என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பிள்ளைகள் ஆசைப்பட்டால் எவ்வளவு மொழி வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளட்டும்.
    • முதலமைச்சர் எந்த மொழிக்கும் நாங்கள் எதிரி கிடையாது.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * ஏன் எனக்கு உலக மொழி தேவை. நாங்கள் மொழிபெயர்ப்பாளரையா உருவாக்க போகிறேன். நான் ஒரு விஞ்ஞானியை உருவாக்க ஆசைப்படுகிறேன். நல்ல மருத்துவரை, நல்ல பொறியாளரை உருவாக்க ஆசைப்படுகிறேன். நாம் எல்லோரும் சேர்ந்து அப்படி தான் செய்துகொண்டிருக்கிறோம்.

    * நாம் அனைவரும் இருமொழிக்கொள்கையை படித்து விட்டு தானே இருக்கிறோம். நம்முடைய பிள்ளைகளும் அப்படி படிக்க வேண்டும் என்று தானே ஆசைப்படுகிறோம்.

    * எதுக்கு பிள்ளைகளுக்கு கஷ்டத்தை கொடுக்க வேண்டும். எங்கள் பிள்ளைகள் ஆசைப்பட்டால் எவ்வளவு மொழி வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளட்டும். ஆனால் அது option-ஆ இருக்கணுமே தவிர Compulsion-ஆ இருக்கக்கூடாது என்பது எங்கள் கருத்து.

    * அதனால் தான் தமிழ்நாடு முதலமைச்சர், எந்த மொழிக்கும் நாங்கள் எதிரி கிடையாது. யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். ஆனால் அதை மையப்படுத்தி, அதை கற்றுக்கொண்டால் தான் பணம் தருவேன் என்று சொல்வது கிட்டத்தட்ட பிளாக்மெயில் மாதிரி உள்ளது என்று சொல்கிறார்.

    * போச்சம்பள்ளி அருகே அரசுப்பள்ளியில் பா.ம.க. துண்டுடன் நடனமாடின விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பள்ளியில் என்ன நடந்தாலும் அதற்கு தலைமை ஆசிரியர் பொறுப்பு என்று அவர் கூறினார்.

    • 100 மகளிருக்கு பிங்க் ஆட்டோக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
    • மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கினார்.

    சென்னை:

    சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிங்க் ஆட்டோ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    சமூக நலன், மகளிர் உரிமைத்துறை சார்பில் 100 மகளிருக்கு பிங்க் ஆட்டோக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கினார்.

    இத்திட்டத்தின் மூலம் சென்னையில் பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதுடன், பெண்கள் சுய தொழிலில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்தவும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இத்திட்டம் வழிவகை செய்கிறது. 

    • சமூகத்தில் சரி பாதி இருக்கின்ற மகளிர் அனைவருக்கும் என் இனிய உலக மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • மகளிர் ஏற்றத்துக்கு என்றும் அயராது உழைத்திடுவோம். மகளிர் உரிமைகளை நிலைநாட்டிடுவோம்.

    சென்னை:

    சர்வதேச மகளிர் தினத்தையொட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சமூகத்தில் சரி பாதி இருக்கின்ற மகளிர் அனைவருக்கும் என் இனிய உலக மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேம்பட்ட சமூகத்தின் வளர்ச்சி பெண் விடுதலையில் இருந்தே தொடங்குகிறது.

    கல்வி - பண்பாடு - கலாச்சாரம் - பொருளாதாரம் என பல்வேறு தளங்களில் மகளிரின் தற்சார்பையும் - சுதந்திரத்தையும் உறுதி செய்வதே திராவிட இயக்கத்தின் லட்சியம்.

    அதனை, பெரியார் - அண்ணா - கலைஞர் அவர்கள் வழியில், மகளிர் விடியல் பயணம் - புதுமைப்பெண் - கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் போன்ற மகளிர் நல திட்டங்கள் மூலம் நம் முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றி வருகிறார்கள்.

    மகளிர் ஏற்றத்துக்கு என்றும் அயராது உழைத்திடுவோம். மகளிர் உரிமைகளை நிலைநாட்டிடுவோம் என்று கூறியுள்ளார். 



