என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வருகிற 10-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வருகிற 10-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், சென்னையிலும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 6மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • ரூ.3.92 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு.
    • சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் துரைமுருகனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில் உள்ளது.

    தி.மு.க.வின் மூத்த தலைவரும், அக்கட்சியின் பொதுச்செயலாளரான துரைமுருகன், நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.

    இவர், கடந்த 1996- 2001ம் ஆண்டு வரை நடைபெற்ற கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக துரைமுருகன் செயல்பட்டு வந்தபோது, தனது வருமானத்துக்கு மீறி அதிக சொத்துகளை குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது, அதன்பிறகு அமைந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் துரைமுருகன் தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.92 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதுதொடர்பான வழக்கு வேலூர் முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த 2007ல் அமைச்சர் துரை முருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து தீர்ப்பு வழங்கினார்.

    இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி கடந்த 2013ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவை ரத்து செய்தது.

    மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவின்கீழ், துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக விசாரணையை துவங்கி, ஆறு மாதங்களில் முடிக்க வேலூர் சிறப்பு கோர்ட்டுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    தற்போது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் துரைமுருகனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில் உள்ளது.

    முன்னதாக, இந்த வழக்கில் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி இருவரும் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து துரைமுருகனின் மனைவி நேரில் ஆஜராகி பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரினார். இதனை தொடர்ந்து அவரது பிடிவாரண்ட்டை நீதிமன்றம் ரத்து செய்தது.

    ஆனால், துரைமுருகன் இன்று ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு எதிரான பிடிவாரண்ட்டை வருகிற 15-ம் தேதி அமல்படுத்த காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்.
    • தங்கத்தாலி மட்டுமின்றி மணமகளுக்கு பட்டுச்சேலை, மணமகனுக்கு பட்டு வேட்டி வழங்கப்படும்.

    மதுரை மாவட்டம் சோழவந்தானில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாம் தேர்தல் பரப்புரை நடத்தி வருகிறார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நானும் உங்களை போல் விவசாயி என்பதால் சோழவந்தான் விவசாய பகுதி மக்களை சந்திப்பதில் மகிழ்கிறேன்.

    விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு, இலவச மும்முனை மின்சாரம், வேளாண் பொருட்கள் உதவிகள் அதிமுக ஆட்சியில் வழங்கினோம்.

    ஏழைகளுக்கு கொடுக்கும் வேட்டி சேலையில் கூட திமுக அரசு ஊழல் செய்கிறது.

    அதிமுக ஆட்சி மலர்ந்தவுடன் மீண்டும் ஏழை மாணவர்களுக்கு உறுதியாக லேப்டாப் வழங்குவோம்.

    அதிமுக ஆட்சி வந்தவுடன் வீடில்லா விவசாய தொழிலாளிகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.

    அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்.

    தங்கத்தாலி மட்டுமின்றி மணமகளுக்கு பட்டுச்சேலை, மணமகனுக்கு பட்டு வேட்டி வழங்கப்படும்.

    திமுக ஆட்சியில் மூடப்பட்ட 2000 அம்மா கிளினிக்குகளுக்கு பதிலாக 4000 அம்மா கிளினிக்குகள் தொடங்கப்படும். ஏழை, எளிய மக்கள் எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறார்களோ அங்கெல்லாம் அம்மா கிளினிக்குகள் தொடங்கப்படும்.

    திமுக ஆட்சியில் அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் ஊழலை அமலாக்கத் துறை கண்டுபிடித்துள்ளது.

    நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக குரல் கொடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் 10 வாரங்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டம்.
    • த.வெ.க. தலைவர் விஜய் அந்தந்த பகுதி பிரச்சனைகள் குறித்து பேச திட்டம்.

    வரும் செப்டம்பர் 13-ம் தேதி திருச்சியில் த.வெ.க தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதன்படி, தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் 10 வாரங்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அமைப்பு ரீதியாக ஒரு நாளில் 2 மாவட்டங்களில் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    சுற்றுப்பயணத்தின்போது த.வெ.க. தலைவர் விஜய் அந்தந்த பகுதி பிரச்சனைகள் குறித்து பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    முதற்கட்டமாக 5 வாரங்களுக்கு சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதன்படி, முதல் வாரம்- திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவள்ளூரில் சுற்றுப்பயணம் எனவும், 2வது வாரம் திருவள்ளூர், செங்கல்பட்டு, 3வது வாரத்தில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, 4வது வாரம்- திருப்பூர், ஈரோடு, நீலகிரி; 5வது வாரம்- திருப்பத்தூர், தருமபுரி உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • செந்தண்ணீர்புரம், விண்நகர் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.

