என் மலர்
உள்ளூர் செய்திகள்
- 5 இஸ்லாமிய நிர்வாகிகள் உட்பட மொத்தம் 1,500 பேர் பங்கேற்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- சுமார் 2000 பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, வெஜ் சமோசா, நோன்பு கஞ்சி தயாரிப்பு.
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற உள்ளது.
இன்று மாலை 6.20 மணிக்கு நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில் தவெக தலைவர் விஜய் ஒய்எம்சிஏ மைதானத்திற்கு வருகை தந்தார்.
வெள்ளை வேட்டி, சட்டை, இஸ்லிமியர் அணியும் தொப்பியை அணிந்து இஃப்தார் நிகழ்ச்சிக்கு விஜய் வருகை தந்தார்.
நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் மாவட்டத்திற்கு 5 இஸ்லாமிய நிர்வாகிகள் உட்பட மொத்தம் 1,500 பேர் பங்கேற்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாலை நோன்பு திறந்த பிறகு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 2000 பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, வெஜ் சமோசா, நோன்பு கஞ்சி தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனன் ஆகியோர் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று புறநகர் ரெயில் சேவை ரத்து.
- தாம்பரம் - கோடம்பாக்கம் இடையே 30 நிமிட இடைவெளியில் சிறப்பு ரெயில் இயக்கப்படும்.
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவை வரும் 9ம் தேதி ஞாயிறன்று காலை 5.10 முதல் மாலை 4.10 வரை ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் ரெயில்கள் தாம்பரம் வரை இயக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், பயணிகள் வசதிக்காக, தாம்பரம் - கோடம்பாக்கம் இடையே 30 நிமிட இடைவெளியில் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
- ராணிப்பேட்டையில் ஒட்டப்பட்ட சர்ச்சையான போஸ்டர் பாஜகவினரால் ஒட்டப்பட்டது அல்ல.
- 3வது மொழியை கற்கவேண்டும் என்ற ஆர்வத்தில் அரசு பள்ளி மாணவர்கள் கையெழுத்து போடுகின்றனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பெரிய மனிதர்கள் எது வேண்டுமானாலும் பேசிவிட்டு போகலாம் என மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறியிருந்தார்.
இந்தி பேசும் மாநிலங்களில் மருத்துவம், பொறியியல் படிப்புகளை இந்தியில் கொடுத்துவிட்டு தான் இங்கு அமித்ஷா வேண்டுகோள் விடுத்தார். அமித்ஷா செய்தவற்றை தெரிந்து கொண்டு தான் பின்னர் துரைமுருகன் பதில் கூற வேண்டும்.
அமித்ஷாவை வரவேற்ற போஸ்டரில் சந்தான பாரதி படம் இடம்பெற்றதன் பின்னணியில் திமுகவினர் உள்ளனர். ராணிப்பேட்டையில் ஒட்டப்பட்ட சர்ச்சையான போஸ்டர் பாஜகவினரால் ஒட்டப்பட்டது அல்ல.
உரிய விசாரணை மேற்கொண்டால் சர்ச்சை போஸ்டரின் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும்.
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக எங்கும் மாணவர்களை வற்புறுத்தி கையெழுத்து பெறவில்லை.
அரசு பள்ளி மாணவ, மாணவிகள் தான் வரிசைகட்சி நின்று கையெழுத்து போட்டுச்செல்கின்றனர். 3வது மொழியை கற்கவேண்டும் என்ற ஆர்வத்தில் அரசு பள்ளி மாணவர்கள் கையெழுத்து போடுகின்றனர்.
ஆர்வமுடன் வரும் மாணவர்களை இங்கு வராதீர்கள் என்று எப்படி கூறுவது?
பாஜகவால்தான் தோற்றோம் எனக் கூறியவர்கள் தற்போது பாஜக கூட்டணிக்காக தவம் இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சென்னையில் உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாடு மற்றும் பொறியியல் மையம் அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
- 1 லட்சம் சதுர அடி பரப்பளவுடன், மேம்பட்ட உற்பத்தித் தளங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான வசதிகளுடன் இம்மையம் அமைக்கப்பட உள்ளது.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஈட்டன் குழுமத்தின் துணை நிறுவனமான, ஈட்டன் எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 200 கோடி ரூபாய் முதலீட்டில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னை சோழிங்கநல்லூரில் உயர்தர மின் மேலாண்மை கருவிகள் உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான மையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறைப் பயணமாக, 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்றபோது, இந்த நிறுவனத்தால், சென்னையில் உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாடு மற்றும் பொறியியல் மையம் அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதன் பிறகு ஆறே மாதங்களில், இத்திட்டம் அமைப்பதற்கு முதலமைச்சரால் இன்றைய தினம் அடிக்கல் நாட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 1 லட்சம் சதுர அடி பரப்பளவுடன், மேம்பட்ட உற்பத்தித் தளங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான வசதிகளுடன் இம்மையம் அமைக்கப்பட உள்ளது.
- கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியும் அதை செய்யாமல் இருப்பது ஏன்?
- தமிழக மக்களிடத்தில் கூறுவதற்கு தற்போது நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள் என்று கூறியுள்ளார்.
சென்னை:
மத்திய அமைச்சர் எல்.முருகன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
புதிய தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழிகள் கற்பிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதை, இந்தி மொழி திணிக்கப்படுவதாகக் கூறி தமிழக மக்களை திசை திருப்பி வரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழ் மொழியில் கற்பிக்கச் செய்யுங்கள் என்று, கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியும் அதை செய்யாமல் இருப்பது ஏன்?
எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது, ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு அரசியல் நாடகங்களை நிகழ்த்திய நீங்கள், இன்று ஆட்சியை கையில் வைத்துக்கொண்டு தமிழ் மொழிக்காக ஆற்ற வேண்டிய கடமைகளைச் செய்யாமல் ஏன் இன்னும் தமிழக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்?
முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, கடந்த 2 ஆண்டுகளாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தங்களிடத்தில் வைத்து வந்த கோரிக்கையை வெளிப்படையாக மக்கள் மன்றத்தில் வைத்துள்ளார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் அவர்களது தாய்மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை வழங்கி வருகின்ற நிலையில், தமிழ் மொழியில் நமது மாணவர்களை படிக்க வைப்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகளை, தமிழக மக்களிடத்தில் கூறுவதற்கு தற்போது நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள் என்று கூறியுள்ளார்.
- பேராசிரியர் அன்பழகனின் 5-ம் ஆண்டு நினைவு தினம்.
- அமைச்சர் துரைமுருகன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி.
வேலூர்:
வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் பேராசிரியர் அன்பழகனின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காட்பாடி தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.
இதில் அன்பழகன் உருவப் படத்திற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-
ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் தந்து வருகிறது என அமித்ஷா பேசியது குறித்து கேட்டதற்கு, பெரிய மனிதர்கள் எது வேண்டுமானாலும் பேசிவிட்டு போகலாம் என்றார்.
மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழ் மொழியில் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சி மேற்கொள்ள வேண்டும்-அமித்ஷா பேசியது குறித்து கேட்டதற்கு, `சொல்லுதல் யாவருக்கும் எளிய அரியவாம்' என திருக்குறளை மேற்கோள் காட்டினார்.
- மனித குரங்கு வசிக்கும் பகுதியில் திறந்தவெளி தண்ணீர் குளியல், தண்ணீர் குடிப்பதற்கு வசதியாக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.
- யானைக்கு ஷவர் குளிர் வசதி செய்யப்பட்டு உள்ளது.
வண்டலூர்:
தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரித்து வருகிறது. பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது. சென்னையில் வழக்கத்திற்கு மாறாக தற்போது இயல்பை விட 4.3 டிகிரி செல்சியஸ் அதிகமாக வாட்டி வதைக்கிறது. இதனால் பகல் நேரங்களில் சாலையில் செல்லும் பொதுமக்கள், இருசக்கர் வாகன ஓட்டிகள் வெப்பத்தால் தவிக்கும் நிலை உள்ளது.