    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாண்டியராஜன் கூறுவது போல் நான் குறுநில மன்னன்தான்.
    • எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு சென்ற மாஃபா பாண்டியராஜன் அவரை சந்தித்து பேசி உள்ளார்.

    விருதுநகரில் கடந்த 5-ந்தேதி இரவு அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு கட்சி நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வெள்ளி வாள் வழங்கினர். பலரும் பொன்னாடை அணிவிக்க வந்தனர்.

    இதே போல் விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்த கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் நந்தகுமாரும் பொன்னாடை அணிவிக்க வந்துள்ளார். வரிசையில் வராமல் முந்திக்கொண்டு அவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை ராஜேந்திரபாலாஜி கண்டித்ததாகவும், பின்னர் அவரை கன்னத்தில் அறைந்ததாகவும் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் அவரிடம் எதற்காக இப்படி முந்தி கொண்டு வருகிறாய்? என சத்தம் போட்டதாகவும் கூறப்படுகிறது.

    கூட்டத்தில் பேசிய கே.டி.ராஜேந்திர பாலாஜி,

    பாண்டியராஜன் கூறுவது போல் நான் குறுநில மன்னன்தான். வெவ்வேறு கட்சியில் இருந்து வந்தவர் பாண்டியராஜன். நான் தெய்வமாக நினைக்கும் ஜெயலலிதா குறித்து பாண்டியராஜன் அவதூறாக பேசிய வீடியோ என்னிடம் உள்ளது என்று மிரட்டும் தொனியில் பேசினார்.

    இந்த சம்பவம் கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று இரவு சந்தித்தார்.

    சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு சென்ற மாஃபா. பாண்டியராஜன் அவரை சந்தித்து பேசி உள்ளார்.

    மாஃபா பாண்டியராஜனை, ராஜேந்திரபாலாஜி விமர்சித்த நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பெண் ஒருவர் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த பெருமைக்கு உரியவர் ஜெயலலிதா.
    • பெண்களுக்காக பல திட்டங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. கொண்டாட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கேக் வெட்டினார். இதனை தொடர்ந்து மகளிருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இதன்பின்னர் ஜெயலலிதா ஆட்சியில் பெண்களுக்காக கொண்டுவரப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    * பெண் ஒருவர் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த பெருமைக்கு உரியவர் ஜெயலலிதா.

    * பெண்களுக்காக பல திட்டங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா.

    * பெண் சிசு கொலையை தடுக்க தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டுவந்தவர் ஜெயலலிதா.

    * அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், தாலிக்கு தங்கம், மகளிருக்கு மானிய விலை ஸ்கூட்டர் திட்டம் கொண்டு வந்தவர் ஜெயலலிதா.

    * அ.தி.மு.க. அரசு பெண்களை பாதுகாத்தது. தி.மு.க. ஆட்சியில் சிறுமி முதல் முதியோர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லை என்று விமர்சித்தார். 

    • மகளிர் நாள் நூற்றாண்டுகளைக் கடந்த வரலாறு கொண்டதாகும்.
    • வீடுகள் தொடங்கி அலுவலகம் வரையிலும், ஆட்சி மன்றத்திலும் பெண்கள் அவர்களின் உரிமைகளுக்காக போராடும் நிலை இன்றும் தொடர்ந்து வருகிறது.

    சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    அனைவரின் உயர்வுக்கும் உறுதுணையாக இருக்கும் மகளிரை பெருமைப்படுத்தும் வகையில் உலக மகளிர் நாள் மார்ச் 8ஆம் தேதியான இன்று கொண்டாடப்படும் நிலையில், அனைத்து மகளிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் உளமார்ந்த மகளிர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மகளிர் நாள் நூற்றாண்டுகளைக் கடந்த வரலாறு கொண்டதாகும். 1789 ஆம் ஆண்டில் பிரெஞ்சுப் புரட்சியின்போது சமத்துவம், சுதந்திரத்துவம், வாக்குரிமை ஆகிய மூன்றையும் வலியுறுத்தி பாரிஸ் நகரில் பெண்கள் போராடத் தொடங்கியது தான் மகளிர் நாள் கொண்டாடப்படுவதற்கான தொடக்கம் ஆகும். அதன் பின் உலகம் முழுவதும் உள்ள மகளிர் தங்களின் கோரிக்கைக்காக குரல் கொடுத்த நிலையில் 1911 ஆம் ஆண்டில் தான் சர்வதேச மகளிர் நாளை ஐ.நா. அமைப்பு முறைப்படி அறிவித்தது.

