என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்கள் நெற்களஞ்சியமாக இருப்பதற்கு உயிர்நாடி காவிரிதான் காரணம்.
    • நெல் கொள்முதல் விலை உயர்வால் 10 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

    சேலத்தில் நடைபெற்ற விழாவில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதையடுத்து அவர் கூறியதாவது:

    * தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள் நெற்களஞ்சியமாக இருப்பதற்கு உயிர்நாடி காவிரிதான்.

    * 4 ஆண்டுகளாக குறித்த நேரத்தில் மேட்டூர் அணையை திறந்து வைத்துள்ளோம்.

    * தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்கள் நெற்களஞ்சியமாக இருப்பதற்கு உயிர்நாடி காவிரிதான் காரணம்.

    * அணையிலிருந்து பொங்கிவரும் காவிரி போல் உங்களை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சி பொங்குகிறது.

    * விவசாயிகள் நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 பெறுவார்கள்.

    * சன்ன ரக நெல் ஒரு குவிண்டால் ரூ.2,547-க்கு கொள்முதல் செய்யப்படும்.

    * சாதாரண நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ.131 உயர்வு, சன்னரகம் ரூ.156 உயர்த்தப்படும்.

    * நெல் கொள்முதல் விலை உயர்வால் 10 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 29 தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    • அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு கட்சியினர் ஆயத்தமாக வேண்டும்.

    சென்னை:

    சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கட்சி நிர்வாகிகளுடன் நேற்று முதல் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    வருகிற 14-ந்தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தின் முதல் நாளான நேற்று தென் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இன்று இரண்டாவது நாள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மேற்கு மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். கொங்கு மண்டலத்தை சார்ந்த நீலகிரி, கோவை, திருப்பூர், மற்றும் ஈரோடு, ஊட்டி, கூடலூர், குன்னூர், மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டா முத்தூர், கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, தாராபுரம், காங்கேயம், அவிநாசி, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி செட்டிபாளையம், பவானிசாகர் உள்பட 29 தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பேசிய பிரேமலதா, கட்சி வளர்ச்சி பணிகளை முடுக்கிவிடுமாறு நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு கட்சியினர் ஆயத்தமாக வேண்டும் என்றும், கூட்டணியை பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • பட்டா கோரி பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • கம்யூனிஸ்டு கட்சி கூடுதல் தொகுதிகள் கேட்பது தொடர்பாக மு.க.ஸ்டாலின் பார்த்துக்கொள்வார்.

    திருச்சி:

    நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் வீட்டு மனை பட்டாக்கள் வழங்கக்கோரி மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை ஏற்று தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு பட்டாக்கள் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 56,000 இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பட்டா கோரி பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை இன்று திறக்கப்பட்டுள்ளது.

    திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை வரை தங்கு தடையின்றி செல்ல தூர்வாரும் பணிகள் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் 6 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது.

    திருச்சி மாவட்டம், பேட்டைவாய்த் தலையில் குடிநீரில் கழிவு நீர் கலந்ததாக கூறப்படும் தகவலில் உண்மையில்லை. குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக மணல் கலந்து வந்தது அதுவும் உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டது.

    அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து எங்களோடு இணைய பலர் காத்திருக்கிறார்கள். இதுவரை பா.ஜ.க.வினரால் தங்கள் கூட்டணியை இறுதிப்படுத்த முடியவில்லை. எங்கள் கூட்டணியில் இருந்து கட்சிகளை தங்கள் கூட்டணிக்கு இழுக்கும் முயற்சியில் எல். முருகன் ஈடுபடுகிறார் . அவரது எண்ணம் நிறைவேறாது.

    தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்டு கட்சி கூடுதல் தொகுதிகள் கேட்பது தொடர்பாக மு.க.ஸ்டாலின் பார்த்துக்கொள்வார். இது குறித்து தான் கருத்து கூற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு வரும் திட்டங்களை அமைச்சராகிய நீங்கள் உங்கள் தொகுதிக்கு மாற்றிக் கொள்வதாக ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. பழனியாண்டி குற்றம் சாட்டியுள்ளாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த கே.என். நேரு, அவர் கூறுவதில் உண்மை இல்லை. அவர் சொல்வது போல திட்டங்களை மாற்ற முடியாது என்றார்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    நீலகிரி, கோவை, தென்காசி மாவட்டங்களுக்கு நாளை மிககனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தேனி, நெல்லை, குமரி மாவட்டங்களில் நாளை கனமழைக்கு பெய்யும்.

