search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நேற்று அலைமோதிய பயணிகள் கூட்டத்தை படத்தில் காணலாம்
    X
    சென்னை சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நேற்று அலைமோதிய பயணிகள் கூட்டத்தை படத்தில் காணலாம்

    மெட்ரோ ரெயிலில் இலவச பயணம் நீட்டிப்பு- இன்றும் இலவசமாக பயணிக்கலாம்

    சென்னை மெட்ரோ ரெயிலில் இலவச பயணம் தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் நீட்டிக்கப்பட்டுள்ளது.#chennaimetrotrain
    சென்னை:

    சென்னையில் நேரு பூங்கா-சென்டிரல் மற்றும் சின்னமலை இடையிலான மெட்ரோ ரெயில் சேவையின் புதிய வழித்தடம் கடந்த 25-ந் தேதி தொடங்கப்பட்டது. இதனையடுத்து அன்றைய தினம் இலவச பயணத்துக்கு மெட்ரோ ரெயில் நிறுவனம் அனுமதித்தது. கூடுதலாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் இந்த இலவச பயணம் நீடிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்பு பொதுமக்கள் இடையே குதூகலத்தை ஏற்படுத்தியது. கோடை விடுமுறை என்பதாலும் வார கடைசி நாட்கள் என்பதாலும் சனிக்கிழமையன்று 1 லட்சத்து 20 ஆயிரத்து 500 பேரும், ஞாயிற்றுக்கிழமையன்று 1 லட்சத்து 84 ஆயிரத்து 518 பேரும் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தினர். இதனால் ரெயிலில் கூட்டம் அலைமோதியது. குழந்தைகளுடன் பலர் மெட்ரோ ரெயிலில் பலமுறை பயணம் செய்தனர்.

    இந்த நிலையில் மெட்ரோ ரெயில் நிர்வாகம் பொது மக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் 4-வது நாளாக நேற்றும் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது.

    இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. அலுவலகம் செல்வோர் பலர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர்.

    மெட்ரோ ரெயிலில் குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் உற்சாகமாக பயணித்த காட்சி

    இதுகுறித்து பயணி ஒருவர் கூறுகையில்:-

    ‘மெட்ரோ ரெயிலின் குளு குளு பயணம் மற்ற ரெயில் பயணங்களை விட வித்தியாசமாக இருக்கிறது. இந்த அனுபவம் முற்றிலும் புத்துணர்ச்சி அளிப்பதாக உள்ளது. இலவசமாக பயணம் செய்வது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. அலுவலகம் செல்லும்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் புத்துணர்ச்சியுடன் பயணம் செய்ய முடிகிறது’

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரெயிலில் மக்களின் கூட்டம் அலைமோதியது. மக்கள் நிற்க கூட இடம் இன்றி பயணம் செய்தனர்.

    ஆனால் 4-வது நாளான நேற்று இலவச பயணம் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் கடந்த 3 நாட்களை விட நேற்று பயணிகளின் கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்டது. பயண கட்டணம் கூடுதலாக உள்ளதால் மக்கள் எந்த அளவு மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்துவார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    சென்னை மெட்ரோ ரெயிலில் தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் (செவ்வாய்க் கிழமை) பயணிகள் இலவசமாக பயணிக்கலாம் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. #chennaimetrotrain
    Next Story
    ×