என் மலர்
உள்ளூர் செய்திகள்

'ஆபரேஷன் சிந்தூர்' டி-சர்ட் - திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்
- திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் விதவிதமான டி-சர்ட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.
- ஆபரேசன் சிந்தூர் டிசைன்கள் அச்சிடப்பட்ட பனியன்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் விதவிதமான டி-சர்ட்டுகள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் விழாக்கள், விளையாட்டுகள், தேர்தல் பிரசாரம் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தேவைப்படும் டி-சர்ட் பனியன்கள் ஆர்டரின் பேரில் லோகா மற்றும் டிசைன்கள் அச்சிட்டு தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது.
வழக்கமான உள்ளாடைகளை தயாரிக்கும் திருப்பூர் தொழில்துறையினர், புதிய பாணி நவீன ஆடை ரகங்களை நேரத்திற்கு தகுந்தாற்போல் டிசைன் செய்து சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றனர்.
தற்போது பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலையொட்டி இந்தியா மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ திட்டத்தை மையப்படுத்தி, விதவிதமான டி-சர்ட்டுகளை தயாரித்து சந்தைப்படுத்த தொடங்கியுள்ளனர். தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் இந்த வகை ஆடைகளை வாங்க ஆன்லைன் மற்றும் நேரடி தொடர்பு மூலம் நிறைய ஆர்டர்களை பெற்று வருகின்றனர்.
இது குறித்து திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:- ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தை பாராட்டியும், அதை வரவேற்றும், அதை போற்றியும் புதிய வகை டிசைன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இளைஞர்களிடையே அமோக வரவேற்பால் ஆபரேசன் சிந்தூர் டிசைன்கள் அச்சிடப்பட்ட பனியன்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
தமிழகத்தை காட்டிலும் வடமாநிலங்கள், வெளிநாடுகளில் இந்த வகை டி-சர்ட்டுகளுக்கு ஏராளமான ஆர்டர்கள் கிடைத்து வருகின்றன. ராணுவத்தை போற்றும் வகையில் பல்வேறு நினைவுகளில் இதுவும் ஒன்றுதான். காலத்திற்கேற்ற வகையில் திருப்பூர் பனியன் தொழில் மாறிக்கொண்டே இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.






