என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பேரூராட்சி அலுவலகத்திலேயே பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது.
    • தமிழகத்தில் பாதுகாப்பு வழங்க இயலாத திமுக ஆட்சி தான் நாடு போற்றும் நல்லாட்சியா?

    பாமக முக்கிய பிரமுகரும், ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம.க.ஸ்டாலினை கொல்ல முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பாமகவின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் ம.க. ஸ்டாலின் அவர்களைப் பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ய மர்ம நபர்கள் முயற்சித்ததாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    பட்டப்பகலில் ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்திலேயே பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. மாநிலத்தைச் சீர்படுத்த வேண்டிய திமுக அரசு விளம்பரத்தில் ஒரு புறம் மூழ்கியுள்ளது என்றால், மறுபுறம் குற்றங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை ஆளுங்கட்சியின் ஏவல்துறையாக மாறி வேடிக்கை பார்த்து வருகிறது.

    மக்களுக்கு சேவை செய்யும் அரசியல் தலைவர்களுக்கே தமிழகத்தில் பாதுகாப்பு வழங்க இயலாத இந்த திமுக ஆட்சி தான் நாடு போற்றும் நல்லாட்சியா?

    மாநிலத்தின் அமைதியிலும், மக்கள் பாதுகாப்பிலும் சிறிதும் அக்கறை இருந்தால், பாமக நிர்வாகியைக் கொலை செய்ய முயற்சி செய்த குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இபிஎஸ் செல்லும் வாகனத்தை தொண்டர்கள் முற்றுகையிட முயன்றனர்.
    • செங்கோட்டையன் கெடு விதித்த நிலையில் தொண்டர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

    தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டியில் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தை வழிமறித்து அதிமுகவினர் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

    அதிமுக ஒருங்கிணைய வலியுறுத்தி இபிஎஸ் செல்லும் வாகனத்தை தொண்டர்கள் முற்றுகையிட முயன்றனர்.

    இபிஎஸ் வாகனத்தை முற்றுகையிட்டு அதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும் என தொண்டர்கள் முழங்கி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    அதிமுகவிலிருந்து வெளியே சென்றவர்களை இணைக்க 10 நாட்களில் நடவடிக்கை எடுக்க செங்கோட்டையன் கெடு விதித்த நிலையில் தொண்டர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

    • திமுக அரசு, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ஆர்வம் காட்டாதது ஏனோ?
    • திமுக அரசுக்கு வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடத்தைத் தமிழகம் கற்பிக்கும்!

    பகுதி நேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவர் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே? என்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இன்றோடு தாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்று 4 ஆசிரியர்கள் தினம் கடந்துவிட்டன. பள்ளிக் கல்வித்துறையில் பகுதி நேர ஆசிரியர்களாகப் பணியாற்றும் ஓவிய, இசை மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்களுக்குத் தாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதி எண்-181 இன்றாவது தங்களுக்கு ஞாபகம் வருகிறதா?

    ஆட்சிக்கு வருவதற்கு முன் ஆசிரியர்களின் பணிநிரந்தரக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, ஆட்சிக் கட்டிலில் ஏறியதும் ஆசிரியர்கள் நலனை சாவகாசமாக மறந்து கிடப்பில் போட்டது ஏனோ? நியாயமான கோரிக்கையை நிறைவேற்றக் கோரி அறவழியில் போராடினால், ஏவல்துறையின் துணைகொண்டு அடக்குவதற்கு மட்டும் ஆர்வம் காட்டிய திமுக அரசு, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ஆர்வம் காட்டாதது ஏனோ?

    பகுதிநேர ஆசிரியர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அலைக்கழித்து, அரசுப்பள்ளி மாணவர்களின் நலனையும் வதைக்கும் திமுக அரசுக்கு வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடத்தைத் தமிழகம் கற்பிக்கும்!

    சொன்னீங்களே செஞ்சீங்களா

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உளுந்தூர்பேட்டை முன்சீப் நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டது.
    • மகப்பேறு விடுப்பு வழங்கும்படி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் சுட்டிக்காட்டி உத்தரவு.

    மூன்றாவது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்த ரஞ்சிதா என்பவருக்கு 3வது பிரசவத்திற்கான ஓராண்டு மகப்பேறு விடுப்பும், சலுகைகளும் உளுந்தூர்பேட்டை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் நீதிபதி நிராகரித்துள்ளார்.

    இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்நிலையில், வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஹேமந்த் சந்தன்கவுடர் அமர்வு, பணிக்கு சேரும் முன்பே இரண்டு குழந்தைகளை பெற்ற நிலையில், மூன்றாவது முறையாக கருவுற்று பணிக்கு சேர்ந்த பெண்ணுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கும்படி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் சுட்டிக்காட்டி, ரஞ்சிதாவுக்கு சட்டப்படி மகப்பேறு விடுப்பு வழங்க, உளுந்தூர்பேட்டை முன்சீப் நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டது.

    மேலும் அந்த உத்தரவில், குழந்தை பிறப்புக்கு முன்பும், பின்பும் வலிகளை அனுபவிக்கும் தாய்க்கு ஆதரவாகவே மகப்பேறு விடுப்பு வழங்க கொள்கை முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது பிரசவத்துக்கு விடுப்பு மறுப்பது நியாயமற்றது. மூன்றாவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    • திரைப்பிரபலங்கள் பலர் ஓணம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
    • தவெக தலைவர் விஜய் ஓணம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    உலகம் முழுவதிலும் உள்ள மலையாள மக்கள் இன்று ஓணம் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

    இதை முன்னிட்டு, அரசியல் கட்சி தலைவர்கள் முதல் திரைப்பிரபலங்கள் வரை ஓணம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், தவெக தலைவர் விஜய் ஓணம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறுகையில்," ஓணம் பண்டிகையைக் கொண்டாடும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஒருநாள் இலவச பயிற்சி செப்.7-ந்தேதி நடக்கிறது.
    • பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ‘ஆசிரியர் தகுதித் தேர்வு வழிகாட்டி-2025’ எனும் புத்தகம் இலவசம்.

    ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஒருநாள் இலவச பயிற்சி வகுப்பு சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரங்கத்தில் செப்டம்பர் 7-ந்தேதி நடைபெறுகிறது என ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி இயக்குநர் ச.வீரபாபு தெரிவித்தார்.

    இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி

    ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சென்னையில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சியளித்து வரும் முன்னணி பயிற்சி நிறுவனம் ஆகும். இந்த அகாடமியில் படித்தவர்கள், கடந்த ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் அதிக அளவில் தேர்ச்சி பெற்று அரசுப் பள்ளி ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். தற்போது சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான புதிய பயிற்சி வகுப்புகளை தொடங்க இருக்கிறது.

     

    ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் இயக்குநர் ச.வீரபாபு

    ஒரு நாள் இலவச பயிற்சி

    இந்த நிலையில் சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரங்கத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு, செப்டம்பர் 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நேரடியாக நடைபெறுகிறது.

    இவ்வாறு கூறினார்.

    மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு வழிகாட்டும் வகையில் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்பில், ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி இயக்குநர் ச.வீரபாபு கலந்து கொண்டு, 'ஆசிரியர் தகுதித் தேர்வில் எளிதாக வெற்றி பெறுவது எப்படி? என்ற தலைப்பில் அதிக மதிப்பெண்களை பெறுவதற்கான பல்வேறு உத்திகளையும் ஆசிரியர் தகுதித் தேர்வு நுட்பங்களையும் தெளிவாக விளக்குகிறார்.

    மேலும், ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமியை சேர்ந்த அனுபவமிக்க பயிற்சியாளர்கள், டெட் தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2 ஆகிய பாடத் திட்டங்களை சுருக்கமாக கற்றுத்தர உள்ளனர்.

    ஆசிரியர் தகுதித் தேர்வு வழிகாட்டி புத்தகம் இலவசம்

    ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் 'ஆசிரியர் தகுதித் தேர்வு வழிகாட்டி-2025' எனும் புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த புத்தகம் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

    முன்பதிவு செய்க

    ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஒருநாள் இலவச பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், 'TNTET ONE DAY FREE COACHING-2025' என்று டைப் செய்து தங்களது பெயர் மற்றும் முகவரியுடன் 9176055514 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு, 9176055542, 9176055576, 9176055578 ஆகிய கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் இயக்குநர் ச.வீரபாபு தெரிவித்தார்.

    • ம.க.ஸ்டாலினுடன் சென்ற இருவருக்கு அரிவாள் வெட்டு என தகவல்.
    • ம.க.ஸ்டாலின் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.

