search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "anbil mahesh poyyamozhi"

    • பிளஸ்-2 தேர்வில் மாணவ-மாணவிகள் இந்த ஆண்டு 94.56 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
    • மாணவர் சின்னதுரை பிளஸ் 2 பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

    சென்னை:

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. பிளஸ்-2 தேர்வில் மாணவ-மாணவிகள் இந்த ஆண்டு 94.56 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த வருடம் தேர்ச்சி விகிதம் அரை சதவீதம் அதிகமாகும்.

    நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரை பிளஸ் 2 பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

    இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் தள பதிவில்,

    மாணவரை தொடர்புகொண்டு அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, 11.08.2023 அன்று நான் உறுதியளித்தபடி அவர் விரும்பும் கல்லூரியில் இணைவதற்கு உதவுவதாகவும், அவரின் உயர் கல்விக்கு அனைத்து வகையிலும் துணை நிற்பேன் என்றும் உறுதிப்படுத்தினேன்.

    "கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம் - மு.க" என்று தெரிவித்துள்ளார்.


    • பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும்போது மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்குவதற்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்படுகிறது என்பதை ஆய்வு செய்தார்.
    • தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஜூன் வரை இதன் தாக்கம் இருக்கும் என தெரிகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கல்வித்துறை உயர் அதிகாரிகளை அடையாறில் உள்ள தனது இல்லத்துக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார்.

    இதில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன், இயக்குனர் அறிவொளி, மாதிரி பள்ளிகள் இயக்குனர் சுதன், தொடக்கக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், பாட நூல் கழக இயக்குனர் கஜலட்சுமி, தேர்வுத்துறை இயக்குனர் சேதுவர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது பற்றியும் 10, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புக்கான தேர்வு முடிவுகளை எப்போது வெளியிடலாம் என்பது பற்றியும் விரிவாக விவாதித்ததாக தெரிகிறது.

    பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் மே 6-ந் தேதி தோவு முடிவுகள் வெளியாகும் என ஒரு தற்காலிக தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதே தேதியில் வெளியிட வாய்ப்புள்ளதா? என்பது பற்றியும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். இதே போல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை எந்த தேதியில் வெளியிட வாய்ப்பு உள்ளது? என்பது பற்றியும் கேட்டறிந்தார்.

    மாநிலம் முழுவதும் புதிய மாணவர் சேர்க்கை எந்த அளவில் நடைபெறுகிறது? எத்தனை லட்சம் மாணவர்கள் சேருவார்கள்? என்பது பற்றியும் ஆலோசித்தார். பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும்போது மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்குவதற்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்படுகிறது என்பதையும் ஆய்வு செய்தார்.

    இப்போது வெயில் சுட்டெரிப்பதால் பள்ளிக்கூடங்களை ஜூன் முதல் வாரம் திறக்க முடியுமா? அல்லது கடந்த ஆண்டைப் போல் பள்ளி திறப்பை தள்ளி போடலாமா? என்பது பற்றியும் ஆலோசித்தார்.

    பெரும்பாலான பள்ளிகள் ஜூன் 3-ந்தேதி திறப்பதற்கு தயாராகி வருவதால் அந்த தேதியில் திறக்க சொல்லலாமா? அல்லது வேறு தேதியை அறிவிக்கலாமா? என்பது பற்றியும் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டார்.

    தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஜூன் வரை இதன் தாக்கம் இருக்கும் என தெரிகிறது. எனவே பள்ளிக்கூடங்கள் திறப்பதை ஜூன் 2-வது வாரத்துக்கு தள்ளி போட முடியுமா? என்று ஆலோசித்ததாகவும் தெரிகிறது.

    • ஆதார் புதுப்பித்தல் செய்யப்பட்டு ஆதார் பதிவினை வங்கிக்கணக்குடன் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
    • பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் சிரமம் பெருமளவில் குறைக்கப்படும்.

