என் மலர்
உள்ளூர் செய்திகள்
- இதுவரை 250க்கும் மேற்பட்டோரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்துள்ளனர்.
- கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் 8 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது.
கோவை:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா மற்றும் எஸ்டேட் உள்ளது.
இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இதுதொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் ஜாமீனில் வெளியில் உள்ளனர்.
இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கினை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுவரை 250க்கும் மேற்பட்டோரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்துள்ளனர். கடந்த வாரமும் சிலருக்கு சம்மன் அனுப்பி, அவர்களிடமும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி, அவர்கள் கூறியவற்றை வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டனர்.
இந்த நிலையில் கொடநாடு வழக்கு தொடர்பாக கொடநாடு எஸ்டேட்டின் மேலாளர் நடராஜன் விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
இதையடுத்து அவர் நேற்று கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
அவரிடம் போலீசார், சசிகலா கொடநாடு எஸ்டேட் வந்தபோது பங்களாவில் உள்ள அறைகளை பார்த்து விட்டு ஏதாவது கேட்டாரா? கணினி ஆபரேட்டர் தினேஷ் தற்கொலை குறித்து உங்களுக்கு ஏதாவது தெரியுமா? என பல்வேறு கேள்விகளை எழுப்பி, விசாரணை மேற்கொண்டனர். கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் 8 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது.
இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா மற்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளுக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர்.
அதில் வருகிற 11-ந் தேதி கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடநாடு வழக்கில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பலரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மீண்டும் விசாரணை தீவிரமடைந்துள்ளதால் கொடநாடு வழக்கு சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
- ஊருக்கு திரும்பி வந்த சிறுமி திருமணம் பிடிக்கவில்லை என கூறி கணவர் வீட்டிற்கு செல்ல மாட்டேன் என கூறியுள்ளார்.
- வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த அஞ்செட்டி தாலுகாவிற்கு உட்பட்ட தொட்டமஞ்சு பகுதியைச் சேர்ந்தவர், 14 வயது சிறுமி. 7 ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார்.
இந்த சிறுமிக்கும் காளிக்குட்டை மலை கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி மாதேஷ் (வயது29) என்பவருக்கும் கடந்த 3-ந் தேதி பெங்களூருவில் திருமணம் நடந்தது. இதற்கு சிறுமியின் தாய் உதவியாக இருந்துள்ளார். நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பி வந்த சிறுமி திருமணம் பிடிக்கவில்லை என கூறி கணவர் வீட்டிற்கு செல்ல மாட்டேன் என கூறியுள்ளார். தன்னுடைய பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனால் சிறுமியை திருமணம் செய்த மாதேஷ் மற்றும் அவரது அண்ணன் மல்லேஷ் (38), மற்றும் உறவினர் வீட்டில் அழுதபடி இருந்த சிறுமியை குண்டுகட்டாக காளிக்குட்டை கிராமத்திற்கு துாக்கி சென்றனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து சிறுமியின் பாட்டியிடம் புகார் பெற்ற தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை திருமணம் செய்த மாதேஷ், அவரது அண்ணன் மல்லேஷ் மற்றும் சிறுமியின் தாய் ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சிறுமியின் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த தந்தை மற்றும் மல்லேஷ் மனைவி முனியம்மாள் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- நெடுஞ்சாலை வழியாக தமிழகம்-கர்நாடக இடையே போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
- சிறுத்தைகள் 27 கொண்டை ஊசி வளைவுகள் பகுதிகளில் இரவு நேரங்களில் நடமாடுவது வழக்கம்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவில் அருகே பண்ணாரி சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியை கடந்து சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது.
இந்த நெடுஞ்சாலை வழியாக தமிழகம்-கர்நாடக இடையே போக்குவரத்து நடைபெற்று வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக கடந்து செல்கின்றன. திம்பம் மலைப்பாதை கடந்து கர்நாடக மாநிலத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த மலைப்பாதையில் யானை, சிறுத்தை அதிக அளவில் வசித்து வருகின்றன. குறிப்பாக சிறுத்தைகள் 27 கொண்டை ஊசி வளைவுகள் பகுதிகளில் இரவு நேரங்களில் நடமாடுவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று மாலை சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வழக்கம்போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது திடீரென வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து ஓடியது.
அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவர் இதனை பார்த்து தனது வாகனத்தை சற்று தொலைவில் நிறுத்தி அந்த சிறுத்தை சாலையை கடந்து ஓடிய காட்சியை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டார். பின்னர் அந்த வீடியோவை அவர் சமூக வலைத்த ளங்களில் வெளியிட்டார். அது தற்போது வைரலானது.
பண்ணாரி சோதனை சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும். வாகனங்களை எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் நிறுத்த வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த மாதம் (பிப்ரவரி) முதல் ஏற்ற, இறக்கத்துடன் இருக்கிறது. கடந்த 4-ந்தேதியில் இருந்து விலை அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினமும் அதேபோல் விலை உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 65-க்கும், ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 520-க்கும் விற்பனை ஆனது. நேற்று காலை 9.30 மணி நிலவரப்படி, கிராமுக்கு ரூ.45-ம், சவரனுக்கு ரூ.360-ம் குறைந்து இருந்த நிலையில், நேற்று பிற்பகல் 12.30 மணிக்கு தங்கம் விலையில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டு, கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் உயர்ந்து இருந்தது.
அதன்படி, நேற்று ஒரே நாளில் தங்கம் விலை குறைந்து, மீண்டும் ஏறி ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 60-க்கும், ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8,030-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.64,240-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
06-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,480
05-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,520
04-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,080
03-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
02-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
06-03-2025- ஒரு கிராம் ரூ.108
05-03-2025- ஒரு கிராம் ரூ.107
04-03-2025- ஒரு கிராம் ரூ.107
03-03-2025- ஒரு கிராம் ரூ.106
02-03-2025- ஒரு கிராம் ரூ.105
- மகராஜகடை பகுதியில் வேன் டிரைவர் கார்த்திக் எரித்துக்கொலை செய்யப்பட்டார்.
- கார்த்திக்கை தனியாக வருமாறு அழைத்து இரும்பு ராடால் அடித்து கொன்றது விசாரணையில் தெரிந்தது.
கிருஷ்ணகிரி அருகே மகராஜகடை பகுதியில் வேன் டிரைவர் கார்த்திக் எரித்துக்கொலை செய்யப்பட்டார். எரிந்த நிலையில் அவரது உடலை போலீசார் மீட்டனர்.
கடந்த ஞாயிறன்று கார்த்திக் என்ற இளைஞர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் தினேஷ், அவரது காதலி புவனேஸ்வரி கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தினேஷ்குமார் அளித்த வாக்குமூலத்தில், தனது காதலிக்கு தொந்தரவு கொடுத்ததால் கார்த்திக்கை கொன்றேன் என்று தெரிவித்துள்ளார்.
காத்திக்குடனான காதலை முறித்து கொண்டு தினேஷ்குமாரை புவனா காதலித்து வந்த நிலையில் மீண்டும் தொந்தரவு செய்ததால் கொலை செய்துள்ளார்.
கார்த்திக்கை தனியாக வருமாறு அழைத்து இரும்பு ராடால் அடித்து கொன்றது விசாரணையில் தெரிந்தது. கொலை செய்த பின்னர் கார்த்திக் சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்து மகராஜகடை பகுதியில் வீசி சென்றதாக அவர் தெரிவித்தார்.
- கையெழுத்து இயக்கம் என்பது இல்லங்கள் தோறும் சென்று வாங்குவோம் என்று சொல்கிறார்கள்.
- தென்சென்னை பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வால் காலி செய்யப்பட்டவர் எங்களை பார்த்து காலாவதி என்கிறார்.
மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கத்தை தமிழக பா.ஜ.க. முன்னெடுத்துள்ளது. இதனையடுத்து சென்னை கே.கே.நகர் எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் பகுதியில், தெலுங்கானா மாநில முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் பா.ஜ.க.வினர் கையெழுத்து இயக்கம் நடத்த நேற்று திட்டமிட்டனர். இதற்கிடையே அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
அங்கு தமிழிசை சவுந்தரராஜன் வந்து மக்களிடம் கையெழுத்து பெறும் பணியில் ஈடுபட முயன்றார். உடனே போலீசார், அவரை தடுத்து நிறுத்தி அனுமதி மறுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறுகையில்,
தமிழிசையின் கையெழுத்து இயக்கத்தை பற்றி சொல்வது என்றால், நேற்று அவர் நடந்துகொண்ட நடவடிக்கையை நிச்சயம் அவர் தந்தை குமரி அனந்தன் பார்த்திருந்தால் மிகுந்த வருத்தப்பட்டு இருப்பார். துயரம் அடைந்து இருப்பார்.
