search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "vadamadurai"

  வடமதுரை அருகே வறட்சியால் பாதித்த தென்னை மரங்களை வேரோடு வெட்டி செங்கல் சூளைக்கு விவசாயிகள் அனுப்பி வருகின்றனர்.

  வடமதுரை, மே. 25-

  திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர், எரியோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தென்னை விவசாயம் அதிக அளவில் நடந்து வருகிறது. கடந்த வருடம் கஜா புயலால் இப்பகுதியில் ஏராளமான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து பாதிக்கப்பட்டன.

  இப்பகுதியில் அதிகா ரிகள் பார்வையிட்டு சேத மடைந்த தென்னையை ஓரளவுக்கு கணக்கிட்டு சென்றனர். ஆனால் பல விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து எதிர்பார்த்த பருவ மழையும் பெய்யாததால் தென்னை மரங்கள் பட்டுப் போய் கருகத் தொடங்கியது.

  இதனால் காய்ந்த மரங்களை விவசாயிகள் வேரோடு வெட்டி செங்கல் சூளைக்கு அனுப்பி வருகின்றனர். இப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. சூளை உரிமையாளர்கள் நேரடியாக வந்து பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை வெட்டி விறகுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

  ரூ. 50 முதல் ரூ.100 வரை விலை கொடுத்து இவை வாங்கிச் செல்லப்படுகிறது. நீண்ட நாள் பலன் தரக்கூடியது என்று நம்பி தென்னையை பயிரிட்ட விவசாயிகள் தற்போது கண்ணீர் வடித்து வருகின்றனர்.

  வடமதுரை, அய்யலூர் பகுதிகளில் சூதாட்ட கும்பல் அட்டகாசம் மீண்டும் அதிகரித்துள்ளது.

  வடமதுரை:

  வடமதுரை, அய்யலூர் பகுதியில் விவசாயிகளே அகதிகம் உள்ளனர். மம்மானியூர், ஆலம்பட்டி, கொம்பேறிபட்டி, கிணத்துப்பட்டி, புத்தூர், குருந்தம்பட்டி, செங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் மழை இல்லாததால் வறட்சி அதிகரித்துள்ளது.

  இதனால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். கடந்த மாதம் சூதாட்ட கும்பலை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அபராதத்துடன் அவர்களை எச்சரித்து அனுப்பினர். இதனால் சூதாட்டம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது.

  விவசாயிகள் கஷ்டத்தை பயன்படுத்தி தோட்டங்களை வாடகைக்கு எடுத்து சூதாடி வருகின்றனர். குறிப்பாக மலை கிராமங்களுக்கு செல்ல நீண்ட நேரம் ஆகும் என்பதால் சூதாட்ட கும்பல் இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி விளையாடி வருகின்றனர்.

  மேலும் ஒருவரை தோட்டத்தின் வெளியே காவலுக்கு நிறுத்துகின்றனர். போலீசார் வந்தால் தகவல் தருகின்றார். இதனால் பெரும்பாலான சூதாட்ட கும்பல் போலீசாரிடம் சிக்குவதில்லை. விவசாயிகள், கூலித்தொழிலாளர்களுக்கு இந்த கும்பல் கடனாக பணம் தருகின்றனர். சூதாட்டத்தில் தோற்று விட்டால் சைக்கிள், பைக் உள்ளிட்ட வாகனங்களை கும்பல் அவர்களிடம் இருந்து பிடுங்கிக் கொள்கிறது.

  ஏற்கனவே மதுவால் ஏராளமான குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. இந்த நிலையில் சூதாட்டமும் சேர்ந்து கொண்டதால் தங்கள் சம்பளத்தின் பெரும் பகுதியை இதற்கே செலவு செய்து விடுகின்றனர். எனவே பல குடும்பங்கள் சிரமம் அடைந்து வருகின்றன. எனவே போலீசார் இவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

  வடமதுரை அருகே பள்ளி மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  வடமதுரை:

  வடமதுரை அருகே உள்ள வன்னியபாறைப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் செல்லம்மாள் (வயது16). இவர் இதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

  சம்பவத்தன்று செல்லம்மாள் தனது பெற்றோரிடம் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் வீட்டில் பார்த்தனர். எங்கு தேடியும் காணாததால் அவரது தந்தை பெருமாள் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

  அந்த புகாரில் யாரேனும் தனது மகளை கடத்தி சென்றிருக்க கூடும்? என்று தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் மாயமான பள்ளி மாணவியை தேடி வருகின்றனர்.