    சென்னை:

    முதலமைச்சரின் முயற்சியால் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில், பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    மாணவர்களின் கற்றலில் எவ்விதத் தொய்வும் ஏற்படாதவாறு உதவித்தொகைகள் மற்றும் ஊக்கத்தொகைகள் அனைத்தும் தங்குதடையின்றி மாணவர்களைச் சென்றடையும் வகையில் 'நேரடி பயனாளர் பரிவர்த்தனை' முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

    இப்பணியை எளிமைப்படுத்தும் விதத்தில் வரும் கல்வியாண்டில் (2024-2025) 6-ம் வகுப்பில் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி மூலமாகவே வங்கிக்கணக்குகள் தொடங்கும் வசதி தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

    அப்போதே ஆதார் புதுப்பித்தல் செய்யப்பட்டு ஆதார் பதிவினை வங்கிக்கணக்குடன் இணைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் சிரமம் பெருமளவில் குறைக்கப்படும்.

    பள்ளியில் பயிலும் மாணவர்கள் உதவித்தொகையைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போதும் பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வி பயில்வதற்கு விண்ணப்பிக்கும் நேர்விலும், வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் நேரத்திலும், சாதிச்சான்றிதழ், வருமானச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரியாக இருப்பின் அதற்குரிய சான்றிதழ் என நால்வகைச் சான்றிதழ்கள் அவசியமாகின்றன. இந்நால்வகைச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு தற்போது அரசு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்து தேவையான சான்றிதழ்களை பெற்று வருகின்றனர்.

    பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் இதற்கான சிரமத்தைக் குறைக்கும் வகையில், மாணவர்கள் படிக்கும் அந்தந்த பள்ளிகளில் 6-ம் வகுப்பில் சேரும்போதே, தேவையான ஆவணங்களை பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன் விவரங்கள் கல்வி மேலாண்மைத் தகவல் முறைமை தளத்தில் உள்ளீடு செய்யப்பட்டு வருவாய்த்துறையினருக்கு அனுப்பிவைக்கப்படும்.

    விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தளத்தின் வாயிலாக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு உரிய மாணவர்கள் வசம் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

    இந்த வாய்ப்பை அனைத்து மாணவர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விடுத்துள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

    • ஆசிரியர்களின் நலன் கருதி வரும் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறைக்காக ரூ.44,042/- கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.
    • பள்ளிக் குழந்தைகளின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு ஆர்ப்பாட்டத்தினைக் கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்

    சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு ஒரு வார காலமாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார் .

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு ஒரு வார காலமாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களின் நிலையை கருத்தில் கொண்டு மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் ஆசிரியர்களுக்கு விடுக்கும் அன்பான வேண்டுகோள்.

    கடந்த ஒரு வார காலமாக தங்களின் கோரிக்கையினை நிறைவேற்றிட தொடர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்றீர்கள். பள்ளிகளில் தற்போது தேர்வு காலமாக இருப்பதனாலும் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக ஊடகங்களின் வழியாக கருத்துக்கள் தெரிவிப்பதனையும் கருத்தில் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் இருந்து விலகி தத்தமது பள்ளிகளுக்கு சென்று கல்விப் பணியாற்றிட வேண்டுமாய் இதன் மூலம் கேட்டுக் கொள்கின்றேன்.

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மனதில் ஆசிரியர்கள் என்றும் நீங்கா இடம் பெற்று இருப்பதால் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி வரும் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறைக்காக ரூ.44,042/- கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

    தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட 50,000 ஆசிரியர்களின் இன்னல்களை தீர்க்கும் வகையில் நமது கழக அரசு கால முறை ஊதியத்தினை ஒரே நாளில் வழங்கி சிறப்பித்துள்ளது. மேலும், நமது கழக அரசு ஆசிரியர்களின் கோரிக்கைகளை பல்வேறு நிலையில் தீர்த்து வைத்து ஆசிரியர்களின் நலனுக்காக செயல்படும் அரசாக இருந்து வருகிறது.

    தமிழ்நாடு அரசு இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க மூவர் குழு ஒன்றை அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.

    சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மூன்று சுற்று கருத்து கேட்புக் கூட்டங்களை நடத்தியுள்ளது. மற்ற சங்கப் பிரதிநிதிகளுடன் அடுத்த சுற்று கருத்துக் கேட்பு நடைபெற வேண்டியுள்ளது. அதன் பின்னர் இப்பொருள் சார்ந்து விரிவான அறிக்கையினைப் பெற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    கல்வியாண்டின் இறுதி நிலையில் இருப்பதால் மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்வதற்கு ஆயத்தப்படுத்த வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். கற்றல் கற்பித்தல் மற்றும் தேர்வு பணியில் கவனம் செலுத்தி மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக பணிபுரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    ஆசிரியர்களாகிய நீங்கள் தான் குழந்தைகளின் இரண்டாவது பெற்றோர்கள் என்பதால் பள்ளிக் குழந்தைகளின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு ஆர்ப்பாட்டத்தினைக் கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • சட்ட அலுவலருக்கு உதவியாக சட்ட வரைவு நுட்பம் தெரிந்த 4 பேர் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட உள்ளனர்.
    • ஒரு பள்ளியின் வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தினுடைய பங்கீடு முக்கியமானது.

    சென்னை:

    பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாக அரங்கில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். இதில் பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் குமரகுருபரன், தொடக்கக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு புதிதாக 14 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்துகளை தெரிவித்தார்.

    மேலும், பள்ளிக்கல்வித் துறை சார்ந்த வழக்குகளை கையாள 4 சட்ட வல்லுனர்கள் நியமனம் செய்வது உள்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது கூறியதாவது:-

    பள்ளிக்கல்வித் துறையில் நிலுவையில் உள்ள வழக்குகளை கையாளுவதற்கு பல்வேறு கட்டங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கிறது. இதற்காக நம்மிடம் ஒரே ஒரு சட்ட அலுவலர் மட்டுமே இருக்கிறார்.அந்த சட்ட அலுவலருக்கு உதவியாக சட்ட வரைவு நுட்பம் தெரிந்த 4 பேர் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து ஊதியம் வழங்க அனுமதி வழங்கப்படுகிறது.

    மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழு 5 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டப்படுகிறது. ஒரு பள்ளியின் வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தினுடைய பங்கீடு முக்கியமானது.

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்காக வினா-வங்கிகள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் வழங்கப்பட்டது. கொரோனா தொற்றுக்கு பிறகு அது தயார் செய்யப்படாமல் இருந்தது. வருகிற ஜனவரி மாதத்தில் இருந்து மீண்டும் வினா-வங்கி புத்தகங்கள் வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பேராசிரியரும், பேச்சாளருமான பர்வீன் சுல்தான ஆகியோர் உரைநிகழ்த்தினர்.
    • 15 மாவட்டத்திற்குள் வருவதற்கு நீங்கள் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும்.

    தருமபுரி:

    தருமபுரியில் தனியார் கல்லூரி கலை அரங்கில் தருமபுரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை மற்றும் கல்வியாளர்கள் சங்கம் இணைந்து ஆசிரியர்களுடன் அன்பின் நம்மில் ஒருவர் என்னும் நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    இதில் ஆசிரியர்களுடன் அன்பில் என்ற தலைப்பில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உரையாற்றினார். முன்னதாக பல்வேறு தலைப்புகளில் தொடக்க கல்வி துறை இயக்குனர் கண்ணப்பன், பள்ளி கல்வி துறை இயக்குனர் அறிவொளி, பேராசிரியரும், பேச்சாளருமான பர்வீன் சுல்தான ஆகியோர் உரைநிகழ்த்தினர். சிறப்புரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில்;-

    தமிழகம் முழுவதும் பள்ளி கல்வி துறை சார்பில் அரசு பள்ளிகளில்கள ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இதற்கெல்லாம் ரோல் மாடல் நமது தலைமை ஆசிரியரான தமிழக முதல்வர் தான். ஆசிரிய பெருமக்கள் இரவு பகல் பாராமல் திட்டமிட்டு உழைத்து வருவதாகவும், ஆனால் கல்வியாண்டு இறுதியில் அந்த பள்ளியில் எவ்வளவு தேர்ச்சி விகிதம் பெற்றது என்பது நமக்கான அளவுகோலாக இருக்க வேண்டும். அதற்காக நீங்கள் அங்கீகாரம் பெறவேண்டுமானல் கல்வியில் பின்தங்கியுள்ள நிலையில் உள்ள தருமபுரி மாவட்டம் தேர்ச்சி சதவிகிதம் மாநில அளவில் 15 மாவட்டத்திற்குள் வருவதற்கு நீங்கள் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும்.

