என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தமிழ்நாடு மீது மத்திய அரசு கொண்டுள்ள பாரபட்சமான நிலைப்பாடு மீண்டும் தெரிய வந்துள்ளது.
    • தர்மேந்திர பிரதானை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கூறியிருப்பதாவது:-

    நேற்று மக்களவையில் புதிய கல்வி கொள்கை குறித்து நடந்த விவாதத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறினார். மேலும் தமிழ்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்து பாராளுமன்ற சபை என்று கூட பாராமல் அவதூறுகளை கூறினார். ஒரு மத்திய அமைச்சருக்கு இது ஒருபோதும் பொருந்தாத ஒன்று.

    அவரது சொற்கள் தமிழகத்தின் வாக்காளர்கள் மீதான தாக்குதல். தமிழ்நாடு மீது மத்திய அரசு கொண்டுள்ள பாரபட்சமான நிலைப்பாடு மீண்டும் தெரிய வந்துள்ளது.

    தமிழக மக்களிடம் அமைச்சர் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும். தவறும் பட்சத்தில் பிரதமர், தர்மேந்திர பிரதானை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும். சபாநாயகர் அவர்கள் தமிழக மக்களுக்கு எதிராக அமைச்சர் கூறிய வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 

    • சென்னையில் 32 இடங்களில் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சென்னையில் மட்டும் 25 போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பாராளுமன்றத்தில் பேசும்போது தி.மு.க. எம்.பி.க்கள் நாகரீகம் இல்லாதவர்கள் போல நடந்து கொள்வதாக கூறியிருந்தார்.

    இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் நேற்று மாலையில் தர்மேந்திர பிரதானின் உருவப் பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 125 இடங்களில் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் பங்கேற்று தர்மேந்திர பிரதானின் உருவப் பொம்மையை தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

    சென்னையில் 32 இடங்களில் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 300 பெண்கள் உள்பட 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சென்னையில் மட்டும் 25 போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதே போன்று தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களிலும் தி.மு.க.வி னர் மீது வழக்கு போடப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • நேற்று தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,400-க்கு விற்பனையானது.
    • வெள்ள விலை இன்று சற்று குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த மாதம் (பிப்ரவரி) முதல் ஏற்ற, இறக்கத்துடன் இருக்கிறது. கடந்த 4-ந்தேதியில் இருந்து விலை அதிகரித்து காணப்பட்டது. கடந்த வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 வரை உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,400-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,020-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.64,160-க்கும் விற்பனையாகிறது.

    கடந்த 5 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ள விலை இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    10-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,400

    09-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,320

    08-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,320

    07-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,240

    06-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,480

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    10-03-2025- ஒரு கிராம் ரூ.108

    09-03-2025- ஒரு கிராம் ரூ.108

    08-03-2025- ஒரு கிராம் ரூ.108

    07-03-2025- ஒரு கிராம் ரூ.108

    06-03-2025- ஒரு கிராம் ரூ.108

    • செவ்வாய் பிரதோஷமான இன்று காலை 6.40 மணிக்கு மலையடிவாரத்தில் உள்ள நுழைவு வாயில் திறக்கப்பட்டது.
    • பிரதோஷத்தை முன்னிட்டு மலைமேல் உள்ள சுந்தர-சந்தன மகாலிங்கத்திற்கு 18 வகையான அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது.

    இங்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    இன்று மாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டும், 13-ந் தேதி பவுர்ணமியை முன்னிட்டும் இன்று முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி செவ்வாய் பிரதோஷமான இன்று காலை 6.40 மணிக்கு மலையடிவாரத்தில் உள்ள நுழைவு வாயில் திறக்கப்பட்டது. காத்திருந்த பக்தர்களின் உடமைகள் சோதனை செய்யப்பட்டு மலையேற அனுமதிக்கப்பட்டனர். வத்திராயிருப்பு மற்றும் மலைப்பகுதிகளில் இன்று காலை முதல் சாரல் மழை பெய்தது.

    மேலும் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை காரணமாக சதுரகிரிக்கு பக்தர்களின் வருகை மிகவும் குறைவாக இருந்தது.