நேற்று மீனம்பாக்கத்தில் 99.86 டிகிரி(37.7டிகிரி செல்சியஸ்) பதிவாகி உள்ளது. இது கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து மார்ச் மாதத்தில் பதிவான பதிவான அதிகபட்ச வெப்பநிலை என்றும்,கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத வெப்பநிலை அதிகம் என்று வானிலை ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் தமிழகத்தில் அடுத்தமாதம் (ஏப்ரல்) 15-ந்தேதி வரை வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
பறவை கூண்டுகளின் மேல் சாக்குபையால் போர்த்தி அடிக்கடி தண்ணீர் தெளிப்பது, மற்று விலங்குகள் உள்ள பகுதியில் குட்டைகளில் தண்ணீர் வற்றாமல் பார்த்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் மனித குரங்கு வசிக்கும் பகுதியில் திறந்தவெளி தண்ணீர் குளியல், தண்ணீர் குடிப்பதற்கு வசதியாக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. பறவைகள் விலங்குளுக்கு சூட்டைத் தணிக்கக்கூடிய பழங்கள் தர்பூசணி, கிர்ணிப்பழம் உள்ளிட்ட நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் அடிக்கடி வழங்கவும் முடிவு செய்து உள்ளனர். யானைக்கு ஷவர் குளிர் வசதியும் செய்யப்பட்டு உள்ளது.
புலிகள் நீந்தி குளிக்க தொட்டி , காண்டாமிருகத்திற்கு ஷவர் குளியல், அதன் இருப்பிடத்தை சுற்றி தண்ணீரை எப்பொழுதும் சேற்றுத்தன்மையுடன் வைக்கவும் ஏற்பாடு செய்து உள்ளனர். நெருப்புக்கோழி, ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை போன்றவைகளின் மீது காலை நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீரை சுழற்றி அடிக்கும் வகையில் குழாய்கள் அமைக்கப்படுகிறது என்று பூங்கா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தென்மாநிலங்கள் வெகுவாக பாதிக்கப்படும் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- வருகிற 22-ந்தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு 7 தென்மாநில முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை:
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்ட நிலையில், தென்மாநில முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தென்மாநிலங்கள் வெகுவாக பாதிக்கப்படும் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் கூட்டு நடவடிக்கை குழு அமைத்து தொடர் நடவடிக்கை மேற்கொள்வது குறித்து வருகிற 22-ந்தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு 7 தென்மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
பினராயி விஜயன், சித்தராமையா, நவீன் பட்நாயக், மம்தா பானர்ஜி, ரேவந்த் ரெட்டி, சந்திரபாபு நாயுடு, பகவந்த் மான் சிங் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- மேயர் ஆர்.பிரியா புதிய திட்டங்கள் வளர்ச்சி பணிகள் குறித்த அறிவிப்பை வெளியிடுகிறார்.
- பட்ஜெட் மீதான விவாதம் 21-ந் தேதி நடைபெறுகிறது.
சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் வரி விதிப்பு மற்றும் நிலைக்குழு தலைவர் சர்பா ஜெயாதாஸ் 2025-2026-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். மேயர் ஆர்.பிரியா புதிய திட்டங்கள் வளர்ச்சி பணிகள் குறித்த அறிவிப்பை வெளியிடுகிறார்.
இந்த பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் அழகுப்படுத்தும் பணிகள், அதிகரித்து வரும் போக்குவரத்து, நெரிசலை குறைக்க புதிய மேம்பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் மீதான விவாதம் 21-ந் தேதி நடைபெறுகிறது.
- கே.கே.நகர் சிவன் பூங்காவை ரூ.4.60 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி.
- அம்பத்தூரில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.39 கோடியே 75 லட்சம் செலவில் போரூரில் டாக்டர் எம்.எஸ்.சுவாமி நாதன் ஈரநில பசுமை பூங்கா, கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் மற்றும் சாத்தாங்காடு இரும்பு மற்றும் எஃக்கு சந்தை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுப் பணிகளை திறந்து வைத்து, ரூ.70 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டிலான 10 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.
இதில் போரூர், ராமாபுரத் தில் சுமார் 16.63 ஏக்கர் பரப்ப ளவில் ரூ.15.75 கோடி செலவில் அமைக்கப்பட்ட டாக்டர் எம். எஸ். சுவாமி நாதன் ஈரநில பசுமை பூங்கா, கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் ரூ. 4 கோடி செலவில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை, சூரிய மின்சக்தி அமைப்பு உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள்.
திருவொற்றியூர், சாத்தாங்காடு இரும்பு மற்றும் எக்கு சந்தை வளாகத்தில் ரூ.20 கோடி செலவில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை, மின்சார அறை, மின்னணு எடை பாலம், குடிநீர் வடிகால் அமைப்பு உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் என மொத்தம் ரூ.39.75 கோடி செலவில் 3 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
காட்டுப்பாக்கம், இந்திரா நகரில் ரூ.19.10 கோடி மதிப்பீட்டிலும், போரூர், கணேஷ் நகரில் ரூ.12.93 கோடி மதிப்பீட்டிலும் கட்டப்பட உள்ள பன்னோக்கு மையங்கள்.
