என் மலர்
நீங்கள் தேடியது "அமைச்சர் செந்தில்பாலாஜி"
- தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 40 ஆயிரம் மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
- தமிழ்நாடு முழுவதும் மின்சார வாரிய பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
சென்னை:
சென்னை கே.கே.நகர் துணை மின் நிலையத்தை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர், துணை மின் நிலையங்களில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைநீர் தேங்கினாலும் மின் வினியோகம் பாதிக்காதவாறு உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று அதிகாரிகள், ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 10 துணை மின் நிலையங்களில் உள்ள 16 மின்மாற்றிகள் உயர்த்தப்பட்டிருக்கின்றன.
கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் இப்போது அந்த இடத்திலிருந்து 1 மீட்டர் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. சீரான மின் வினியோகம் செய்வதற்காக 2 ஆயிரத்து 700 பில்லர் பாக்ஸ் தரையிலிருந்து 1 மீட்டர் அளவுக்கு உயர்த்தி சீரான மின்வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னையை பொறுத்தவரை பகல் நேரங்களில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக 1,440 பேரும், இரவு நேரங்களில் 600 பேரும் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். சென்னையை பொறுத்துவரை 1,800 பீடர்கள் மொத்தம் இருக்கிறது. அதில் ஒன்று கூட மின்வினியோகம் நிறுத்திவைக்கப்படவில்லை. 100 சதவீதம் மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. எல்லா பகுதியிலும் மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த வடகிழக்கு பருவமழையில் ஏற்கனவே எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக ஏறத்தாழ 18 ஆயிரத்து 380 மின்மாற்றிகள் கையிருப்பு உள்ளன. அதே போல 5 ஆயிரம் கி.மீ அளவுக்கு மின்கடத்திகள் கையிருப்பு உள்ளன.
1.5 லட்சம் மின்கம்பங்கள் உள்ளன. கூடுதலாக 50 ஆயிரம் மின்கம்பங்கள் வரவழைக்கப்பட்டு மொத்தம் 2 லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் இருக்கிறது. எனவே, மின்வினியோகத்தை பொறுத்தவரைக்கும் தமிழகம் முழுவதும் சீரான மின்வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னையில் பெய்த மழையால் எந்தவித பாதிப்புகளும் இல்லாத அளவிற்கு சீரான மின்வினியோம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக முதல்-அமைச்சரின் வழிக்காட்டுதலின்படி எடுத்த நடவடிக்கையின் காரணமாக தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 40 ஆயிரம் மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
மின்கம்பிகளை பொறுத்தவரைக்கும் 1,800 கி.மீ அளவுக்கு புதிதாக மாற்றப்பட்டுள்ளன. முதல்-அமைச்சர், இந்த வடகிழக்கு பருவமழை காலத்துக்கு முன்பு ஆய்வு கூட்டங்களை நடத்தி ஒவ்வொரு துறைகளில் என்னென நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அதன்படி, நடவடிக்கைகள் மேற்கொண்டதால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
தமிழ்நாடு முழுவதும் மின்சார வாரிய பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த ஆய்வின் போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் ராஜேஷ் லக்கானி, இயக்குனர் (பகிர்மானம்) மா.சிவலிங்கராஜன், விருகம்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. பிரபாகர் ராஜா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- தமிழ்நாட்டின் முக்கியமான நகரங்களில் செல்லும் மேல்நிலை மின் கம்பிகள் புதைவடங்களாக மாற்றி அமைக்கப்படும்.
- தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் செயல்திறனை மேற்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
சென்னை:
தமிழ்நாடு சட்டசபையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நேற்று நடைபெற்றது.