    திருச்சி:

    அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி அரியமங்கலம், எஸ்.ஐ.டி., அம்பிகாபுரம், ரெயில்நகர், நேருஜிநகர், காமராஜ்நகர், மலையப்பநகர், ராணுவகாலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ்நகர், சக்திநகர், ராஜப்பாநகர், எம்.ஜி.ஆர்.நகர், சங்கிலியாண்டபுரம், பாலாஜிநகர், மேலகல்கண்டார்க்கோட்டை,

    கீழகல்கண்டார்கோட்டை, வெங்கடேஸ்வரா நகர், கொட்டப்பட்டு ஒரு பகுதி, அடைக்கல அன்னைநகர், அரியமங்கலம் இன்டஸ்ட்ரியல் சிட்கோ காலனி, காட்டூர், திருநகர், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, ஆலத்தூர், பொன்மலை, செந்தண்ணீர்புரம், விண்நகர் ஆகிய இடங்களில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

    • சீர்திருத்தம் செய்வதற்கு 8 ஆண்டுகள் என்பது மிகவும் தாமதமானது.
    • மக்களின் கோப அலைக்கும் உண்மையின் நெருப்புக்கும் முன் தாங்க முடியாமல் பின்வாங்குகிறது.

    ஜிஎஸ்டி சீர்திருத்தம் மற்றும் பொருட்கள் மீதான வரி குறைப்பை காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் வரவேற்றுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஜிஎஸ்டி சீர்திருத்தம் மற்றும் பொருட்கள் மீதான வரி குறைப்பு வரவேற்கத்தக்கது. சீர்திருத்தம் செய்வதற்கு 8 ஆண்டுகள் என்பது மிகவும் தாமதமானது

    தற்போதைய ஜிஎஸ்டி வடிவமைப்பு மற்றும் இன்று வரை நடைமுறையில் உள்ள விகிதங்கள் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கவே கூடாது" என்றார்.

    இந்நிலையில், "ப. சிதம்பரம் எம்.பி., அவர்கள் ஜிஎஸ்டி குறைப்பு குறித்து கூறியிருப்பது சாதாரணமான விமர்சனம் அல்ல, அது மக்களின் அனுபவித்த கொடிய துன்பத்தை எடுத்துக் காட்டுகிறது" என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    முன்னாள் ஒன்றிய நிதியமைச்சரும், பொருளாதார மேதையுமான ப. சிதம்பரம் எம்.பி., அவர்கள் ஜிஎஸ்டி குறைப்பு குறித்து கூறியிருப்பது சாதாரணமான விமர்சனம் அல்ல, அது மக்களின் அனுபவித்த கொடிய துன்பத்தை எடுத்துக் காட்டுகிறது.

    எட்டு ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி எச்சரித்ததே இதுதான் – ஜிஎஸ்டி மக்களின் முதுகெலும்பை முறிக்கிறது, வணிகர்களின் கனவுகளை நொறுக்கிறது, நடுத்தர மக்களின் உயிரையே சுரண்டுகிறது, ஏழைகளின் அடிப்படை வாழ்வையே பறிக்கிறது. ஆனால் மோடி தலைமையிலான பாஜக அரசு, எட்டு ஆண்டுகள் முழுவதும் செவிடாய் நடித்து வந்தது. இன்று மக்களின் கோப அலைக்கும் உண்மையின் நெருப்புக்கும் முன் தாங்க முடியாமல் பின்வாங்குகிறது.

    மக்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் முன்னரே தீவிரமாகக் கூறியிருந்தார்: 'ஜிஎஸ்டி மக்களுக்கான நிவாரணம் அல்ல, அது பாஜக அரசின் கொள்ளைக் கருவி' என்று. அந்த வார்த்தைகள் இன்று இடிமுழக்கம் போல் முழங்கி, பாஜக அரசின் பொய்முகமூடியைச் சிதறடிக்கின்றன. மக்களின் உழைப்பை கொள்ளையடித்து, இரத்தமும் வியர்வையும் பிழிந்து, தங்களின் கருவூலத்தை நிரப்பிக் கொண்ட இந்த அரசு, இப்போது மக்களின் எழுச்சியால் குலுங்குகிறது.

    இந்த நாட்டின் நிலம் எரிமலையைப் போலக் குலுங்குகிறது. மக்களின் கோபம் சுடும் காற்றல்ல் அது புயல். அந்த புயலை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. மக்களின் சினம் தீப்பொறியாக மட்டுமல்ல, எரியும் எரிமலையாக வெடிக்கத் தயாராக உள்ளது. அந்த வெடிப்பு பாஜக அரசை அரசியல் மேடையிலிருந்து சாம்பலாக்கும்.