சென்னை, சேத்துப்பட்டு, அப்பாசாமி தெருவில் 1.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள கால் பந்து மைதானம், குத்தம் பாக்கம், பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிட்கோ மற்றும் புதூர்மேடு ஆகிய இடங்களில் ரூ.1.63 கோடி மதிப்பீட்டில் சாலை சந்திப்புகளை மேம்படுத்தும் பணிகள்.
குத்தம்பாக்கம், புறநகர் பேருந்து முனையத்தில் எஸ்.இ.டி.சி. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பேருந்துகளுக்கு ரூ.9.55 கோடி மதிப்பீட்டில் அமைக் கப்படவுள்ள கூடுதல் வாகன நிறுத்துமிடம், சைதாப் பேட்டை, அம்மா பூங்காவை ரூ.3.65 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி, எம்.எம்.டி.ஏ. காலனி, அரசு மேல்நிலைப் பள்ளி யில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள்.
கே.கே.நகரில் உள்ள சாலை சந்திப்பு மற்றும் சிவன் பூங்காவை ரூ.4.60 கோடி மதிப்பீட்டில் மேம் படுத்தும் பணி, தாம்பரம், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பூங்கா மற்றும் நல்லதண்ணீர் குளத்தை ரூ.5.80 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி, அம்பத்தூர் பானு நகரில் ரூ.7.01 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் என மொத்தம் ரூ.70.70 கோடி மதிப்பீட்டில் 10 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- கடந்த 3 ஆண்டுகளாக மழைநீர் கல்வாய் கட்டப்பட்ட விளைவாக சைதாப்பேட்டையில் மழை நீர் பாதிப்பு இல்லாத சூழல் ஏற்பட்டது.
- தேர்தல் நெருங்குவதால் இப்போது அமலாக்கத்துறை போன்ற சோதனைகளை நடத்துவார்கள்.
சென்னை:
சைதாப்பேட்டை கலைஞர் கருணாநிதி பொன்விழா வளைவு உள்ள பஜார் சாலையிலும், ஜீனிஸ் சாலையிலும் ரூபாய் 2.39 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள மழைநீர் வடிகால் கட்டும் பணியினைச் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து சைதாப்பேட்டை அரசு மகப்பேறு மருத்துவமனையில் சைதை மேற்கு பகுதி தி.மு.க. மருத்துவர் அணி சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மார்ச் 1 முதல் 5-ந்தேதி வரை பிறந்த 6 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்வில் குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கினார்.
இதில் பகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் இதற்கு முன்பு எல்லாம் 4, 5 சென்டி மீட்டர் மழை பெய்தாலும் பெரிய அளவில் வெள்ள பாதிப்பு ஏற்படும் வாரக்கணக்கில் மழைநீர் தேக்கம் என்பது இருக்கும்.
ஆனால் கடந்த ஆண்டு மிகப்பெரிய மழை ஒரே நாளில் 20 சென்டிமீட்டர் மழை பெய்தும்கூட 24 மணி நேரத்தில் மழை பெய்த சுவடு தெரியாத அளவிற்கு சென்னை மாநகரம் மிகப்பெரிய மாற்றத்தை பெற்றது.
சைதாப்பேட்டையில் சிறிய அளவில் மழை பெய்தாலும் கூட சுப்பிரமணிய தெரு, ஜோதி ராம் நகர், சாரதி நகரில் பெரிய அளவில் மழை பாதிப்புகள் இருந்தது கடந்த மூன்று ஆண்டுகளாக மழைநீர் கல்வாய் கட்டப்பட்ட விளைவாக சைதாப்பேட்டையில் எந்த பகுதியிலும் மழை நீர் பாதிப்பு இல்லாத சூழல் ஏற்பட்டது.
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பா.ஜ.க. கையெழுத்து இயக்கம் நடத்தி இருப்பதற்கு ஆதரவு பெருகி இருப்பதாக அண்ணாமலை கூறியிருக்கிறார்.
