என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • 1,2,3,4-வது பிளாட்பாரங்களில் அடிப்படை பணிகள் நடந்து முடிந்துள்ளன.
    • தற்போது 7,8,9 ஆகிய பிளாட்பாரங்களில் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அங்குள்ள 1 வது பிளாட்பாரத்தில் இருந்து 11-வது பிளாட்பாரம் வரை பல்வேறு கட்டங்களாக பணிகள் நடைபெற உள்ளது. எழும்பூர் பாரம்பரிய ரெயில் நிலைய கட்டிடத்தை தவிர மற்ற இடங்கள் சீரமைக்கப்படுகிறது.

    விமான நிலையத்தை போல ரெயில் நிலையம் புதிதாக மாற்றி அமைக்கப்படுகிறது. இதற்காக பல்வேறு கட்டமாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

    1,2,3,4-வது பிளாட்பாரங்களில் அடிப்படை பணிகள் நடந்து முடிந்துள்ளன. தற்போது 7,8,9 ஆகிய பிளாட்பாரங்களில் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் செய்வதற்காக அங்கிருந்து புறப்படக்கூடிய ரெயில்களை மாற்றுவதற்கு ரெயில்வே துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    ரெயில்வே துறையின் பல்வேறு தொழில்நுட்ப பிரிவுகளை சேர்ந்த அதிகாரிகள் இணைந்து இந்த மூன்று பிளாட்பாரங்களில் சீரமைப்பு பணிகளை தொடங்க இருப்பதால் தாம்பரத்தில் இருந்து ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் 5 எக்ஸ்பிரஸ் ரெயில்களை தாம்பரத்தில் இருந்து இயக்கவும் ஒரு எக்ஸ்பிரஸ் ரெயிலை கடற்கரை ரெயில் நிலையத்திலிருந்து இயக்கவும் திட்டமிட்டு அதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.

    வருகிற 10-ந் தேதி முதல் நவம்பர் மாதம் 11-ந்தேதி வரை இரண்டு மாதங்கள் தாம்பரம் ரெயில் நிலையத்திலிருந்து 5 முக்கிய ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    எழும்பூர்-திருச்சி இடையே இயக்கப்படும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 10-ந் தேதி முதல் நவம்பர் 9-ந்தேதி வரை தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.

    எழும்பூர்-மதுரை இடையே இயக்கப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் 2 மாதம் அங்கிருந்து இயக்கப்படும்.

    எழும்பூரில் இருந்து திருச்சி வரை இயக்கப்படும் ரெயில் எண் 22675 எக்ஸ்பிரஸ் வருகிற 11-ந்தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு செல்லும்.

    எழும்பூரில் இருந்து ராமேஸ்வரம் செல்லக்கூடிய இரண்டு எக்ஸ்பிரஸ் ரெயில்களும் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.

    இதே போல எழும்பூரில் இருந்து மும்பைக்கு செல்லக்கூடிய எண் 22158 எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 11-ந் தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை கடற்கரை ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு செல்லும்.

    ஏற்கனவே கொல்லம் எக்ஸ்பிரஸ், குருவாயூர், மன்னார்குடி எக்ஸ்பிரஸ்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மேலும் 6 ரெயில்கள் எழும்பூரில் இருந்து தாம்பரம் மற்றும் கடற்கரை நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் ரெயில் இயக்க மாற்றத்தை அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு பயணத்தை தொடரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    • பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு பெருக்கம் ஆகியவற்றுக்கும் இந்த சீர்திருத்தம் வகை செய்யும்.
    • இட்லி, தோசை போன்றவற்றுக்கு 5% வரி விதிக்கப்படுவது போன்ற திருத்தப்பட வேண்டிய குறைகளும் உள்ளன. அவை சரி செய்யப்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    ஜி.எஸ்.டி கவுன்சிலால் தீர்மானிக்கப்பட்டு, மத்திய அரசால் வரும் 22-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஜி.எஸ்.டி வரி சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை. அடித்தட்டு மக்கள் முதல் அரசு வரை அனைத்துத் தரப்பினருக்கும் இந்த சீர்திருத்தங்கள் பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை.