    சிறு சலுகைகளால் மக்களின் வேதனை அடங்காது. ஜிஎஸ்டி குறைப்பு முழுமையாக செய்யப்பட வேண்டும். மக்களின் வாழ்வைத் தொடும் ஒவ்வொரு அத்தியாவசியப் பொருளிலும், ஒவ்வொரு சேவையிலும் இந்த சுரண்டல் வரி முற்றிலும் அகற்றப்பட வேண்டும். இல்லையெனில் மக்கள் குரல் போர்க் குரலாக வெடித்து, பாஜக ஆட்சியை வரலாற்றின் குப்பைத்தொட்டியிலே தள்ளித் தீர்க்கும்.

    மக்களின் குரல் இனி ஒலியல்ல. அது நெருப்பு. அந்த நெருப்பு பாஜக அரசின் ஆட்சியை சாம்பலாக்காமல் விடாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பொதுவாக ஐபிஎல் போட்டிகள் தொடங்கும்போது ஐபிஎல் அணி ரசிகர்களிடையே தங்கள் அணிக்காக வாக்குவாதங்கள், சண்டைகள் நடப்பது வழக்கம்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மராஜை கைது செய்தனர்.

    இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். முக்கியமாக அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் போன்றவர்களுக்கு ஆங்காங்கே ரசிகர்கள் மன்றங்களே  நடத்தி வருகின்றனர்.

    பொதுவாக ஐபிஎல் போட்டிகள் தொடங்கும்போது ஐபிஎல் அணி ரசிகர்களிடையே தங்கள் அணிக்காக வாக்குவாதங்கள், சண்டைகள் நடப்பது வழக்கம்.

    இதற்கிடையே கடந்த 2022 ஐபிஎல் சீசனின் போது அரியலூரை சேர்ந்த தர்மராஜ் தனது நண்பர் விக்னேஷ்வுடன் ஊருக்கு வெளியே மது அருந்த சென்றுள்ளார். இருவரும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மது அருந்திவிட்டு பேசிக் கொண்டிருந்தபோது கிரிக்கெட் குறித்து இருவருக்கும் வாக்குவாதம் எழுந்ததாக தெரிகிறது.

    இந்த வாக்குவாதத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை தவறாக பேச, இதனால் ஆத்திரமடைந்த தர்மராஜ் அரிவாளால் விக்னேஷை வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விக்னேஷ் இறந்துள்ளார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மராஜை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு நடந்து வந்தது.

    இந்நிலையில் விக்னேஷை கொலை செய்த தர்மராஜுக்கு அரியலூர் நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை என தீர்ப்பு வழங்கியுள்ளது.

    • பணகுடி, கோட்டைகருங்குளம், களக்காடு துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • திருவெம்பலாபுரம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை மின்விநியோகம் இருக்காது.

    வள்ளியூர்:

    பணகுடி, கோட்டைகருங்குளம் மற்றும் களக்காடு துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பணகுடி, லெப்பைகுடியிருப்பு, புஷ்பவனம், குமந்தான், காவல் கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தபனை, கடம்பன் குளம்.

    களக்காடு நகரம், பெருமாள் குளம், சாலை புதூர், எஸ்.என்.பள்ளிவாசல், மாவடி, டோனாவூர், புலியூர் குறிச்சி, கோதைசேரி, வடமலைசமுத்திரம், கருவேலன் குளம், கோவிலம்மாள் புரம், வடுகச்சி மதில், கோட்டைகருங்குளம், குமாரபுரம், வாழை தோட்டம், சீலாத்தி குளம், முடவன் குளம், தெற்கு கள்ளிகுளம், சமூக ரெங்கபுரம், திருவெம்பலாபுரம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை வள்ளியூர் செயற்பொறியாளர் வளன் அரசு தெரிவித்துள்ளார்.

    • பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள ரூ.2,126 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை.
    • 27.9 கி.மீ தூரத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ வழித்தடத்தில் முதற்கட்டமாக சுங்குவார் சத்திரம் வரை பூர்வாங்க பணிகள் மேற்கொள்ள ரூ.2,126 நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    பூந்தமல்லி - பரந்தூர் வரை 52.94 கி.மீ. தூரத்துக்கு இரண்டு கட்டங்களாக மெட்ரோ வழித்தடம் அமைக்கப்படுகிறது.

    முதல் கட்டமாக ரூ.8,779 கோடியில் பூந்தமல்லி முதல் சுங்குவார் சத்திரம் வரை மெட்ரோ பணி திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

    27.9 கி.மீ தூரத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள ரூ.2,126 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

    மொத்தம் ரூ.2,126 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், பணிகள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளன:

    சாலை மற்றும் பிற சிவில் பணிகள்: ரூ.252 கோடி செலவில் சாலை அமைப்பு, மரம் வெட்டுதல் மற்றும் மீண்டும் நடுதல், நில அளவை, போக்குவரத்து மேலாண்மை, அடிப்படை உள்கட்டமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

    நிலம் கைப்பற்றுதல் மற்றும் கட்டமைப்பு செலவுகள்: மிகப்பெரிய பகுதியான ரூ.1,836 கோடி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

    சுற்றுச்சூழல் மற்றும் குடிசைப்பகுதி மறுசீரமைப்பு: ரூ.16 கோடி.