பா.ஜ.க.வுக்கு எங்கு மக்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள், ஏற்கனவே ஆன்லைனில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்ற பொழுது ஒரு கோடி பேர் சேர்ந்தனர் என்று கூறினார்கள் ஆனால் எவ்வளவு வாக்கு வந்தது ஒரு கோடி உறுப்பினர்கள் வாக்களித்தார்களா?
தேர்தல் நெருங்குவதால் இப்போது அமலாக்கத்துறை போன்ற சோதனைகளை நடத்துவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மத்திய அரசு எந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்குகிறதோ அந்த திட்டத்திற்கு தான் அந்த நிதியை பயன்படுத்த வேண்டும்.
- தி.மு.க. மிகப்பெரிய போரை தமிழ் குழந்தைகள் மீது திணிக்க தொடங்கியுள்ளது.
நாகர்கோவில்:
முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க.வினர் 1967-க்கு பிறகு 2026 தேர்தலை பயன்படுத்தி குறுகிய நோக்கத்துடன் மொழி பிரச்சனையை மீண்டும் உருவாக்கி உள்ளனர். தாய் மொழியில் கல்வி படிக்க வேண்டும். அத்துடன் ஆங்கிலம் படிக்க வேண்டும். 3-வதாக விரும்பிய மொழியை குழந்தைகள் படிக்க வேண்டும்.
பெருந்தலைவர் காமராஜர் பள்ளிக்கூடங்களை திறந்தார். இலவச கல்வியை தந்தார். ஆனால் அதைப்பற்றி யாரும் கவலைப்படவில்லை. தற்போது அரசு பள்ளிகளில் எத்தனை மாணவர்கள் படித்து வருகிறார்கள், எத்தனை ஆசிரியர்கள் உள்ளனர், அரசு பள்ளியின் தரம் எப்படி உள்ளது? என்று பார்க்க வேண்டும்.
அரசு பள்ளிகள் மூடப்பட்டு தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் குழந்தைகளை அப்பா என்று கூறுமாறு கூறியது சந்தோஷமான ஒன்று தான். அவர் தந்தை ஸ்தானத்திலிருந்து சிந்தித்து செயல்பட வேண்டும்.
தி.மு.க. மிகப்பெரிய போரை தமிழ் குழந்தைகள் மீது திணிக்க தொடங்கியுள்ளது. தமிழை தி.மு.க. அழித்து வருகிறது. தமிழர் என்ற உணர்வு இல்லாமல் தற்போது ஆங்கிலம் பேசும் நிலை தான் தற்பொழுது உள்ளது. குழந்தைகளின் கல்வியில் விளையாடக் கூடாது.
மத்திய அரசு எந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்குகிறதோ அந்த திட்டத்திற்கு தான் அந்த நிதியை பயன்படுத்த வேண்டும். வேறு திட்டத்திற்கு பயன்படுத்தக்கூடாது. தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது. தமிழகத்தில் போதை பொருள் பழக்கம் அதிகரித்து வருகிறது. உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு விஷத்தன்மை வாய்ந்த போதைப் பொருட்கள் புழக்கத்தில் உள்ளன.
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக அரசு பள்ளி மாணவரிடம் கையெழுத்து வாங்குவதாக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளதாக கூறுகிறீர்கள். ஒரு அமைச்சர் இப்படி கூறக்கூடாது. அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
துணை முதலமைச்சர் பொறுப்புடன் இருக்க வேண்டும். அவருக்கு அதிக இடத்தை முதல்வர் கொடுத்து வருகிறார். முதலமைச்சர் புகைப்படங்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் துணை முதலமைச்சர் புகைப்படங்களும் இருந்து வருகிறது. ரேஷன் கடைகளிலும் 2 படங்களும் பொருத்தப்பட்டுள்ளது.
ஆனால் மோடியின் படம் தான் ரேஷன் கடைகளில் இருக்க வேண்டும். மத்திய அரசு அரிசி வழங்கி வருகிறது. ஆனால் தமிழக அரசு விநியோகம் செய்து வருகிறது. கொடுப்பவர் படம் இல்லை. விநியோகம் செய்பவரின் படம் மட்டும் ரேஷன் கடைகளில் உள்ளது. தொகுதி சீரமைப்பு கூட்டத்திற்கு வந்தவர்கள் எல்லாம் வாழ்த்த வந்தவராக மட்டும் கருதக்கூடாது. வீழ்த்துவதற்காகவும் வந்திருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.






