என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
- இந்த போட்டி சென்னையில் இரண்டு இடங்களில் திரையிடப்பட உள்ளது.
சென்னை:
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் மிக முக்கிய போட்டியான இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்ல இரு அணிகளும் கடுமையாகப் போராடும் என்பதால் இந்த ஆட்டம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியை சென்னையில் இரண்டு இடங்களில் திரையிட உள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தப் போட்டி மெரினா கடற்கரை (விவேகானந்தா மாளிகைக்கு எதிரே) மற்றும் பெசன்ட்நகர் கடற்கரை (போலீஸ் பூத் அருகில்) ஆகிய இடங்களில் திரையிடப்படுகிறது.
இந்த நிகழ்வில் பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் போட்டியைக் கண்டு ரசிக்குமாறு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஏற்கனவே, சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் தொடரில் இந்தியா, பா கிஸ்தான் போட்டி மெரினா, பெசன்ட்நகர் கடற்கரையில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
- போராட்டத்தில் ஈடுபட்ட கழக மகளிரையும் செயற்பாட்டாளர்களையும் கைது செய்திருக்கிறார்கள்.
- ஜனநாயக விரோத அணுமுகுறையில் ஈடுபடும் அரசுக்கு எமது வன்மையான கண்டனங்கள்.
தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ள த.வெ.க.வினரை விடுவிக்க வேண்டும் என்று அக்கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளரான ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆதவ் அர்ஜூனா தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடந்துவரும் அராஜக சீண்டல்கள், பாலியல் வன்முறைகள், பாதுகாப்பற்ற சூழல் போன்ற குற்றங்களைக் கண்டித்து சர்வதேச மகளிர் தினமான இன்று, தமிழகம் முழுவதும் அடையாள அறவழிப் போராட்டத்தை நடத்தினர் நமது கழக மகளிரணி தோழர்கள்.
மகளிர் பாதுகாப்பை மதிக்காத ஆட்சியாளர்கள், அரசியலமைப்பு கொடுத்த ஜனநாயக உரிமையையும் பொருட்படுத்தாமல், போராட்டத்தில் ஈடுபட்ட கழக மகளிரையும் செயற்பாட்டாளர்களையும் கைது செய்திருக்கிறார்கள்.
இதனை, எதிர்க்கட்சியினர் மற்றும் பொதுமக்களின் விமர்சனக் குரலைச் சகித்துக்கொள்ள முடியாத அரசின் எதேச்சதிகார போக்காகவே கருத வேண்டியுள்ளது.
அரசின் காவல்துறை பெண்கள் உட்பட தமது குடிமக்களைப் பாதுகாக்க உள்ளதா? அல்லது அதற்காக குரல் கொடுக்கும் பொதுமக்கள் போராட்டங்களை ஒடுக்க உள்ளதா? என்ற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை.
பிரச்சனைகளைப் பேசி யாரும் எதிர்க்குரல் எழுப்பிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் அரசு, அந்த சுறுசுறுப்பை சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் காட்டுவதில்லை.
பெண்கள் உரிமையைக் கேட்டு ஜனநாயக வழியில் போராடினால் கைது செய்வேன் என்ற அச்சுறுத்தலை நம் மகளிருக்கு இந்த மகளிர் தின பரிசாக வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு.
இத்தகைய ஜனநாயக விரோத அணுமுகுறையில் ஈடுபடும் அரசுக்கு எமது வன்மையான கண்டனங்கள். மாநிலம் முழுவதும் கைது செய்யப்பட்ட மகளிரணி தோழர்களையும் சமூக செயற்பாட்டாளர்களையும் உடனடியாக விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சென்னை கோடம்பாக்கம் ரெயில் நிலையத்திலிருந்து தாம்பரம்/செங்கல்பட்டிற்கு ரெயில்கள் இயக்கப்படும்.
- பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் சார்பில் 50 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளது.
சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர், கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், நாளை காலை 05.10 மணி முதல் மாலை 04.10 மணி வரை சென்னை கடற்கரை ரெயில் நிலையத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்த்து மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
09.03.2025 அன்று சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர், கோடம்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரெயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், காலை 05.10 மணி முதல் மாலை 04.10 மணி வரை சென்னை கடற்கரை ரெயில் நிலையத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு, சென்னை கோடம்பாக்கம் ரெயில் நிலையத்திலிருந்து தாம்பரம்/செங்கல்பட்டிற்கு ரெயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் 09.03.2025 அன்று தாம்பரத்திலிருந்து பிராட்வேக்கு 25 பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து பிராட்வேக்கு 20 பேருந்துகள் மற்றும் பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டிற்கு 5 பேருந்துகள் என 50 பேருந்துகள் கூடுதலாக மா.போ.கழகம் இயக்க உள்ளது.
மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வரையிலான உயர்மட்ட வழித்தடம் அமைக்கும் பணிகள் முடிவடைந்தன.
- வழித்தடம் 4-ன் உயர்த்தப்பட்ட மேம்பால கட்டுமானத்தை வேகமாக நிறைவு செய்யும் நடவடிக்கையை ஊக்குவிக்கிறது.
சென்னையில் 128 மெட்ரோ நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சிஎம்ஆர்எல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் கட்டம் I மற்றும் கட்டம் I நீட்டிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததை தொடந்து, மெட்ரோ ரெயில் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இரண்டாம் கட்டத்தில் 118.9 கி.மீ நீளத்திற்கு மேலும் மூன்று வழித்தடங்களில் 128 மெட்ரோ நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, பூந்தமல்லி புறவழிச்சாலை மற்றும் போரூர் சந்திப்புக்கு இடையிலான 624-வது மற்றும் இறுதி யு-கர்டரின் கட்டுமானப் பணிகள் இன்று வெற்றிகரமாக நிறைவடைந்தன, இதன் மூலம் வழித்தடம் 4-ல் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வரையிலான உயர்மட்ட வழித்தடம் அமைக்கும் பணிகள் முடிவடைந்தன.
இந்த இறுதி யு-கர்டர் குமணஞ்சாவடி நிலையத்தில் உள்ள SP-04-05 தூண்களுக்கு இடையே இன்று அதிகாலை 3:30 மணி முதல் 5:30 மணி வரை போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாதவாறு வெற்றிகரமாக நிறுவப்பட்டது.
இந்த முக்கியமான நிகழ்வு சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்திருந்ததால் மேலும் சிறப்பாக அமைந்தது. மேலும் இத்திட்டத்தின் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றிய பல்வேறு பெண் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் கவுரவிக்கப்பட்டனர் மற்றும் அவர்களின் அர்ப்பணிப்புக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்த சாதனையின் மூலம், தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் இதுவரை மொத்தம் 3,202 முன்கூட்டிய தயாரிக்கப்பட்ட கான்கிரீட் உத்திரங்கள் (precast concrete elements) மற்றும் 2 திறந்த வலை உத்திரங்கள் (Open Web Girders), உட்பட 164 இரும்பு விட்டங்கள் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளன.
இந்த மைல்கல், பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை தடையற்ற இணைப்பை மேம்படுத்தும் வகையில், வழித்தடம் 4-ன் உயர்த்தப்பட்ட மேம்பால கட்டுமானத்தை வேகமாக நிறைவு செய்யும் நடவடிக்கையை ஊக்குவிக்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
- பணி ஆணை வழங்கப்பட்ட மருத்துவர்களை எங்கு நியமனம் செய்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.
உண்மையில் மருத்துவர்கள் பணி நியமனம் நடைபெற்றதா அல்லது வழக்கம்போல கண்துடைப்பு அறிவிப்புகள் வெளியிட்டு நாடகமாடிக் கொண்டிருக்கிறதா தி.மு.க. அரசு? என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட, சிறுபாடு கிராமத்தைச் சேர்ந்த ஷாகிரா என்ற பெண், மருத்துவர்கள் இல்லாத நிலையில், முறையான சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்திருக்கிறார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. அரசு ஆரம்ப சுகாதார மையங்களில், 1,467 மருத்துவர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது குறித்து, கடந்த 07.01.2025 அன்று கேள்வி எழுப்பியிருந்தோம்.
இதனை அடுத்து, தமிழகத்தில் 2,642 மருத்துவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கியதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், இன்னும் ஆரம்ப சுகாதார மையங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுவதால், பணி ஆணை வழங்கப்பட்ட மருத்துவர்களை எங்கு நியமனம் செய்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.
பொதுமக்கள் உயிர் குறித்துச் சிறிதும் அக்கறையின்றி, தமிழக அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் பொறுப்பின்றிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். உண்மையில் மருத்துவர்கள் பணி நியமனம் நடைபெற்றதா அல்லது வழக்கம்போல கண்துடைப்பு அறிவிப்புகள் வெளியிட்டு நாடகமாடிக் கொண்டிருக்கிறதா தி.மு.க. அரசு?
