என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • டெல்லியில் இருந்து ஆள்வதால், ஏதோ அவர் நமக்கு "மேல்" என்று தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார்.
    • நம் பள்ளிக் குழந்தைகளின் கல்விக்கு ஒன்றிய அரசு நியாயமாக தர வேண்டிய நிதியை உடனடியாக விடுவிடுக்க வேண்டும்.

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வில் பேசிய தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள்" என்று தெரிவித்தார்.

    மத்திய அமைச்சரின் பேச்சுக்கு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அப்போது அவர் "தமிழ்நாட்டின் எம்.பி.க்களை பார்த்து அப்படி பேசுவது, அவர்களை வாக்களித்து தேர்ந்தெடுத்த ஒட்டுமொத்த தமிழர்களையுமே கொச்சைப்படுத்துவதாக தான் அர்த்தம்" என குறிப்பிட்டுள்ளார்.

    இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:-

    உலகின் மிக மூத்ததொல்குடி நாகரிகத்திற்கு சொந்தக்காரர்களான நம்மை பார்த்து நாகரிகமில்லாதவர்கள் என்று தரம் தாழ்ந்து நாடாளுமன்றத்திலேயே தமது எரிச்சலைக் கக்கியிருக்கிறார் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

    தமிழ்நாட்டின் எம்.பி.க்களை பார்த்து அப்படி பேசுவது, அவர்களை வாக்களித்து தேர்ந்தெடுத்த ஒட்டுமொத்த தமிழர்களையுமே கொச்சைப்படுத்துவதாக தான் அர்த்தம்.

    திராவிட நாகரிகத்தின் தொன்மையும் சிறப்பும் அவருக்கு தெரியாது. நம் நாகரிகம் பற்றிய வரலாறு தெரியவில்லை என்றாலும் கூட பரவாயில்லை, நம்முடைய கடந்த ஒரு நூற்றாண்டு கால சமூக - அரசியல் வரலாற்றை தெரிந்திருந்தாலும் இதுபோன்று எல்லைமீறி அவர் பேசியிருக்க மாட்டார்.

    டெல்லியில் இருந்து ஆள்வதால், ஏதோ அவர் நமக்கு "மேல்" என்று தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார்.

    தேசிய கல்விக் கொள்கையை அப்படியே முழுவதுமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மிரட்டுவது, மிரட்டலுக்கு நாம் பணியவில்லை என்றால் கோபத்தில் முறைதவறி பேசுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல.

    நம் பள்ளிக் குழந்தைகளின் கல்விக்கு ஒன்றிய அரசு நியாயமாக தர வேண்டிய நிதியை உடனடியாக விடுவிடுக்க வேண்டும். தமிழ்நாட்டின் மொழியோடும் கல்வியோடும் உரிமையோடும் விளையாடுவது நீறு பூத்த நெருப்பை விசிறி விடுவதற்கு சமம்.

    கண்டிக்கிறோம், எச்சரிக்கிறோம்.

    இவ்வாறு உதயநிதி கூறியுள்ளார்.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கல்லூரி மாணவிகள் மற்றும் பொது மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • ஒரு தலைக்காதலால் மாணவியை இளைஞர், நண்பர்களுடன் வந்து கடத்தியதாக தகவல் வெளியானது.

    கரூரில் பட்டப்பகதில் அரசு கல்லூரி மாணவி கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவி பேருந்தில் இருந்து இறங்கி கல்லூரிக்கு நடந்து சென்றபோது மர்ம நபர்கள் மாணவியை கடத்தியுள்ளனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கல்லூரி மாணவிகள் மற்றும் பொது மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு தலைக்காதலால் மாணவியை இளைஞர், நண்பர்களுடன் வந்து கடத்தியதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், மாணவி ஆம்னி வேனில் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

    கல்லூரி மாணவியை கடத்திய ஆம்னி கார் கரூர்- திண்டுக்கல் மாவட்ட எல்லையான வெள்ளோடு பகுதியை கடந்து சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • தி.மு.க.வும் பா.ஜ.கவும் எல்லாமுறையிலும் மறைமுகக் கேளிர்' என்பது.
    • 2026ல் ஒரு நல்ல முடிவு எங்கள் கழகத் தலைவர் தலைமையிலான நல்லரசு வாயிலாக கிடைக்கத்தான் போகிறது.

