என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தொடர்ந்து விமர்சனம் வைத்தாலும் தி.மு.க. வெற்றி பெற்றுக்கொண்டே இருக்கிறது - விஜய்க்கு அமைச்சர் பதிலடி
- இந்தியா முழுவதும் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கக்கூடிய நிதி என்பது 41 சதவீதத்திலிருந்து இருந்து 50 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
- எல்லா தரப்பினருக்கும் ஏமாற்றம் அளிக்கக்கூடிய ஒரு பட்ஜெட்டாக தான் இது அமைந்திருக்கிறது.
திருச்சி:
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் அண்ணா நினைவு நாள் ஊர்வலம் திருச்சியில் இன்று நடந்தது. இதில் பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
இன்று மௌன ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு அஞ்சலி செலுத்தி உள்ளோம். எங்களது உறுதிமொழியாக 2026 ல் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற கோரிக்கையுடனும், கலைஞரின் ஐம்பெரும் முழக்கங்களையும் இங்கே எழுப்பியிருக்கிறோம்.
இந்த ஆண்டு முதல்வர் கூறியது போல் கருத்து கணிப்புகள் எல்லாம் கடந்து இன்னும் அதிகமான இடங்களில் நாங்கள் வெல்வோம். நாட்டு மக்களுக்காக தொடர்ந்து நாங்கள் உழைப்போம். மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்றார்.
அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவை யாவும் திமுக முதற்றே உலகு என விஜய் பேசியுள்ளாரே என கேட்டபோது, அது அவர்களின் கட்சி சார்ந்து ஆண்டு விழாவில் அவர்களின் தோழர்களை உற்சாகப்படுத்துவதற்காக அவர் பேசியது.
எங்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டின் தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு விமர்சனங்களை தொடர்ந்து எங்கள் மேல் வைத்து வந்தாலும் தொடர்ந்து நாங்கள் வெற்றி பெற்றுக்கொண்டே இருக்கிறோம் என்றால் நாங்கள் வென்றது இடங்களை அல்ல மக்களின் மனங்களை என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். மக்களின் மனங்களை வெல்வதற்காக என்னென்ன பணிகளை செய்ய வேண்டுமோ அந்த பணிகளை நாங்கள் செய்வோம்.
இந்தியா முழுவதும் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கக்கூடிய நிதி என்பது 41 சதவீதத்திலிருந்து இருந்து 50 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். 16ஆவது நிதி குழுவிலாவது அதை சரி செய்யப்படும் என நினைத்தோம் ஆனால் இந்த பட்ஜெட்டிலும் 41 சதவீதமே தொடர்கிறது என்பது கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது.
குறிப்பாக அந்த 41 சதவீதத்தையும் பிரித்து தரும்பொழுது தமிழ்நாட்டிற்கு வெறும் 4.097 சதவீதம் தான் கிடைக்கிறது. இவ்வாறு குறைத்து கொடுத்தால் திட்டங்களை எப்படி எங்களால் செயல்படுத்த முடியும்.
நாங்கள் எதிர்பார்த்த மெட்ரோ ரெயில் திட்டம் உள்ளிட்ட பல பெரிய பெரிய ப்ராஜெக்ட்களுக்கான எந்த நிதியையும் வழங்காமல் குறிப்பாக பள்ளி கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய 3548 கோடி ரூபாயை பற்றி இந்த பட்ஜெட்டில் எதுவுமே இல்லை சிறப்பாக செயல்பட்ட ஜல்ஜீவன் மிஷின் சார்பாக 3112 கோடிகளை வழங்காமலும், திருச்சியில் உள்ள இரண்டு அமைச்சர்கள் சார்ந்துள்ள துறைக்கு வழங்க வேண்டிய நிதி வழங்கப்படாமல் உள்ளது என்றால் இது எப்படிப்பட்ட பட்ஜெட்?
விவசாயிகளாக இருந்தாலும், ஏழை எளிய மக்களாக இருந்தாலும் எல்லா தரப்பினருக்கும் ஏமாற்றம் அளிக்கக்கூடிய ஒரு பட்ஜெட்டாக தான் இது அமைந்திருக்கிறது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.