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
- மாவட்ட வாரியாக புதிய மின் மாற்றிகளை கையிருப்பில் வைக்க மின்வாரிய தலைவர் உத்தரவிடப்பட்டுள்ளது.
- பொது மக்களிடம் மின்தடை குறித்த புகார் வந்தால் உடனடியாக சீர் செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், அதீத வெப்பத்தால் மின்தடை ஏற்படுவதை தடுக்க மின்சார வாரியத்துறை அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மின்மாற்றிகள் பழுது, மின்மாற்றிகளில் தீப்பிடிக்கும் போன்ற சூழலை தடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக புதிய மின் மாற்றிகளை கையிருப்பில் வைக்க மின்வாரிய தலைவர் உத்தரவிடப்பட்டுள்ளது.
பொது மக்களிடம் மின்தடை குறித்த புகார் வந்தால் உடனடியாக சீர் செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தகுந்த பணியாளர்களை தற்காலிகமாக நியமித்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோடை காலத்தில் அதிகபட்ச மின் நுகர்வு நாள் ஒன்றுக்கு 22,000 மெகாவாட் வரை பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
- 2026-க்குப் பிறகு மக்களை தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், இது தொகுதி மறுசீரமைப்புக்கு வழிவகுக்கும்.
- மக்கள் தொகை அடிப்படையில் மறுபகிர்வு செய்யப்பட்டால், நம்முடைய தென்மாநிலங்களின் தற்போதைய 129 இடங்கள் 103 ஆக குறையும்.
தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் மக்களவை தொகுதி இடங்கள் குறையும் என அச்சம் நிலவுகிறது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தினார். மறுசீரமைப்பு குறித்த குழப்பம் நீடித்து வருகிறது. மத்திய அரசு இது தொடர்பாக தெளிவான விளக்கம் அளிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் இது தொடர்பாக மத்திய முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறியதாவது:-
2026-க்குப் பிறகு மக்களை தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், இது தொகுதி மறுசீரமைப்புக்கு வழிவகுக்கும். எங்களுடைய கணக்கிட்டின்படி, மாநிலங்களின் தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் மறுபகிர்வு செய்யப்பட்டால், நம்முடைய தென்மாநிலங்களின் தற்போதைய 129 இடங்கள் 103 ஆக குறையும். தென்மாநிலங்கள் 26 இடங்களை இழக்கும். மக்கள் தொகை அதிகம் கொண்ட உத்தர பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகியவை அதிக இடங்களை பெறும்.
129 இடங்களுடன் நம்முடைய குரல்கள் பாராளுமன்றத்தில் கேட்கப்படவில்லை. 103 இடங்களுடன் நிலைமை மோசமாக இருக்கும்.
தற்போதைய மக்கள்தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பை நாங்கள் முன்மொழிகிறோம். அரசியலமைப்பின்படி, ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகும் இடங்கள் மறுவரை செய்யப்படு வேண்டும்.
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
- பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தவெக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்.
- தவெக சார்பில் தொடங்கப்பட்ட கையெழுத்து இயக்கம் தொடர்பாக பேனர் வைக்கப்பட்டிருந்தது.
சர்வதேச அளவில் இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது, " 2026-ல் நாம எல்லாம் சேர்ந்து மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய திமுக ஆட்சியை மாற்றுவோம். அதற்கு மகளிர் தினமான இன்று நாம் எல்லோரும் சேர்ந்து உறுதி ஏற்போம்" என்றார்.
மேலும், பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கு, அக்கட்சியின் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது ஆங்காங்கே தவெக சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.
அப்போது, வேலூர் கிழக்கு மாவட்ட த.வெ.க சார்பாக இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியால் தொடங்கப்பட்ட கையெழுத்து இயக்கம் தொடர்பாக பேனர் வைக்கப்பட்டிருந்தது.
அதில், "WE STAND FOR WOMEN HARRASEMENT" என்று அச்சிடப்பட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
WE STAND AGAINST WOMEN HARASSMENT என்பதே பெண்கள் துன்புறுத்தலுக்கு எதிராக நாங்கள் நிற்கிறோம் என்பதற்கான பொருள்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- தமிழ்நாடு முழுவதும் தவெக சார்பில் அறவழியில் அடையாளப் போராட்டத்தை நடத்தப்பட்டது.
- தமிழக வெற்றிக் கழகத் தோழர்களையும் மகளிரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுள்ள தவெக தோழர்கள், மகளிரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அக்கட்சி தலைவர் விஜய் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து தவெக தலைவர் விஜய் வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாமலும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியும் வரும் நிலையில், அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது.
பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, உலக மகளிர் தினமான இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கழக மகளிர் அணியினர் மற்றும் தோழர்கள் அறவழியில் அடையாளப் போராட்டத்தை நடத்தினர்.
தங்களுக்கான உரிமை கிடைக்காத பட்சத்தில் அதை வலியுறுத்திக் கேட்டுப் பெற வேண்டிய நிலையில் தமிழ்நாட்டுப் பெண்கள் இருப்பதால்தான் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இந்த அறவழி அடையாளப் போராட்டமானது நடைபெற்றது.
ஆனால் தமிழக மக்கள் தங்களின் தேவைகளுக்காகக் கூட போராட்டத்தை நடத்தக் கூடாது என்ற அராஜகப் போக்குடன் தமிழக அரசு, கழக மகளிர் மற்றும் தோழர்களைக் கைது செய்திருக்கிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத் தோழர்களையும் மகளிரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழ்நாட்டு அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மகளிர் மத்தியில் முதல்வருக்கு உள்ள நற்பெயரை கண்டு பொறுக்க முடியாமல் பேசுகிறார்கள்.
- சுய உதவிக்குழுக்கள் மூலம் மகளிரை தொழில் முனைவோர்களாக்கியுள்ளது திமுக அரசு.
பெண்கள் பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சிகள் அனைவரும் பச்சை பொய் கூறி வருகிறார்கள் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் கீதா ஜீவன் மேலும் கூறியிருப்பதாவது:-
பெண்களின் வாழ்வாதாரம் உயர எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தது திமுக அரசு. மகளிர் உதவித் தொகை திட்டம் தற்போது பல்வேறு மாநிலங்களில் கொண்டு வரப்பட்டுள்ளது.
சுய உதவிக்குழுக்கள் மூலம் மகளிரை தொழில் முனைவோர்களாக்கியுள்ளது திமுக அரசு. மகளிர் மத்தியில் முதல்வருக்கு உள்ள நற்பெயரை கண்டு பொறுக்க முடியாமல் பேசுகிறார்கள்.
தமிழகத்தில் மகளிர் காவல் நிலையம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெண்கள் பாதிக்கப்படும்போது தைரியமாக புகார் அளிக்கிறார்கள். உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு வருகிற மே 4-ந்தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
- விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள என்.டி.ஏ. வாய்ப்பு வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
அதேபோன்று ராணுவ கல்லூரிகளில் பி.எஸ்.சி., நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
அதன்படி 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு வருகிற மே 4-ந்தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெறும் அந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 7-ந்தேதி தொடங்கியது. இதற்கான காலஅவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்றது. நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள என்.டி.ஏ. வாய்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி மாணவர்கள் https://neet.nta.nic.in/ என்று வலைதளம் வழியாக நாளை (9-ந்தேதி) முதல் 11-ந்தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம். கூடுதல் விவரங்களை https://nta.ac.in/ என்ற இணையதளத்தின் மூலமாகவோ, 011 40759000 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அறிந்து கொள்ளலாம்.
இல்லையெனில் மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். தேர்வுக்கான ஹால் டிக்கெட் மே 1-ந்தேதி வெளியிடப்படும். அதன்படி முடிவுகள் ஜூன் 14-ந்தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அனைவருக்கும் உலக மகளிர் தின நல்வாழ்த்துகள்.
- ஒரு பையன் படிக்கிறான் என்றால் அவன் குடும்பம் நன்றாக இருக்கும்.
சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதைமுன்னிட்டு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், "பெண் பிள்ளை படித்தால் சமூகமே முன்னேற்ற பாதைக்கு செல்லும்" என்று கூறினார்.
இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஒரு பையன் படிக்கிறான் என்றால் அவன் குடும்பம் நன்றாக இருக்கும். ஆனால் ஒரு பெண் பிள்ளை படிக்கிறாள் என்றால் ஒட்டுமொத்த சமூகமே முன்னேற்றப் பாதைக்குச் செல்லும்.
அனைவருக்கும் உலக மகளிர் தின நல்வாழ்த்துகள்...
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






