என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    எத்தனை பேரை உங்களால் சட்டவிரோதமாகக் கைது செய்ய முடியும்?- முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி
    X

    எத்தனை பேரை உங்களால் சட்டவிரோதமாகக் கைது செய்ய முடியும்?- முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி

    • திமுகவின் இரட்டை வேடம் இன்று அம்பலப்பட்டு நிற்கிறது.
    • கைது பூச்சாண்டிக்கெல்லாம் தமிழக பாஜகவினர் பயந்து பின்வாங்கப்போவதில்லை.

    சென்னை:

    மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக தடையை மீறி கையெழுத்து இயக்கம் நடத்த முயன்ற தமிழிசை சவுந்தரராஜன் உட்பட பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ஏழை, எளிய குழந்தைகளுக்கும், தரமான கல்வியும், விருப்பமான மொழிகளும் கற்கும் வாய்ப்பை வழங்கும் தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து, தமிழக பா.ஜ.க சார்பாக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தினை, சென்னையில் இன்று முன்னெடுத்துச் சென்ற தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் முன்னாள் ஆளுநர், அக்கா தமிழிசையை கைது செய்திருக்கிறது தமிழகக் காவல்துறை.

    அறுபது ஆண்டுகளாகத் தமிழ் மொழியை வியாபாரமாக்கி, தனியார் பள்ளிகளில் மட்டும் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்கும் திமுகவின் இரட்டை வேடம் இன்று அம்பலப்பட்டு நிற்கிறது. திமுகவின் நாடகத்தைப் பொதுமக்கள் உணரத் தொடங்கி, மும்மொழிக் கொள்கைக்குப் பெருமளவில் ஆதரவளிப்பது கண்டு, பயத்தில் நிலை தடுமாறியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதன் விளைவே, ஜனநாயக ரீதியாக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தைத் தடுப்பதும், கைது செய்வதும்.

    இந்தக் கைது பூச்சாண்டிக்கெல்லாம் தமிழக பாஜகவினர் பயந்து பின்வாங்கப்போவதில்லை. தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்வோம். எத்தனை பேரை உங்களால் சட்டவிரோதமாகக் கைது செய்ய முடியும் முதலமைச்சர் அவர்களே?

    தேசியக் கல்விக் கொள்கை, உங்கள் கட்சியில் இருக்கும் கடைக்கோடி தொண்டர்களின் குழந்தைகளுக்கும் தரமான கல்வியையும், பல மொழிகள் கற்கும் வாய்ப்பையும் அரசுப் பள்ளியில் இலவசமாக வழங்குகிறது. அதை ஏன் தடுக்கிறீர்கள்? என வினவியுள்ளார்.



    Next Story
    ×