    வடிவமைப்பு செலவுகள் மற்றும் பொது செலவுகள்: ரூ.13.40 கோடி.

    இதர செலவுகள் : ரூ.8.44 கோடி.

    இதனால் மொத்தமாக ரூ.2,125.84 கோடி தேவைப்பட்டு, அதை சுருக்கமாக ரூ.2,126 கோடியாக அரசு அறிவித்துள்ளது.

    • 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அமல்.
    • புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டு 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.

    இந்நிலையில், மத்திய அரசின் ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிப்பிடுகையில்,"ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களின் மீதான வரிகளைக் குறைத்ததன் மூலம், ஏழை பாட்டாளிகளின் மீதான பணச்சுமை குறைகிறது. இதற்காக மத்திய அரசைப் பாராட்டலாம்" என குறிப்பிட்டுள்ளார்.

    • உச்ச நீதிமன்ற தீர்ப்பால், தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.
    • அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உத்தரவு, அனைவரையும் நிலை குலைய வைத்துள்ளது.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    "அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற வேண்டும் என்றால், 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதே நேரத்தில், ஓய்வு பெறும் வயதை எட்டுவதற்கு ஐந்தாண்டுகள் மட்டுமே இருக்கக்கூடிய ஆசிரியர்கள் பணியில் தொடரலாம்.

    5 ஆண்டுகளுக்கு அதிகமாக இருக்கக்கூடிய அத்தனை ஆசிரியர்களும் தொடர்ந்து ஆசிரியராக பணியில் தொடர, ஆசிரியர் தகுதித் தேர்வில், நிச்சயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

    ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பால், தமிழகத்தில் அரசு பணியில் உள்ள, 85,000 ஆசிரியர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.

    உச்ச நீதிமன்ற தீர்ப்பால், தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உத்தரவு, அனைவரையும் நிலை குலைய வைத்துள்ளது.

    உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் பாதிக்கப்படாமல் இருக்க ஆசிரியர்களுக்குத் துணை நிற்போம் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருப்பது ஆறுதல் தருகிறது.

    எதிர்காலம் பற்றிய கவலை சூழ்ந்த நிலையில் கற்பித்தல் பணியை மேற்கொள்ளும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்க தமிழ்நாடு அரசு உடனடியாக தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • எனது தாய் உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
    • மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி எங்களுக்கு வழி பாதையை ஏற்படுத்தி கொடுத்து நிலத்தில் விவசாயம் செய்ய உதவ வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி ஆடையூர் கிராம பகுதியை சேர்ந்த குமார் (45). இவரது மனைவி சாந்தி மற்றும் குமாரின் தந்தை மாணிக்கம் (70), தாய் ஸ்ரீரங்காயி (65) ஆகியோர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்குள் வந்தனர். அப்போது மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து ஊற்றி 4 பேரும் தீக்குளிக்க முயற்சி செய்தனர். தீப்பெட்டி எடுத்து பற்ற வைக்க முயன்ற போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 4 பேரிடமும் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட குமார் கூறியதாவது:-

    எங்களுக்கு சொந்த ஊரில் 1ஏக்கர் நிலம் உள்ளது. அதில் விவசாயம் செய்து வந்தோம். இந்த நிலையில் எங்கள் நிலத்திற்கு அருகாமையில் 1.48 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அந்த வழியாக எங்கள் நிலத்திற்கும் மற்றும் வெளியே செல்வதற்கும் வழித்தடமாக கடந்த 60 ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்தோம்.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 4 பேர் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டு இந்த வழியாக செல்லக்கூடாது, விவசாயம் செய்யக்கூடாது எனக்கூறி மிரட்டல் விடுத்தனர்.

    மேலும் எனது தாயையும் பயங்கரமாக தாக்கினர். இதில் எனது தாய் உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இது குறித்து பூலாம்பட்டி போலீஸ் நிலையத்திலும் புகார் தெரிவித்திருந்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கலெக்டர் அலுவலகத்திலும் புகார் தெரிவித்தோம் இதுவரை நடவடிக்கை இல்லை.

    எங்களால் வெளியே செல்வதற்கு வழியில்லாமலும், விவசாயம் செய்வதற்கும் வழி இன்றி தவித்து வருகிறோம். மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி எங்களுக்கு வழி பாதையை ஏற்படுத்தி கொடுத்து நிலத்தில் விவசாயம் செய்ய உதவ வேண்டும்.

    இவ்வாறு அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    இது தொடர்பாக டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ×