் இந்த இலவச பயணம் நீடிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு பொதுமக்கள் இடையே குதூகலத்தை ஏற்படுத்தியது. கோடை விடுமுறை என்பதாலும் வார கடைசி நாட்கள் என்பதாலும் சனிக்கிழமையன்று 1 லட்சத்து 20 ஆயிரத்து 500 பேரும், ஞாயிற்றுக்கிழமையன்று 1 லட்சத்து 84 ஆயிரத்து 518 பேரும் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தினர். இதனால் ரெயிலில் கூட்டம் அலைமோதியது. குழந்தைகளுடன் பலர் மெட்ரோ ரெயிலில் பலமுறை பயணம் செய்தனர்.

இதுகுறித்து பயணி ஒருவர் கூறுகையில்:-
‘மெட்ரோ ரெயிலின் குளு குளு பயணம் மற்ற ரெயில் பயணங்களை விட வித்தியாசமாக இருக்கிறது. இந்த அனுபவம் முற்றிலும் புத்துணர்ச்சி அளிப்பதாக உள்ளது. இலவசமாக பயணம் செய்வது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. அலுவலகம் செல்லும்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் புத்துணர்ச்சியுடன் பயணம் செய்ய முடிகிறது’
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரெயிலில் மக்களின் கூட்டம் அலைமோதியது. மக்கள் நிற்க கூட இடம் இன்றி பயணம் செய்தனர்.
ஆனால் 4-வது நாளான நேற்று இலவச பயணம் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் கடந்த 3 நாட்களை விட நேற்று பயணிகளின் கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்டது. பயண கட்டணம் கூடுதலாக உள்ளதால் மக்கள் எந்த அளவு மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்துவார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
சென்னை மெட்ரோ ரெயிலில் தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் (செவ்வாய்க் கிழமை) பயணிகள் இலவசமாக பயணிக்கலாம் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. #chennaimetrotrain
சென்னை:
சென்னை நேரு பூங்கா முதல் விமான நிலையம் வரை இயக்கப்பட்ட மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரல்- நேரு பூங்கா இடையேயும், சைதாப்பேட்டை ஏஜி டி.எம்.எஸ். இடையேயும் ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதையடுத்து கடந்த 25-ந்தேதி முதல் இன்றுவரை மெட்ரோ ரெயிலில் பயணிகள் இலவசமாக செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
இலவச பயணம் தொடர்பாக முதல் நாளில் நிறைய பேருக்கு தெரியாது என்பதால் அன்று பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. நேற்று பத்திரிகைகளில் செய்திகள் வெளியானதால் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
சென்னை பயணிகளும், வெளியூரில் இருந்து வந்தவர்களும் குடும்பம் குடும்பமாக வந்து மெட்ரோ ரெயிலில் ஏறி பயணம் செய்து மகிழ்ந்தனர். சிறுவர்கள் மெட்ரோ ரெயில் பெட்டிக்குள் அங்கு மிங்கும் நடந்து சென்று குதூகலித்தனர்.
இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மெட்ரோ ரெயிலுக்குள் பயணித்த படியே செல்பி எடுத்துக் கொண்டனர். பயணிகள் கூட்டம் அலை மோதினாலும் 5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டதால் பயணிகள் பொறுமையாக காத்து நின்று அதில் ஏறி பயணித்தனர். சுற்றுலா செல்வது போல அவர்கள் ஏதாவது ஒரு ரெயில் நிலையத்தில் ஏறிச் சென்று மீண்டும் அந்த இடத்துக்கே வந்து இறங்கினார்கள். கோடை விடுமுறை காரணமாக மாணவ-மாணவிகள் ஏராளமானோர் பயணித்தனர்.
முதல் நாளில் 50 ஆயிரம் பேர் இலவசமாக பயணம் செய்தனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காலையில் இருந்தே மெட்ரோ ரெயிலில் பயணிகள் கூட்டம் அலை மோதியது. இன்று காலை 10 மணிவரை 30 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். அதாவது 3 நாளில் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இலவசமாக பயணம் செய்துள்ளனர்.
இன்றுநேரம் செல்ல செல்ல பயணிகளின் வருகை அதிகரித்தது. இன்று ஒரே நாளில் மெட்ரோ ரெயிலில் இலவச பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை 1½ லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ட்ரல் முதல் விமான நிலையம்வரையும், ஏ.ஜி. டி.எம்.எஸ். முதல் விமான நிலையம் வரையும் இலவசமாக செல்லலாம் என்பதால் பயணிகள் முழு உற்சாகத்துடன் பயணத்தை மேற்கொண்டனர். #Metrotrain
சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து படிப்படியாக இயக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் நேரு பூங்கா-சென்டிரல், ஏ.ஜி.டி.எம்.எஸ்.-சின்னமலை இடையே மெட்ரோ ரெயில் சேவை நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. இதையொட்டி, சோதனை அடிப்படையில் நேற்று முன்தினமும், நேற்றும் இலவச பயணம் செய்ய மெட்ரோ ரெயில் நிர்வாகம் அனுமதித்தது.

