என் மலர்
நீங்கள் தேடியது "Chennai Corporation"
- தொடர்மழை மற்றும் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று, உரிமம் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு
- உரிமையாளர்களின் வசதிக்காக, மைக்ரோசிப் பொருத்துதல், தடுப்பூசி செலுத்துதல், உரிமம் வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் இலவசமாகவே வழங்கப்படுகின்றன.
பெருநகர சென்னை மாநகராட்சி, செல்லப் பிராணிகளுக்கான உரிமம் பெறும் காலக்கெடுவை டிசம்பர் 14, 2025 வரை நீட்டித்துள்ளது. செல்லப்பிராணிகளுக்கான உரிமம் பெறுவதற்கான காலக்கெடு முதலில் நவம்பர் 23, 2025 ஆக நிர்ணயிக்கப்பட்டு, பின்னர் டிசம்பர் 7, 2025 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. தற்போது, பெய்து வரும் தொடர் மழை மற்றும் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று, உரிமம் பெறுவதற்கான காலக்கெடு மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் திரு.வி.க. நகர், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாப்பேட்டை, மீனம்பாக்கம் ஆகிய 6 செல்லப்பிராணிகள் சிகிச்சை மையங்களிலும், சோழிங்கநல்லூர் நாய் இனக்கட்டுப்பாட்டு மையத்திலும் மைக்ரோசிப் பொருத்துதல், வெறிநாய்க்கடி நோய்த்தடுப்பூசி (Anti Rabies Vaccination) செலுத்துதல், உரிமம் வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் இலவசமாக வாரத்தின் அனைத்து நாட்களிலும் தினசரி காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் இதனைப் பயன்படுத்தி 14.12.2025க்குள் தங்களின் செல்லப் பிராணிகளுக்கான உரிமத்தை கட்டாயம் பெற்றுக் கொண்டு அபராதம் செலுத்துவதைத் தவிர்த்திடுமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் பெருநகர சென்னை மாநகராட்சியில் இது நாள் வரை 91,711 செல்லப்பிராணிகள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 45,916 செல்லப் பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நேற்று முன்தினம் காலை 32 ஆயிரத்து 500 சிற்றுண்டியும் நேற்று மதியம் 91 ஆயிரத்து 600 பேருக்கு உணவும் தயாரித்து வழங்கப்பட்டன.
- இன்று காலையில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 500 உணவு பொட்டலம் தயாரித்து வழங்கப்பட்டன.
சென்னை:
சென்னையில் 3-வது நாளாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஒரு சில பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மாநகராட்சி பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.
215 முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் மழை பாதிப்பால் இதுவரையில் முகாம்களில் யாரும் தங்க வைக்கப்படவில்லை. உணவு மட்டும் வினியோகிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் காலை 32 ஆயிரத்து 500 சிற்றுண்டியும் நேற்று மதியம் 91 ஆயிரத்து 600 பேருக்கு உணவும் தயாரித்து வழங்கப்பட்டன.
நேற்றிரவு ஒரு லட்சத்து 54 ஆயிரம் பாக்கெட் இரவு உணவு தயாரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. இன்று காலையில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 500 உணவு பொட்டலம் தயாரித்து வழங்கப்பட்டன.
மாநகராட்சி சமையல் கூடங்களில் சுகாதாரமாக உணவு தயாரிக்கப்பட்டு சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு 5 லட்சத்து 1,600 உணவு பொட்டலங்கள் இதுவரையில் வழங்கப்பட்டன.
- வழிகாட்டி நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
- பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தல்.
டிட்வா புயல் முன்னெச்சரிக்கையாக பொது மக்கள் புயல் மழை வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அதில், டிட்வா புயல், கனமழை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கடற்கரை, பூங்காக்களுக்கு செல்ல வேண்டாம், மேலும் மரங்களின் கீழ் நிற்க வேண்டாம்.
பால், குடிநீர், மெழுகுவர்த்தி, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- நவம்பர் 24-ந்தேதிக்குப் பிறகு உரிமம் இல்லாத செல்லப்பிராணிகளுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.
