என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஆளுநருக்கு எதிராக தமிழக அரசின் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை கேள்விக்குள்ளாக்குவதே ஜனாதிபதி குறிப்பின் நோக்கம்.
- ஜனாதிபதி அனுப்பிய குறிப்பை அனைத்து மாநில அரசுகளும் எதிர்க்க வேண்டும்.
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதி மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா? என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் அவர் 14 கேள்விகளை முன்வைத்துள்ளார்.
இந்த நிலையில், மசோதா ஒப்புதலுக்கு காலநிர்ணயம் குறித்து உச்சநீதிமன்றத்திடம் ஜனாதிபதி திரவுபதி முர்மு கேள்வி எழுப்பிய விவகாரம் தொடர்பாக கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, மேற்குவங்கம், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், காஷ்மீர், ஜார்கண்ட் உள்ளிட்ட 8 மாநில முதல்வர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அவர் எழுதி உள்ள கடிதத்தில்,
* மாநில சுயாட்சியை காக்க அனைத்து மாநிலங்களும் உறுதிபூண வேண்டும்.
* இந்திய அரசியலமைப்பு சட்ட கட்டமைப்பு பாதுகாத்திட மாநில முதல்வர்கள் முன்வர வேண்டும்.
* ஆளுநருக்கு எதிராக தமிழக அரசின் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை கேள்விக்குள்ளாக்குவதே ஜனாதிபதி குறிப்பின் நோக்கம்.
* ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை சீர்குலைக்க வெளிப்படையாக பா.ஜ.க. முயற்சிக்கிறது.
* நாட்டின் கூட்டாட்சி அமைப்பு, மாநில சுயாட்சியை பாதுகாக்க முன்வர வேண்டும்.
* ஜனாதிபதி அனுப்பிய குறிப்பை அனைத்து மாநில அரசுகளும் எதிர்க்க வேண்டும்.
* மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை தாமதிக்க ஆளுநர் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த முடியாது.
* மாநில அரசுக்கு எதிராக பிடிவாதப்போக்கை ஆளுநர்கள் கடைபிடித்தால் இந்த தீர்ப்பு உதவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இன்று காலை மாரிச்சாமிக்கும், மணிகண்டனுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
- இந்த சம்பவம் குறித்து கூடக்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கூடக்கோவில் அருகே உள்ள ஏ.பாறைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரிச்சாமி. முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரரான இவர் தற்போது அேத கிராமத்தில் விவசாய தொழில் செய்து வருகிறார். இதற்கிடையே இவருக்கும், இவரது பெரியப்பா மகனுமாகிய மணிகண்டன் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சனை மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாகவும் தகராறு இருந்து வந்துள்ளது.
இந்தநிலையில் இன்று காலை மாரிச்சாமிக்கும், மணிகண்டனுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதைப் பார்த்த அந்த ஊரைச்சேர்ந்த சிலர் அவர்களை சமாதானப்படுத்திவிட்டு சென்றனர். இருந்தபோதிலும் ஆத்திரம் தீராத மாரிச்சாமி வீட்டிற்குள் சென்று அங்கு வைத்திருந்த ஏர்கன் எனப்படும் துப்பாக்கியை எடுத்துவந்து கண்மூடித்தனமான வானத்தை நோக்கி சரமாரியாக சுட்டார்.
இந்த சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த பலர் வீடுகளுக்குள் முடங்கினர். அப்போது அவரது நெருங்கிய உறவினரான உதயகுமார் (வயது 40) என்பவர் ஓடிவந்து மாரிச்சாமியை தடுத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது இடுப்பு மற்றும் முதுகு பகுதியில் துப்பாக்கியில் இருந்து வெளிவந்த பால்ரஸ் எனப்படும் சிறிய அளவிலான இரும்பு குண்டுகள் துளைத்தது. அவரது உடலில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது.
அதேபோல் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த எதிர்வீட்டில் வசித்து வரும் கவியரசன் என்பவரது மகன் கிஷோர் (12) என்ற சிறுவனுக்கும் உடலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. இதையடுத்து பதறியடித்துக் கொண்டு வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காயம் அடைந்த இருவரையும் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கூடக்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் துப்பாக்கியால் சுட்ட மாரிச்சாமியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் விதவிதமான டி-சர்ட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.