    21ஆம் நூற்றாண்டு பிறந்து கால் நூற்றாண்டாகி விட்ட போதிலும் இன்னும் பெண்களுக்கு முழுமையான விடுதலையும், உரிமைகளும் கிடைக்கவில்லை. வீடுகள் தொடங்கி அலுவலகம் வரையிலும், ஆட்சி மன்றத்திலும் பெண்கள் அவர்களின் உரிமைகளுக்காக போராடும் நிலை இன்றும் தொடர்ந்து வருகிறது. சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றங்களிலும் மகளிருக்கு பிரதிநிதித்துவம் அளிக்க சட்டம் இயற்றப்பட்டாலும், அதிகாரம் இன்னும் எட்டாக்கனியாகத் தான் இருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரம் வழங்கப்பட்டாலும் கூட, அதை பயன்படுத்தும் உரிமை குடும்பத்தினரிடம் தான் இருக்கிறதே தவிர, பெண்களின் கைகளுக்கு கிடைக்கவில்லை. இப்படியாக உரிமை, அதிகாரம், விடுதலை ஆகியவையும், பெண்களும் தண்டவாளங்களைப் போல இணையாமல் இணையாகவே பயணிக்க வேண்டியுள்ளது.

    ஆணுக்கு இணையாக பெண்கள் முன்னேற வேண்டும்; சாதனைகளை படைக்க வேண்டும் என்பன தான் நமது உயர்ந்த நோக்கங்கள். அந்த நோக்கங்கள் எட்டப்பட வேண்டும் என்றால் அவர்களுக்கு உரிமையும், விடுதலையும் வழங்கப்பட வேண்டும். பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதை மகளிர் தினத்தில் மட்டும் பயன்படுத்தும் முழக்கமாக வைத்துக் கொள்ளாமல், உண்மையாகவே மகளிருக்கு முழுமையான விடுதலையையும், உரிமையையும் வென்றெடுத்துக் கொடுக்க இந்த நாளில் உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளார்.

    • உலகிலேயே மகளிருக்கு மிக அதிக மரியாதை வழங்கும் சமுதாயம் தமிழ்ச் சமுதாயம்.
    • கல்வி, வேலைவாய்ப்புகளில் பெண்கள் முன்னேறியிருக்கிறார்கள்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    ஆக்கும் சக்தியாகவும், காக்கும் சக்தியாகவும் திகழும் மகளிரைப் போற்றும் உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், உலகெங்கும் வாழும் மகளிருக்கு இனிய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    உலகம் எங்குமே பெண்கள் பலவீனமானவர்கள் என்ற பொய்யான நம்பிக்கை நிலவி வருகிறது. ஆண்களைவிட பெண்களுக்குத் தான் போர்க்குணம் அதிகம் ஆகும். ஆண்கள் வென்று விட்டதாக பெருமிதப்பட்டுக் கொண்டாலும், அவர்களின் வெற்றிக்கு பின்னணியில் இருப்பது பெண்கள் தான். சங்க காலத்திலிருந்து நிகழ்காலம் வரை இதற்கு ஏராளமான நாயகியரை உதாரணமாகக் கூற முடியும்.

    உலகிலேயே மகளிருக்கு மிக அதிக மரியாதை வழங்கும் சமுதாயம் தமிழ்ச் சமுதாயம். பெண்களை கடவுளுக்கும் மேலாக வைத்து வழிபடும் சமுதாயமும் தமிழ்ச் சமுதாயம் தான். மனித நாகரிகங்கள் வளரக் காரணமாகவும், வாழ்வாதாரம் மற்றும் பாசன ஆதாரமாகவும் திகழும் நதிகளுக்குக் கூட பெண்களின் பெயரை சூட்டியதிலிருந்தே மகளிரை தமிழ் சமுதாயம் எந்த அளவுக்கு மதித்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். நடைமுறை வாழ்விலும் அதே மரியாதை வழங்கப்பட வேண்டும்.