- சென்னை மாநகராட்சியில் 2-வது வாரமாக வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி, மைக்ரோ சிப் பொருத்துவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
சென்னை மாநகராட்சி செல்லப் பிராணிகளான நாய்களுக்கு உரிமம் பெறுவதை கட்டாயமாக்கி உள்ளது. சென்னையில், செல்லப்பிராணிகளுக்கு நவம்பர் 23-ந்தேதிக்குள் உரிமம் பெற வேண்டும் என்றும் நவம்பர் 24-ந்தேதிக்குப் பிறகு உரிமம் இல்லாத செல்லப்பிராணிகளுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 3 ஞாயிற்றுக்கிழமைகளில், சென்னையில் உள்ள சிகிச்சை மையங்களில் இலவச தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகிறது.
தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி தொடங்கியது. மாநகராட்சி கால்நடைத்துறை அதிகாரிகளும், மருத்துவ பணியாளர்களும் வீதிவீதியாக சென்று தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தினர்.
சென்னை மாநகராட்சியில் இதுவரை 1 லட்சத்து 22 ஆயிரத்து 625 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 5 ஆயிரத்து 483 வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் 7 இடங்களில் 2-வது வாரமாக வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி, மைக்ரோ சிப் பொருத்துவதற்கான சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.
செல்லப்பிராணிகளுக்காக உள்ள 6 சிகிச்சை மையங்களில் தினமும் காலை 8 மணி முதல் 3 மணி வரையில் உரிமம் வழங்குதல், மைக்ரோசிப் செலுத்துதல், ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல் ஆகிய பணிகள் நடைபெறுகிறது.
திரு.வி.க. நகர், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம், சோழிங்கநல்லூரில் முகாம் நடைபெறுகிறது.
- பலரும் தங்களது வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தி அதனை பதிவு செய்யாமலேயே உள்ளனர்.
- காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த முகாம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
சென்னை:
சென்னை மாநகரில் வீடுகளில் செல்ல பிராணிகளாக நாய்களை வளர்ப்பவர்கள் அதனை சரியாக பராமரிக்க முடியாத சூழலில் தெருக்க ளில் விட்டுவிடுகிறார்கள்.
இது போன்ற வளர்ப்பு நாய்கள் தெரு நாய்களிடம் இருந்து விலகியே இருக்கும். அந்த நாய்களோடு ஒன்றோடு ஒன்று கலக்காது.
இப்படி கைவிடப்படும் வளர்ப்பு நாய்களை தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து கடித்து கொன்றுவிடும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
வளர்ப்பு நாய்களை சாலைகளில் அழைத்துச் செல்லும்போது அவை ரோட்டில் நடந்து செல்லும் பொதுமக்களை கடிப்பதும் தொடர்கிறது.
வளர்ப்பு நாய்களுக்கு பலர் உரிய முறையில் தடுப்பூசிகளை போடாத காரணத்தால் ரேபிஸ் நோய் தாக்குதலுக்குள்ளாகி நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் நிலையும் உள்ளது.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி சார்பில் வளர்ப்பு நாய்களுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்த வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பலரும் தங்களது வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தி அதனை பதிவு செய்யாமலேயே உள்ளனர்.
இதை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு கடிவாளம் போடும் வகையில் மாநகராட்சி சார்பில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த மைக்ரோ சிப் பொருத்தும் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் சென்னையில் இன்று 6 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
திரு.வி.க.நகர், புளியந்தோப்பு, ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாப்பேட்டை, மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த முகாம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
இந்த முகாமில் பொதுமக்கள் பலர் பங்கேற்று தங்களது வீடுகளில் உள்ள வளர்ப்பு நாய்களை அழைத்து வந்து மைக்ரோ சிப்களை பொருத்திச் சென்றனர்.
இன்றைய முகாமில் பங்கேற்ற மாநகராட்சி அதிகாரிகள் இணையதளத்தில் வளர்ப்பு நாய்களை பதிவு செய்வது குறித்தும் விளக்கம் அளித்தார்கள். மைக்ரோசிப் பொருத்தும்போது கொடுக்கப்படும் ஆவணங்களின் அடிப்படையில் எளிதாக பதிவு செய்ய முடியும் என்றும் அவர்கள் கூறினார்கள்.
வருகிற 24-ந் தேதிக்குள் நாய்களை பதிவு செய்து மைக்ரோ சிப் பொருத்தாவிட்டால் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செல்ல பிராணிகள் வளர்ப்போர், இணையதளம் வாயிலாக பதிவு செய்ய தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இணைய தளத்தில் பதிவு செய்ய முடியவில்லை என்கிற குற்றச்சாட்டுகளையும் நாய்களை வளர்ப்போர் தெரிவித்துள்ளனர்.