- ஆபரேசன் சிந்தூர் டிசைன்கள் அச்சிடப்பட்ட பனியன்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் விதவிதமான டி-சர்ட்டுகள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் விழாக்கள், விளையாட்டுகள், தேர்தல் பிரசாரம் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தேவைப்படும் டி-சர்ட் பனியன்கள் ஆர்டரின் பேரில் லோகா மற்றும் டிசைன்கள் அச்சிட்டு தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது.
வழக்கமான உள்ளாடைகளை தயாரிக்கும் திருப்பூர் தொழில்துறையினர், புதிய பாணி நவீன ஆடை ரகங்களை நேரத்திற்கு தகுந்தாற்போல் டிசைன் செய்து சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றனர்.
தற்போது பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலையொட்டி இந்தியா மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ திட்டத்தை மையப்படுத்தி, விதவிதமான டி-சர்ட்டுகளை தயாரித்து சந்தைப்படுத்த தொடங்கியுள்ளனர். தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் இந்த வகை ஆடைகளை வாங்க ஆன்லைன் மற்றும் நேரடி தொடர்பு மூலம் நிறைய ஆர்டர்களை பெற்று வருகின்றனர்.
இது குறித்து திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:- ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தை பாராட்டியும், அதை வரவேற்றும், அதை போற்றியும் புதிய வகை டிசைன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இளைஞர்களிடையே அமோக வரவேற்பால் ஆபரேசன் சிந்தூர் டிசைன்கள் அச்சிடப்பட்ட பனியன்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
தமிழகத்தை காட்டிலும் வடமாநிலங்கள், வெளிநாடுகளில் இந்த வகை டி-சர்ட்டுகளுக்கு ஏராளமான ஆர்டர்கள் கிடைத்து வருகின்றன. ராணுவத்தை போற்றும் வகையில் பல்வேறு நினைவுகளில் இதுவும் ஒன்றுதான். காலத்திற்கேற்ற வகையில் திருப்பூர் பனியன் தொழில் மாறிக்கொண்டே இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- விபத்தில் காரில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
- மெட்ரோ ரெயில் பணிகளால் சாலையில் பள்ளம் ஏற்பட்டதாக தகவல் பரவியது.
சென்னை திருவான்மியூர்- தரமணி சாலையில் நேற்று வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதில் பள்ளத்தில் வெள்ளை நிற கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, மெட்ரோ ரெயில் பணிகளால் சாலையில் பள்ளம் ஏற்பட்டதாக தகவல் பரவியது.
இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் அளித்த விளக்கத்தில்,
சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்திற்கும் மெட்ரோ ரெயில் சுரங்கப் பணிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. விபத்து நடந்த இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் தான் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் திருவான்மியூர்- தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- ஒரு யூனிட் மின்சாரம் ரூ.4.93 என்ற குறைந்த விலைக்குத் தான் வாங்கப்படுகிறது.
- எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத செயலாகும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் 2023-24-ம் ஆண்டில் மொத்தம் 7373 கோடி யூனிட் மின்சாரத்தை பல்வேறு ஆதாரங்களில் இருந்து ரூ.42,575 கோடிக்கு வாங்க மின்சார வாரியத்திற்கு ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்திருந்தது.
ஆனால், மின்சார வாரியமோ, அதை விட 917.6 கோடி யூனிட் மின்சாரத்தைக் கூடுதலாக தனியாரிடமிருந்து வாங்கி உள்ளது. இதற்காக ஒரு யூனிட்டுக்கு சராசரியாக ரூ.14.36 வீதம் ரூ.13,179 கோடியை தமிழ்நாடு மின்வாரியம் கூடுதலாக செலவழித்திருக்கிறது. இது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத செயலாகும்.
சராசரியாக ரூ.5.57க்கு வாங்கப்பட வேண்டிய மின்சாரத்திற்கு ரூ.6.93 வீதம் விலை கொடுக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் மின்னுற்பத்தி நிலையங்களில் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் ரூ.4.93 என்ற குறைந்த விலைக்குத் தான் வாங்கப்படுகிறது.
கூடுதலாகத் தேவைப்படும் மின்சாரத்தை மத்திய அரசின் மின்னுற்பத்தி நிலையங்களில் இருந்து வாங்கியிருந்தால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்காது. ஆனால், அவற்றிடமிருந்து 4068.6 கோடி யூனிட்டுகள் மின்சாரத்தை வாங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதைவிட 7.42 சதவீதம், அதாவது 302 கோடி யூனிட் குறைவான மின்சாரத்தையே மின்சார வாரியம் வாங்கியிருக்கிறது.
