search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mother Daughter Suicide"

    • நேற்று இரவு தாயும், மகளும் கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் 2பேரின் உடல்களை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள டோரிப்பள்ளியை அடுத்த உங்கட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ட ராமப்பா (வயது 50). இவர் தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மீனாட்சி(47) என்ற மனைவியும், கிரி (23) என்ற மகனும், காவ்யா (18) என்ற மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கிரி ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சப்படி அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி உயிரிழந்தார்.

    கிரிக்கும் வேறு நபருக்கும் தகராறு இருந்து வந்தது. எனவே, அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் மீனாட்சியும், தங்கை காவ்யாவும் சூளகிரி போலீசில் விபத்து நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை காண்பிக்குமாறு புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

    மேலும், கிரி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என உறுதியாக நம்பிய அவர்கள் நேற்றும் சூளகிரி போலீசாரை சந்தித்து விசாரித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளனர்.

    தனது மகன் சாவு குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்காததால், மீனாட்சியும், அவரது மகள் காவ்யாவும் மிகுந்த சோகத்தில் காணப்பட்டனர். மனமுடைந்து போன மீனாட்சியும், காவ்யாவும் தற்கொலை செய்துக் கொள்ள முடிவெடுத்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு தாயும், மகளும் கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத் தீப்போல் பரவியது.

    இதுகுறித்து தகவலறிந்த பேரிகை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு சென்று கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து தாய் மற்றும் மகளின் உடல்களை மீட்க முயன்றனர்.

    அப்போது அங்கு திரண்டிருந்த உறவினர்கள் மீனாட்சி, காவ்யா ஆகியோரின் உடல்களை எடுக்க விடாமல் தடுத்தனர். மேலும், அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதை அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாகூர், சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி, ஓசூர் டி.எஸ்.பி. பாபு பிரசாந்த், தாசில்தார் சக்திவேல், கிராம அலுவலர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பின்னர் மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர் உறவினர்களிடம், உங்கள் சந்தேகங்களை புகாராக எழுதி கொடுங்கள், நான் விசாரித்து போலீசார் கவன குறைவாக செயல்பட்டிருந்தால் ஒரே நாளில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    அதன்பின்னர் உறவினர்கள் 2 பேரின் உடல்களை போலீசார் எடுத்து செல்ல அனுமதித்தனர். அதன்பின்பு போலீசார் 2பேரின் உடல்களை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகன் விபத்தில் இறந்ததால் துக்கம் தாங்காமல் தாய், தங்கை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

    ×