இதில் பேசிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு இந்த துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலுரை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் கடந்த 2 ஆண்டுகளில் 95 ஆயிரம் பழுதடைந்த மின் மாற்றிகளை மாற்றம் செய்து மின்சாரத்துறை சாதனை படைத்துள்ளது. மின்னகம் மூலம் 15 லட்சம் புகார்கள் பெறப்பட்டன. இதில் 99.5 சதவீத புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு மின்வாரியத்தின் கடன் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடியாக இருந்தது. 2 ஆண்டுகளில் கூடுதலாக ரூ.14 ஆயிரம் கோடி கடன் சேர்ந்துள்ளது. இதற்கு காரணம் வாங்கப்பட்ட கடன்களுக்கு செலுத்துகின்ற வட்டி ஆகும். இந்த கடன்களை முழுமையாக குறைத்திட வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுரைகள் வழங்கி இருக்கிறார்.
மின்சார வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டிய தேதி 1.12.2019 ஆகும். தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்ததை ஏற்படுத்தி இருக்க வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் 7 முறை தொழிற்சங்கங்களுடன் நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. விரைவில் தொழிற்சங்கங்கள் விரும்ப கூடிய வகையில் திருப்திகரமான ஒப்பந்தம் ஏற்படும். அதற்கான உத்தரவுகளை முதலமைச்சர் வழங்கி உள்ளார்.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத புதிய வடிவமைப்புடன் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார். அதற்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 3 கோடி வீடுகளில் இந்த ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் மின்சாரத்துறை தொடர்பான புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
* நடப்பு 2023-ம் ஆண்டில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள், சாதாரண வரிசை, சுயநிதி திட்டம், சிறப்பு முன்னுரிமை, தட்கல், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் திட்டங்களின் மூலம் வழங்கப்படும்.
* அரசு-தனியார் பங்களிப்புடன் 5 ஆயிரம் மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்படும்.
* தமிழ்நாட்டில் 72 புதிய துணை மின் நிலையங்கள் நிறுவப்படும்.
* தமிழ்நாட்டின் முக்கியமான நகரங்களில் செல்லும் மேல்நிலை மின் கம்பிகள் புதைவடங்களாக மாற்றி அமைக்கப்படும்.
* வடசென்னை அனல்மின் நிலையம் 1, 2-ன் செயல்திறனை மேம்படுத்துவதற்கான சிறப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
* தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் செயல்திறனை மேற்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
* மேட்டூர் அனல்மின் நிலையம் 1, 2 செயல் திறனை மேம்படுத்துவதற்கான சிறப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
* மின் பாதைகளில் ஏற்படும் பழுதுகளை கண்டறிவதற்கு டிரோன்கள் கொள்முதல் செய்யப்படும்.
* நெல்லை, ஸ்ரீரங்கம், கோவை, அவிநாசி, திருப்பரங்குன்றம், திருச்செங்கோடு, கரூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய ஊர்களில் அமைந்துள்ள தேர் ஓடும் மாட வீதிகளில் செல்லும் மேல்நிலை மின் கம்பிகள் புதைவடங்களாக மாற்றி அமைக்கப்படும்.
* தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையால் சென்னை தலைமை செயலக வளாகம், பள்ளி கல்வி இயக்குனரகம் ஆகிய இடங்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 100 கி.வாட் திறன் கொண்ட 2 சூரிய சக்தியின் மூலம் இயங்கும் வாகன மின்னூட்டல் நிலையங்கள் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
மேற்கண்ட அறிவிப்புகளை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி வெளியிட்டார்.
- அமலாக்கத்துறை அதிகாரிகள் அவர்களது பணியை செய்கிறார்கள்.
- செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்தபோது செய்த ஊழல் பட்டியலை வெளியிட்டனர்.
பல்லடம் :
பாரதிய ஜனதா கட்சி தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பல்லடத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கும் மத்திய அரசிற்கும் சம்பந்தமில்லை. அமலாக்கத்துறை அதிகாரிகள் அவர்களது பணியை செய்கிறார்கள். இதே திமுக அரசு எதிர்க்கட்சியாக இருக்கும்போது, செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்தபோது செய்த ஊழல் பட்டியலை வெளியிட்டனர். ஊழல் செய்தவர் இன்று திமுக கட்சியில் சேர்ந்து விட்டதால் அதை மறைத்து விட்டீர்கள், மறந்து விட்டீர்கள்.எதையும் சந்திக்க தயார் என சவால் விட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி திடீரென்று அன்று இரவே எப்படி உடல் நிலை சரியில்லாமல் போனார் என்பது எங்களுக்கு தெரியவில்லை.
வழக்கை அவர்கள் சந்தித்து தான் ஆக வேண்டும். விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.
- துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்பு
கரூர்:
அமைச்சர் செந்தில் பாலாஜி, அ.தி.மு.க. ஆட்சியின் போது கடந்த 2011-2015 காலகட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கிக்கொண்டு மோசடி செய்ததாக பரப ரப்பு குற்றச்சாட்டு கூறப் பட்டது. இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் அடிப்படையில் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசாரணை தீவிரமடைந்ததை தொடர்ந்து கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஒரு வருடத்துக்கும் மேலாக செந்தில் பாலாஜி விசாரணை கைதியாகவே சிறையில் இருந்தார். அவர் ஜாமீன் கோரி பலமுறை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வந்தது.
471 நாட்கள் சிறையில் இருந்த செந்தில்பாலாஜிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. அதன்பிறகு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த அவர் தற்போது மீண்டும் அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
ஆனாலும் அவர் மீதான மோசடி வழக்கு விசாரணை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் தற்போது சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மீண்டும் இந்த வழக்கு வருகிற 12-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு தொடர்பாக அம லாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடு, ஆதரவாளர்கள் வீடு களில் பலமுறை சோதனை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவா ளர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று மீண்டும் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் 3 இடங்களில் உள்ள ஆதரவாளர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலையில் இருந்தே சோதனை நடத்தி வருகிறார்கள்.
கரூர் ராயனூரில் வசிக்கும் கொங்கு மெஸ் உரிமையாளர் மணி என்கிற சுப்பிரமணி என்பவரின் வீடு, கரூர் ஆத்தூர் பிரிவு அருகே கோதை நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்திக் என்பவரின் வீடு, செந்தில் பாலாஜியின் ஆதரவாளரும் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரருமான எம்.சி.எஸ்.சங்கரின் கரூர் பழனியப்பா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஆகிய 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
5 கார்களில் வந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கேரளா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் பதிவு எண்களை கொண்ட கார்களில் வந்துள்ளனர்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். காலை 8 மணிக்கு இந்த சோதனை தொடங்கியது. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த 2023-ம் ஆண்டு அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்ட போது அவரது சகோதரர் வீடு மற்றும் ஆதரவாளர்களான கரூர் கொங்கு மெஸ் மணி, அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.எஸ். சங்கர், சக்தி மெஸ் கார்த்திக் ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது 2-வது முறையாக நடத்தப்பட்ட சோதனை 8 நாட்கள் நீடித்தது. இதில் பல முக்கிய ஆவணங்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் அப்போது அந்த வீடுகள் மற்றும் சில அலுவலகங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
அதன் தொடர்ச்சியாக மீண்டும் செந்தில் பாலாஜியின்ஆதரவாளர்கள் 3 பேரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை:
அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யாமல் தனியாரிடம் வாங்குவதாக கூறுகின்றனர். ஆனால் அன்றே தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 நாட்கள் உற்பத்தி செய்த மின் அளவை நான் கூறினேன்.
நாங்களும் இருக்கிறோம் என இருப்பை காட்டிக் கொள்ள வாய்க்கு வந்தபடி அண்ணாமலை பேசு வருகிறார். உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை அண்ணாமலை கூறி வருகிறார். எந்த குற்றச்சாட்டுகள் ஆக இருந்தாலும் ஆவணத்துடன் குற்றம்சாட்ட வேண்டும்.
சென்னை தமிழகத்தின் தலைநகராக இருந்தாலும், கோவை தொழில்துறையில் தலைநகராக உள்ளது. ரூ.1132 கோடியில் விமான நிலைய விரிவாக்கம் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது ரூ.800 கோடி அளவில் செலவிடப்பட்டு நிலம் எடுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள நிலங்கள் அடுத்த 3 மாதங்களில் எடுக்கப்பட்டு பணிகள் நடைபெறும்.