அதேநேரத்தில், தனியாரிடமிருந்து ஒரு யூனிட் சராசரியாக ரூ.9.41 என்ற விலையில், 442.8 கோடி யூனிட் மின் சாரத்தை மட்டுமே ரூ.4170 கோடி செலவில் வாங்க அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால், மின்வாரியமோ, அதே விலையிலான மின்சாரத்தை அனுமதிக்கப்பட்டதை விட, சுமார் 2 மடங்கு 860.6 கோடி யூனிட்டுகளை வாங்கியிருக்கிறது.
இந்த வகையில் மட்டும் ரூ.3783 கோடியை மின்வாரியம் கூடுதலாக செலவழித்துள்ளது. இது பற்றி உயர்நீதிமன்றம் மேற்பார்வையில் விசாரணை நடத்துவதற்கு தமிழக அரசு உடனடியாக ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- 12-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- சிவகிரி தம்பதி கொலை வழக்கில் போலீசார் இரவு பகல் பாராமல் குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த மேகரையான் தோட்டம் பகுதியில் தனியாக வசித்து வந்த ராமசாமி, பாக்கியம்மாள் தம்பதி மர்ம கும்பலால் நகைக்காக படுகொலை செய்யப்பட்டனர்.
மேற்கு மண்டல ஐ.ஜி.செந்தில்குமார், டி.ஐ.ஜி சசிமோகன் ஆகியோர் மேற்பார்வையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமையில் 12-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சிவகிரி, பெருந்துறை, சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறப்பு குழுக்கள் சி.சி.டி.வி கேமரா பதிவுகள், செல்போன் தொடர்பு பதிவுகள், தோட்டங்களில் வேலை செய்யும் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த கூலி ஆட்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
சந்தேக நபர்களின் நடமாட்டங்கள், கொலை, கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டு சிறை சென்று சமீபத்தில் வெளியில் வந்த நபர்கள், மாநிலம் முழுவதும் இது போன்று ஆதாய கொலைகளில் சம்பந்தப்பட்ட நபர்களின் விபரங்களை சேகரித்தனர். கூகுள் மேப் முலம் தனியாக உள்ள பண்ணை வீடுகள் கண்டறியப்பட்டு நவீன முறையில் இரவு பகலாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிவகிரியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டது.
இதற்கிடையே கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை வரும் 20ம் தேதிக்குள் கைது செய்யாவிட்டால் பா.ஜ.க. சார்பில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும், அதில் முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்பார் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான பணிகளில் கட்சியினர் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இந்த கொலை வழக்கில் திடீர் திருப்பமாக 3 நபர்களை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் சில பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து போலீசார் கூறும்போது, சிவகிரி தம்பதி கொலை வழக்கில் போலீசார் இரவு பகல் பாராமல் குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்ததில் 3 நபர் களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்தக் கொலை வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில் தான் முழு தகவலும் தெரிய வரும் என்றனர்.
மேலும் பிடிபட்ட 3 பேரிடம் பல்லடத்தில் நடைபெற்ற கொலை, கொள்ளையிலும் தொடர்பு உள்ளதா என்ற ரீதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் இந்த கொலை வழக்கு மேலும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
- பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என த.வெ.க. அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை.
- தி.மு.க. ஆட்சி அகற்றப்பட வேண்டும் என எண்ணுபவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
வரும் 2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுடன் நிச்சயம் கூட்டணி கிடையாது என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு துணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் கூறி இருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என த.வெ.க. அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை.
* த.வெ.க. தலைவர் விஜய்தான்.
* பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என விஜய் இதுவரை கூறவில்லை. பிறர் கூறுவதற்கு பதில் சொல்ல முடியாது.
* தி.மு.க.வுக்கு எதிராக எல்லோருமே ஒன்று சேர வேண்டிய சூழல் நமக்கு வந்திருக்கிறது.
* தி.மு.க. ஆட்சி அகற்றப்பட வேண்டும் என எண்ணுபவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உணவு தானிய உற்பத்தி 457.08 லட்சம் மெட்ரிக் டன், சராசரியாக 5.66 சதவீத வேளாண் வளர்ச்சியை தமிழ்நாடு எட்டி உள்ளது.
