என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பெயரை நீக்கினால் பா.ம.க. தொடர் போராட்டங்களை நடத்தும்.
- காய்கறி சந்தை 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருத்தணியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் காய்கறி சந்தைக்கு பெருந்தலைவர் காமராசரின் பெயரை நீக்கி விட்டு, கலைஞர் நூற்றாண்டு காய்கறி அங்காடி என்று பெயர் சூட்ட தி.மு.க. அரசு முடிவு செய்திருக்கிறது.
தமிழ்நாட்டிற்கு தேசிய அளவில் அடையாளமும், பெருமையும் தேடித்தந்த காமராசரின் பெயரை இருட்டடிப்பு செய்ய தி.மு.க. அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது.
திருத்தணி சந்தைக்கு காமராசரின் பெயரே நீடிக்க வேண்டும். அவர் பெயரை நீக்கி விட்டு கலைஞர் பெயரைச் சூட்டும் முயற்சியை பா.ம.க. அனுமதிக்காது. தமிழக அரசு அதன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் அதைக் கண்டித்து தொடர் போராட்டங்களை பா.ம.க. நடத்தும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- ஆர்ப்பாட்டம் நடத்த முறையாக போலீஸ் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- போராட்டத்தில் விஜய் பங்கேற்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணவும், இலங்கை கடற்படையினரை கண்டித்தும் த.வெ.க. சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் மீனவர்களை திரட்டி போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆர்ப்பாட்டம் நடத்த முறையாக போலீஸ் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், போராட்டத்தில் விஜய் பங்கேற்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
மிகப்பெரிய அளவில் மீனவர்களை திரட்டி கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தை அடுத்த வாரத்தில் நடத்த த.வெ.க. திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- சென்சார் தொழில்நுட்பத்துடன் இந்த ஹெல்மட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இந்த கண்டுபிடிப்பு சாலை விபத்துக்களை குறைக்க உதவும்.
கோவை:
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் தினந்தோறும் சாலை விபத்துகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இதில் மது அருந்திவிட்டு செல்பவர்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் அப்பாவி பொதுமக்களும் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.
இதன்காரணமாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டுபிடித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கிறார்கள். மது அருந்தியவர்களை கண்டுபிடிக்க போலீசார் சிறிய எந்திரம் ஒன்றை பயன்படுத்தி வருகிறார்கள்.
சம்பந்தப்பட்டவர்கள் வாயில் வைத்து அதனை ஊதச் சொல்வார்கள். மது அருந்தி இருந்தால் அந்த எந்திரம் காட்டிக் கொடுத்து விடும். குடிமகன்களிடம் இந்த எந்திரத்தை ஊதச் சொல்லி ஆய்வு செய்ய போலீசார் பாடாதபாடு பட்டு வருகிறார்கள்.
இந்த பணியை எளிதாக்கும் வகையில் கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் இணைந்து நவீன ஹெல்மெட் ஒன்றை உருவாக்கி அசத்தி உள்ளனர். இது மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டுபிடிக்கும் அதிநவீன எந்திரம் ஆகும்.
சென்சார் தொழில்நுட்பத்துடன் இந்த ஹெல்மெட் மற்றும் மோட்டார்சைக்கிள் இணைக்கப்பட்டு இது பயன்படுத்தப்படுகிறது. மது அருந்தி இருந்தால் வாகனத்தை இயக்க முடியாதபடி இந்த ஹெல்மெட் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நவீன ஹெல்மெட் குறித்து மாணவிகள் கூறுகையில், "மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் நோக்கில் இந்த ஹெல்மெட்டை வடிவமைத்துள்ளோம். இந்த ஹெல்மெட், மது அருந்தியிருந்தால் வாகனத்தை இயக்க முடியாதபடி, சென்சார் தொழில்நுட்பத்துடன் இயங்கும். இந்த கண்டுபிடிப்பு சாலை விபத்துக்களை குறைக்க உதவும் என தெரிவித்தனர்.
இந்த ஹெல்மெட்டை கல்லூரியில் நடந்த தொழில்நுட்ப ஹேக்கத்தான் போட்டியில் மாணவிகள் காட்சிப்படுத்தி விளக்கினர். ஹெல்மெட்டை கண்டுபிடித்த மாணவிகளை கல்லூரி நிர்வாகத்தினரும், போலீ சாரும் பாராட்டி உள்ளனர்.
- நாம் நடத்திய ஒரே ஒரு அனைத்துக்கட்சி கூட்டம் இந்தியா முழுக்க நம்மை நோக்கி கவனத்தை திருப்பி இருக்கிறது.
- தொகுதி மறுசீரமைப்பு, நிதி பகிர்வு, மும்மொழி கொள்கை, இந்தி திணிப்பு என பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* டெல்லியில் தமிழக எம்.பி.க்களின் கூட்டத்தை நடத்தி அவர்களது கருத்துகளை கேட்டு செயலாற்றிட வேண்டும்.
* ஒவ்வொரு மாநிலத்திற்கும் தலா நம் சார்பில் ஒரு அமைச்சர், ஒரு எம்.பி. அடங்கிய குழு சென்று விளக்க வேண்டும்.
* தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனையில் நமக்கான உரிமையை பெற இது ஒரு தொடக்கம் தான்.
* நாம் நடத்திய ஒரே ஒரு அனைத்துக்கட்சி கூட்டம் இந்தியா முழுக்க நம்மை நோக்கி கவனத்தை திருப்பி இருக்கிறது.
* ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 29 கட்சிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளேன்.
* நம் கோரிக்கைகள் முழுமையாக வெற்றி அடையும் வரை இந்த போராட்டம், முன்னெடுப்பு தொடர வேண்டும்.
* தொகுதி மறுசீரமைப்பு, நிதி பகிர்வு, மும்மொழி கொள்கை, இந்தி திணிப்பு என பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது.
* தேசிய அளவிலான கவனத்தை ஈர்க்க அனைத்து எம்.பி.க்களும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும் என்று கூறினார்.
- இந்தி உட்பட எந்த மொழி குறித்தும் வீண் விமர்சனங்கள் வேண்டாம்.
- தொகுதி மறுவரையறை என்பது தமிழ்நாட்டின் பிரச்சனை, பல மாநிலங்களின் பிரச்சனை.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* மும்மொழிக் கொள்கை பிரச்சனையில், நம் வாதங்களை மிக எச்சரிக்கையோடு வைக்க வேண்டும்.
* இந்தி திணிப்பை எதிர்க்கிறோமே தவிர, இந்தி மொழியையோ அந்த மக்களை இல்லை.
* இந்தி உட்பட எந்த மொழி குறித்தும் வீண் விமர்சனங்கள் வேண்டாம்.
* இந்தி படிக்கலன்னா நிதி தர மாட்டோம்னு சொல்றது சர்வாதிகாரம் இல்லையா? என்பதுதான் நம் கேள்வியாக இருக்க வேண்டும்.
* பாராளுமன்ற கூட்டம் நடக்கும்போது அனைத்து தி.மு.க. எம்.பி.க்களும் தவறாமல் அவையில் இருக்க வேண்டும்.
* தொகுதி மறுவரையறை என்பது தனிப்பட்ட ஒரு கட்சியின் பிரச்சனை இல்லை. தமிழ்நாட்டின் பிரச்சனை.
* தொகுதி மறுவரையறை என்பது தமிழ்நாட்டின் பிரச்சனை, பல மாநிலங்களின் பிரச்சனை.
* டெல்லியில் தமிழ்நாட்டு எம்.பி.க்களின் கூட்டத்தை நடத்தி அவர்களின் கருத்துகளை கேட்டு செயலாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
- எம்.பி.க்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
- தொகுதி மறுசீரமைப்பினால் தொகுதிகளை இழக்கும் மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து களம் காண்போம்.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நாளை தொடங்க இருக்கிறது.
இந்த கூட்டத்தொடரில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதற்காக தங்கள் கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசித்து வருகின்றன.
பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. கூட்டத்தில் எம்.பி.க்கள் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடையே ஆலோசனை நடைபெற்றது.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
* மக்களவை தொகுதிகளை பாதுகாக்கும் முதல்வரின் முயற்சியில் துணை நின்று பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்.
* தொகுதி மறுசீரமைப்பினால் தொகுதிகளை இழக்கும் மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து களம் காண்போம்.