    இதுவரை நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி வரி விகிதங்கள், 40% வரிப் பிரிவு இல்லாமல் 5%, 18% என இரட்டை அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளன. இதனால் மின்னணு பொருள்கள், செல்பேசிகள், வாகனங்கள், காப்பீடுகள் ஆகியவற்றின் வரி குறைக்கப்படவுள்ளன. இதனால், அரசுகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதைப் போல தோன்றினாலும், வணிகம் அதிகரித்து அதிக எண்ணிக்கையில் ஒவ்வொரு பொருளும் விற்பனை செய்யப்படும் போது மிகக்குறுகிய காலத்தில் அந்த வருவாய் இழப்பு ஈடு செய்யப்படும். அதுமட்டுமின்றி, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு பெருக்கம் ஆகியவற்றுக்கும் இந்த சீர்திருத்தம் வகை செய்யும்.

    உடல நலனுக்கு கேடு விளைவிக்கும் நொறுக்குத் தீனிகள், குளிர்பானங்கள் போன்றவற்றின் மீதான வரி 40% அதிகரிக்கப்பட்டிருப்பது மிகவும் சரியானது. அதேநேரத்தில் பீடியின் மீதான வரி 28 விழுக்காட்டில் இருந்து 40% ஆக அதிகரிக்கப்படுவதற்கு பதிலாக 18% ஆக குறைக்கப்பட்டிருப்பது, பரோட்டா போன்ற உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவு வகைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இட்லி, தோசை போன்றவற்றுக்கு 5% வரி விதிக்கப்படுவது போன்ற திருத்தப்பட வேண்டிய குறைகளும் உள்ளன. அவை சரி செய்யப்பட வேண்டும்.

    சிங்கப்பூரில் உள்ளது போன்ற ஒற்றை அடுக்கு ஜி.எஸ்.டியை நோக்கி பயணிப்பது தான் நமது இலக்காக இருக்க வேண்டும்; அதேபோல், பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு வரம்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    • திமுக என்ற தீயசக்தி எந்தவிதத்தில் முயற்சி செய்தாலும் அவர்களின் தீய எண்ணம் ஈடேறாது.
    • திமுகவின் சதித்திட்டத்தை முறியடித்திட கழகத்தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டும்.

    சென்னை:

    சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பேரியக்கம் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா ஆகியோரால் வளர்த்தெடுக்கப்பட்ட மாபெரும் ஒரு பேரியக்கம். இது ஏழை, எளிய, சாமானிய மக்களுக்காகவே உருவான இயக்கம். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சூளுரைத்ததுபோல் "இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்".

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எந்த சக்தியாலும் அழிக்கமுடியாத ஒரு பேரியக்கம் என்பதை கழக மூத்த முன்னோடியும், கழக சட்டமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் செங்கோட்டையன் நிரூபித்து இருக்கிறார். பல்வேறு நெருக்கடியான காலகட்டங்களிலும் செங்கோட்டையன் உடனிருந்தவர். தனது உடம்பில் ஓடுவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரத்தம் தான் என்பதை செங்கோட்டையன் நிரூபித்துள்ளார். கழகம் ஒன்றுபட வேண்டும் என்ற செங்கோட்டையனின் கருத்துதான் இன்றைக்கு ஒவ்வொரு தொண்டர்களின் கருத்து. தமிழக மக்களின் கருத்தும் இதுதான். நானும் இதைத்தான் வலியுறுத்துகிறேன்.

    அன்பு சகோதரர் செங்கோட்டையனைப் போன்று உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை திமுக என்ற தீயசக்தி எந்தவிதத்தில் முயற்சி செய்தாலும் அவர்களின் தீய எண்ணம் ஈடேறாது. திமுகவின் சதித்திட்டத்தை முறியடித்திட கழகத்தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டும். இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய இந்த இயக்கம் ஒரு காட்டாற்று வெள்ளம் போன்றது. இதனை எந்த அணை போட்டும் யாராலும் தடுக்க முடியாது. எனவே, திமுக என்ற தீயசக்தி, நம் கழகம் ஒன்றுபட எப்படியெல்லாம் தடைபோட்டு தடுத்தாலும் அவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கி கழகம் மீண்டும் அதே மிடுக்கோடும், செறுக்கோடும் மிளிரும்.

    வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மக்கள் விரோத அரசு வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி. ஒன்றுபட்ட, வலிமைமிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட வழிவகை செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஒன்று படுவோம்! வென்று காட்டுவோம்!

    நாளை நமதே! வெற்றி நிச்சயம்!

    பேரறிஞர் அண்ணா நாமம் வாழ்க!

    புரட்சித்தலைவர் நாமம் வாழ்க!

