என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பிடித்த தலைவர்கள் பின்னால் செல்லுங்கள்... ஆனால் உங்களது உயிர் மிக முக்கியம்- அமைச்சர் அன்பில் மகேஷ்
    X

    பிடித்த தலைவர்கள் பின்னால் செல்லுங்கள்... ஆனால் உங்களது உயிர் மிக முக்கியம்- அமைச்சர் அன்பில் மகேஷ்

    • தமிழக வெற்றிக்கழகத்தினர் கூட்டத்தை ஒருங்கிணைப்பு செய்வதில் தவற விட்டுவிட்டனர்.
    • அடுத்த தலைமுறை இளைஞர்கள், மாணவர்கள் செத்து கிடக்கும்போது அழுகை வந்தது.

    திருச்சி:

    பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கரூர் சம்பவத்தில் நாங்கள் உடனடியாக சென்றதை பற்றி சிலர் தவறாக பேசுவது மிகவும் வேதனையாக உள்ளது. தமிழக அரசு சார்பில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தில் அனைவரும் அவரவருடைய கருத்துக்களை கூறுவர்.

    நான் நாகப்பட்டினத்தில் இருந்து வந்து கொண்டிருக்கும் பொழுது எனக்கு செய்தி வந்தது. இரவு 10 மணிக்கு நான் கரூர் சென்றேன். நம் கண் முன்னாடியே பிணவறை முன்பு பள்ளி மாணவர்கள் செத்து ஸ்ட்ரக்சரில் தூக்கி வரும் பொழுது எந்த மனிதனாக இருந்தாலும், எந்த தலைவனாக இருந்தாலும் இறப்பின் பொழுது மன வேதனை இருக்கத்தான் செய்யும்.

    கரூரில் நடந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. நான் எந்த கருத்து சொன்னாலும் சரி இருக்காது. அவர் உடனடியாக களத்தில் சென்று கண்டுபிடித்து யார் மீது தவறு? என்று கூறினாலும் அது தவறுதான்.

    தமிழக வெற்றிக்கழகத்தினர் கூட்டத்தை ஒருங்கிணைப்பு செய்வதில் தவற விட்டுவிட்டனர். அனைவருக்கும் மனிதாபம் என்று ஒன்று உள்ளது .உயிரிழப்புகளில் அவர்களுக்கும் மனவேதனை இருக்கும். அந்த விதத்தில் இது சார்ந்து ஆணையம் சார்பில் ஒரு நல்ல அறிக்கை வரும் பொழுது அது பற்றி பேசலாம்.

    அடுத்த தலைமுறை இளைஞர்கள், மாணவர்கள் செத்து கிடக்கும்போது அழுகை வந்தது. அன்புமணி ராமதாசிற்கு நேற்றே நான் பதில் கூறிவிட்டேன். உணர்ச்சியற்ற இதுபோல் சிலர் இருக்கும் காலகட்டத்தில் நாங்களும் பொது வாழ்வில் இருக்கிறோம். மக்கள் நலன் சார்ந்து எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நாங்களும் இருக்கின்றோம்.

    டெட் தேர்ச்சி என்பது மிக அவசியம் என்ற கோர்ட்டு தீர்ப்பு அனைத்து ஆசிரியர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் அழைத்து இது குறித்து கருத்து கேட்கப்பட்டது. மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கவும் பள்ளி கல்வி முறை சீர்குலைவதை தடுக்கவும் உச்ச நீதிமன்றத்தில் பள்ளி கல்வித்துறை தமிழக அரசு சார்பாக மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளோம். ஆசிரியர்களை பாதுகாப்பது ஒரு புறம் இருந்தாலும் லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வியில் எந்த தடையும் ஏற்படாமல் பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதில் நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

    ஒற்றுமை மிக முக்கியம். ஒரு சிலர் பதவி உயர்வு சார்ந்த கோரிக்கைகளை வைத்து வருகிறார்கள். ஒரு சிலர் வாழ்வாதாரமே போகக்கூடிய நிலை இந்த டெட் தீர்ப்பில் உள்ளது. டெட் தீர்ப்பில் முதலில் ஆசிரியர்களை காப்பாற்றுவோம். அதன் பிறகு இதில் உள்ள சிக்கல்களை முதலமைச்சருடன் கலந்து பேசி சரி செய்வோம்.

    அரசாங்கம் அன்பு கரங்கள் திட்டத்தில் அயல் நாட்டிற்கு வேலை செல்வது வரை கல்வித் துறையில் பல முன்னேற்றத் திட்டங்களை கொண்டு வருகிறோம். மாணவர்கள் அறிவு சார்ந்த கருத்துக்களை பெற்று யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு தெரிவியுங்கள். படிக்க வேண்டிய வயதில் படியுங்கள். அதில் கவனம் செலுத்துங்கள்.

    உங்களை நம்பி தான் வீடும், அரசும் உள்ளது. உங்களுக்கு பிடித்த தலைவர்கள் பின்னால் நீங்கள் செல்லுங்கள். நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. உங்களது உயிர் மிக முக்கியம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×