    பாமக முக்கிய பிரமுகரும், ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம.க.ஸ்டாலினை கொல்ல முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்றபோது வழிமறித்து ம.க.ஸ்டாலின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

    மேலும், ம.க.ஸ்டாலினுடன் சென்ற இருவருக்கு அரிவாள் வெட்டு என தகவல் வெளியாகியுள்ளது.

    ம.க.ஸ்டாலின் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, ராமதாஸ் அணியைச் சேர்ந்த ம.க.ஸ்டாலின் மீது சணல் குண்டுவீசி கொலை முயற்சி செய்த சம்பவத்தை தொடர்ந்து பாமகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை கண்டித்து சாலையில் அமர்ந்து முழக்கமிட்டு வருகின்றனர்.

    சாலையில் டயர்களை கொளுத்தி ராமதாஸ் ஆதரவு பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால், சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், தீயை தண்ணீர் ஊற்றி அணைத்து போராட்டக்காரர்களை தடுத்தனர்.

    • பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பவுர்ணமி வருகிற 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1.46 மணிக்கு (6-ந்தேதி நள்ளிரவுக்கு பின்) தொடங்கி அன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நிறைவடைகிறது.

    இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் வர உள்ளதால் பவுணர்மியன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    • கட்சி சார்பு இல்லாத பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என நினைக்கிறார்கள்.
    • அ.தி.மு.க மீது தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் இன்று ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிடம் நன்மதிப்பைப் பெற்றவர் செங்கோட்டையன். அவர் இன்று அ.தி.மு.க.வில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தனது எண்ணத்தை தெரிவித்துள்ளார். அனைத்து தொண்டர்களின் எண்ணத்தையே வெளிப்படுத்தி உள்ளார். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் கருத்தை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன்.

    எல்லோரும் ஒன்றிணைந்தால் மட்டுமே எம்ஜிஆர் , ஜெயலலிதா ஆட்சியை கொண்டுவர முடியும்.

    ஒன்றிணைப்பு குழு என்பது குறித்து எனக்கு இன்றைக்கு தான் தெரிய வந்துள்ளது.

    எங்களிடம் செங்கோட்டையன் தொடர்பில் இல்லை. அவர் எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ளார்.

    அவருக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது என்பது தெரிய வருகிறது. அவருடைய எண்ணம் போல் எல்லா தொண்டர்களும் விரும்புகிறார்கள். நிச்சயமாக எல்லோரும் அதை வரவேற்பார்கள்.

    10 நாள் கெடு கொடுத்திருக்கார். இல்லை என்றால் இணைப்பதற்கான முயற்சியை அவர் மேற்கொள்ளவார் என்பது அர்த்தம். 10 நாள் கெடு முடிந்தவுடன் எனது கருத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கட்சி சார்பு இல்லாத பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என நினைக்கிறார்கள். அ.தி.மு.க மீது தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள். அதை இணைப்பதற்கு தடையாக இருப்பவர்கள் மீது கோபமாகவும் இருக்கிறார்கள்.

    சசிகலாவை சந்தித்து செங்கோட்டையன் பேசினாரா என்பது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் .

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பள்ளிக்கல்வித் துறை செயல்படாமல் முடங்கி விடும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை ஆகும்.
    • பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் விரைவில் ஓய்வு பெறவிருப்பதால் இதில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

    பள்ளிக்கல்வி துறையை பாழடைந்த துறையாக மாற்றியதுதான் திமுக அரசின் சாதனை என்றும் பள்ளிக்கல்வி துறையில் முதுகெலும்பான பணியிடங்களையே திமுக அரசு நிரப்பாமல் வைத்திருந்தது கண்டிக்கத்தக்கது என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் 24 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களும், 29 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களும் காலியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பள்ளிக்கல்வியின் முதுகெலும்பாக திகழ்பவர்கள் முதன்மைக் கல்வி அலுவலர்களும், மாவட்டக் கல்வி அலுவலர்களும் தான் எனும் நிலையில் அந்தப் பணியிடங்களையே திமுக அரசு நிரப்பாமல் வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

    பள்ளிக்கல்வித் துறையில் இயக்குனர், மண்டல இணை இயக்குனர்கள் ஆகியோருக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தான். ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் பொதுக் கல்விக்கு ஒருவர், அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு ஒருவர் என இரு முதன்மைக் கல்வி அலுவலர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு அடுத்த நிலையில் ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கும் ஒரு மாவட்ட கல்வி அலுவலர் பணியமர்த்தப்பட்டு இருப்பர்.