இவருக்கா போய் நாம் தமிழிசை என்று பெயர் வைத்தோம் என்று மிக மிக வருத்தத்தோடு இருந்து இருப்பார்.
கையெழுத்து இயக்கம் என்பது இல்லங்கள் தோறும் சென்று வாங்குவோம் என்று சொல்கிறார்கள். அவர்கள் எந்த இல்லத்திற்கு சென்று வாங்கினார்கள். அவர்களை சுற்றி பா.ஜ.க.வை சார்ந்த 10 பேரை நிற்க வைத்துக்கொண்டு, ஊடகங்களில் அவர் வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்பதற்காக, ஏற்கனவே அவர் எண்ணி இருந்த பதவிகள் எதுவும் கிடைக்காததால், அந்த கையெழுத்து இயக்கத்தை அவர்களுடைய இயக்கத்தை சார்ந்த தோழர்களை வைத்து நடத்திக்கொண்டார்.
அதோடு அவர் காலாவதி என்ற சொற்றொடரை பயன்படுத்தி இருக்கிறார்.
காலாவதி ஆனவர் யார்? புதுச்சேரியில் காலாவதி ஆனவர், தென்சென்னை பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வால் காலி செய்யப்பட்டவர் எங்களை பார்த்து காலாவதி என்கிறார்.
அவரை காலாவதி ஆக்குவதற்கும், அவர் சார்ந்த இயக்கத்தை காலாவதி ஆக்குவதற்கும் தமிழக மக்கள் 2026 சட்டசபை தேர்தலில் தயாராக இருக்கிறார்கள் என்பதை அக்கா தமிழிசைக்கு தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.
- மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக 36 மணிநேரத்திற்குள் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
- பா.ஜ.க. கையெழுத்து இயக்கம் வெற்றி பெற்றதை கண்டு முதலமைச்சர் அதிர்ச்சியடைந்தது வெளிப்படையாகவே தெரிகிறது.
சென்னை:
இந்தி திணிப்பு என்ற மாயைக்கு எதிராக அட்டைக்கத்தியை வீசாதீர்கள் என்று முதலமைச்சர் டேக் செய்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அண்ணாமலை கூறியிருப்பதாவது:-
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக 36 மணிநேரத்திற்குள் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர். மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பா.ஜ.க. சார்பில் நடைபெறும் கையெழுத்து இயக்கத்திற்கு வரவேற்பு பெற்று வருகிறது. கையெழுத்து இயக்கத்திற்கு எதிரான உங்கள் கூச்சல்கள் எங்களுக்கு எந்த பாதிப்பையும் அளிக்காது.
பா.ஜ.க. கையெழுத்து இயக்கம் வெற்றி பெற்றதை கண்டு முதலமைச்சர் அதிர்ச்சியடைந்தது வெளிப்படையாகவே தெரிகிறது.
ஆட்சியில் இருந்தபோதும் நீட் தேர்வுக்கு எதிராக ஒரு கையெழுத்து இயக்கத்தை கூட தி.மு.க.வால் நடத்த முடியவில்லை.
இந்தி திணிப்பு என்ற மாயைக்கு எதிராக அட்டைக்கத்தியை வீசாதீர்கள். தி.மு.க.வின் போலி இந்தி திணிப்பு நாடகம் ஏற்கனவே அம்பலமாகிவிட்டது. நீங்கள் அதணை உணராதது துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ளார்.
- அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல மொழிகள் கற்கும் வாய்ப்பு கிடையாது என்று கூறுகிறார்.
- இத்தனை ஆண்டு காலம் இவர்களின் இதுபோன்ற இரட்டை வேடத்தால் நாம் ஏமாந்தது போதும்.
சென்னை :
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நேற்று, தமிழகத்தின் பள்ளிக் கல்வி அமைச்சர், பல மொழிகளைக் கற்றுக் கொடுப்பதைப் பாடத்திட்டமாகக் கொண்ட ஒரு தனியார் CBSE பள்ளியில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். ஆனால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல மொழிகள் கற்கும் வாய்ப்பு கிடையாது என்று கூறுகிறார்.
இத்தனை ஆண்டு காலம் இவர்களின் இதுபோன்ற இரட்டை வேடத்தால் நாம் ஏமாந்தது போதும். நமது அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் கல்வியில் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால்,
http://puthiyakalvi.in இணையதளத்தில் உங்கள் ஆதரவைப் பதிவு செய்யவும் என கூறியுள்ளார்.
- தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நடத்தப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டம் நாடகமாகவே தோன்றுகிறது என்று ஜெயக்குமார் கூறினார்.
- 4 மணி நேரம் நடந்த கூட்டத்தில் நன்றாக சிரித்துவிட்டு, நாடகமாடினார் என்று கூறுகிறார்.
காஞ்சிரபுரத்தில் நடந்த விழாவில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது,
தொகுதி மறுசீரமைப்பு விவாதம் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நடத்தப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டம் நாடகமாகவே தோன்றுகிறது" என்று கூறினார்.
4 மணி நேரம் நடந்த கூட்டத்தில் நன்றாக சிரித்துவிட்டு, நாடகமாடினார் என்று கூறுகிறார்.
அவருக்கு கேட்கிறேன் நாங்கள் ஆடியது நாடகம் என்று சொன்னால், நாடகத்தில் நீங்கள் வில்லன் வேடமா...? காமெடி வேடமா...? என்று மக்களுக்கு சொல்ல வேண்டும் அல்லவா?
4 மணி நேர நாடகத்தில் நீங்களும் உட்கார்ந்துவிட்டு, நடித்தது வில்லன் வேடமா? காமெடியன் வேடமா? ஆக கூட்டத்தை அவர்களால் எந்த குறையும் சொல்ல முடியவில்லை என்று அவர் கூறினார்.
- எழும்பூர் வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (12636) தாம்பரம்-எழும்பூர் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
- எழும்பூரில் இருந்து மண்டபம் செல்லும் ரெயில் (22661) எழும்பூரில் இருந்து 30 நிமிடம் தாமதமாக மாலை 6.15 மணிக்கு புறப்படும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பராமரிப்பு பணி காரணமாக சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, திருச்செந்தூரில் இருந்து நாளை (சனிக்கிழமை) இரவு 8.35 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-20606) தாம்பரம்-எழும்பூர் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, திருவண்ணாமலையில் இருந்து 9-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் பயணிகள் ரெயில் சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
அதே தேதியில், நெல்லையில் இருந்து எழும்பூர் வரும் வந்தே பாரத் ரெயில் (20666) மாம்பலம்-எழும்பூர் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. மதுரையில் இருந்து 9-ந்தேதி காலை 6.45 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (12636) தாம்பரம்-எழும்பூர் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
எழும்பூரில் இருந்து வருகிற 9-ந்தேதி குருவாயூர் செல்லும் ரெயில் (16127) எழும்பூருக்கு பதில் தாம்பரத்தில் இருந்து காலை 10.50 மணிக்கு புறப்படும். அதே தேதியில், எழும்பூரில் இருந்து காரைக்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12605) எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து மாலை 4.10 மணிக்கு புறப்படும். எழும்பூரில் இருந்து 9-ந்தேதி திருச்செந்தூர் செல்லும் ரெயில் (20605) எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து மாலை 4.27 மணிக்கு புறப்படும்.
எழும்பூரில் இருந்து மதுரைக்கு செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22671) 9-ந்தேதி 30 நிமிடம் தாமதமாக எழும்பூரில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும். அதே தேதியில், எழும்பூரில் இருந்து மண்டபம் செல்லும் ரெயில் (22661) எழும்பூரில் இருந்து 30 நிமிடம் தாமதமாக மாலை 6.15 மணிக்கு புறப்படும்.
இதேபோல, ஏற்கனவே பகுதிநேரமாக ரத்து செய்யப்பட்ட வந்தே பாரத் (20665), சார்மினார் (12759) பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற 9-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மீதமுள்ள 8 பூஞ்சோலைகளில் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.
- தமிழகத்தில் மொத்தம் 100 மரகதப் பூஞ்சோலைகள் உருவாக்கப்பட்டுவிடும்.
சென்னை:
2022-23-ம் ஆண்டு சட்டமன்றத்தில் வனத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், 100 மரகதப் பூஞ்சோலைகள் (கிராம பசுமைக் காடுகள்) உருவாக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. உள்ளூர் மக்கள் அன்றாட தேவைகளான தடிமரம், விறகு மரம், கால்நடை தீவனம் ஆகிய தேவைகளுக்காக வனங்களை சார்ந்து இருப்பதை குறைப்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.இந்த பூஞ்சோலைகள் உள்ளூர் மக்களுக்கு தேவையான இயற்கை வளங்களை வழங்குவதில் முக்கிய பங்கு வகிப்பதுடன் இதன் மூலம் காடுகளின் மீதான உயிரின தாக்கமும் குறைகிறது. இந்த திட்டத்துக்காக ரூ.25 கோடிக்கு கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 24-ந்தேதி நிர்வாக ஒப்புதலையும் தமிழக அரசு வழங்கியது.
ஒவ்வொரு மரகத பூஞ்சோலையும், ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 639 சதுர அடி பரப்பில் உருவாக்கப்பட்டு, அங்கு பாதுகாப்பு வேலி, அலங்கார வளைவுடன் நுழைவுவாயில், நிரந்தர பார்வையாளர் கூடாரம், நடைபாதை, ஆழ்துளை கிணறு, சாய்வு மேஜைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன.
இந்த பூஞ்சோலைக்குள் தடிமரம், எரிபொருள், தீவனம், காய்-கனி ஆகியவைகளை தரும் நாட்டு இன மரங்களாகிய நாவல், நெல்லி, நீர்மருது, பாதாம், புளி, வில்வம், கொய்யா, செஞ்சந்தனம், பலா, மகிழம், புன்னை, மா, வேம்பு ஆகியவை நடவு செய்யப்பட்டு வருகின்றன.
முதல்கட்டமாக மாநில அரசினால் 83 மரகத பூஞ்சோலைகள் அமைக்க 2 கட்டமாக ஒப்பளிப்பு வழங்கப்பட்டு, இதுவரை 29 மாவட்டங்களில் 75 பூஞ்சோலைகள் அமைக்கும் பணிகள் முற்றிலும் நிறைவுபெற்று, கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. மீதமுள்ள 8 பூஞ்சோலைகளில் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.
தற்போது மேலும் 5 மாவட்டங்களில் ரூ.4 கோடியே 25 லட்சம் செலவில் திண்டுக்கலில் 5 பூஞ்சோலைகள், பெரம்பலூரில் 4 பூஞ்சோலைகள், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூரில் தலா 3 பூஞ்சோலைகள், திருவண்ணாமலையில் 2 பூஞ்சோலைகள் என மொத்தம் 17 பூஞ்சோலைகள் உருவாக்கப்பட உள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் மொத்தம் 100 மரகதப் பூஞ்சோலைகள் உருவாக்கப்பட்டுவிடும்.
- பகல் நேரங்களில் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு சூரியன் சுட்டெரித்தது.
- 7 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்துள்ளது.
சென்னை :
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கோடை வெப்பம் முன் கூட்டியே பதிவாகத் தொடங்கிவிட்டது. பல இடங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று முன்தினம் 4 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவானது. இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக நேற்றும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. பகல் நேரங்களில் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு சூரியன் சுட்டெரித்தது. அந்தவகையில் ஈரோட்டில் 102.56 டிகிரி (39.2 செல்சியஸ்), கரூர் 102.2 டிகிரி (39 செல்சியஸ்), மதுரை 101.48 டிகிரி (38.6 செல்சியஸ்), சேலம் 100.04 டிகிரி (37.8 செல்சியஸ்), திருப்பத்தூர் 100.58 டிகிரி (38.1 செல்சியஸ்), திருச்சி 100.04 டிகிரி (37.8 செல்சியஸ்), வேலூர் 100.58 டிகிரி (38.1 செல்சியஸ்) என மொத்தம் 7 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக வரக்கூடிய நாட்களில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்றும், அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ந்தேதி வரை இதே நிலைதான் நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.