* தொகுதி மறுசீரமைப்பில் மாநில உரிமைகளை நிலைநாட்டும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைத்து செயல்படுவோம் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- 21 பகுதிகளில் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.
- வனத்துறை பணியாளர்களுடன், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்த பறவைகள் ஆர்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
ஈரோடு:
நீர் நிலைகளில் வாழும் பறவைகளின் எண்ணிக்கை மற்றும் பரவல் குறித்த தரவுகளை சேகரித்து அவற்றை பாதுகாக்கும் முயற்சிகளை முன்னெ டுக்கும் விதமாக ஈர நில பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான ஈரநில பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று நடைபெற்றது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஈரோடு வனக்கோட்ட பகுதிகளில் இன்று காலை 6.30 மணி முதல் முற்பகல் 11 மணி வரை நீர் நிலைகளில் உள்ள பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
இதில், ஈரோடு வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வெள்ளோடு பறவைகள் சரணாலயம், கொடுமுடி, அவல்பூந்துறை, கனகபுரம், வரட்டுப்பள்ளம், அந்தியூர் பெரிய ஏரி, தண்ணீர் பள்ளம் ஏரி, ஓடாந்துறை ஏரி, ஜர்தல் ஏரி, தாமரை க்கரை குளம், மணியாச்சி பள்ளம் உள்ளிட்ட 21 பகுதிகளில் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.
இதில், வனத்துறை பணியாளர்களுடன், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்த பறவைகள் ஆர்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
- 6 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
- தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை.
திருப்பூர்:
திருப்பூர் மணியக்காரம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் முகமது பயாஸ். இவர் அங்கு பனியன் கழிவுத்துணிகள் குடோன் நடத்தி வருகிறார்.
இந்த குடோனில் நள்ளிரவு 1:30 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பனியன் துணிகள் என்பதால் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஏராளமான பனியன் கழிவுத்துணிகள் தீப்பற்றி எரிந்ததால் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து மேலும் 5-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. 6 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
இருப்பினும் கரும்புகை வெளியேறி வருவதால் அதனை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பனியன் கழிவுத்துணிகள்-பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அ.தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
- கட்சியில் ஆங்காங்கே இருக்கும் பூசல்களை களைய வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.
தமிழகத்திற்கு வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அரசியல் கட்சிகள் இப்போதே தொடங்கி விட்டன.
இந்நிலையில் அ.தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அ.தி.மு.க. அமைப்பு ரீதியாக உள்ள 82 மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனையின்போது, சட்டசபை தேர்தல் பணிகளை தற்போதே தொடங்க அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு அவர் வலியுறுத்தினார். மேலும் பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
கட்சியில் ஆங்காங்கே இருக்கும் பூசல்களை களைய வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.
- கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- இன்று மாலை சிகப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்கள் மற்றும் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வருகிறது.
7-ம்திருவிழாவான இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5 மணிக்கு உருகு சட்ட சேவையும், காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் ஏற்றத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து பிள்ளையன் கட்டளை மண்டபம் வந்து சேர்ந்தார்.
அங்கு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனைக்கு பிறகு மாலை 4.20 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் சிவன் அம்சமாக சிகப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.
8-ம்திருவிழாவான நாளை(திங்கட்கிழமை) மதியம் 12 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம்திருவிழா தேரோட்டம் 12-ந் தேதி (புதன்கிழமை) காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் நடக்கிறது. 11-ம் திருவிழாவான 13-ந்தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.
12-ம்திருவிழாவான 14-ந்தேதி மாலையில் சுவாமி,அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நாளை தொடங்க இருக்கிறது.
- பாராளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் அரசின் கவனத்தை ஈர்த்து பேச இருக்கிறார்கள்.
சென்னை:
பாராளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ந் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1-ந் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நாளை தொடங்க இருக்கிறது.
இந்த கூட்டத்தொடரில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதற்காக தங்கள் கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசித்து வருகின்றன. அந்தவகையில், பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பாக தி.மு.க. எம்.பி.க்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவாதிக்க இருக்கிறார்.