    14-ந்தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    15-ந்தேதி கோவை, தென்காசி, நெல்லை, தேனியில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    • மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 60.45 அடியாக உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு மாவட்டம் முழுவதும் மழை நீடித்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கனமழை கொட்டி தீர்த்தது.

    பெருஞ்சாணியில் அதிகபட்சமாக 20.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    தக்கலை, குளச்சல், களியல், சுருளோடு, முள்ளங்கினாவிளை, கன்னிமார் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.22 அடியாக இருந்தது. அணைக்கு 279 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 699 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 60.45 அடியாக உள்ளது. அணைக்கு 279 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 9.77 அடியாகவும், சிற்றார் 2 அணை நீர்மட்டம் 9.87 அடியாகவும் உள்ளது. பொய்கை அணையின் நீர்மட்டம் 15.40 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 38.06 அடியாகவும், முக்கடல் அணை நீர்மட்டம் 2.5 அடியாகவும் உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதுடன் பாசனத்திற்காக அணை திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். சுசீந்திரம், தேரூர் பகுதிகளில் ஏற்கனவே வயல்களில் நடவு பணி நிறைவு பெற்ற நிலையில் உரமிடுதல் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    அணைகளில் திறக்கப்பட்டுள்ள தண்ணீரால் சானல்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பாசன குளங்கள் வேகமாக நிரம்ப தொடங்கியுள்ளன.

    மாவட்டம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் கன்னியாகுமரி உட்பட 8 மாவட்டங்களில் நாளை முதல் வருகிற 16-ந்தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

    • லாரியை சோதனை சாவடியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தார்.
    • பின்னர் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புறப்பட்டுச் சென்றார்.

    கரூர்:

    முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கரூரில் இருந்து சேலம் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். மண்மங்கலம் அருகே சென்றபோது அந்த வழியாக மணல் அள்ளி வந்த லாரியை பார்த்தார்.

    உடனே அந்த லாரியை பின்னால் காரில் துரத்தினார். சுமார் 18 கிலோமீட்டர் தூரம் பின் தொடர்ந்து சென்று நாமக்கல் மாவட்டம் எல்லையான வேலூர் போலீஸ் சோதனைச் சாவடியில் மடக்கி பிடித்தார்.

    பின்னர் அந்த லாரியை சோதனை சாவடியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தார். இந்த சம்பவம் கரூர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் என்பதால் அவர்கள் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    மணல் லாரியுடன் வேலாயுதம்பாளையம் சென்ற முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகி சரவணனை புகார் கொடுக்குமாறு அறிவுறுத்திய எம்.ஆர்.விஜயபாஸ்கர் பின்னர் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புறப்பட்டுச் சென்றார்.

    போலீசார் விசாரணையில் மணல் லாரி நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பிடிபட்டதால் அந்த லாரியை போலீசார் பரமத்தி போலீசாரை வரவழைத்து லாரியை ஒப்படைத்தனர்.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • வேளச்சேரி மெயின்ரோடு, சுவாமி தெரு, ராமசாமி தெரு, மறைமலை அடிகள் தெரு, அவ்வையார் தெரு.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (13.06.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    ரெட்ஹில்ஸ்: சோத்துப்பெரும்பேடு பகுதி, அல்லிமேடு, மேட்டு சூரப்பேடு, பாளையம், ஒரக்காடு பகுதி.

    கிழக்கு முகப்பேர்: மோகன்ராம் நகர், பாரதிதாசன் நகர், கொங்கு நகர், விஜிபி நகர், பன்னீர் நகர், 6-வது பிளாக் மெயின் ராடு, சாதல்வார் தெரு, வெள்ளாளர் தெரு பகுதி.

