என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ரூ.13,179 கோடிக்கு கூடுதலாக மின்சாரம் வாங்கியது ஏன்?- அன்புமணி கேள்வி
    X

    ரூ.13,179 கோடிக்கு கூடுதலாக மின்சாரம் வாங்கியது ஏன்?- அன்புமணி கேள்வி

    • ஒரு யூனிட் மின்சாரம் ரூ.4.93 என்ற குறைந்த விலைக்குத் தான் வாங்கப்படுகிறது.
    • எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத செயலாகும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் 2023-24-ம் ஆண்டில் மொத்தம் 7373 கோடி யூனிட் மின்சாரத்தை பல்வேறு ஆதாரங்களில் இருந்து ரூ.42,575 கோடிக்கு வாங்க மின்சார வாரியத்திற்கு ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்திருந்தது.

    ஆனால், மின்சார வாரியமோ, அதை விட 917.6 கோடி யூனிட் மின்சாரத்தைக் கூடுதலாக தனியாரிடமிருந்து வாங்கி உள்ளது. இதற்காக ஒரு யூனிட்டுக்கு சராசரியாக ரூ.14.36 வீதம் ரூ.13,179 கோடியை தமிழ்நாடு மின்வாரியம் கூடுதலாக செலவழித்திருக்கிறது. இது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத செயலாகும்.

    சராசரியாக ரூ.5.57க்கு வாங்கப்பட வேண்டிய மின்சாரத்திற்கு ரூ.6.93 வீதம் விலை கொடுக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் மின்னுற்பத்தி நிலையங்களில் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் ரூ.4.93 என்ற குறைந்த விலைக்குத் தான் வாங்கப்படுகிறது.

    கூடுதலாகத் தேவைப்படும் மின்சாரத்தை மத்திய அரசின் மின்னுற்பத்தி நிலையங்களில் இருந்து வாங்கியிருந்தால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்காது. ஆனால், அவற்றிடமிருந்து 4068.6 கோடி யூனிட்டுகள் மின்சாரத்தை வாங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதைவிட 7.42 சதவீதம், அதாவது 302 கோடி யூனிட் குறைவான மின்சாரத்தையே மின்சார வாரியம் வாங்கியிருக்கிறது.

    அதேநேரத்தில், தனியாரிடமிருந்து ஒரு யூனிட் சராசரியாக ரூ.9.41 என்ற விலையில், 442.8 கோடி யூனிட் மின் சாரத்தை மட்டுமே ரூ.4170 கோடி செலவில் வாங்க அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால், மின்வாரியமோ, அதே விலையிலான மின்சாரத்தை அனுமதிக்கப்பட்டதை விட, சுமார் 2 மடங்கு 860.6 கோடி யூனிட்டுகளை வாங்கியிருக்கிறது.

    இந்த வகையில் மட்டும் ரூ.3783 கோடியை மின்வாரியம் கூடுதலாக செலவழித்துள்ளது. இது பற்றி உயர்நீதிமன்றம் மேற்பார்வையில் விசாரணை நடத்துவதற்கு தமிழக அரசு உடனடியாக ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    Next Story
    ×