இந்த நிலையில், பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாக கூட்டரங்கில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
பாராளுமன்ற கூட்டத்தொடரில் தி.மு.க. எம்.பி.க்கள் எந்தெந்த பிரச்சனைகளை முன்னெடுத்து பேசவேண்டும் என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்க உள்ளார்.
இந்தி திணிப்பு, தொகுதி சீரமைப்பு உள்பட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் அரசின் கவனத்தை ஈர்த்து பேச இருக்கிறார்கள்.
- நலத்திட்ட உதவிகள் 1568 பேர்களுக்கு வழங்கினார்.
- சாதிக்க துடிக்கும் பெண்கள் அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.
விழுப்புரம்:
உலக மகளிர் தின விழா உலகம் முழுவதும் மகளிர் அமைப்பு மற்றும் கட்சிகள் இயக்கங்கள் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதுபோல் தமிழகத்தில் பல்வேறு கட்சியின் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் த.வெ.க . கட்சி சார்பில் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் குஷி மோகன்ராஜ் ஏற்பாட்டின் படி விழுப்புரம் நகராட்சிகாமராஜர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக த.வெ.க. கட்சி மாநில செயலாளரும் முன்னாள்ன எம்.எல்.ஏ.வுமான புஸ்சி ஆனந்த் கலந்து கொண்டு 8 மாற்றுத்திறனாளி களுக்கு மிதிவண்டிகள், 10 விவசாயிகளுக்கு பூச்சி மருந்து எந்திரம், 500 மகளிர்களுக்கு சேலைகள்,150 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புத்தக பை, 250 பேர்களுக்கு டபுள்டிபன் பாக்ஸ்,250 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் தொகுப்பு பைகள்,100 பெண்களுக்கு சில்வர் குடம், 50 விவசாயக் கூலி தொழிலாளிகளுக்கு மண்வெட்டி, சலவை தொழிலாளி 5 பேர்களுக்கு இஸ்திரி பெட்டி, மோட்டார் சைக்கிள் ஓட்டும் மகளிர்களுக்கு தலைக்கவசம் 50 நபர்களுக்கும், துப்புரவு தொழிலாளர் 25 நபர்களுக்கு கோட்,15 செவிலியர்களுக்கு கோட், 50 ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை மற்றும் சாலையோரம் நடை வியாபாரிகள் பேருக்கு 50 குடைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் 1568 பேர்களுக்கு வழங்கினார்.
பெண்கள் நினைத்தால் எவ்வளவு பெரிய மாற்றத்தையும் நிகழ்த்திக் காட்ட முடியும். அதனால் தான் நம் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மாவட்ட செயலாளருடன் 14 பேர் நியமிக்கப்பட்டு இருக்கிறோம். அதில் 5 மகளிருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது .
பெண்கள் மிகவும் வலிமையானவர்கள். பெண்கள் எவ்வளவு பெரிய தடையையும் தகர்த்து சாதனை செய்யும் போர் குணம் கொண்டவர்கள். தாய்மார்களின் ஆதரவும் அன்பும் நம் தலைவர் தளபதிக்கு அதிகளவில் உள்ளது. உங்களைப் போன்ற தாய்மார்களை நம்பி தான் தலைவர் தளபதி அரசியலுக்கு வந்துள்ளார் தலைவரை வெற்றி பெற வைக்க நீங்கள் எல்லோரும் துணை நிற்க வேண்டும் .
சாதிக்க துடிக்கும் பெண்கள் அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்களை தளபதி சார்பாகவும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாகவும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு யார் யாரோ மாற்றுக் கட்சியில் இருந்து வருகிறார்கள். அவருக்கு தான் பதவிகள் கொடுப்பார்கள் என்று நினைக்க வேண்டாம்.
ஆரம்பத்திலிருந்து யார் யார் தலைவரின் வளர்ச்சிக்கு பாடுபட்டு உழைத்தார்களோ அவர்களுக்கு தான் தலைவர் பதவி அளிப்பார். இதில் எந்த அச்சமும் தேவையில்லை. மாற்றுக் கட்சியில் இருந்து ஹெலிகாப்டரிலே வந்தாலும் தமிழக வெற்றிக் கழகத்தில் பதவிகள் அளிக்க மாட்டார் நமது தலைவர்.
இவ்வாறு அவர் பேசினார்.