    ஆனால், அந்த மரியாதை பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை என்பது மட்டுமின்றி, அவர்கள் அச்சமின்றி சுதந்திரமாக நடமாடக்கூட முடியாத நிலை தான் தமிழ்நாட்டில் நிலவுகிறது. பாடத்தையும், நற்பண்புகளையும் கற்றுத்தர வேண்டிய பள்ளிக்கூடங்கள் கூட இன்று பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பானவையாக இல்லை. பொது இடங்களும் பெண்களுக்கு ஆபத்தான இடமாக மாறியுள்ளன. 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2024ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 52 விழுக்காடு அதிகரித்திருக்கிறது என்பதிலிருந்தே பெண்களுக்கு தமிழ்நாடு எந்த அளவுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக மாறியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். இது உண்மையாகவே கவலையளிக்கும் செய்தியாகும்.

    கல்வி, வேலைவாய்ப்புகளில் பெண்கள் முன்னேறியிருக்கிறார்கள். அதற்கு அவர்களின் அறிவும், திறனும் தான் காரணம். அவர்களுக்கு உரிமையும், அதிகாரமும் எட்டாக்கனியாக உள்ளன. அவற்றை போராடிப் பெறும் திறன் மகளிருக்கு உண்டு. பெண்கள் அச்சமின்றி, நடமாடும் சூழலை அரசு ஏற்படுத்திக் கொடுத்தாலே பெண்கள் தங்களுக்குத் தேவையான அனைத்தையும் வென்றெடுத்துக் கொள்வர். பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் என்றைக்கு ஏற்படுகிறதோ, அன்று தான் உண்மையான மகளிர் நாளாக அமையும். அத்தகைய நிலையை ஏற்படுத்துவதற்காக உழைக்க இந்த நாளில் அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். 



    • தமிழகத் தாய்மார்கள், சகோதர சகோதரிகள் அனைவருக்கும், இனிய மகளிர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்
    • சமூகத்தைப் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக மாற்ற இந்த நாளில் உறுதி ஏற்போம்.

    சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    சர்வதேச மகளிர் தினமான இன்று, தமிழகத் தாய்மார்கள், சகோதர சகோதரிகள் அனைவருக்கும், இனிய மகளிர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பெண்களின் சுதந்திரத்தையும், சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் போன்ற துறைகளில் மகளிரின் பங்களிப்புகளையும் அங்கீகரித்துப் போற்றவும், பெண்களுக்கு எதிரான ஏற்றத்தாழ்வு மற்றும் பாகுபாட்டை ஒழிக்கவும், சமூகத்தைப் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக மாற்றவும், இந்த நாளில் உறுதி ஏற்போம் என்று தெரிவித்துள்ளார்.

    • அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் அரங்கில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தி.மு.க. எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க இக்கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.

    நாளை காலை 10.30 மணி அளவில் அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் அரங்கில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வருகிற திங்கட்கிழமை பாராளுமன்றம் கூட உள்ள நிலையில், தி.மு.க. எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க இக்கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. 

    • இன்றைக்கு தமிழ்நாடு பெண்களுக்கு துளி கூட பாதுகாப்பு இல்லாத மாநிலமாக மாறியிருப்பது மிகுந்த கவலைக்குரியது.
    • பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கத் திராணியற்ற ஒரு ஆட்சியாக இன்றைய ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி இருப்பதும் வெட்கக்கேடானது.

    சென்னை:

    சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    அன்பை அள்ளிக் கொடுப்பதில் அன்னையாக, அறிவை அருளும் ஆசிரியையாக, பாசத்தோடு அரவணைக்கும் சகோதரியாக, மனதோடு மனம் கலந்த மனைவியாக, மகளாக, நட்பைக் காட்டும் தோழியாக, தர்மத்தைச் சொல்லும் பாட்டியாக என, வாழ்நாள் முழுவதும் நம்மோடு பயணிக்கின்றவர்கள்தான் பெண்கள்.

    தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் மகளிர் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான சர்வதேச மகளிர் தினம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அதே சமயம், இன்றைக்கு தமிழ்நாடு பெண்களுக்கு துளி கூட பாதுகாப்பு இல்லாத மாநிலமாக மாறியிருப்பது மிகுந்த கவலைக்குரியது. சிறுமி முதல் மூதாட்டி வரை, எந்தவொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கத் திராணியற்ற ஒரு ஆட்சியாக இன்றைய ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி இருப்பதும் வெட்கக்கேடானது.

    அன்புச் சகோதரிகளே- உங்களுக்காக, உங்கள் பாதுகாப்புக்காக என்றைக்கும் அ.தி.மு.க. போராடும்.

    2026ல் மீண்டும் அஇஅதிமுக ஆட்சி அமைந்ததும், இன்று நீங்கள் அச்சத்துடன் இருக்கின்ற நிலை மாறி, மிகவும் பாதுகாப்புடன், சுதந்திரமாக செயல்பட்டு, பல சாதனைகளைப் புரிகின்ற காலமாக நம் ஆட்சிக்காலம் நிச்சயம் இருக்கும்! என்று கூறியுள்ளார்.



    • பாதுகாப்பாக இருந்தால் தானே சந்தோஷத்தை உணர முடியும்.
    • 2026-ல் நாம எல்லாம் சேர்ந்து மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய இவர்களை மாற்றுவோம்.

    சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

    எல்லோருக்கும் வணக்கம்.

    இன்றைக்கு மகளிர் தினம். தமிழ்நாடு முழுவதும் உள்ள என்னுடைய அம்மா, அக்கா, தங்கை, தோழி என்று உங்கள் அத்தனை பேருக்கும் இந்த தினத்தில் வாழ்த்து சொல்லாமல் இருக்க முடியாது. எங்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.

    சந்தோஷம் தானே. பாதுகாப்பாக இருந்தால் தானே சந்தோஷத்தை உணர முடியும். அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாதபோது insecurity-ஆ இருக்கும்போது எந்த சந்தோஷமும் இருக்காது தானே. அப்படி என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரியுது. என்ன செய்ய...

    நீங்கள், நாம எல்லோரும் சேர்ந்து தான் இந்த தி.மு.க. அரசை தேர்ந்தெடுத்தோம். ஆனா அவங்க இப்படி ஏமாத்துவாங்கன்னு இப்ப தான் தானே தெரியுது. எல்லாமே இங்கே மாறக்கூடியது தானே. மாற்றத்திற்கு உரியது தானே

    2026-ல் நாம எல்லாம் சேர்ந்து மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய இவர்களை மாற்றுவோம். அதற்கு மகளிர் தினமான இன்று நாம் எல்லோரும் சேர்ந்து உறுதி ஏற்போம்.

    ஒண்ணு மட்டும் சொல்கிறேன். எல்லா சூழ்நிலையிலும் உங்கள் மகனா, அண்ணா, தம்பியா, தோழனா உங்களோடு நான் நிற்பேன். நன்றி, வணக்கம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த மாதம் (பிப்ரவரி) முதல் ஏற்ற, இறக்கத்துடன் இருக்கிறது. கடந்த 4-ந்தேதியில் இருந்து விலை அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினமும் அதேபோல் விலை உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 65-க்கும், ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 520-க்கும் விற்பனை ஆனது. இதனை தொடர்ந்து நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.64,240-க்கு விற்கப்படுகிறது.

    இந்த நிலையில், வார இறுதிநாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,040-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,320-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    07-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,240

    06-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,480

    05-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,520

    04-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,080

    03-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    07-03-2025- ஒரு கிராம் ரூ.108

    06-03-2025- ஒரு கிராம் ரூ.108

    05-03-2025- ஒரு கிராம் ரூ.107

    04-03-2025- ஒரு கிராம் ரூ.107

    03-03-2025- ஒரு கிராம் ரூ.106

    ×