என் மலர்
உள்ளூர் செய்திகள்
- திமுகவின் இரட்டை வேடம் இன்று அம்பலப்பட்டு நிற்கிறது.
- கைது பூச்சாண்டிக்கெல்லாம் தமிழக பாஜகவினர் பயந்து பின்வாங்கப்போவதில்லை.
சென்னை:
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக தடையை மீறி கையெழுத்து இயக்கம் நடத்த முயன்ற தமிழிசை சவுந்தரராஜன் உட்பட பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஏழை, எளிய குழந்தைகளுக்கும், தரமான கல்வியும், விருப்பமான மொழிகளும் கற்கும் வாய்ப்பை வழங்கும் தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து, தமிழக பா.ஜ.க சார்பாக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தினை, சென்னையில் இன்று முன்னெடுத்துச் சென்ற தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் முன்னாள் ஆளுநர், அக்கா தமிழிசையை கைது செய்திருக்கிறது தமிழகக் காவல்துறை.
அறுபது ஆண்டுகளாகத் தமிழ் மொழியை வியாபாரமாக்கி, தனியார் பள்ளிகளில் மட்டும் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்கும் திமுகவின் இரட்டை வேடம் இன்று அம்பலப்பட்டு நிற்கிறது. திமுகவின் நாடகத்தைப் பொதுமக்கள் உணரத் தொடங்கி, மும்மொழிக் கொள்கைக்குப் பெருமளவில் ஆதரவளிப்பது கண்டு, பயத்தில் நிலை தடுமாறியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதன் விளைவே, ஜனநாயக ரீதியாக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தைத் தடுப்பதும், கைது செய்வதும்.
இந்தக் கைது பூச்சாண்டிக்கெல்லாம் தமிழக பாஜகவினர் பயந்து பின்வாங்கப்போவதில்லை. தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்வோம். எத்தனை பேரை உங்களால் சட்டவிரோதமாகக் கைது செய்ய முடியும் முதலமைச்சர் அவர்களே?
தேசியக் கல்விக் கொள்கை, உங்கள் கட்சியில் இருக்கும் கடைக்கோடி தொண்டர்களின் குழந்தைகளுக்கும் தரமான கல்வியையும், பல மொழிகள் கற்கும் வாய்ப்பையும் அரசுப் பள்ளியில் இலவசமாக வழங்குகிறது. அதை ஏன் தடுக்கிறீர்கள்? என வினவியுள்ளார்.
- முதலமைச்சர் வருவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
- கூட்டத்திற்கு நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா தலைமை தாங்கினார்.
ஊட்டி:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் நேரிடையாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அப்போது அவர் மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளையும் கேட்டறிந்து வருகிறார்.
அத்துடன் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். மேலும் அந்தந்த மாவட்டங்களில் நிலவும் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் நீலகிரி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அடுத்த மாதம் முதல் வாரம் அல்லது இரண்டவாது வாரத்தில் அவர் நீலகிரிக்கு வருகிறார்.
நீலகிரிக்கு வருகை தரும் அவர் அங்கு அரசு சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அத்துடன் அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மக்களுக்கு நேரிடையாக சென்றடைகிறாதா என்பதையும் கள ஆய்வு செய்கிறார். தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் விழாவில் பங்கேற்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கு தடை சட்டம் உள்ளதால், கடந்த பல ஆண்டுகளாக பட்டா வழங்கப்படாமல் உள்ளது. மேலும் கூடலூரில் செக்ஷன் 17 நிலப்பிரச்சினை உள்ளது.
இதுதவிர மாஸ்டர் பிளான் சட்டம், கட்டிட அனுமதி கிடைப்பதில் தாமதம் உள்பட பல்வேறு பிரச்சனைகள் உள்ளது.
ஊட்டிக்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் முதலமைச்சர் நீலகிரி வருவது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, கூடுதல் கலெக்டர் கவுசிக், அரசுத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் வரும் போது மேற்கொள்ள வேண்டிய நலத்திட்ட பணிகள் குறித்தும், பொதுமக்களுக்கு வழங்க உள்ள நலத்திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும் விழா நடத்த மேற்கொள்ள வேண்டிய ஆயத்த பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் எம்.பி. ஆ.ராசா விவாதித்தார்.
இதுகுறித்து ஆ.ராசா கூறுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் ஊட்டிக்கு வருகிறார். அப்போது பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட உள்ளது.
இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் அரசு அதிகாரிகளுடன் நடத்தப்பட்டது என்றார். நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு அரசுத்துறை உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
- தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
- தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற இருந்தது.