தொழில்துறையுடன் முதல்-அமைச்சர் 3 மணி நேரம் அமர்ந்து அவர்களது கருத்துகளை கேட்டுள்ளார். அதனை செயல்படுத்த உத்தரவுகளையும் வழங்கியுள்ளார். தமிழகத்திற்கு கடன் சுமைகள் உள்ளன. அதனை சீரமைக்கும் பணிகள் நடக்கிறது. மக்கள் 1.41 லட்சம் மனுக்கள் கொடுத்துள்ளனர். 25 ஆயிரம் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு மற்ற மனுக்கள் மீது தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடும் எதிர்ப்பால் மின்சார திருத்த சட்ட மசோதா நிலைக்குழுவுக்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
- மசோதா விவகாரத்தில் பா.ஜ.க.வுடன் இணக்கமாக இருக்கும் அ.தி.மு.க. எந்த முடிவும் எடுக்கவில்லை.
சென்னை:
மத்திய அரசின் மின்சார திருத்த மசோதாவால், இலவச மின்சார திட்டத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-
மின்சார திருத்த சட்ட மசோதா ஏழை, எளிய மக்கள், நெசவாளர்கள் என ஒட்டுமொத்த மக்களையும் பாதிக்கும். அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத வகையில் உருவாக்கப்பட்டு உள்ளதால், அந்த மசோதாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
பாராளுமன்றத்தில் இந்த மசோதா விவாதத்துக்கு வந்தபோது, பாராளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு மிக கடுமையாக எதிர்ப்பு குரலை பதிவு செய்து, தி.மு.க.வின் நிலைப்பாட்டை எடுத்து சொன்னார். பாதிப்பை தெரிந்தே, மத்திய அரசு அதனை கொண்டுவந்திருக்கிறது.
மின்சார வாரிய கட்டமைப்புகள் ஏறத்தாழ ரூ.1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் ஏற்பட்டு, அதன் மூலம் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளை எல்லாம் தனியார் துறைகள் பயன்படுத்தி மின் வினியோகம் செய்வதற்கான வழிவகைகள் மசோதாவில் உருவாக்கப்பட்டுள்ளது. அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்தக்கூடிய இடங்களில், தனியார் துறையினர் மின் வினியோகத்தை செய்வதற்கான முயற்சிகளை செய்வார்கள். இதனால் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், ஏழைகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம், விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம், குடிசை வீடுகளுக்கான இலவச மின்சாரம் பெறும் நுகர்வோர்களுக்கு மின்சார திருத்த சட்ட மசோதாவால் பாதிப்புகள் ஏற்படக்கூடிய சூழல் உள்ளது.
மாநிலங்கள் உருவாக்கியுள்ள ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரங்களை மத்தியில் இருக்கும் ஒழுங்குமுறை ஆணையம் முழுவதுமாக பறித்துகொள்கிறது. மேலும் மத்திய அரசு பிறப்பிக்கும் உத்தரவை மாநில அரசுகள் செயல்படுத்தவில்லை என்றால், அதற்கான அபராத தொகை 100 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
கடும் எதிர்ப்பால் மின்சார திருத்த சட்ட மசோதா நிலைக்குழுவுக்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மசோதாவை எதிர்த்து, 8-12-2021 அன்று முதல்-அமைச்சர், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
இந்த மசோதா விவகாரத்தில் பா.ஜ.க.வுடன் இணக்கமாக இருக்கும் அ.தி.மு.க. எந்த முடிவும் எடுக்கவில்லை. இலவச மின்சார திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியாத நிலை இந்த மசோதாவில் இருக்கிறது. எனவே அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்.
இந்த மசோதா பாராளுமன்றத்திலோ, நிலைக்குழுவிலோ விவாதத்துக்கு வரும்போது தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு குரலை பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