செல்ல பிராணிகள் பதிவுக்கு சிறப்பு முகாம்களை நடத்தினால் வசதியாக இருக்கும் என, பலரும் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்தே இன்று முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் செல்ல பிராணிகள் பதிவுக்கான நடைமுறையில் சிக்கல்கள் உள்ளதால், அவற்றை வளர்ப்போர், எளிதில் பதிவு செய்து பயன்பெறும் வகையில், 'மைக்ரோசிப்' பொருத்தி ஆவணங்கள் வழங்கவும், வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தவும், சிறப்பு முகாம் நடத்தப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
வருகிற 16 மற்றும் 23-ந் தேதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
வீடுகளில் வளர்க்கப்பட்ட நாய்கள், உரிமையாளர்களால் கைவிடப்பட்டு சென்னையில் சுற்றி திரிவது அதிகரித்துள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள் சென்னை மாநகர சாலைகளில் ஆதரவின்றி சுற்றி வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவற்றையெல்லாம் தடுக்கும் வகையில் தான் வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
- அமைச்சர்கள், மேயர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன.
- மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை பின்புறம் கடலில் இறங்கி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சியின் 5, 6 மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியார்மயமாக்குவதை கண்டித்தும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 90 நாட்களுக்கு மேலாக ரிப்பன் மாளிகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, ஏற்கெனவே அமைச்சர்கள், மேயர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன.
தூய்மைப் பணியாளர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் காவல் துறையினரால் கடந்த ஆகஸ்ட் 13-ந்தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து சென்னையில் அவ்வப்போது வெவ்வேறு இடங்களில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். பின்னர் அவர்கள் காவல் துறையால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்படுவார்கள்.
கடந்த 5-ந்தேதி மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை பின்புறம் கடலில் இறங்கி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடல் அலையில் இறங்கி கையில் பதாகைகளை ஏந்தி ஆபத்தான வகையில் தங்களுடைய போராட்டத்தை நடத்தினர்.
இந்நிலையில் தூய்மை பணியாளர்களின் போராட்டம் 100-வது நாளை எட்டியுள்ளதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- அரசியல் கட்சிகளின் பிரசாரத்தின்போது தற்காலிக கொடிகள் கட்ட அனுமதி பெற வேண்டும்.
- அனுமதியின்றி நடப்படும் தற்காலிக கொடிக்கம்பம் எந்த முன்னறிவிப்பின்றி அகற்றப்படும்.
தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக் கம்பங்களை 2025 ஏப்ரல் 28க்குள் அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை 2025 ஜனவரியில் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், கொடிக்கம்பங்கள் அமைப்பதற்கு குழுக்கள் அமைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
அதேபோல், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்காக கொடிக்கம்பங்கள் அமைக்கும் போது, சாலையில் தார்கள் மீதும், சாலை நடுவில் உள்ள செண்டர் மீடியன் பகுதிகளில் கொடிக்கம்பங்கள் அமைக்க கூடாது. மூன்று நாட்களுக்கு மேல் கொடிக்கம்பங்களை வைத்திருக்க கூடாது என்பன உள்ளிட்ட வழிகாட்டு விதிமுறைகளும் வகுக்கப்பட்டன.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
* சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிக கொடிக்கம்பங்கள் அமைக்க அனுமதி கட்டாயம் பெற வேண்டும்.
* அரசியல் கட்சிகளின் பிரசாரத்தின்போது தற்காலிக கொடிகள் கட்ட அனுமதி பெற வேண்டும்.
* தேர்தல் பிரசாரம், தர்ணா, பண்டிகை உள்ளிட்ட நிகழ்வுக்கு கொடிக்கம்பம், பேனர் வைக்க அனுமதி கட்டாயம் பெற வேண்டும்.
* அனுமதியின்றி நடப்படும் தற்காலிக கொடிக்கம்பம் எந்த முன்னறிவிப்பின்றி அகற்றப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கே இந்த பொருட்கள் விற்பனை செய்யப்படும்.
- மண்டல குப்பை சேமிப்பு கிடங்குகளில் இந்த பொருட்கள் நீண்ட நாட்களாக தேங்கி கிடப்பதால் சுகாதார அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் ஒவ்வொரு மண்டலங்களிலும் உள்ள குப்பை சேமிப்பு கிடங்குகளில் தேங்கி கிடக்கின்ற மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை விற்பனை செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இந்த மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை கிளீன் தமிழ்நாடு கம்பெனி லிமிடெட் மூலம் விற்பனை செய்ய சென்னை மாநகராட்சி ஒப்புதல் அளித்து உள்ளது.
மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கே இந்த பொருட்கள் விற்பனை செய்யப்படும். வழக்கமாக இந்த பொருட்கள் மத்திய அரசின் நிறுவனம் மூலம் ஆன்லைன் முறையில் ஏலம் விடப்படும். ஆனால் இந்த முறையில் ஏலம் விடுவதற்கு 15 நாட்களுக்கு மேல் ஆகிறது. இதையடுத்து பழைய நடைமுறையை மாற்றியமைத்து இந்த புதிய முறை அமல்படுத்தப்பட உள்ளது.
மண்டல குப்பை சேமிப்பு கிடங்குகளில் இந்த பொருட்கள் நீண்ட நாட்களாக தேங்கி கிடப்பதால் சுகாதார அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னையில் உள்ள குப்பை சேமிப்பு கிடங்குகளில் உள்ள பொருட்கள் ஆன்லைன் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்வதற்கு தாமதம் ஆவதால் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே புதிய முறை அமல்படுத்தப்பட உள்ளது.
பழைய பொருட்களை வாங்குபவர்கள் நேரடியாக தொடர்பு கொள்ள முடிவதால் மறுசுழற்சி பயன்பாட்டு பொருட்களை வேகமாக அப்புறப்படுத்த முடியும். பல மாதங்களாக தேங்கி கிடக்கும் பொருட்களை அகற்றுவதே இதன் நோக்கம்.
இந்த புதிய முறையில் பிளாஸ்டிக் பொருட்கள், காகிதங்கள், கண்ணாடி பொருட்கள், உலோகங்குள், அட்டைகள், மரம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஆகியவை தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.
இதில் வெளிப்படை தன்மையை உறுதி செய்வதற்காக அனைத்து பரிவரித்தனைகளும் தூய்மை மிஷன் டிஜிட்டல் தளத்தில் பதிவு செய்யப்படும்.
இந்த மறுசுழற்சி பயன்பாட்டு பொருட்களை பொருத்தவரை செல்போன் ரூ.80-க்கும், லேப்டாக் ரூ.500-க்கும், பிரிட்ஜ் ரூ.800-க்கும், வாஷிங்மிஷின் ரூ.600-க்கும் விற்பனை செய்யப்படும். இந்த நடைமுறையானது இனி வரும் வாரங்களில் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- மாநகராட்சி கூட்டத்தில் செல்ல பிராணிகள் உரிமம் பெறுவதற்கு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.
- கூட்டத்தில் 71 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சென்னை:
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க. மாமன்ற குழு தலைவர் சதீஷ்குமார் பேசுகையில், எனது வார்டு 182-ல் மக்கள் எனக்கு வாக்களித்தனர். ஆனால் மாநகராட்சி ஆவணங்களில் அது 184-வது வார்டாக காண்பிக்கப்படுகிறது. பெருந்தலைவர் காமராஜர் நகரில் கடந்த 3 ஆண்டுகளாக வைத்த கோரிக்கையை இதுவரை சரி செய்யவில்லை. அதனால் அங்கு எந்த பணியும் சரியாக நடைபெறவில்லை. நெமிலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்ததாக கூறினார்.
இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். அ.தி.மு.க. உறுப்பினர் சதீஷ்குமாரை அமரும்படி குரல் கொடுத்தனர். பெரும்பாலான தி.மு.க. உறுப்பினர்கள் இருக்கையை விட்டு எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அ.தி.மு.க. உறுப்பினர்களும் பதிலுக்கு குரல் கொடுத்தனர் முன்னாள் முதல்வர் கருணாநிதி அந்த திட்டத்தை கொண்டு வந்ததாக தி.மு.க.வினர் பதிலுக்கு குரல் கொடுத்தனர்.
அப்போது சபையில் ஒரே அமளியாக இருந்தது. இறுதியில் சதீஷ்குமார் அ.தி.மு.க. உறுப்பினர்களுடன் சபையை விட்டு வெளிநடப்பு செய்தார்.