    புரட்சித் தலைவி அம்மா நாமம் வாழ்க!

    நன்றி

    வணக்கம். 

    • முதல் நிகழ்ச்சியாக ஆண்டிபட்டியில் நடந்த பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றி பேசினார்.
    • முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது அரசியல் நிலைப்பாடு குறித்த முக்கிய தகவலை வெளியிடுவதாக செய்தி வந்தது.

    தேனி:

    'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற முழக்கத்துடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி தேனி மாவட்டத்தில் நேற்று முதல் 2 நாள் பிரசாரம் செய்ய திட்டமிட்டார்.

    முதல் நிகழ்ச்சியாக ஆண்டிபட்டியில் நடந்த பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றி பேசினார். இன்று காலை தேனியில் உள்ள தனியார் விடுதியில் விவசாயிகள், வணிகர் சங்க நிர்வாகிகள் ஆகியோருடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறுவதாக இருந்த நிலையில் ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது அரசியல் நிலைப்பாடு குறித்த முக்கிய தகவலை வெளியிடுவதாக செய்தி வந்தது. இதனையடுத்து தேனியில் நடைபெற இருந்த விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள் மற்றும் வணிகர் சங்க பிரதிநிதிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தான் பிரசாரம் செய்யும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்கு நிலவும் பிரச்சனைகள் குறித்து வணிகர் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வந்த எடப்பாடி பழனிசாமி தேனியில் கூட்டத்தை ரத்து செய்தது கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அனைத்துக் குழந்தைகளுமே வெல்ல வேண்டும் என நினைப்பவர்கள்;
    • காமராசர் அவர்களின் கனவுகளை மெய்ப்பித்து வருபவர்கள் என்றார்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

    அறிவு தீபம் ஏற்றி, அறியாமை இருளை நீக்குபவர்கள்;

    அனைத்துக் குழந்தைகளுமே வெல்ல வேண்டும் என நினைப்பவர்கள்;

    அனைத்துச் சமுதாய மக்களையும் சமமாக பாவித்து, அர்ப்பணிப்பு உணர்வோடு சமத்துவ சமுதாயம் படைக்கப் பாடுபடுபவர்கள்;

    இவர்கள்தாம் கல்விக் கண் திறந்த எம் கொள்கைத் தலைவர் காமராசர் அவர்களின் கனவுகளை மெய்ப்பித்து வருபவர்கள்;

    ஆம், இவர்கள்தாம் நம் ஆசிரியப் பெருமக்கள். இவர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளை இந்த ஆசிரியர் தினத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஏற்றமிகு தலைமுறையை உருவாக்கி வரும் நம் ஆசிரியர்களின் நெடுநாள் கோரிக்கைகளை, கொடுத்த வாக்குறுதியின்படி நிறைவேற்றி, அவர்கள் வாழ்விலும் ஏற்றம் காண வழிவகை செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை.
    • அ.தி.மு.க. ஒருங்கிணைப்புக்கு தேவைப்பட்டால் நாங்கள் பேசவும் தயாராக உள்ளோம்.

    நெல்லை:

    தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * அ.தி.மு.க.வில் பிரிந்தவர்களை மீண்டும் இணைக்க செங்கோட்டையன் முயல்வது நல்லதுதான். செங்கோட்டையன் மேற்கொண்டுள்ள முயற்சி நல்ல விஷயம்.

    * அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை.

    * அ.தி.மு.க. ஒருங்கிணைப்புக்கு தேவைப்பட்டால் நாங்கள் பேசவும் தயாராக உள்ளோம்.

    * அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் தி.மு.க. ஆட்சியை வீழ்த்திட முடியும்.

    * அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை. கடைசி நேரத்தில் கூட மாற்றங்கள் வரும் என்றார். 

    • வெளியில் சென்றவர்களை இணைக்காமல் ஆட்சி அமைத்துவிடலாம் என கூற முடியாது.
    • ஆட்சி மாற்றம் தேவை என மக்கள் நினைக்கிறார்கள். அதனால் வெளியில் சென்றவர்களை இணைக்க வேண்டும்.

    கோபி:

    முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

    * 2024-ல் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருந்தால் 30 இடங்களில் வென்றிருக்க முடியும்.

    * அ.தி.மு.க.வில் தொய்வு உள்ளது, பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் கூறினோம்.

    * நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, அன்பழகன் ஆகியோருடன் சேர்ந்து எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, வெளியே சென்றவர்களை அரவணைத்தால் மட்டுமே தேர்தலை சந்திக்க முடியும் என கூறினோம்.

    * வெளியில் சென்றவர்களை இணைக்காமல் ஆட்சி அமைத்துவிடலாம் என கூற முடியாது.

    *அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள், நிபந்தனை இல்லாமல் மீண்டும் வர தயார் என கூறுகிறார்கள்.

    * எந்த பொறுப்பும் தேவையில்லை என கூறுபவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    * ஆட்சி மாற்றம் தேவை என மக்கள் நினைக்கிறார்கள். அதனால் வெளியில் சென்றவர்களை இணைக்க வேண்டும்.

    * பிரிந்த தலைவர்களை இணைக்கவில்லை என்றால் நாங்கள் அந்தப் பணிகளை மேற்கொள்வோம்.

    * யார், யாரை இணைக்க வேண்டும் என்பது குறித்து பொதுச்செயலாளர் முடிவு செய்து கொள்ளலாம்.

    * என்னுடைய கருத்தை கூறி இருக்கிறேன், இது நடக்கவில்லை என்றால் நாங்கள் முயற்சி செய்வோம்.

    * 10 நாட்களில் முயற்சி எடுக்கவில்லை என்றால், இதே மனநிலையில் உள்ளவர்களை திரட்டி முயற்சி மேற்கொள்வோம்.

    * அ.தி.மு.க.வுக்காக எந்த ஒரு தியாகத்தையும் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

    * எங்களுடைய கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பது தான் எங்களது ஆசை.

    * ஜெயலலிதா கூறியது போல் நூறாண்டு காலம் அ.தி.மு.க. ஆள வேண்டும் என்பதற்கான பணியை தொடங்கியுள்ளோம்.

    * நிறைவேற்றவில்லை என்றால் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்றார்.

    * உங்களை மீண்டும் அமைச்சர் ஆக்கியது எடப்பாடி பழனிசாமி தானே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செங்கோட்டையன், தன்னைப் போல் 2009-ல் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர் தான் எடப்பாடி பழனிசாமி என்று கூறினார்.

    * பிரிந்து சென்ற தலைவர்களை சந்தித்து பேசி விட்டீர்களா? என்ற கேள்விக்கு அது சஸ்பெண்ஸ் என கூறினார். 

    • யாராவது கட்சியை விட்டு சென்றால் அவர்களை நேரில் சென்று மீண்டும் அழைப்பார் எம்.ஜி.ஆர்.
    • ஆளுமை, மக்கள் செல்வாக்கு மிக்க தலைமை தேவை என்பதால் ஜெயலலிதாவை ஆதரித்தோம்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். இது முக்கியமான நேரம், அமைதி காக்குமாறு கூறி பேசத் தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

    * கடந்த 1972-ல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட இயக்கம் தான் அ.தி.மு.க.

    * கிளைக் கழக செயலாளராக எனது பணியை அ.தி.மு.க. வில் தொடங்கினேன்.

    * செய்தியாளர் சந்திப்பை முடித்துவிட்டு வெளியே வந்து பொதுமக்கள், தொண்டர்களுடன் உரையாற்றுவேன்.

    * மக்கள் மனதில் குடிக்கொண்டிருக்கும் தலைவர் தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

    * என்னை பொருளாளராக நியமித்து பொதுக்குழுவை நடத்த எம்.ஜி.ஆர்.சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    * சத்யா ஸ்டூடியோவுக்கு என்னை அழைத்து மனதார பாராட்டியவர் எம்.ஜி.ஆர்.

    * சத்தியமங்கலத்தில் என்னை போட்டியிடுமாறு கூறினார் எம்.ஜி.ஆர்.

    * என்னுடைய பெயரை சொன்னால் மட்டும் போதும் தேர்தலில் வெற்றி பெறலாம் என எம்.ஜி.ஆர். கூறினார்.

    * இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர் என்ற பெயரை பெற்றவர் எம்.ஜி.ஆர்.

    * யாராவது கட்சியை விட்டு சென்றால் அவர்களை நேரில் சென்று மீண்டும் அழைப்பார் எம்.ஜி.ஆர்.

    * ஆளுமை, மக்கள் செல்வாக்கு மிக்க தலைமை தேவை என்பதால் ஜெயலலிதாவை ஆதரித்தோம்.

    * திராவிடர்கள், ஆன்மீகவாதிகள் ஏற்றுக்கொள்ளும் ததலைமை பண்பை பெற்றிருந்தார் ஜெயலலிதா.

    * ஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுகவுக்கு சோதனை வந்த போது அனைவரும் சேர்ந்து சசிகலாவை அழைத்தோம்.

    * சசிகலாவுக்கு பின் எடப்பாடி பழனிசாமியை நியமித்தோம்.

    * எனக்கு 2 வாய்ப்புகள் இருந்தபோதும் இயக்கம் உடைந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்

    * அ.தி.மு.க.வுக்காக பல்வேறு தியாகங்களை செய்திருக்கிறேன்.

    * 2016-க்கு பின் தேர்தல் களம் போராட்டக்களம் ஆகி விட்டது என்பதை நாம் அறிவோம்.

    * 2019, 2021, 2024 உள்ளாட்சி தேர்தல்களை சந்தித்த போது களத்தில் பிரச்சனை ஏற்பட்டது என்றார்.

    முன்னதாக, கோபியில் செய்தியாளர் சந்திப்பை நடத்துவதற்கு முன்னர் செங்கோட்டையன் ரோடுஷோ நடத்தினார்.

    • அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
    • கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    மேட்டூர்:

    கர்நாடகாவில் தென்மே ற்கு பருவமழை காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்தாண்டில் மேட்டூர் அணை 6 முறை நிரம்பியது.

    இதற்கிடையே கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட நீர்வரத்து குறைய தொடங்கியது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று மாலை முதல் நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை முதல் நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை 10 மணி முதல் மீண்டும் 16 கண் மதகு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    16 கண் மதகு வழியாக மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • விடுமுறை தினமான இன்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    தருமபுரி:

    கர்நாடகா, கேரளா மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், அணை பகுதிகளிலும் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

    இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளுக்கு மீண்டும் நேற்று நீர்வரத்து அதிகரித்ததால் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரத்து 25 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 18 ஆயிரத்து 461 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரத்து 693 கனஅடி வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 18 ஆயிரத்து 942 கனஅடி திறக்கப்பட்டுள்ளது.

    இந்த இரு அணைகளில் இருந்து வினாடிக்கு 37 ஆயிரத்து 403 கனஅடி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

    இந்த தண்ணீர் தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் நேற்று வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக வந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி 32 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.

    இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    விடுமுறை தினமான இன்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை இருமாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • நேற்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.78,360-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    • ஒரு கிராம் வெள்ளி 137 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 37ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு 680 ரூபாயும், நேற்றுமுன்தினம் சவரனுக்கு 160 ரூபாயும், நேற்று சவரனுக்கு 640 ரூபாயும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.78,440-க்கு விற்பனையானது. வரலாற்றில் இதுவரை இல்லாத உச்சமாக நேற்றுமுன்தினம் தங்கம் விலை உயர்ந்து விற்பனையானது. இதனை தொடர்ந்து நேற்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.78,360-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில், நேற்று சற்று குறைந்த தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,865-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.78,920-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலையில் மூன்றாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 137 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 37ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    04-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.78,360

    03-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.78,440

    02-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.77,800

    01-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.77,640

    31-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.76,960

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    04-09-2025- ஒரு கிராம் ரூ.137

    03-09-2025- ஒரு கிராம் ரூ.137

    02-09-2025- ஒரு கிராம் ரூ.137

    01-09-2025- ஒரு கிராம் ரூ.136

    31-08-2025- ஒரு கிராம் ரூ.134

    • மதுரை- பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரெயிலில் வருகிற 11-ந்தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகிறது.
    • வருகிற 9-ந்தேதி முதல் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டு 20 பெட்டிகளுடன் இயக்கப்படும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு மதுரை- பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரெயிலில் வருகிற 11-ந்தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகிறது.

    அதன்படி, மதுரையில் இருந்து பெங்களூருவிற்கும், பெங்களூருவில் இருந்து மதுரைக்கும் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலில் (வண்டி எண்-20671, 20672) வருகிற 11-ந்தேதி முதல் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு 16 பெட்டிகளுடன் இயக்கப்படும்.

    அதே போல, மங்களூரு சென்டிரலில் இருந்து திருவனந்தபுரத்திற்கும், திருவனந்தபுரத்தில் இருந்து மங்களூரு சென்டிரலுக்கும் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலில் (20631, 20632) வருகிற 9-ந்தேதி முதல் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டு 20 பெட்டிகளுடன் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×