  வடமதுரை அருகே குடிநீர் பிரச்சினையில் ஏற்பட்ட மோதலில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

  வடமதுரை:

  திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள புத்தூர் ஆதி திராவிடர் காலனியில் இரு தரப்பினரிடையே முன் விரோதம் இருந்து வந்தது. இவர்களுக்குள் அடிக்கடி மோதல் எற்பட்டு வந்ததால் ஊர் பெரியவர்கள் சமாதானம் செய்து வந்தனர்.

  நேற்று மாலை இங்குள்ள பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்த போது மீண்டும் அவர்களுக்கள் மோதல் ஏற்பட்டது.

  இதனால் கம்பு, அரிவாள் போன்ற ஆயுதங்களால் இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். இதில் முருகன் உள்பட 2 பேருக்கு அரிவாள வெட்டு விழுந்தது. மேலும் பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  இது குறித்து வடமதுரை போலீசார் 10-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  வடமதுரை அருகே வீட்டில் கள்ளத்துப்பாக்கி பதுக்கிய விவசாயி கைது செய்யப்பட்டார்.

  வடமதுரை:

  தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு உரிமம் பெற்று வைத்துள்ள துப்பாக்கிகளை அந்தந்த எல்லைக்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்குமாறு தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி துப்பாக்கிகள் வைத்திருந்தவர்கள் அதனை ஒப்படைத்து வருகின்றனர்.

  வடமதுரை அருகே விவசாயி ஒருவர் வீட்டில் கள்ளத்தனமாக துப்பாக்கி வைத்து பயன்படுத்தி வருவதாக வேடசந்தூர் டி.எஸ்.பி.க்கு தகவல் கிடைத்தது. அதன்படி டி.எஸ்.பி. ரவிக்குமார் உத்தரவின் பேரில் போலீசார் ரகசிய சோதனை நடத்தினர்.

  நாடு கண்டனூரைச் சேர்ந்த முருகன் (41) என்பவர் கள்ளத்தனமாக வீட்டில் துப்பாக்கி வைத்து பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. இவருக்கு திருமணம் ஆகி ராஜலெட்சுமி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். தனது விவசாய நிலத்தில் விலங்குகள் உள்ளே வராமல் இருப்பதற்காக நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். இருந்த போதும் கள்ளத்தனமாக துப்பாக்கி வைத்திருந்ததால் அதனை பறிமுதல் செய்த போலீசார் முருகனையும் கைது செய்தனர்.

  வடமதுரை அருகே பைக்குகள் மோதிய விபத்தில் புது மாப்பிள்ளை பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  வடமதுரை:

  வடமதுரை அருகே உள்ள காணப்பாடி புதுப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னமணி மகன் மணிகண்ட பிரபு (வயது 26). இவர் சம்பவத்தன்று தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மற்றொரு பைக் மோதியதில் படுகாயமடைந்தார்.

  மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் சாந்தி என்பவருடன் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  மற்றொரு சம்பவம்...

  வடமதுரை அருகே உள்ள தென்னம்பட்டியைச் சேர்ந்தவர் சிங்காரம் (34). இவருக்கு லலிதா என்ற மனைவியும் வெற்றி (10) என்ற மகனும் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக சிங்காரம் சம்பவத்தன்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தார். பலத்த காயங்களுடன் திருச்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.

  வடமதுரையில் மர்மமான முறையில் இறந்த மில் காவலாளி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  வடமதுரை:

  வடமதுரை அருகே நடுப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (வயது40). இவரது மனைவி உமாமகேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.

  கண்ணன் வடமதுரை மூகாம்பிகை மில்லில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல் பணியில் இருந்த கண்ணன் திடீரென மயங்கி விழுந்தார். இதனை பார்த்த சக தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து கண்ணணை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  வடமதுரை, அய்யலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மில்களில் தொடர்ந்து மர்மமான முறையில் தொழிலாளர்கள் இறந்து வருகின்றனர். பெண்கள் தற்கொலை செய்தது, பெண்கள் வி‌ஷயத்தில் 3 வாலிபர்கள் கொல்லப்பட்டது என அடிக்கடி பரபரப்பு ஏற்பட்டது.

  ஆனால் இதுவரை எந்த மரணத்திற்கும் சரியான பதில் கிடைக்கவில்லை. இந்த நிலையில் பணியின்போது காவலாளி உயிரிழந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  எனவே அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள மில்களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

  திண்டுக்கல் அருகே வடமதுரை, அய்யலூர் பகுதிகளில் போலி டாக்டர்கள் நடமாட்டம் மீண்டும் அதிகரித்துள்ளது.