    மதநல்லிணக்கனம் தொடர்பாக திமுக அரசின் சாயம் வெளுக்கிறது என தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து தவெகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அறவழிப் போராட்டம் என்பது அரசியல் அடையாளங்களில் ஒன்று அதுவும் மதநல்லிணக்கம் பேண வலியுறுத்தும் பேரணியை எந்தக் கட்சி அல்லது அமைப்பு நடத்தினாலும், அது கட்டாயம் அனுமதிக்கப்பட வேண்டிய ஒன்று.

    மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பின் சார்பில் மத நல்லிணக்கப் பேரணியை மதுரையில் நடத்த அக்கூட்டமைப்பினர் அனுமதி கேட்டும். ஆளும் தி.மு.க அரசு அனுமதி மறுத்திருக்கிறது.

    இதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் திரு தொல். திருமாவளவன் அவர்களே நேற்று மதுரையில் நடைபெற்ற அக்கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் வீரகதியோடு பேசி உள்ளார்.

    மதநல்லிணக்கப் பேரணி நடத்த அனுமதி மறுந்தது என்பது. மதநல்லிணக்கம் தொடர்பாக இரட்டை வேடம் போடும் தி.மு.க. வின் கபடநாடகத்தை தோலுரித்துக் காட்டுகிறது. நல்லிணக்கப் பேரணிக்கு அனுமதி மறுப்பது எந்த வகையில் நியாயம் என்பது தி.மு.க. அரசுக்கே வெளிச்சம்.

    மத நல்லிணக்கப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்படும். ஆனாம், பிளவுவாத அரசியல் செய்பவர்களுக்கு மட்டும் அனைத்து அனுமதியும் அளிப்பது என்பது இந்த தி.மு.க. அரசு தன் மறைமுகக் கூட்டணியை உறுதி செய்வதைத்தாளே காட்டுகிறது.

    வாய்வித்தையில் மட்டும் தமிழ்நாடு உரிமைகள், மதச்சார்பின்மை என்று கபடநாடகம் ஆடும் இந்த தி.மு.க. அரசால், பா.ஜ.க மீதானத் தன்னுடைய மறைமுகப் பாசத்தை வெளிப்படுத்தாமல் இருக்க இயலவில்லை. பூனைக்குட்டி வெளியே வரந்தான் செய்கிறது.

    தி.மு.க.வும் பா.ஜ.கவும் எல்லாமுறையிலும் மறைமுகக் கேளிர்' என்பது. இதுபோன்ற செயல்களால் உறுதியாகவும் செய்கிறது.

    கொஞ்சம் கொஞ்சமாக இந்த தி.மு.க. அரசின் சாயம் வெளுக்கத் தொடங்கி உள்ளது. இதை அவர்களின் கூட்டணிக் கட்சியினர் மட்டுமன்று. தமிழக மக்களும் உணர்ந்தே வருகின்றனர்.

    எல்லாவற்றிற்கும் சேர்த்து 2026ல் ஒரு நல்ல முடிவு எங்கள் கழகத் தலைவர் தலைமையிலான நல்லரசு வாயிலாக கிடைக்கத்தான் போகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கலைஞர் நூற்றாண்டு காய்கறி அங்காடி என்று பெயர் சூட்ட திமுக அரசு திட்டமிட்டது.
    • தமிழக அரசு இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

    திருத்தணியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் காய்கறி சந்தைக்கு பெருந்தலைவர் காமராசரின் பெயரை நீக்கி விட்டு, கலைஞர் நூற்றாண்டு காய்கறி அங்காடி என்று பெயர் சூட்ட தி.மு.க. அரசு முடிவு செய்திருந்தது.

    இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், கலைஞர் நூற்றாண்டு சந்தை என்று பெயர் சூட்டும் திட்டம் கைவிடப்படுவதாகவும், ஏற்கனவே இருந்து வந்த பெருந்தலைவர் காமராசரின் பெயரால் பெருந்தலைவர் காமராசர் நாளங்காடி என்று அழைக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது

    இது பாமக எதிர்ப்புக்கு கிடைத்த வெற்றி என பாமக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதாவது:-

    திருத்தணி காய்கறி சந்தைக்கு மீண்டும் காமராசர் பெயர்: பாமக எதிர்ப்புக்கு கிடைத்த வெற்றி!

    திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.3.02 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ள காய்கறி சந்தைக்கு கலைஞர் நூற்றாண்டு சந்தை என்று பெயர் சூட்டும் திட்டம் கைவிடப்படுவதாகவும், ஏற்கனவே இருந்த வந்த பெருந்தலைவர் காமராசரின் பெயரால் பெருந்தலைவர் காமராசர் நாளங்காடி என்று அழைக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது.

    திருத்தணியில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் காய்கறி சந்தைக்கு பெருந்தலைவர் காமராசரின் பெயரை நீக்கி விட்டு, கலைஞர் நூற்றாண்டு காய்கறி அங்காடி என்று பெயர் சூட்ட திமுக அரசு திட்டமிட்டது.

    இந்த முடிவை கடுமையாக எதிர்த்த நான், தமிழ்நாட்டுக்கு அடையாளம் தேடித் தந்த பெருந்தலைவரின் பெயரை நீக்கக்கூடாது என்றும், அவ்வாறு நீக்கினால் மிகப்பெரிய அளவில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தேன்.

    அதைத் தொடர்ந்து தமிழக அரசு இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

    தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், புகழுக்கும் காரணமாக இருந்த காமராசர் போன்ற தலைவர்களின் பெயர்கள் எங்கு சூட்டப்பட்டிருந்தாலும், அதன் பெயரை நீக்கும் அல்லது மாற்றியமைக்கும் அரசியலை தமிழக அரசு செய்யக்கூடாது.

    அரசின் திட்டங்களுக்கும், கட்டிடங்களுக்கும் ஏற்கனவே சூட்டப்பட்டுள்ள தலைவர்களின் பெயர்கள் நீடிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இஸ்லாமியர் அணியும் தொப்பியை அணிந்து இஃப்தார் நிகழ்ச்சிக்கு விஜய் வந்தார்.
    • எனக்கு நோன்பு கஞ்சியை வீட்டுக்கே அனுப்பி வைப்பார்கள் என்று சீமான் தெரிவித்தார்.

    சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், வெள்ளை லுங்கி, சட்டை, இஸ்லாமியர் அணியும் தொப்பியை அணிந்து இஃப்தார் நிகழ்ச்சிக்கு விஜய் வந்தார்.

    பிறகு, பிரார்த்தனை செய்துவிட்டு நோன்புக் கஞ்சி, பேரீட்சை, சமோசா சாப்பிட்டு தவெக தலைவர் விஜய் நோன்பை திறந்தார்.

    இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சீமான், "எனக்கு நோன்பு கஞ்சியை வீட்டுக்கே அனுப்பி வைப்பார்கள். ஒரு நாள் தொப்பி போட்டு வேடம் போடுபவன் நான் இல்லை. நான் ஒருநாள் இஸ்லாமியன் இல்லை. நான் என் மக்களின் உணர்வுக்கானவன், உரிமைக்கானவன், உயிரானவன்.

    நெற்றியில் திருநீறு வைத்துக்கொண்டு தொப்பி அணிந்து நோன்பு கஞ்சியை குடித்தவர்கள் இருக்கிறார்கள். நான் காட்டவா? தம்பி அதை விரும்புகிறார், செய்கிறார். அதை விமர்சனம் செய்ய வேண்டியதில்லை" என்று தெரிவித்தார். 

    • தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள்" என்று தர்மேந்திரா பிரதான தெரிவித்தார்
    • தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்பது தவறானது என்று தர்மேந்திரா பிரதான தெரிவித்தார்

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கிய உடனேயே, தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுப்பு விவகாரத்தை கையில் எடுத்த திமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான், "பாஜக ஆளாத மாநிலங்களான கர்நாடகா, இமாச்சல பிரதேசத்திலும் தேசிய கல்விக் கொள்கை ஏற்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்பது தவறானது. தமிழ்நாட்டு மாணவர்களை, திமுக தவறாக வழிநடத்தி அரசியல் செய்கிறது.

    தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள்.

    பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் யு-டர்ன் போட்டது. கடந்தாண்டு மார்ச் 15இல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டது. திட்டத்தை ஏற்க ஒப்புக்கொண்டு சூப்பர் முதலமைச்சரின் ஆலோசனையில் அரசு பின்வாங்கியது. சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டு கையெழுத்திட மறுத்தனர். யார் அந்த சூப்பர் முதலமைச்சர் என கனிமொழி பதிலளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    இதற்கு திமுக எம்.பி.க்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். இதனையடுத்து, தமிழ்நாட்டு எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள் என்று பேசியதை திரும்பப் பெற்றுக்கொள்வதாக மக்களவையில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் எம்.பி. கனிமொழியிடம் தெரிவித்தார்.

    இந்நிலையில், மும்மொழி கொள்கை குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்த கருத்துக்கு எதிராக சென்னையில் திமுகவினர் போராட்டம் நடத்தினர்.

    • மாஃபா பாண்டியராஜன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடந்த 2 நாட்களுக்கு முன்பு சந்தித்தார்.
    • மாஃபா பாண்டியராஜனை, ராஜேந்திரபாலாஜி விமர்சித்த நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

    விருதுநகரில் கடந்த 5-ந்தேதி இரவு அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு கட்சி நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வெள்ளி வாள் வழங்கினர். பலரும் பொன்னாடை அணிவிக்க வந்தனர்.

    இதே போல் விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்த கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் நந்தகுமாரும் பொன்னாடை அணிவிக்க வந்துள்ளார். வரிசையில் வராமல் முந்திக்கொண்டு அவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை ராஜேந்திரபாலாஜி கண்டித்ததாகவும், பின்னர் அவரை கன்னத்தில் அறைந்ததாகவும் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் அவரிடம் எதற்காக இப்படி முந்தி கொண்டு வருகிறாய்? என சத்தம் போட்டதாகவும் கூறப்படுகிறது.

    கூட்டத்தில் பேசிய கே.டி.ராஜேந்திர பாலாஜி, பாண்டியராஜன் கூறுவது போல் நான் குறுநில மன்னன்தான். வெவ்வேறு கட்சியில் இருந்து வந்தவர் பாண்டியராஜன். நான் தெய்வமாக நினைக்கும் ஜெயலலிதா குறித்து பாண்டியராஜன் அவதூறாக பேசிய வீடியோ என்னிடம் உள்ளது என்று மிரட்டும் தொனியில் பேசினார்.

    இந்த சம்பவம் கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று முன்தினம் இரவு சந்தித்தார்.

    சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு சென்ற மாஃபா. பாண்டியராஜன் அவரை சந்தித்து பேசி உள்ளார்.

    இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னை பசுமை வழிச்சாலையிலுள்ள அவரது இல்லத்தில் முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி இன்று (10.03.2025) மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.

    மாஃபா பாண்டியராஜனை, ராஜேந்திரபாலாஜி விமர்சித்த நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 2025-26-ந் கல்வியாண்டுக்கான நீட் தோ்வு மே 4-ந் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
    • நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

    நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.

    அதேபோல, ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங் படிப்புக்கு நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை என்.டி.ஏ. ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 2025-26-ந் கல்வியாண்டுக்கான நீட் தோ்வு மே 4-ந் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.

    தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெறும் அந்தத் தோ்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 7-ந் தேதி தொடங்கியது. இதற்கான கால அவகாசம் மாா்ச் 7-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள என்.டி.ஏ. வாய்ப்பு வழங்கியது. அதன்படி மாணவா்கள் இணையதளம் வழியாக நாளை (செவ்வாய்க்கிழமை) வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம். கூடுதல் விவரங்களை இணையதளத்தின் மூலமாகவோ, 011 40759000 எனும் தொலைபேசி எண் மூலமாகவோ அறிந்து கொள்ளலாம்.

    • பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழக முதலமைச்சருக்கு மூன்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.
    • மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்து செயல்படுகிறோம் என்கிறீர்களே, யார் அந்த மக்கள்?

    தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு நாவடக்கம் வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் தமிழக முதலமைச்சருக்கு மூன்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து பதிவில் கூறியிருப்பதாவது:-

    பதட்டத்தில் பிதற்றும் தமிழக முதல்வருக்கு மூன்று கேள்விகள்.

    முதல் கேள்வி:

    திமுகவினர் நேர்மையற்ற, நாகரீகமற்றவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் சொன்னதில் என்ன குறை கண்டீர்கள்? உண்மையை தானே சொல்லியிருக்கிறார்.

    இரண்டாவது கேள்வி:

    மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்து செயல்படுகிறோம் என்கிறீர்களே, யார் அந்த மக்கள்?

    உங்கள் மகன், மகள், மருமகன், தனியார் CBSE மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நடத்தும் உங்கள் கட்சியினரும் அவர்கள் உறவினருமா?

    மூன்றாவது கேள்வி:

    யார் அந்த சூப்பர் முதல்வர்?

    ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். உங்கள் சாயம் வெளுத்துவிட்டது, மு.க.ஸ்டாலின் அவர்களே. இனியும் தமிழக மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 13-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதனால் இன்று கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்படும்.

    நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    12-ந்தேதி தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    13-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

    இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.

    இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:

    இன்று மற்றும் நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருக்கக்கூடும். 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 23° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று மற்றும் நாளை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    12-ந்தேதி குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டவேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • 8-ம் திருவிழாவான இன்று கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
    • விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம்திருவிழா தேரோட்டம் நாளை மறுநாள் (12-ந்தேதி) நடக்கிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்கள் மற்றும் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான 5-ம்திருவிழாவில் குடைவருவாயில் தீபாராதனையும், 7-ம்திருவிழாவான நேற்று காலை 5 மணிக்கு உருகு சட்ட சேவையும், காலை 9மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து பிள்ளையன் கட்டளை மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மாலை 4.20 மணிக்கு சுவாமி சண்முகர் சிவன் அம்சமாக சிகப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடைபெற்றது.

    8-ம்திருவிழாவான இன்று கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 5.30மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

    இன்று காலை வெள்ளி சப்பரத்தில் சுவாமி சண்முகர் பிரம்மன் அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து மேல கோவில் சேர்தல் நடைபெற்றது. மதியம் 12மணிக்கு சுவாமி சண்முகர் விஷ்ணு அம்ச மாக பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம்திருவிழா தேரோட்டம் நாளை மறுநாள் (12-ந்தேதி) நடக்கிறது. அன்று காலை 7மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது .

    (13-ந்தேதி) தெப்ப திருவிழா நடக்கிறது. அன்று இரவு 10 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை தெப்பத்தில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    (14-ந் தேதி) மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளிலும் உலா வந்து பின்னர் சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் ஆகி சுவாமி, அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று விழா நிறைவுபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். பிரதமர் மோடி இதனை ஏற்கிறாரா?
    • நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்!

    சென்னை:

    மக்களவையில் "தமிழ்நாடு எம்.பி.க்கள் நாகரிகமற்றவர்கள்" என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில், பேசியதை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திரும்ப பெற்றார்.

    இந்த நிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்!

    தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா?

    தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். பிரதமர் மோடி இதனை ஏற்கிறாரா?

    NEP, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய PM SHRI MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே?

    பிரதான் அவர்களே, நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல!!

    நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது.

    தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்! என்று கூறியுள்ளார். 



    ×