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை விவகாரத்தை மேலும் பூதாகாரமாக மாற்றியுள்ளது. மும்மொழி கொள்கை தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
பா.ஜ.க. உள்பட சில கட்சிகள் மட்டுமே மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில், மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜ.க. கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த கையெழுத்து இயக்கத்தை தமிழ்நாடு பா.ஜ.க. கட்சியின் முன்னாள் தலைவரும், தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் இன்று காலை எம்.ஜி.ஆர். நகரில் நடைபெற இருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கைவெுத்து இயக்கம் நடத்த அனுமதி அளிக்க முடியாது என்று காவல் துறை சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் காவல் துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அமைதியான முறையில் கையெழுத்து இயக்கம் நடத்துவேன் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறி வந்தார்.
எனினும், இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறிய காவல் துறையினர் கட்டாயம் கையெழுத்து இயக்கத்தை நடத்த முற்பட்டால் கைது செய்வோம் என்று கூறியுள்ளனர். எனினும், கையெழுத்து இயக்கம் நடத்த முயன்ற அவரை காவல் துறையினர் கைது செய்வதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
ஆனால், கையெழுத்து இயக்கம் நிச்சயம் நடைபெறும் என்று கூறிய தமிழிசை சவுந்தரராஜன் காவல் துறை வாகனத்தில் ஏற மறுத்தார். இதையடுத்து, காவல் துறையினர் தமிழிசை சவுந்தரராஜனை சுற்றி நின்றுக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேரம் இருதரப்பும் ஆவேசமாக பேசிக் கொண்டதை அடுத்து, அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே காவல் துறையினரை கண்டித்து பா.ஜ.க.வினர் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து கையெழுத்து இயக்கத்தை நடத்துவேன் என்று கூறிய நிலையில், தமிழிசை சவுந்தரராஜனை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக சென்னையில் கையெழுத்து இயக்கம் நடத்த முயற்சி செய்தது மற்றும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- விளாமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கனிமொழி.
- ஆண்களுக்கு எந்த வகையிலும் பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை மேலும் நிரூபிக்கும் வகையில் உள்ளார் கனிமொழி கதிர்வேல்.
பொள்ளாச்சி:
ஆண்களுக்கு நிகர் பெண்கள் என்பதற்கு நிறைய சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. படிப்பு, வேலை, தொழில் தன்னம்பிக்கை, குடும்பம் என எல்லாவற்றிலும் ஆண்களை விட பெண்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்றால் அது மிகையாகாது. இதனால் தான் பெண்களின் முக்கியத்துவத்தை போற்றவும், அவர்களின் பிரதிநிதித்துவத்தை அனைவருக்கும் உணர்த்தும் விதமாகவே மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
தாயாக, மனைவியாக, மகளாக என ஒரு சமூகத்தில் நீக்கமற நிறைந்திருப்பது பெண்கள்தான். ஒரு நாடு முன்னேற வேண்டும் என்றாலும் சரி.. ஒரு குடும்பத்தில் தலைமுறையே உயர வேண்டும் என்றாலும் பெண்களின் கல்வி அவசியமானது என்று மூத்தோர்கள் சொல்லி வைத்து இருக்கிறார்கள்.
அந்த வகையில், ஆண்களுக்கு எந்த வகையிலும் பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை மேலும் நிரூபிக்கும் வகையில் உள்ளார் கனிமொழி கதிர்வேல்.
விளாமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கனிமொழி. இவர் உடுமலையைச் சேர்ந்த கதிர்வேல் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு ஆண் குழந்தையும், இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
MA B.Ed படிப்பை முடித்த ஆசிரியராக பணியாற்றிய கனிமொழி தற்போது இரவு நேரங்களில் இயங்கும் தனியார் ஆம்னி பேருந்தை, தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக இயக்கி பலரது பாராட்டுகளை பெற்று வருகிறார்.
இவர் அழகன் டிராவல்சில் பொள்ளாச்சி- சென்னைக்கு இரவு நேரத்தில் ஆம்னி பேருந்தை இயக்கி வருகிறார். பல சிரமங்களை சந்தித்தாலும் தினந்தோறும் 620 கி.மீ. பேருந்துடன் பயணிப்பதாக தெரிவித்துள்ளார்.
- 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.
- துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்பு
கரூர்:
அமைச்சர் செந்தில் பாலாஜி, அ.தி.மு.க. ஆட்சியின் போது கடந்த 2011-2015 காலகட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கிக்கொண்டு மோசடி செய்ததாக பரப ரப்பு குற்றச்சாட்டு கூறப் பட்டது. இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் அடிப்படையில் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசாரணை தீவிரமடைந்ததை தொடர்ந்து கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஒரு வருடத்துக்கும் மேலாக செந்தில் பாலாஜி விசாரணை கைதியாகவே சிறையில் இருந்தார். அவர் ஜாமீன் கோரி பலமுறை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வந்தது.