இதனால் நேற்று மெட்ரோ ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தற்போது கோடை விடுமுறையாக இருப்பதால், பலர் ஆர்வமுடன் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர். ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் நீண்ட வரிசையில் நின்று பயணிகள் மெட்ரோ ரெயிலில் ஏறி பயணம் செய்தனர்.
அதேபோல், சில ரெயில் நிலையங்களில் ஏறி, இறங்குவதில் பயணிகள் திக்குமுக்காடினார்கள். அந்த அளவுக்கு பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. பெற்றோருடன் வந்திருந்த குழந்தைகள், சிறுவர் மற்றும் சிறுமிகள் குதூகலத்துடன் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ததை பார்க்க முடிந்தது.
இலவச பயணம் என்பதால், பலரும் ஒரு முறைக்கு பல முறை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர். சென்டிரலில் இருந்து விமானநிலையம், பரங்கிமலைக்கும், ஏ.ஜி.டி.எம்.எஸ்.-ல் இருந்து விமான நிலையத்துக்கும் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணத்தை மேற்கொண்டனர்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வந்து செல்வதற்கு ஏதுவான வசதிகளுடன் மெட்ரோ ரெயில் சேவை செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. சுரங்கப்பாதை ரெயில் நிலையங்களில் இருப்பது, வெளிநாடுகளில் இருப்பது போன்ற அனுபவத்தை தருவதாக பலரும் தெரிவித்தனர்.

இதுகுறித்து மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த பயணிகள் சிலர் கூறியதாவது:-
தேனாம்பேட்டையை சேர்ந்த அக்ரிதி:-
மெட்ரோ ரெயில் சேவை அனைத்து தரப்பு மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நான் எதிர்பார்த்ததை விட ரொம்ப அழகாய் வடிவமைத்து இருக்கிறார்கள். சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள ரெயில் நிலையங்கள் ஒவ்வொன்றும் விமான நிலைய தோற்றத்தை போலவே இருக்கிறது.
இதில் பயணம் செய்வதால் நேரம் மிச்சமாகிறது. நாங்கள் அடிக்கடி விமானத்தில் பயணம் செய்வது வழக்கம். அந்தவகையில் தேனாம்பேட்டையில் இருந்து விமானநிலையத்துக்கு காரில் செல்வோம். போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்போம். அது இனிமேல் எங்களுக்கு தேவை இருக்காது. போக்குவரத்து நெரிசல் இல்லாமல், ‘குளு குளு’ வசதியுடன் விமானநிலையத்துக்கு செல்ல அருமையான வழியை மெட்ரோ ரெயில் நிர்வாகம் ஏற்படுத்தி தந்து இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சவுகார்பேட்டையை சேர்ந்த மகாலட்சுமி:-
என் அப்பாவுடன் வந்தேன். முதல் முறையாக மெட்ரோ ரெயிலில் பயணிக்கிறேன். இந்த பயணம் வியப்பை ஏற்படுத்தியது. நான் இப்படி இருக்கும் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. சாதாரணமான மின்சார ரெயில் போல தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அப்படி இல்லை. எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்துவிட்டேன்.
இதில் பயணம் செய்தால், சென்னையையே ஒரு முறை சுற்றி வந்தது போல் இருக்கிறது. சுரங்கப்பாதையில் ரெயில் செல்லும்போது ரொம்ப திரில்லாக இருந்தது. கட்டணத்தை கொஞ்சம் குறைத்தால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வேளச்சேரியை சேர்ந்த நாராயணன்:-
மெட்ரோ ரெயில் பயணம் சூப்பராக இருந்தது. நான் தினமும் வேளச்சேரியில் இருந்து தேனாம்பேட்டைக்கு வேலைக்காக வருவேன். இனி கிண்டி வரை வந்து, அங்கிருந்து மெட்ரோ ரெயிலில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் ஏ.ஜி.டி.எம்.எஸ் ரெயில் நிலையத்தில் இறங்கி பணிக்கு செல்வேன்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயணிக்க ஏதுவான சேவையை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அளித்து இருக்கிறது. கட்டணம் அதிகமாக இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களும் பயணிக்க வேண்டும் என்பதால் அதை கொஞ்சம் குறைக்கலாம். மற்றபடி இதில் குறை சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.