- வேளாண் வளர்ச்சி திட்டங்களால் கேழ்வரகு, கொய்யா உற்பத்தி திறனில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு பால், மீன்வள செயல்பாடுகளில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. ஒட்டுமொத்த வளர்ச்சியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு பாராட்டு, புகழை பெற்று வருகிறது என்று அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
* தமிழ்நாடு பால், மீன்வள செயல்பாடுகளில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது.
* உணவு தானிய உற்பத்தி 457.08 லட்சம் மெட்ரிக் டன், சராசரியாக 5.66 சதவீத வேளாண் வளர்ச்சியை தமிழ்நாடு எட்டி உள்ளது.
* தமிழகம் முழுவதும் 5,427 கி.மீ. நீள நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு 2.10 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
* தமிழ்நாடு முழுவதும் 449 கோடி ரூபாய் மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள் 62,820 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
* வேளாண் வளர்ச்சி திட்டங்களால் கேழ்வரகு, கொய்யா உற்பத்தி திறனில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம்.
* மக்காச்சோளம், கரும்பு, புளி, மரவள்ளி, மல்லிகை, எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் தமிழ்நாட்டுக்கு 2-வது இடம்.
* வேர்க்கடலை, தென்னை, உற்பத்தி திறனில் 3-வது இடம் பிடித்து தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆந்திரா போன்ற இடங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
- போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ஏற்காடு போக்குவரத்து போலீசார் 30-க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்காடு:
சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான ஏற்காட்டில் கோடை சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. வருகின்ற 23-ந் தேதி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்க உள்ள நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.
பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும் நிலையில் நேற்று இரவு ஏற்காட்டில் நல்ல மழை பெய்து சீதோசன நிலை மிகவும் குளுமையாக மாறி உள்ளது. இந்த சீதோசன நிலையை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற இடங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

ஏற்காடு வந்துள்ள இவர்கள் இங்குள்ள முக்கிய சுற்றுலா இடங்களான அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, ரோஜா தோட்டம், ஐந்திணை பூங்கா, பக்கோடா பாயிண்ட் லேடீ ஸ் சீட் உள்ளிட்ட இடங்களை கண்டு ரசித்தனர்.
குறிப்பாக படகு இல்லத்தில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து இயற்கை காட்சிகளை ரசித்தவாறு படகு பயணம் செய்தனர். ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிக அளவில் வந்ததால் மலைப்பாதையிலும் மற்றும் அண்ணா பூங்கா சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ஏற்காடு போக்குவரத்து போலீசார் 30-க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- தமிழ்நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது.
- மின்வாரியத்தின் இழப்புக்குக் காரணம் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுவது தான்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து மின் இணைப்புகளுக்குமான மின் கட்டணம் 3.16% உயர்த்தப்படவிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. வாழ்க்கையின் சுமைகளையும், வரிச்சுமைகளையும் தாங்கிக்கொள்ள முடியாமல் தமிழ்நாட்டு மக்கள் தவித்து வரும் நிலையில் மீண்டும் ஒருமுறை மின்சாரக் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது. அது தொடர்பாக அப்போது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த ஆணையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு நிதியாண்டின் ஏப்ரல் மாதத்திற்கான பண வீக்க விகிதம் அல்லது 6 விழுக்காடு இவற்றில் எது குறைவோ அந்த அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. அதன்படி நடப்பாண்டின் ஏப்ரல் மாத பணவீக்கம் 3.16 விழுக்காடு எனத் தெரியவந்திருப்பதால், அந்த அளவுக்கு கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.
தமிழ்நாடு மின்சார வாரியம் இழப்பில் இயங்குவதாகவும், அதை லாபத்தில் இயங்கச் செய்வதற்காகத் தான் மின்கட்டணம் உயர்த்தப்படுவதாகவும் தமிழக அரசின் சார்பில் கூறப்படுகிறது. ஆனால், இது ஒரு மாயை தான். மின்கட்டணம் உயர்த்தப்படாததால் தான் மின்சார வாரியம் இழப்பை எதிர்கொண்டு வருகிறது என்பதோ, மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினால் மின்வாரியம் லாபத்தில் இயங்கும் என்பதோ உண்மையல்ல. இதை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வரவு செலவு கணக்கு குறித்த புள்ளி விவரங்களே உறுதி செய்கின்றன.