471 நாட்கள் சிறையில் இருந்த செந்தில்பாலாஜிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. அதன்பிறகு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த அவர் தற்போது மீண்டும் அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
ஆனாலும் அவர் மீதான மோசடி வழக்கு விசாரணை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் தற்போது சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மீண்டும் இந்த வழக்கு வருகிற 12-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு தொடர்பாக அம லாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடு, ஆதரவாளர்கள் வீடு களில் பலமுறை சோதனை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவா ளர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று மீண்டும் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் 3 இடங்களில் உள்ள ஆதரவாளர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலையில் இருந்தே சோதனை நடத்தி வருகிறார்கள்.
கரூர் ராயனூரில் வசிக்கும் கொங்கு மெஸ் உரிமையாளர் மணி என்கிற சுப்பிரமணி என்பவரின் வீடு, கரூர் ஆத்தூர் பிரிவு அருகே கோதை நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்திக் என்பவரின் வீடு, செந்தில் பாலாஜியின் ஆதரவாளரும் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரருமான எம்.சி.எஸ்.சங்கரின் கரூர் பழனியப்பா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஆகிய 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
5 கார்களில் வந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கேரளா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் பதிவு எண்களை கொண்ட கார்களில் வந்துள்ளனர்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். காலை 8 மணிக்கு இந்த சோதனை தொடங்கியது. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த 2023-ம் ஆண்டு அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்ட போது அவரது சகோதரர் வீடு மற்றும் ஆதரவாளர்களான கரூர் கொங்கு மெஸ் மணி, அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.எஸ். சங்கர், சக்தி மெஸ் கார்த்திக் ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது 2-வது முறையாக நடத்தப்பட்ட சோதனை 8 நாட்கள் நீடித்தது. இதில் பல முக்கிய ஆவணங்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் அப்போது அந்த வீடுகள் மற்றும் சில அலுவலகங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
அதன் தொடர்ச்சியாக மீண்டும் செந்தில் பாலாஜியின்ஆதரவாளர்கள் 3 பேரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
- 2 குழந்தைகளுடன் போலீஸ் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.
- தி.மு.க. பிரமுகர் இளங்கோ மீது வழக்குப் பதிவு.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே வெள்ளப் பொம்மன்பட்டியை சேர்ந்தவர் கருப்புச்சாமி. இவரது மனைவி வேலுமணி (வயது 30). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கருப்பச்சாமி விபத்தில் இறந்து விட்டார்.
இந்த நிலையில் வேலுமணி லாரி புக்கிங் ஆபீசில் வேலை செய்து தனது குடும்பத்தை கவனித்து வருகிறார்.
வேலுமணியிடம் ரேஷன் கடையில் வேலை வாங்கித் தருவதாக திண்டுக்கல் நந்தவனப்பட்டியைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் இளங்கோ ரூ.1 லட்சம் வாங்கி உள்ளார். 2 ஆண்டுகள் ஆன பின்பும் இளங்கோ வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இது குறித்து அவரிடம் கேட்டபோது தான் பணத்தை திருப்பி தந்து விடுவதாக கூறினார். ஆனால் பணத்தையும் தராமல் ஏமாற்றினார்.
இதனையடுத்து மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வேலுமணி புகார் அளித்தார். எஸ்.பி. உத்தரவின் பேரில் வடமதுரை போலீசார் தி.மு.க. பிரமுகர் இளங்கோ மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் 2 ஆண்டுகளாக தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றிய இளங்கோவை கைது செய்யாமல் போலீசார் அலைக்கழிப்பதாகவும் தனக்கு பணம் கிடைக்கவில்லை என கூறி 2 குழந்தைகளுடன் இன்று வடமதுரை போலீஸ் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தும் அவர் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
- மாவட்ட வாரியாக மக்கள் பிரச்சனைகளை கண்டறிந்து மாவட்ட செயலாளர்கள் தலைமையில் போராட்டங்களை நடத்த வேண்டும்.
- உரிய அனுமதி பெற்று போராட்டம் நடத்த வேண்டும்.