    பிரதோஷத்தை முன்னிட்டு மலைமேல் உள்ள சுந்தர-சந்தன மகாலிங்கத்திற்கு 18 வகையான அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
    • 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வருகிற சனிக்கிழமை வரை தமிழ்நாட்டின் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை கோடை மழை பெய்தது. அதிகாலை முதலே குளிர்ச்சியான சூழல் நிலவிய நிலையில், புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், செம்பாக்கம், சேலையூர், இரும்புலியூர், பெருங்களத்தூர், பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.

    சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், இன்று காலை பெய்த மழையால் வெப்பம் தணிந்துள்ளது. சென்னையை குளிர்வித்த திடீர் மழையால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    • கடந்த 2016-ம் ஆண்டு பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் விஷால் உயிரிழந்தான்.
    • உயிரிழந்த மாணவர் விஷாலின் தந்தை வீரப்பனுக்கு தமிழக அரசு நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.

    சென்னை:

    தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா குடுமியம்பட்டியை அடுத்த அச்சல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன். இவரது மகன் விஷால், குடுமியம்பட்டி அரசு ஆரம்ப பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

    கடந்த 2016-ம் ஆண்டு பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் விஷால் உயிரிழந்தான். இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தது.

    பின்னர், இதுதொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குனர், தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய ஆணையம் உத்தரவிட்டது.

    அதன்படி அவர்கள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'பள்ளி சுற்றுச்சுவரை தாண்டி விழுந்த வகுப்பறை சாவியை ஆசிரியை ஒருவர் எடுத்து வரும்படி கூறியதை தொடர்ந்து மாணவன் விஷால் சுற்றுச்சுவரில் ஏறிய போது சுவர் விழுந்ததில் மாணவன் இறந்தது தெரியவருகிறது. சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து ஆரம்ப பள்ளிகளிலும் சேதம் அடைந்த கட்டிடங்களை சீரமைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    மனுவை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:-

    பொது ஊழியர்களின் கவனக்குறைவால் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர், சேதமடைந்த சுற்றுச்சுவரை சீரமைத்து இருந்தால் இந்த சம்பவம் நடந்து இருக்காது. எனவே, உயிரிழந்த மாணவர் விஷாலின் தந்தை வீரப்பனுக்கு தமிழக அரசு நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.

    அரசு பள்ளிகளின் கட்டிடங்களை பராமரிக்கும் வகையிலும், பள்ளியின் சுற்றுச்சுவர் மற்றும் இதர கட்டிடங்களின் தற்போதைய நிலையை தொடர்ந்து கண்காணிக்கும் வகையிலும் விதிகளை உருவாக்கவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க கல்வி அதிகாரிகள் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினருடன் இணைந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும்,

    மாதம்தோறும் குறிப்பாக மழைக்காலம் மற்றும் விடுமுறைக்கு பின்பு பள்ளி திறக்கும் காலங்களில் ஆய்வு கூட்டத்தை நடத்தவும் தொடக்கக்கல்வி இயக்குனரகத்துக்கு தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் தமிழ் வழியில் கல்வி கற்பது இல்லை.
    • ஒவ்வொரு மாநிலத்தின் அரசுப்பணியாளர்கள் அந்தந்த மாநில மொழியை தெரிந்து இருப்பது அவசியம்.

    மதுரை:

    தேனி மாவட்டம் கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெய்குமார். இவர் தேனி மாவட்ட மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக 2018-ம் ஆண்டில் சேர்ந்தார். இவர் சி.பி.எஸ்.இ. பள்ளியில் படித்தவர். இதனால் பணியில் சேர்ந்த 2 ஆண்டுக்குள் டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தமிழ் மொழித்தேர்வில் வெற்றி பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. அவர் இந்த நிபந்தனையை நிறைவேற்றாததால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

    இந்த உத்தரவை ரத்து செய்து தன்னை மீண்டும் பணியில் சேர்க்கக்கோரி ஜெய்குமார், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தமிழகத்தில் அலுவல் மொழி தமிழ். அரசின் அனைத்து நடவடிக்கைகளும் தமிழில்தான் நடைபெறுகின்றன. மின்வாரியத்திலும் இந்த நடைமுறை உள்ளது. இதனால் ஒவ்வொரு ஊழியருக்கும் தமிழ் கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டும் என்ற மின்வாரியத்தின் நிலைப்பாட்டில் தவறு கிடையாது.