2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்ட மின்சார கட்டண உயர்வின் மூலம் அந்த ஆண்டின் 7 மாதங்களில் மட்டும் மின்சார வாரியத்திற்கு ரூ.23,863 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது. ஆண்டு முழுவதற்கும் கணக்கிட்டால் ரூ.31,500 கோடி கூடுதல் வருமானம் கிடைத்திருக்கக்கூடும். அதற்கு முன் மின்வாரியம் ஆண்டுக்கு சுமார் ரூ.9000 கோடி இழப்பில் இயங்கி வந்தது. மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு 2022-23ஆம் ஆண்டில் மின்வாரியத்திற்கு குறைந்தது 14,000 கோடி லாபம் கிடைத்திருக்க வேண்டும். மின்வாரியத்தின் இழப்பு அந்த ஆண்டில் ரூ. 10,000 கோடியாக அதிகரித்தது.
2023-ஆம் ஆண்டில் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதால், அந்த ஆண்டில் ரூ.35,000 கோடி கூடுதல் வருவாய் கிடைத்திருக்கக் கூடும். அதன்படி பார்த்தால் 2023-24ஆம் ஆண்டில் மின்வாரியம் குறைந்தது ரூ.26,000 கோடி லாபம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், ரூ.6920 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது. கடந்த ஆண்டில் 4.83% மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டிலும் மின்சார வாரியம் நஷ்டத்தில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.
மின்வாரியத்தின் இழப்புக்குக் காரணம் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுவது தான். அதற்கு முடிவு கட்டி, நிலுவையில் உள்ள மின் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் தான் மின்வாரியத்தை லாபத்தில் இயக்க முடியும். எனவே, ஜூலை மாதம் முதல் மின்கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். மாறாக, மின் திட்டங்களை விரைவுபடுத்துவது உள்ளிட்ட சீர்திருத்தங்களை மின்வாரியம் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் கணேசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.
- விபத்து குறித்து வால்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வால்பாறை:
திருப்பூரில் இருந்து இன்று அதிகாலை 12.30 மணி அளவில் ஒரு அரசு பஸ் வால்பாறைக்கு புறப்பட்டு வந்தது. அந்த பஸ்சை டிரைவர் கணேஷ் ஓட்டினார். சிவராஜ் கண்டக்டராக இருந்தார்.
திருப்பூர்-வால்பாறை பஸ்சில் 72 பயணிகள் இருந்தனர். இன்று அதிகாலை 3 மணி அளவில் அந்த பஸ் வால்பாறை அடுத்த கவர்கள் எஸ்டேட் பகுதியின் 33-வது கொண்டை ஊசி வளைவுக்கு வந்தது. அப்போது வாகனம் நிலைதடுமாறி சாலையோரத்தில் உள்ள 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இது குறித்து தகவலறிந்த வால்பாறை போலீசார், 108 ஆம்புலன்சுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த பஸ்சில் இருந்த பயணிகளை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் கணேசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் கை, கால் மற்றும் தலை உள்ளிட்ட இடங்களில் படுகாயம் அடைந்த 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு பொள்ளாச்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து வால்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வால்பாறையில் இன்று அதிகாலை ஒரு அரசு பஸ் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மாணவி வீட்டின் வாசலிலேயே குழியை தோண்டி பிறந்த குழந்தையை புதைத்துள்ளார்.
- அவ்வழியே சென்ற பெண், புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து குழந்தையின் அழுகுரலை கேட்டு உடனடியாக அந்த குழியைத்தோண்டி உள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி அருகே நர்சிங் மாணவி தனக்குத்தானே பிரசவம் பார்த்து குழந்தையை பெற்றெடுத்து உள்ளார். இதைத்தொடர்ந்து வீட்டின் வாசலிலேயே குழியை தோண்டி பிறந்த குழந்தையை புதைத்துள்ளார்.
அவ்வழியே சென்ற பெண் ஒருவர், புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து குழந்தையின் அழுகுரலை கேட்டு உடனடியாக அந்த குழியைத்தோண்டி உள்ளார். பின்னர் உயிருடன் இருந்த குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
பிறந்த குழந்தை உயிருடன் புதைத்த சம்பவத்தில் கல்லூரி மாணவியின் காதலன் சிலம்பரசனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக உள்ள குழந்தையின் தாய், மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் குழந்தையுடன் இருப்பதால் அவரையும் பின்னர் கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.