இதையடுத்து கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகராட்சி கூட்டத்தில் செல்ல பிராணிகள் உரிமம் பெறுவதற்கு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. செல்ல பிராணிகளான நாய், பூனைகளுக்கு உரிமம் கட்டாயம் பெற வேண்டும். இதற்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 24-ந்தேதிக்குள் உரிமம் பெற வேண்டும். அப்படி பெற தவறினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மாநகராட்சி ஊழியர்கள் இதை வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்துவார்கள். மேலும் பூங்காக்கள் நடைபாதைகள் பிற பகுதிகளில் கழுத்துப் பட்டை இல்லாமல் நாய்களை அழைத்து வந்தால் உரிமையாளர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கவும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
மயிலாப்பூர் மந்தவெளிபாக்கத்தில் உள்ள கிழக்கு வட்டச் சாலைக்கு பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் சாலை என பெயர் மாற்றம் உட்பட 71 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 1490 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன.
- சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் மழைநீர்த் தேக்கம் இன்றி போக்குவரத்து சீராக உள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக சென்னையில் மழை பெய்து வருகிறது. சென்னையில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்விவரம் வருமாறு:-
* மழையின் அளவு 17.10.2025 அன்று காலை 8.30 மணி முதல் இன்று (28.10.2025) காலை 8.30 மணி வரை சராசரியாக 267.80 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.
* 27.10.2025 நேற்று காலை 8.30 மணி முதல் இன்று (28.10.2025) காலை 8:30 மணி வரை சராசரியாக 5203 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக எண்ணூர் பகுதியில் 127.20 மிமீ மழைப்பொழிவும் (திருவொற்றியூர் மண்டலம்)
குறைந்தபட்சமாக முகலிவாக்கம் பகுதியில் 7.80 மிமீட்டர் மழையும் (ஆலந்தூர் மண்டலம்) பெய்துள்ளது.
* பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 215 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் உணவு சுகாதார வசதி, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளன.
* நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க ஏதுவாக 111 மைய சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
* தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு உணவு வழங்கும் வகையில் 22.10.2025 முதல் நேற்று (27.10.2025) இரவு வரை மொத்தம் 4,12,150 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

* இன்று (28.10.2025) 54,500 நபர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது.
* பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கும் வகையில், 17.10.2025 அன்று முதல் 27.10.2025 வரை 510 நிலையான மருத்துவ முகாம்கள். 191 நடமாடும் மருத்துவ முகாம்கள் என மொத்தம் 701 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 29.686 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
* இன்று (28.10.2025) 15 மண்டலங்களிலும் 12 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைப்பெறுகிறது.
* தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்டு நிவாரண மையங்களில் தங்க வைப்பதற்காக 103 படகுகள் தயார்நிலையில் உள்ளது. 36 படகுகள் மாநகராட்சிக்கு சொந்தமாக வாங்கி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
* தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சார்ந்த 60 நபர்கள் மாநில பேரிடர் மீட்புப் படையைச் சார்ந்த 30 நபர்கள் தயார்நிலையில் உள்ளனர்.
* மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 1490 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. 150 எண்ணிக்கையில் 100Hp மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. டிராக்டர் மேல் 550 மோட்டார் பம்புகள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இதன் மூலம் மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீர் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

* 2 ஆம்பிபியன், 3 ஆம்பிபியன் எஸ்கவேட்டர்கள், பல்வகை பயன்பாட்டிற்கான 6 ரோபோடிக் எஸ்கவேட்டர்கள் 3 மினி ஆம்பிபியன் 7 சூப்பர் சக்கர் வாகனங்கள். 15 மரக்கிளை அகற்றும் சக்திமான் வாகனங்கள் உட்பட மொத்தம் 478 வாகனங்கள் மற்றும் இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன.
* பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விழும் மரங்களை அகற்றுவதற்காக ஹைட்ராலிக் மர அறுவை இயந்திர வாகனங்கள் 15, ஹைட்ராலிக் ஏணி 2, கையடக்க மர அறுவை அறுப்பான் 224, டெலஸ்கோபிக் மர அறுவை இயந்திரங்கள் 216 என மொத்தம் 457 மர அறுவை இயந்திரங்கள் தயார்நிலையில் உள்ளன.
* 17.10.2025 முதல் 27.10.2025 வரை மழையின் காரணமாக விழுந்த 53 மரங்களும் அகற்றப்பட்டுள்ளது.
* சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் மழைநீர்த் தேக்கம் இன்றி போக்குவரத்து சீராக உள்ளது.
* மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்கள், கால்வாய்கள், வண்டல் மண் சேகரிப்புத் தொட்டிகள் ஆகியவற்றில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பணிகள் தொடர்ச்சியாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
* 24 மணிநேரமும் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் பொதுமக்களிடமிருந்து 150 இணைப்புகளுடன் கூடிய 1913 என்ற உதவி எண்ணிற்கு வரும் புகார்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
* வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் அலுவலர்கள், பொறியாளர்கள் பணியாளர்கள் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 22 ஆயிரம் நபர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க ஏதுவாக 106 மைய சமையல் கூடங்கள் தயார் நிலையில் உள்ளது.