சென்னை:
தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கியதில் இருந்து மக்களை சந்திக்காமல் அறிக்கை மூலமாக விஜய் அரசியல் செய்து வருவதாக பலரும் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் பிரச்சனை தொடர்பான போராட்டங்களை முன்னெடுக்க தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், ஆளுங்கட்சி உள்பட யார் தவறு செய்திருந்தாலும் தவறு எங்கே நடைபெறுகிறது என்பதை தெளிவாக தெரிந்து போராட வேண்டும். மாவட்ட வாரியாக மக்கள் பிரச்சனைகளை கண்டறிந்து மாவட்ட செயலாளர்கள் தலைமையில் போராட்டங்களை நடத்த வேண்டும். விருப்புவெறுப்பின்றி மக்கள் பிரச்சனையின் தீவிரம் உணர்ந்து மக்களுக்கு இடையூறின்றி உரிய அனுமதி பெற்று போராட்டம் நடத்த வேண்டும் என்று விஜய் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
தஞ்சாவூர், திருவாரூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் பிரச்சனைகளை மையப்படுத்தி தமிழக வெற்றிக்கழகத்தினர் போராட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- திருமணத்திற்கு சிறுமியின் தாயும் உதவியாக இருந்துள்ளார்.
- உறவினர் வீட்டில் அழுதபடி இருந்த சிறுமியை குண்டுக்கட்டாக காளிக்குட்டை கிராமத்திற்கு தூக்கி சென்றுள்ளனர்.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி தாலுகாவிற்கு உட்பட்ட தொட்டமஞ்சு மலை கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி, இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார்.
இந்த சிறுமிக்கும் காளிக்குட்டை என்ற மலை கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி மாதேஷ் (29) என்பவருக்கும் கடந்த 3-ந் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கட்டாய திருமணம் நடந்துள்ளது.
இந்த திருமணத்திற்கு சிறுமியின் தாயும் உதவியாக இருந்துள்ளார். பெங்களூருவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்த சிறுமி திருமணம் பிடிக்கவில்லை எனக்கூறி கணவர் வீட்டிற்கு செல்ல மாட்டேன் என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து சிறுமியை திருமணம் செய்த மாதேஷ் மற்றும் அவரது அண்ணன் மல்லேஷ் (38) ஆகியோர் உறவினர் வீட்டில் அழுதபடி இருந்த சிறுமியை குண்டுக்கட்டாக காளிக்குட்டை கிராமத்திற்கு தூக்கி சென்றுள்ளனர்.
சிறுமியை அவர்கள் தூக்கி செல்லும் காட்சியை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தி சிறுமியின் பாட்டியிடம் புகார் பெற்று இளம் வயதுள்ள சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்த மாதேஷ், அவரது அண்ணன் மல்லேஷ் மற்றும் இந்த திருமணத்திற்கு உதவியாக இருந்த சிறுமியின் தாய் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 3-ந் தேதி ஒரு கும்பல் கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றது.
- திருடிய நகைகளை காட்டுப்பகுதியில் வைத்துள்ளதாக தகவல்.
எட்டயபுரம்:
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மேலநம்பிபுரத்தை சேர்ந்தவர் சீதாலெட்சுமி (வயது 75), அவரது மகள் ராமஜெயந்தி (45) ஆகியோரை கடந்த 3-ந் தேதி ஒரு கும்பல் கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றது.
இதுதொடர்பாக எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தாப்பாத்தி கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் (20). மேலநம்பிபுரத்தை சேர்ந்த முகேஷ்கண்ணன் (25), ஆகியோர் கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இருவரையும் போலீசார் சுற்றிவளைத்து பிடித்தபோது அவர்கள் தப்பியோடினர். இதில் அவர்களுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பின்னர் அவர்களை போலீசார் கைது செய்து போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த கொலையில் முக்கிய குற்றவாளியான மேலநம்பிபுரத்தை சேர்ந்த முனீஸ்வரன் (25) என்பவர் அயன் வடமலாபுரம் காட்டுபகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து நெல்லை சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) சந்தோஷ் ஹதிமணி உத்தரவின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் தலைமையில் 5 டி.எஸ்.பி.க்கள், 20 போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு காட்டுப்பகுதியில் தீவிரமாக தேடினர்.
மேலும் 6 டிரோன் காமிராக்கள் பறக்க விட்டும் முனீஸ்வனை தேடி வந்தனர். அவர்கள் அயன்வடமலாபுரம், முத்துலாபுரம, தாப்பாத்தி, கீழகடந்தை, புதுப்பட்டி, ரகுராமபுரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் வைப்பாறு காட்டுப்பகுதி யிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அயன்வடமலாபுரத்தில் உள்ள சகோதரி வீட்டில் முனீஸ்வரன் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சுற்றி வளைத்து அவரை பிடிக்க முயன்றனர். அப்போது அவர் பின்வாசல் வழியாக தப்பி ஓட முயற்சித்தார். அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
கடந்த 2 நாட்களாக போலீசாரிடம் சிக்காமல் இருக்க காட்டுப்பகுதியில் மறைந்திருந்ததால் பசி ஏற்பட்டு தனது சகோதரி வீட்டில் சாப்பிடுவதற்காக முனீஸ்வரன் சென்றுள்ளார். அவரும் முனீஸ்வரனுக்கு சாப்பாடு கொடுத்துள்ளார். அப்போது போலீசாருக்கு தகவல் கிடைத்து அங்கு சென்று கதவை உடைத்து சென்று முனீஸ்வரைனை கைது செய்தனர்.
முனீஸ்வரனை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது திருடிய நகைகளை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் காட்டுப்பகுதியில் வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் அவரை அழைத்துக்கொண்டு அந்த காட்டுப்பகுதிக்கு சென்றனர். அப்போது நகைகளை எடுத்தபோது அங்கிருந்த ஒரு அரிவாளை எடுத்து முனீஸ்வரன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ், காவலர் ஜான்சன் தேவராஜ் ஆகியோரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓட முயன்றனர். அப்போது முனீஸ்வரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
பின்னர் நகைகளை பறிமுதல் செய்த போலீசார் முனீஸ்வனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- உத்திரகுமார் என்ற இளைஞர் வெட்டிக்கொல்லப்பட்ட நிலையில் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் உடனடியாக அப்புறப்படுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இளைஞர் ஒருவர் 3 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அந்த இளைஞர் உத்திரகுமார் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பரமக்குடி அரசு மருத்துவமனை முன்பாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் உடனடியாக அப்புறப்படுத்தினர்.
இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 அதிகரித்து ரூ.64 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது.
- வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்றம் காணப்பட்டு வந்த நிலையில் கடந்த மாதம் 11-ந்தேதி வரலாறு காணாத வகையில் சவரன் ரூ.64 ஆயிரத்தை தாண்டியது.
அதன்பின் 28-ந்தேதி சவரன் ரூ.64 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. இதற்கிடையே நேற்றுமுன்தினம் சவரன் மீண்டும் ரூ.64 ஆயிரத்தை தாண்டியது. சவரனுக்கு ரூ. 560 அதிகரித்து ரூ.64 ஆயிரத்து 80-க்கு விற்றது. இதனை தொடர்ந்து நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது. சவரனுக்கு ரூ.440 அதிகரித்து ரூ.64 ஆயிரத்து 520-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ. 8 ஆயிரத்து 65-ஆக இருந்தது. இரண்டு நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1000 அதிகரித்தது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8,020-க்கும் சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.64,160-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
05-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,520
04-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,080
03-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
02-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
01-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
05-03-2025- ஒரு கிராம் ரூ.107
04-03-2025- ஒரு கிராம் ரூ.107
03-03-2025- ஒரு கிராம் ரூ.106
02-03-2025- ஒரு கிராம் ரூ.105
01-03-2025- ஒரு கிராம் ரூ.105
- இருசக்கர வாகனத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்றார்.
- ஆம்னி பஸ் கவிழ்ந்ததில் பஸ்சில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது.
பெருந்துறை:
கோவையில் இருந்து சேலம் நோக்கி இன்று காலை ஆம்னி பஸ் ஒன்று கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்த ஆம்னி பஸ் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கசாவடி அருகே வரும்போது இருசக்கர வாகனத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்றார்.
இந்நிலையில் அந்த முதியவர் மீது மோதாமல் இருப்பதற்காக ஆம்னி பஸ் டிரைவர் 'பிரேக்' அடித்தார். இதனால் ஆம்னி பஸ் பின் தொடர்ந்து பல்லடத்தில் இருந்து வந்த அரசு பஸ் ஆம்னி பஸ்சின் பின்புறம் பலமாக மோதியது. மோதிய வேகத்தில் ஆம்னி பஸ் ஒரு பக்கமாக சாலையில் கவிழ்ந்தது.
ஆம்னி பஸ் கவிழ்ந்தபோது அதன் அடியில் இருசக்கர வாகனத்தில் வந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இடிபாட்டில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற இன்ஸ்பெக்டர் தெய்வராணி தலைமையிலான பெருந்துறை போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் உதவியுடன் மீட்பு பணியில் வேகமாக ஈடுபட்டனர். உயிரிழந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற தகவல் உடனடியாக தெரியவில்லை.
ஆம்னி பஸ் கவிழ்ந்ததில் பஸ்சில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த பயணிகள் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