  வடமதுரை:

  திண்டுக்கல் அருகே வடமதுரை, அய்யலூரை சுற்றி கொம்பேறிபட்டி, பூசாரிபட்டி, புதுப்பட்டி, சிலுவத்தூர், சித்தூர், மலைப்பட்டி உள்ளிட்ட மலைகிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் பருவநிலை மாற்றம் காரணமாக மர்மகாய்ச்சல் மற்றும் வாந்தி, பேதியால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  சிகிச்சை பெற திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்குதான் வரவேண்டும். இவர்களில் பெரும் பாலானோர் விவசாயிகள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் என்பதால் அதிகதூரம் பயணம் செய்ய முடிவதில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள மருந்து கடைகளில் மாத்திரைகள் வாங்கி சாப்பிடுகின்றனர்.

  இதனால் தற்காலிக தீர்வு ஏற்பட்டாலும் பக்கவிளைவுகள் உள்ளது.

  இதனை பயன்படுத்தி இப்பகுதியில் போலி டாக்டர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மலைகிரா மப்பகுதி என்பதால் அதிகாரிகளும் கண்காணிப்பு பணிக்கு வருவது குறைவு. எனவே 10, 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு சொந்தமாக கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்து வருகின்றனர். இதுகுறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார்கள் கிளம்பியதால் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

  இதனால் போலி டாக்டர்கள் வேறு இடத்திற்கு தலைமறைவானார்கள். தற்போது மீண்டும் போலி டாக்டர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டாக்டரிடம் சிகிச்சை பெற்றவர் இறந்தார் என வதந்தி பரவியதால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே இப்பகுதியில் மருத்துவ அதிகாரிகள் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

  திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே மர்ம காய்ச்சலுக்கு 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  வடமதுரை:

  திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியை சுற்றி ஏராளமான குக்கிராமங்கள் உள்ளன. அதாவது வி.சித்தூர், செங்குளத்துப்பட்டி, காணப் பாடி, மோர்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஏராள மானோர் விவசாயத்தை நம்பியுள்ளனர்.

  இவர்களுக்கு மழை பெய் தால்தான் வேலை கிடைக்கும். இல்லையென்றால் கூலி தொழிலை நம்பிதான் பிழைப்பு நடத்துகின்றனர். கடந்த சில நாட்களாக மோர்பட்டி பகுதியில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

  இந்த காய்ச்சல் கண்டவர்கள் உடல் சோர்வுடன் கைகால் வலியுடன் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இந்த காய்ச்சலால் ஒரே கிராமத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  வீட்டுக்கு வீடு காய்ச்சல் பாதிப்பு இல்லாதவர்கள் இல்லை என்றே சொல்லும் அளவுக்கு மர்ம காய்ச்சல் கிராமத்தை ஆட்டுவிக்கிறது.

  கடந்த சில நாட்களுக்கு முன்பு கரிவாடன்செட்டிபட்டியைச் சேர்ந்த மின் ஊழியர் நடராஜன் என்பவர் மர்ம காய்ச்சலுக்கு இறந்துள்ளார். இந்த தகவலை அறிந்த மோர்பட்டி கிராம மக்கள் தங்கள் கிராமத்துக்கும் இந்த நிலை வந்து விடுமோ என்ற பீதியில் உள்ளனர்.

  இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், மோர்பட்டியில் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியபடி காணப்படுகிறது. இதனால் ஏராளமான கொசுக்கள் உற்பத்தியாகிறது. சாக்கடை போல் தேங்கி கிடக்கும் தண்ணீரை அகற்ற அதிகாரிகள் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

  அதிகாரிகளின் மெத்தனத்தால் எங்களது கிராமங்களில் சுகாதார சீர்கேடு அடைந்துள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் இந்த வி‌ஷயத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.

  வடமதுரை ரேசன் கடையில் படிக்கட்டுகள் சேதமடைந்துள்ளதால் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் அவதியடைந்து வருகின்றனர்.

  வடமதுரை:

  வடமதுரை ரெயில்நிலைய சாலையில் ரேசன் கடை உள்ளது. இந்த கடையில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சீனி, பருப்பு, பாமாயில், அரிசி, கோதுமை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை மானிய விலையில் பெற்று வருகின்றனர்.

  இப்பகுதியில் பெரும்பாலும் விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளர்களே அதிகம் உள்ளனர். இவர்கள் தமிழக அரசின் இலவச அரிசியை பெரிதும் நம்பியுள்ளனர். எனவே இந்த கடையில் எப்போதும் பயனாளிகள் கூட்டம் அதிகம் இருக்கும்.

  இந்த ரேசன் கடையின் வாயிலில் உள்ள படிக்கட்டுகள் உயரமாக உள்ளதால் முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

  மேலும் ஒரு சில படிக்கட்டுகள் சேத மடைந்துள்ளதால் முதியவர்கள் அடிக்கடி தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். பெண்களும் அவதியடைந்து வருவதால் சாய்தளம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.