    பள்ளிக்கல்வி நிர்வாகத்திற்கும், பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும் இடையே பாலமாக செயல்படுபவர்கள் அவர்கள் தான். அவர்கள் இல்லாவிட்டால் பள்ளிக்கல்வித் துறை செயல்படாமல் முடங்கி விடும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை ஆகும்.

    ஆனால், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களும், மாவட்டக் கல்வி அலுவலர்களும் இல்லாமல் பள்ளிக்கல்வித்துறை தடுமாறிக் கொண்டிருக்கிறது. அரியலூர், சென்னை, காஞ்சிபுரம், கரூர்.

    கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகை, நீலகிரி, பெரம்பலூர், இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தஞ்சாவூர்ம் தேனி, திருப்பூர், திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 24 முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

    தமிழகத்தின் 38 மாவட்டங்களில் உள்ள 76 முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களில் இவை ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு ஆகும். அதேபோல், 23 மாவட்டங்களில் 29 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களும் காலியாக உள்ளன.

    ஜூன் மாதத்தில் கல்வியாண்டு தொடங்கும் போது அனைத்து முதன்மைக் கல்வி அதிகாரிகள் பணி இடங்களும், மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடங்களும் நிரப்பப்பட்டிருப்பதை அரசு உறுதி செய்திருக்க வேண்டும்.

    இந்த அதிகாரிகள் எந்த தேதியில் ஓய்வு பெறப் போகிறார்கள் என்பது அரசுக்கு முன்கூட்டியே தெரியும் என்பதாலும், மேல்நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றின் தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதன் மூலம் தான் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்பதாலும் இவற்றை நிரப்புவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், அரசின் அலட்சியம் தான் இன்று நிலவும் அவலநிலைக்கு காரணமாகும்.

    இப்போதும் கூட முதன்மைக் கல்வி அதிகாரி மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடங்கள் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் காலியாக இருப்பது பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும், செயலாளருக்கும் தெரியுமா? என்பது கூட தெரியவில்லை. பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் விரைவில் ஓய்வு பெறவிருப்பதால் இதில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

    முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிடங்கள் காலியாக இருக்கும் போது அவற்றை நிரப்புவதற்கு தகுதியான மேல்நிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இன்று வரை அந்தப் பட்டியலைக் கூட தயாரிக்காமல் கல்வித் துறை உறங்கிக் கொண்டிருக்கிறது.

    அனைத்து மாவட்டங்களிலும் அனைவருக்கும் கல்வித் திட்டப் பணிகள், இடைநிற்றலைக் குறைப்பதற்காக மாணவர்களுக்கு ஊக்கத் தொகை உள்ளிட்ட திட்டங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்தான் செயல்படுத்த வேண்டும்.

    மேலும் கல்விப் பணிகள் குறித்து முடிவெடுப்பதும், கற்றல், கற்பித்தல் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதும் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் ஆகும். ஆனால், பல மாவட்டங்களில் இந்தப் பணியிடங்கள் காலியாக இருப்பதால் அந்தப் பணிகளும் முடங்கிக் கிடக்கின்றன. இதனால் பாதிக்கப்படுபவர்கள் அரசு பள்ளி மாணவர்கள் தான்.

    அதுமட்டுமின்றி முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படும் போது மேல்நிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அதனால், ஏற்படும் காலியிடங்களை நிரப்ப பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவிஉயர்வு வழங்கப்படும். ஆனால், அரசின் அலட்சியத்தால் அனைத்து நிலை பதவி உயர்வுகளும் தடைபட்டுள்ளன.

    தமிழ்நாட்டில் ஒரு லட்சம் வகுப்பறைகளுக்கு ஆசிரியர்கள் இல்லை; தமிழக அரசே ஒரு கணக்குப் போட்டு 10 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவித்துள்ளது; தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2500-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

    இத்தகைய சூழலில் அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் மேம்படுவதற்கு வாய்ப்புகளே இல்லை. ஆசிரியர் நாளை கொண்டாடும் வேலையில் கல்வித்துறையின் அவலங்களை பேசுவது வேதனையளிக்கிறது.

    திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கல்வித்துறையை மேம்படுத்துவது இருக்கட்டும்... ஏற்கனவே இருந்த நிலை மேலும் சீரழியாமல் தடுப்பதற்குக் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அதன் விளைவு தான் தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறை பாழடைந்த துறையாக மாறியுள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்கு ஒரே தீர்வு திமுக அரசை அகற்றுவது தான். அதை வரும் தேர்தலில் தமிழக மக்கள் செய்து முடிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜி.எஸ்.டி. மறுசீரமைப்பு அறிவிப்பு வரவேற்கத்தக்க வடிவில் இல்லை.
    • செங்கோட்டையனின் அறிவிப்பு அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம்.

    மதுரை:

    சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இன்று முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள், ஆசிரியர் தினம். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இஸ்லாமிய மக்களுக்கு மிலாடி நபி வாழ்த்துகள்.

    மதுரையில் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றிய ராமகிருஷ்ணன் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்திருக்கிறார். குப்பை கிடங்கில் அவர் தூக்கில் தொங்கவிடப்பட்டு இருக்கிறார். அந்த மரணம் தற்கொலை அல்ல, கொலை என சந்தேகிக்கும் நிலையில் உள்ளது. ஆகவே அவரின் மனைவி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்து உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் இன்று பிரேத பரிசோதனை நடைபெற உள்ளது.

    அவர் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் சொல்வதற்காக மதுரை வந்திருக்கிறேன். அந்த மரணத்தில் கொலைக்கான முகாந்திரம் இருப்பதாக தெரிகிறது. வழக்கமாக காவல்துறை விசாரிப்பதை போல் இல்லாமல் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு ஆணை இடவேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். அந்த குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதற்கும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

    ஜி.எஸ்.டி. மறுசீரமைப்பு அறிவிப்பு வரவேற்கத்தக்க வடிவில் இல்லை. அமெரிக்க பேரரசு நமது மீது விதித்திருக்கிற 50 சதவீத வரி தொடர்பாக மடை மாற்றம் செய்வதற்கு இந்திய அரசு அல்லது பிரதமர் முயற்சிக்கிறார் என்று விமர்சனங்கள் வெளி வந்துள்ளது. 28 சதவீதமாக இருந்த வரி 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சிறுகுறு, நடுத்தர தொழில் செய்யக்கூடியவர்கள் சிறு வணிகர்கள், எளிய மக்கள் பெரிதும் பயன்பட போவதில்லை என வல்லுனர்கள் கூறியிருக்கிறார்கள்.

    செங்கோட்டையனின் அறிவிப்பு அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம். அ.தி.மு.க. ஒருங்கிணைய வேண்டும் என கட்சிக்குள் செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளார்கள். அவர் இன்று மனம் திறந்து பேச போவதாக சொன்னார், ஆனால் அவர் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை என்று அவரின் பேட்டியில் தெரியவருகிறது. அவர் இன்னும் வெளிப்படையாக சொல்லலாம். இருந்தாலும் அவர்களின் உட்கட்சி விவகாரம், பெரியார் இயக்கம் என்கிற முறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அ.தி.மு.க.வை பெரிதும் மதிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொதுச்செயலாளர் கருத்துக்கு மாற்று கருத்து கிடையாது.
    • நாங்கள் அனைவரும் அவரது கருத்துக்கு கட்டுப்படுகிறோம்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் வ.உ.சி. பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், நத்தம் இரா.விசுவநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் திண்டுக்கல் சி.சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    செங்கோட்டையன் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கூறுகிறார். அதற்கு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிப்பார். அவரது முடிவுதான் எங்களது கருத்து. பொதுச்செயலாளர் கருத்துக்கு மாற்று கருத்து கிடையாது.

    நாங்கள் அனைவரும் அவரது கருத்துக்கு கட்டுப்படுகிறோம். மூத்த அமைச்சர்கள் 6 பேர் சென்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஒன்றிணைய வேண்டும் என கூறியதாக செங்கோட்டையன் தெரிவித்தது உண்மையா? இல்லையா? என்பது எனக்கு தெரியாது. செங்கோட்டையன் முடிவை அவர் தெரிவித்துள்ளார்.

    எங்களது முடிவு பொதுச்செயலாளர் அறிவிக்கும் முடிவை பொறுத்து இருக்கும் என்றார். 

    ×