    தமிழக முதல்வர் பள்ளி கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து சிறப்பாக செயல்பட அறிவுறுத்தி உள்ளார்கள். மேலும் பேசிய அவர் ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுக்கு வெறும் கல்வியை மட்டும் போதிக்காமல் நாட்டு நடப்பு பற்றியும் சொல்லி தர வேண்டும். கல்வியில் பின்தங்கிய என்ற வார்த்தையே வரக்கூடாது என நினைப்பவர் நமது முதலமைச்சர் என்றும் வளர்ச்சி பெற்ற மாவட்டங்களாக உருவாக்குவதே நமது லட்சியம் என நினைப்பவர் அவர், அதற்கு உதாரணம் தாய்லாந்தின் பிரசித்தி பெற்ற பல்கலை கழகத்தில் இந்தியாவை சார்ந்த 3 மாணவிகள் உயர்கல்வி மேற்படிப்பிற்காக தேர்ந்தெடுக்கபட்ட நிலையில் அதில் தமிழகத்தை சேர்ந்த 2 அரசு பள்ளி மாணவிகள் தேர்தெடுக்கபட்டுள்ளனர் என்பதும், அதில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு மாணவி என்பது மிகவும் பெருமைக்குரியது. இதற்கு முழு காரணம் ஆசிரியர்கள் தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி மற்றும் இருபால் ஆசிரியர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.

    • லோயர் கேம்ப்பில் உள்ள பென்னிகுவிக் சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • மாணவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என அமைச்சர் பார்வையிட்டார்.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தேனிக்கு வந்தார். முன்னதாக லோயர் கேம்ப்பில் உள்ள பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதன் பின்னர் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள், மாணவர்கள் எண்ணிக்கை குறித்த விவரத்தை கேட்டறிந்தார். நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு வழங்கவேண்டிய தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு விட்டதா என கேட்டறிந்தார்.

    மாணவர்களின் கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தையும் கேட்டறிந்த அமைச்சர் அன்பில் மகேஷ் நடப்பு கல்வி ஆண்டில் மேலும் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என அறிவுரைகள் வழங்கினார். மாணவர்களுக்கு மதிய உணவு தயாரிக்கப்படும் சமையல் கூடத்தையும் பார்வையிட்டு அங்கு தரமான உணவு, சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் பள்ளி மாணவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்பட்டுள்ளதா எனவும் பார்வையிட்டார். மாணவர்களையும் தனியாக வரவழைத்து அவர்களிடம் தரமான கல்வி அளிக்கப்படுகிறதா? வேறு ஏதேனும் குறைகள் உள்ளதா? என கேட்டறிந்தார். அமைச்சர் எவ்வித முன்னறிவிப்பின்றி அரசு பள்ளிக்குள் வந்து ஆய்வு மேற்கொண்டதுடன் மாணவர்களிடமும் விசாரணை நடத்தியது ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை.
    • சம ஊதியம் தொடர்பாக குழு அமைக்கப்பட்டு 3 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

    சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு வாரத்திற்கும் மேலாக முகாமிட்டு போராட்டத்தை முன்னெடுத்து செல்கின்றனர்.

    சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் கோரிக்கைகளை முதலமைச்சருடன் கலந்து ஆலோசனை செய்து விரைவில் முடிவை அறிவிக்கிறோம் என அமைச்சர் தெரிவித்து இருந்தார்.

    "பகுதி நேர ஆசிரியர்கள் 10,359 பேர் பணியில் உள்ளனர். அவர்களுக்கான ஊதியம் 12,500 ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சம வேலை சம ஊதியம் தொடர்பாக குழு அமைக்கப்பட்டு 3 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். ஆசிரியர்கள் இதனை ஏற்று பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர். இது குறித்து பேசிய அவர்கள், "ஓராண்டுக்கு பிறகு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும். எங்கள் கோரிக்கையை ஏற்று கொண்டதற்கு அரசுக்கு நன்றி. முழு நேர பணி வழங்கப்பட வேண்டும்," என்று தெரிவித்தனர்.

    • ஆசிய விளையாட்டில் இந்தியா இதுவரை இல்லாத வகையில் அதிக வீரர்களை அனுப்பியுள்ளது.
    • ஆசிய விளையாட்டின் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்.

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஆசிய விளையாட்டில் இந்தியா இதுவரை இல்லாத வரையில் அதிக வீரர்களை சீனாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

    இந்த நிலையில், இன்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெள்ளி என இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.88 மீட்டர் தூரமும், கிஷோர் ஜெனா 87.54 மீட்டர் தூரமும் ஈட்டியெறிந்து அசத்தினர்.

    ஆசிய விளையாட்டில் இந்திய வீரர்கள் துவக்கம் முதலே அதிகளவில் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இதுவரையில், இந்தியா 81 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 18 தங்கம், 31 வெள்ளி மற்றும் 32 வெண்கலம் பதக்கங்கள் அடங்கும்.

    • அவர்களுக்கான ஊதியம் 12,500 ஆக உயர்த்தி வழங்க முடிவு.
    • குழு அமைக்கப்பட்டு 3 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

    சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு வாரத்திற்கும் மேலாக முகாமிட்டு போராட்டத்தை முன்னெடுத்து செல்கின்றனர்.

    சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் கோரிக்கைகளை முதலமைச்சருடன் கலந்து ஆலோசனை செய்து விரைவில் முடிவை அறிவிக்கிறோம் என அமைச்சர் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், "பகுதி நேர ஆசிரியர்கள் 10,359 பேர் பணியில் உள்ளனர். அவர்களுக்கான ஊதியம் 12,500 ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சம வேலை சம ஊதியம் தொடர்பாக குழு அமைக்கப்பட்டு 3 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். ஆசிரியர்கள் இதனை ஏற்று பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் தெரிவித்து உள்ளார்.

    • நிலவின் தென் துருவத்தின் மேற்பரப்பில் பள்ளம் பள்ளமாக காட்சியளிக்கும் நிலாவை பல கோணங்களில் படம் பிடித்து அனுப்பியது.
    • "சந்திரயான் 3" வெற்றி குறித்த கட்டுரை, அடுத்த கல்வியாண்டில் பாடத்திட்டங்களில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    நிலவின் தென்துருவத்தை அலசி ஆராய 'சந்திரயான்-3' விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பியதில் இருந்து, ரோவர் எடுத்த அபூர்வமான புகைப்படங்களை எல்லாம் இஸ்ரோ வெளியிட்டு வருகிறது.

    எந்த நாடும் தரையிறங்காத நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் ஊர்ந்து சென்ற காட்சியும் இந்தியர்களை ஆனந்தத்தில் பெருமை கொள்ள செய்தது.

    குறிப்பாக நிலவின் தென் துருவத்தின் மேற்பரப்பில் பள்ளம் பள்ளமாக காட்சியளிக்கும் நிலாவை பல கோணங்களில் படம் பிடித்து அனுப்பியது.

    வழிசெலுத்தல் கேமராவில் (நேவிகேஷன் கேமரா) லேண்டர் புகைப்படம் எடுத்து அனுப்புகிறது. இதுதான் நிலவின் காட்சியென இஸ்ரோ வெளியிடும் புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் கோடிக்கணக்கான இந்தியர்கள் இதயத்தை கவர்ந்து வருகிறது. அத்துடன் உலகமே இஸ்ரோவின் காட்சிகளை உற்று நோக்கி வருகிறது.

    இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:

    "சந்திரயான் 3" வெற்றி குறித்த கட்டுரை, அடுத்த கல்வியாண்டில் பாடத்திட்டங்களில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும். பாடத்திட்டத்தில் "சந்திரயான் 3" கட்டுரையை சேர்ப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உடல்நலக் குறைவால் அமைச்சர் அன்பில் மகேஷ் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதி
    • தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் நலமுடன் உள்ளார் என மருத்துவமனை தெரிவித்துள்ளது.

    பெங்களூரு:

    பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி சென்றபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலிப்பதாக கூறியதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் அங்கிருந்து பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    இந்நிலையில், பெங்களூரில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றிய மருத்துவஅறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

    அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வயிற்றின் மேல்பகுதியில் வலி ஏற்பட்ட நிலையில் நாராயணா ஹெல்த் சிட்டியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். திரவங்கள் மற்றும் வலி நிவாரணிகள் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நலமாக உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×