    இருந்தபோதும் மனுதாரர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால் மீண்டும் தமிழ் தேர்வு எழுத ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி மீண்டும் நடந்த தேர்விலும் ஜெய்குமார் வெற்றி பெறாததால் அவரை பணி நீக்கம் செய்து மின்வாரிய பொறியாளர் உத்தரவிட்டார். இதையடுத்து மீண்டும் மதுரை ஐகோர்ட்டில் ஜெய்குமார் வழக்கு தொடர்ந்தார்.

    அதனை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தமிழக அரசு பணியாளர்களுக்கு தமிழ் மொழி தெரிந்து இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்த தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் மனுதாரர் தமிழகத்தை சேர்ந்த பச்சை தமிழன் என்று கூறி இவருக்கு பணி வழங்க வேண்டும் என 2022-ம் ஆண்டில் உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவு, அரசு ஊழியர்களின் பணி வரன்முறை விதிமுறைகளுக்கு எதிராக உள்ளதால், அதனை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், பூர்ணிமா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் தமிழ் வழியில் கல்வி கற்பது இல்லை. தமிழ் மொழி தேர்வில் வெற்றி பெறுவதும் இல்லை. இந்த சூழ்நிலையில் மனுதாரர் தமிழ்த்தேர்வில் தேர்ச்சி பெறாமல் தமிழக அரசு பணியில் மட்டும் எப்படி நீடிக்க முடியும்? சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்துவிட்டு தமிழக அரசு வேலைக்கு வருவது ஏன்? தமிழக அரசு துறைகளில் தமிழ்மொழி தெரியாதவர்களை ஏன் வேலையில் சேர்க்க வேண்டும்? என கேள்வி எழுப்பினர்.

    மேலும், ஒவ்வொரு மாநிலத்தின் அரசுப்பணியாளர்கள் அந்தந்த மாநில மொழியை தெரிந்து இருப்பது அவசியம். அந்த வகையில் தமிழ்நாட்டில் அரசுப்பணியாளர்கள் தமிழ் மொழியை பேசவும், எழுதவும் தெரிந்திருக்கவும் வேண்டும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

    விசாரணை முடிவில், இந்த வழக்கில் தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணை 6 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • மாற்று கருத்தை மத்திய அரசு திணித்தால் தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் போராட்டத்தில் இறங்கும்.
    • விருப்பம் இருப்பவர்கள் 3 மற்றும் 4-வது மொழியை படித்துக்கொள்ளலாம்.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மொழியை மையப்படுத்தி மத்திய அரசு அழுத்தம் கொடுத்தால் தமிழ்நாட்டில் புதிய பிரச்சனைகள் உருவாகும். இது அண்ணா காலத்தில் இருந்தே பெரிய போராட்டமாக உருவெடுத்து, நேருவால் பாராளுமன்றத்திலேயே கொடுக்கப்பட்ட உறுதிமொழியின் அடிப்படையில் இருமொழி கொள்கைதான் தமிழ்நாட்டில் இருக்கிறது. விருப்பம் இருப்பவர்கள் 3 மற்றும் 4-வது மொழியை படித்துக்கொள்ளலாம். இதில் மாற்று கருத்தை மத்திய அரசு திணித்தால் தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் போராட்டத்தில் இறங்கும்.

    தி.மு.க.வை எதிர்க்கும் திறமையோ, வீழ்த்துகிற திறமையோ அ.தி.மு.க.வுக்கு மட்டுமே உண்டு. மற்ற கட்சிகள் வரலாம். அதன் வரலாறு, அவர்கள் தேர்தலை சந்தித்த பிறகு தான் தெரியும். பாராளுமன்ற தொகுதி எண்ணிக்கை கூடத்தான் வேண்டும். குறைந்து வந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசு கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சோதனைகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. தி.மு.க. மீது இருக்கிற வெறுப்பால் அ.தி.மு.க.வுக்கு மக்கள் ஆதரவு கொடுக்கிறார்கள். அதனால் கூட்டணி பற்றியோ, யாரோடு கூட்டணி என்பது பற்றி எல்லாம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுவார். மாஃபா பாண்டியராஜன் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. அவருக்கும், எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் தொடருவோம்.
    • எடப்பாடி பழனிசாமியிடம் இரட்டை இலை உள்ளதால் ஜெயலலிதாவின் கட்சி பலவீனம் ஆகி கொண்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று இரவு முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தெலுங்கன்குடிக்காட்டில் உள்ள அவருடைய வீட்டில் திடீரென சந்தித்து பேசினார். அரைமணி நேரம் நடந்த இந்த சந்திப்புக்கு பின்னர் வெளியே வந்த டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்ததாகவும் வேறு ஏதும் காரணம் இல்லை. தமிழ்நாடு மக்கள் குறித்து மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் என்ன கூறினார் என்பது எனக்கு தெரியாது. அவர் என்ன பேசி உள்ளார் என்பதை அறிந்த பிறகு அது குறித்து கருத்து தெரிவிக்கிறேன்.

    எடப்பாடி பழனிசாமியிடம் இரட்டை இலை உள்ளதால் ஜெயலலிதாவின் கட்சி பலவீனம் ஆகி கொண்டுள்ளது. ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்று தேசிய ஜனநாயக கூட்டணியோடு ஜெயலலிதாவின் ஆட்சியை, அமைப்பார்கள். எடப்பாடி பழனிசாமியிடம் உள்ள தொண்டர்களும், நிர்வாகிகளும் விழித்துக் கொள்ளவில்லை என்றால் தேர்தலுக்குப் பிறகு கட்சியை மீட்கும் பொறுப்பு எங்களிடம் வரும். தேசிய ஜனநாய கூட்டணியில் நாங்கள் உள்ளோம். அதில் தான் தொடருவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது வைத்திலிங்கம், அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • அ.தி.மு.க. என்பது பொதுமக்கள் மற்றும் ஏழை மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி.
    • அரசாங்கத்தை சரியாக நடத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.

    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் தனது சொந்த ஊரான தெலுங்கன்குடிக்காட்டில் உள்ள தனது வீட்டில் இருந்தார். இவர் தற்போது ஓ.பன்னீர்செல்வம் அணியான அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவின் இணை ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

    வைத்திலிங்கத்தை நேற்று இரவு திடீரென, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து பேசினர். ஒவ்வொருவரும் தலா அரைமணி நேரம் சந்தித்து பேசினர். சசிலாவுடன், அவருடைய சகோதரர் திவாகரன் உடன் வந்தார்.

    பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வினர் அனைவரும் விரைவில் ஒன்று சேர்வார்கள் என சசிகலா கூறி வந்த நிலையில் திடீரென முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது இணைப்புக்கான முயற்சியாக இருக்கலாம் எனவும் கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் வைத்திலிங்கத்தை சந்தித்து விட்டு வெளியே வந்த சசிகலா நிருபர்களிடம் கூறியதாவது:-

    வைத்திலிங்கத்துடனான இந்த சந்திப்பு என்பது அனைத்தும் கலந்தது. அ.தி.மு.க. என்பது எம்.ஜி.ஆர். ஆரம்பித்தது. மக்களுக்காக ஆரம்பித்தது. தி.மு.க. போல் இல்லை. நல்ல ஆட்சி 2026-ல் கொடுப்போம். அது மக்களாட்சியாக இருக்கும். வெளியில் சில பேர் நினைக்கலாம், அ.தி.மு.க.வை சுக்கு நூறாக உடைத்துவிடலாம் என்று. அது எப்படி என்றால் கடலில் இருக்கும் தண்ணீரை ஒரு பக்கெட்டில் எடுத்து வெளியேற்றிவிடுவேன் என்பது போல தான்.

    அ.தி.மு.க. என்பது பொதுமக்கள் மற்றும் ஏழை மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி. 2026-ல் எல்லோரும் ஒன்றிணைந்து நல்லபடியா ஆட்சி அமைத்து, அது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் மக்களுக்கு பிடித்த ஆட்சியாக இருக்கும். அனைவரும் ஒன்றினைய வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி கூறி வருவது குறித்து கேட்டதற்கு, இது ஒருத்தர் முடிவு செய்யும் விஷயம் இல்லை. எங்கள் கட்சியின் சட்டதிட்ட விதிகள் படி அடிமட்ட தொண்டர்கள் என்ன முடிவு செய்கிறார்களோ? அதுதான் இந்த கட்சியின் சட்ட விதிப்படி நடக்கும். அதை நாங்கள் நல்லபடியாக செய்வோம்.

    மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பேசிய கருத்து குறித்து கேட்டதற்கு, தி.மு.க. மத்திய அரசு என்று முதலில் பார்க்க வேண்டும். மத்திய அரசு என்று பார்த்தால் தான் இங்கு ஆட்சி சரிவர நடத்த முடியும். நீங்கள் சண்டை போடுவதற்காக மக்களின் வாக்குகளை வாங்கி போய் பாராளுமன்றத்தில் உட்கார்ந்து இருக்கிறீர்கள் என்றால், வரும் 2026-ல் அதற்கு உண்டான பதிலை தமிழக மக்கள் நிச்சயம் கொடுப்பார்கள். இங்கு அரசாங்கத்தை சரியாக நடத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.

    இதை மாற்று பாதையில் கொண்டு போகும் ஒரே எண்ணத்தில் அவர்கள் செய்யும் தவறை வெளியே போகாமல் மாற்றும் முயற்சியில் இந்த மாதிரி வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். தி.மு.க. அரசின் ஒரு சில விஷயம் தான் வெளியே வந்து உள்ளது. இன்னும் போகப்போக 2026-தேர்தலுக்கு முன் நிறைய விஷயங்கள் வெளியே வரும். ஏனென்றால் அந்த அளவிற்கு இந்த அரசாங்கத்தை சீர்கெடுத்து நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இது எல்லாத்துக்கும் பதில் சொல்லும் காலம் விரைவில் வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த மாதம் வருகிற 29-ந்தேதி தஞ்சை அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
    • மாவட்ட கருவூலம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்காபங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் மாசிமகத்தையொட்டி நாளை (புதன்கிழமை) மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக இந்த மாதம் வருகிற 29-ந்தேதி (சனிக்கிழமை) தஞ்சை அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

    இந்த உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால் மாவட்ட கருவூலம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருமண உதவித்தொகை ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
    • பால் ஊற்றும் உறுப்பினர்களிடம் இருந்து மாதத்துக்கு பெறப்படும் சந்தா தொகை 10 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    பேரறிஞர் அண்ணா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நல நிதியத்தின் கீழ் பால் உற்பத்தியாளர்களுக்கு இழப்பீடு மற்றும் இதர நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி உதவிகள் உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக இந்த விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அரசு முதன்மை செயலாளர் சத்யபிரத சாகு பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

    பால் உற்பத்தியாளர்கள் விபத்தில் மரணம் அடைந்தால் வழங்கப்படும் இழப்பீடுத் தொகை ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2 குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாகவும், ஒரு பெண் குழந்தைக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாகவும், விபத்தில் ஊனமுற்ற பால் உற்பத்தியாளர் ஓர் உறுப்பை இழந்தால் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.75 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாகவும், 2 உறுப்பை இழந்தால் ரூ.1.75 லட்சத்தில் இருந்து ரூ.2.25 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    இதை செயல்படுத்த பால் ஊற்றும் உறுப்பினர்களிடம் இருந்து மாதத்துக்கு பெறப்படும் சந்தா தொகை 10 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சங்கம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திடம் இருந்து மாதத்திற்கு பெறப்படும் சந்தா தொகை 50 பைசாவில் இருந்து ஒரு ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×