- 478 வாகனங்கள் மற்றும் எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.
சென்னை:
தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த 17-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை சராசரியாக 179.80 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் 215 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதி முதலியவை செய்யப்பட்டுள்ளன. நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க ஏதுவாக 106 மைய சமையல் கூடங்கள் தயார் நிலையில் உள்ளது. கடந்த 22, 23 ஆகிய தேதிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள 4 லட்சத்து 400 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.
சென்னையில் பல்வேறு திறன் கொண்ட 1,436 மோட்டார் பம்புகளும், மோட்டார் பம்புகள் பொருத்தப்பட்ட 500 டிராக்டர்கள் தயார் நிலையில் உள்ளன. இதுபோக, 478 வாகனங்கள் மற்றும் எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை சரிசெய்யும் பணியில் சென்னை மாநகராட்சியின் அலுவலர்கள், என்ஜினீயர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்பட 22 ஆயிரம் பேரும், சென்னை குடிநீர் வாரியம் சார்பில் 2,149 களப்பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தற்போது வரை 11 ஆயிரம் தெரு நாய்களுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்தி அதை கண்காணித்து வருகிறோம்.
- 2 லட்சம் 'மைக்ரோ சிப்'கள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன.
சென்னை:
சென்னையில் வளர்ப்பு நாய் மற்றும் தெரு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
இதில் பிட் புல், ராட்வீலர், ஜெர்மன் ஷெப்பர்ட் உள்ளிட்ட நாய் இனங்களால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, நாய் வளர்ப்பவர்கள் சாலையில் அழைத்துச் செல்லும்போது நாய்களுக்கு வாய்மூடி கட்டாயம் அணிவிக்க வேண்டும்,
ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும், கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும், வளர்ப்பு நாய்கள் கடித்தால் அதன் உரிமையாளர்களே பொறுப்பு ஆகிய கட்டுப்பாடுகளை விதித்தது. மாநகராட்சியின் இந்த உத்தரவுகளை பெரும்பாலான நாய் வளர்ப்பவர்கள் பின்பற்றவில்லை.
இதேபோல, பராமரிக்க முடியவில்லை என்றால் வளர்ப்பு நாய்களை அதன் உரிமையாளர்கள் சாலைகளில் விட்டு செல்லும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. எனவே, இதற்கு தீர்வு காணும் வகையில் வளர்ப்பு நாய்களின் உடலில் 'மைக்ரோ சிப்' பொருத்த மாநகராட்சி முடிவு செய்தது. இதுகுறித்து கடந்த ஜனவரி மாதம் நடந்த மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, சிப் கொள்முதல் மற்றும் அதற்கான செயலி உருவாக்கத்திற்கு மாநகராட்சி டெண்டர் கோரியது. தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த மாதம் முதல் வளர்ப்பு நாய்களுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்துவது கட்டாயமாகிறது.
இதுகுறித்து, மாநகராட்சி கால்நடைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்னையில் உள்ள 1.80 லட்சம் தெரு நாய்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதிக்குள் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது வரை 11 ஆயிரம் தெரு நாய்களுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்தி அதை கண்காணித்து வருகிறோம். இதேபோல, சென்னையில் 12,500 பேர் தங்களின் வளர்ப்பு பிராணிகளுக்கு உரிமம் பெற்றுள்ளனர். மீதம் உள்ள நபர்கள் உரிமம் பெற பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் சென்னையில் வளர்ப்பு நாய்களின் உரிமையாளர்கள் தங்களின் நாய்களுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்துவது கட்டாயம்.
இதற்காக 2 லட்சம் 'மைக்ரோ சிப்'கள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன. தனியார் மற்றும் அரசு கால்நடை ஆஸ்பத்திரிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வழங்கப்பட உள்ளது. வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த வரும் போது 'மைக்ரோ சிப்' பொருத்தவில்லை என்றால் கட்டாயம் பொருத்திக்கொள்ள அறிவுறுத்தப்படும். அவ்வாறு பொறுத்தாத நாயின் உரிமையாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். 'மைக்ரோ சிப்' பொருத்தப்படும் நாய்கள் அதற்கான செயலி மூலம் கண்காணிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