    குன்றத்தூர்: அழகேசன் நகர், பெரியார் நகர், சரஸ்வதி நகர், கோதண்டம் சாலை, அம்பேத்கர் நகர், ராஜீவ்காந்தி நகர், பாரதியார் நகர், புதுப்பேர், நந்தம்பாக்கம், திருமுடிவாக்கம் சம்பந்தம் நகர், தேவகி நகர், லட்சுமி நகர், தாய் சுந்தரம் நகர், கொல்லர் தெரு, விஜயராஜா நகர், வழுதாளம்பேடு கிராண்ட் சிட்டி.

    கே.கே.நகர்: காவேரி ரங்கன் நகர், கே.கே.சாலை, லோகயா காலனி, ஆற்காடு சாலை, பாலாஜி நகர், அருணாச்சலம் சாலை, குமரன் காலனி, காந்தி நகர், தேவராஜ் நகர், எஸ்.எஸ்.ஆர். பங்கஜம் சாலை, பரணி காலனி, காவேரி மருத்துவமனை தெரு, 80 அடி சாலை, எம்.ஜி. சக்ரபாணி தெரு, சக்கரபாணி தெரு, காமராஜர் சாலை, வெங்கடேச நகர்.

    கோவூர்: அம்பாள் நகர், ராம் நகர், அண்ணா தெரு, கங்காச்சி தெரு, ஆனந்த விநாயக தெரு, குன்றத்தூர் மணி ரோடு, அம்பேத்கர் தெரு.

    சோழிங்கநல்லூர் பிரிவு: கௌரிவாக்கம்- ஆதிநாத் நகர், பாலாஜி நகர், சுசீலா நகர், விஜயநகர, வேளச்சேரி மெயின் ரோடு, ஜெயலட்சுமி நகர், விக்னராஜபுரம், பெல் நகர் 1 முதல் 5-வது தெரு, பரசுராம் அவென்யூ, வடக்குப்பட்டு மெயின் ரோடு, பில்லாபாங் பள்ளி, வெள்ளம்மாள் பள்ளி, அல்ஃபாஸ் அவென்யூ, யுனைடெட் காலனி, சாய்ராம் நகர் மெயின் ரோடு மற்றும் பூங்கா, சித்தார்த் குடியிருப்புகள், அண்ணாமலை தெரு.

    ராஜகீழ்பாக்கம்: பதிவு அலுவலகம் சேலையூர், வெங்கட்ராமன் தெரு, மாருதி நகர் 2-வது மெயின்ரோடு, வேளச்சேரி மெயின்ரோடு, சுவாமி தெரு, ராமசாமி தெரு, மறைமலை அடிகள் தெரு, அவ்வையார் தெரு.

    திருவான்மியூர்: இந்திரா நகர், பெரியார் நகர் கிழக்கு மற்றும் மேற்கு, காமராஜ் நகர், எல்பி சாலை, திருவள்ளூர் சாலை, சாஸ்திரி நகர், அவ்வை நகர், ராஜாஜி நகர், நேதாஜி நகர், கண்ணப்பா நகர், ஏஜிஎஸ் காலனி, சுவாமிநாதன் நகர், களத்துமேட்டு பகுதி, பிடிசி காலனி, வெங்கடேசன் அவென்யூ, ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர்.

    பல்லாவரம்: இந்திரா காந்தி சாலை, தண்டு மாரியம்மன் கோவில் தெரு, ஜிஎஸ்டி சாலை, பம்மல் மெயின் ரோடு முதல் ஏ2பி ஓட்டல், மாலிக் தெரு, நாகரத்தின் தெரு, கண்ணபிரான் கோவில் தெரு, சென்னை சில்க்ஸ் ஒலிம்பியா மற்றும் அதுல்யா டவர்ஸ். 

    • மர்ம நபர் தன்னை மருத்துவர் என கூறிக்கொண்டு நோயாளிகளை பரிசோதித்துள்ளார்.
    • மருத்துவமனையில் விசாரித்தபோது சம்பந்தப்பட்ட நபர் போலி மருத்துவர் என்பது அம்பலமானது.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர் என கூறிக்கொண்டு மர்ம நபர் ஒருவர் நோயாளியிடம் இருந்து நகை, செல்போனை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர் போலவே உடை அணிந்து கொண்டு மர்ம நபர் ஒருவர் ஒவ்வொரு நோயாளியிடமும் கேஸ் ஷீட்டுகளை சரி பார்த்துள்ளார்.

    கடந்த 6-ந்தேதி அந்த மர்ம நபர் தன்னை மருத்துவர் என கூறிக்கொண்டு நோயாளிகளை பரிசோதித்துள்ளார். காப்பீடு திட்டம் இருக்கிறதா என கேட்டுவிட்டு மின்னஞ்சலையும் அவர் கொடுத்துள்ளார்.

    நோயாளி ஒருவரை ஸ்கேன் எடுக்க அழைத்து சென்ற அவர், ஸ்கேன் எடுக்கும்போது நகை போடக்கூடாது எனக்கூறி நகைகளை வாங்கிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

    இந்த சம்பவத்தையடுத்து மருத்துவமனையில் விசாரித்தபோது சம்பந்தப்பட்ட நபர் போலி மருத்துவர் என்பது அம்பலமானது.

    இதையடுத்து நகை திருட்டு தொடர்பாக நோயாளி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரில், 3 சவரன் தங்க நகை மற்றும் செல்போனை மருத்துவர் என கூறிக்கொண்டு வந்தவர் திருடி சென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

    மர்மநபர் ஒருவர் மருத்துவரை போன்று அரசு மருத்துவமனையில் வலம் வந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையில் நடந்து கொண்டு பாம்பை காட்டி பொதுமக்களிடம் அட்ராசிட்டி செய்தார்.
    • சாலையில் இருந்த இளைஞர்கள், பொதுமக்கள் பாம்புடன் இருந்த அந்த நபரை செல்போனில் படம் பிடித்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி நகரப்பகுதி நான்கு வழி சாலை அருகில் செயல்படும் அரசு மதுபான கடைக்கு இளைஞர் ஒருவர் கழுத்தில் பாம்பு ஒன்றை சுத்தி கொண்டு மது வாங்க வந்தார்.

    அப்பொழுது மதுக்கடைக்கு வந்த மது பிரியர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். கடையின் விற்பனையாளர்கள் செய்வதறியாமல், மது வாங்க வந்த இளைஞரை எச்சரித்து, மது (பீர்) கொடுத்து அனுப்பி விட்டனர்.

    மது வாங்கி கொண்டு சென்ற அந்த வாலிபர், பீர் பாட்டிலை திறந்து, பாம்பின் வாயில் ஊற்றியதாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து அந்த வாலிபர் மது போதையில் நான்கு ரோட்டில், சாலையில் நடந்து கொண்டு பாம்பை காட்டி பொதுமக்களிடம் அட்ராசிட்டி செய்தார்.

    சாலையில் இருந்த இளைஞர்கள், பொதுமக்கள் பாம்புடன் இருந்த அந்த நபரை செல்போனில் படம் பிடித்தனர். அவர்களுக்கு அந்த இளைஞர் பல கோணங்களில் பாம்பை பிடித்து கொண்டு பாம்புக்கு முத்தம் கொடுத்தும், பாம்பு மற்றும், பீர் பாட்டிலை சாலை மைய தடுப்பு சுவரின் மீது வைத்தும், வித்தைக்காட்டி கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து அங்கு வந்த காவலர்கள் அந்த வாலிபரை எச்சரித்து அனுப்பினர்.

    • 43 ஆண்டுகளாக போராடிய கட்சியில் தலைமை ஏற்க எனக்கு உரிமை இல்லையா?
    • 7 ஆண்டுகளுக்கு முன்பு கட்சியை கைப்பற்ற அன்புமணி முயற்சி செய்தார்.

    தைலாபுரம்:

    பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே நிலவி வரும் கருத்து முரண்பாடு காரணமாக அன்புமணி ஆதரவாளர்களை நீக்கி புதிய பொறுப்பாளர்களை டாக்டர் ராமதாஸ் நியமனம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் ராமதாசை சமாதானம் செய்யும் முயற்சியாக சந்தித்த அன்புமணி, 45 நிமிடம் சந்தித்த போதிலும் தோல்வியில் முடிந்தது.

    இதனை தொடர்ந்து ஆடிட்டர் குருமூர்த்தி 3 மணிநேரம் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து சென்னை சென்ற ராமதாஸ் அங்கும் குருமூர்த்தியை சந்தித்ததாக தெரிவித்தார். பா.மக. நிறுவனர் ராமதாஸ் நீக்கும் பொறுப்பாளர்கள், கட்சி பொறுப்பில் தொடர்வார்கள் என அன்புமணி அறிக்கை வெளியிட்டு வருகிறார். ஏற்கனவே கட்சியின் பொருளாளராக இருந்த திலகபாமாவை நீக்கி அப்பொறுப்பில் சையத் மன்சூர் உசேனை ராமதாஸ் நியமனம் செய்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் கட்சியின் வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவையின் தலைவராக இருந்த வக்கீல் பாலுவை பொறுப்பில் இருந்து நீக்கி, உயர்நீதிமன்ற வக்கீல் கோபுவை டாக்டர் ராமதாஸ் நியமனம் செய்துள்ளார். மேலும் அன்புமணி ஆதரவு மாவட்ட செயலாளர்கள், தலைவர்களை டாக்டர் ராமதாஸ் நீக்கி வருகிறார்.

    இந்த நிலையில் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    43 ஆண்டுகளாக போராடிய கட்சியில் தலைமை ஏற்க எனக்கு உரிமை இல்லையா? அமைதி காத்திருந்தால் அன்புமணிக்கு அதிகாரம் கிடைத்திருக்கும். 7 ஆண்டுகளுக்கு முன்பு கட்சியை கைப்பற்ற அன்புமணி முயற்சி செய்தார். அப்பா கட்சியை நான் பார்த்து கொள்கிறேன் என்று அப்போது அவர் கூறியது எனக்கு புரியவில்லை. அன்புமணி என் கண்ணை குத்திவிட்டார். ஒரு வாரத்தில் தலைவரை மாற்றி விடலாம் என சவுமியா அன்புமணி தன்னிடம் கூறினார். என் குடும்ப பெண்கள் கட்சி நிகழ்ச்சிகளுக்கு போக கூடாது என சவுமியாவிடம் கூறினேன். யார் சொன்னாலும் அன்புமணி கேட்க மாட்டார். நாம் அனைவரும் முயலுக்கு 4 கால் என்றால் அன்புமணி 3 கால் என்பார். கட்சியை முன்னேற்ற வலுப்படுத்த உழைப்பதற்கு அன்புமணி தயாராக இல்லை. அதனால் அவர் பதவி பறிக்கப்பட்டது.

    பா.ம.க. பொதுச்செயலாளர் வடிவேல் ராவணனை கண்டு பிடிப்போருக்கு ரூ.100 பரிசு தருவேன் என கூறினார்.

    • 8 பேர் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • கெட்டுப்போன உணவு சாப்பிட்டு 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் அருகே உள்ள முதியோர் இல்லத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.

    3 பேர் உயிரிழந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட 8 பேர் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    முதியோர் இல்லத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்டு 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    • மாலினி கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் தனது தாய் வீட்டில் தங்கி உள்ளார்.
    • மனவிரக்தி அடைந்த தாய்-மகள் இருவரும் தற்கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    திருச்செந்தூர்:

    கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம், முடக்குளத்தை சேர்ந்தவர் மோகன் நாயர். இவரது மனைவி அம்பிகா (வயது 67). இவரது மகள் மாலினி (40).

    மாலினி கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் தனது தாய் வீட்டில் தங்கி உள்ளார். இதனால் மனவிரக்தி அடைந்த தாய்-மகள் இருவரும் தற்கொலை செய்ய திட்டமிட்டு அதற்காக பூச்சி மருந்து வாங்கிக்கொண்டு திருச்செந்தூர் வந்து நேற்று இரவு தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். அங்கு வைத்து குளிர்பானத்துடன் கலந்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளனர்.

    அப்போது வாந்தி வரவே விடுதி ஊழியரிடம் நடந்ததை கூறி உள்ளனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×