என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வழக்குப்பதிவு செய்துள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உரிய கணக்கு கேட்டு சசிகலாவுக்கு அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீசும் அனுப்பி இருந்தனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள பத்மாவதி சர்க்கரை ஆலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து கோடிக்கணக்கில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக வங்கி நிர்வாகம் சார்பில் சி.பி.ஐ.யில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இதுபற்றி சி.பி.ஐ. அதிகாரிகள் உடனடியாக விசாரணையை தொடங்கவில்லை. இதைத் தொடர்ந்து வங்கி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த ஐகோர்ட்டு கடந்த ஜூன் மாதம் இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவில் சி.பி.ஐ. அதிகாரிகள் உரிய விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட்டது.
இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் காஞ்சிபுரம் சர்க்கரை ஆலை மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது சர்க்கரை ஆலையின் வங்கி கணக்குகள் மற்றும் ஆலையின் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டன. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ரொக்கமாக ரூ.450 கோடி வரை கொடுத்து காஞ்சிபுரத்தில் உள்ள பத்மாவதி சர்க்கரை ஆலையை விலைக்கு வாங்கி இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதும் அதில் சர்க்கரை ஆலையின் உரிமையாளர்கள் கையெழுத்து போட்டிருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகுதான் சசிகலா ரூ.450 கோடியை ரொக்கமாக கொடுத்து சர்க்கரை ஆலையை வாங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2019-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் ஏற்கனவே சசிகலா வீட்டில் சோதனை நடத்தி உள்ளனர். ரூ.450 கோடிக்கு சர்க்கரை ஆலையை விலைக்கு வாங்கியது தொடர்பாக உரிய கணக்கு கேட்டு சசிகலாவுக்கு அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீசும் அனுப்பி இருந்தனர்.
சி.பி.ஐ. பதிவு செய்துள்ள வழக்கில் மேற்கண்ட தகவல்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
- சில நேரங்களில் உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெறுகின்றன.
- சாலையில் தடுப்பு கட்டைகள் இருப்பது போன்று ‘3 டி’ வடிவில் இந்த எச்சரிக்கை குறியீடு வரையப்பட்டு உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் உள்ள பல்வேறு சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகின்றன. அதிலும், குறிப்பாக பாதசாரிகள் சாலைகளை கடந்து செல்லும் போது வாகனங்கள் வேகமாக வருவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றன. இதனால் சில நேரங்களில் உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெறுகின்றன.
இதனை தவிர்க்கும் வகையில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவின் பேரில், தஞ்சாவூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் செந்தில்குமார் மேற்பார்வையில் உதவி கோட்ட பொறியாளர் கீதா, உதவி பொறியாளர்கள் லட்சுமிபிரியா, வீரமுத்து ஆகியோர் தஞ்சாவூர் உட்கோட்ட பகுதிகளில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளில் விபத்துகளை தவிர்க்க பல்வேறு குறியீடுகளை வரைந்து வருகின்றனர்.
அதன்படி, தஞ்சாவூர் மேம்பாலத்தில் மண்டைஓடு சின்னம் வரையப்பட்டது. இந்நிலையில், மாநில நெடுஞ்சாலையான நம்பர் 1 வல்லம் சாலை எலிசா நகர் பகுதியில் பாதசாரிகள் சாலையை கடக்கும் இடத்தில் விபத்தை தவிர்க்கும் வகையில் பாதசாரிகள், வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் '3 டி' வடிவ (முப்பரிமாண) எச்சரிக்கை குறியீடு வரையப்பட்டு உள்ளது.
சாலையில் தடுப்பு கட்டைகள் இருப்பது போன்று '3 டி' வடிவில் இந்த எச்சரிக்கை குறியீடு வரையப்பட்டு உள்ளது. இந்த சாலையில் 2 இடங்களில் பரீட் சார்த்த முறையில் இக்குறியீடு வரையப்பட்டு உள்ளது. மேலும், 2 இடங்களில் மண்டை ஓடு சின்னமும் வரையப்பட்டு உள்ளது.
இந்த குறியீடு பலன்தரும் பட்சத்தில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மாநில நெடுஞ்சாலைகளில் விபத்து நடைபெறும் இடங்களில் இக்குறியீடுகளை வரைய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- கூட்டணி குறித்து டிசம்பரில் தான் அறிவிப்போம்.
- கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்து நிதானமாகவே முடிவெடுத்தோம்.
மதுரை :
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. அணிகளை இணைக்க அமித்ஷா முயற்சி எடுத்து வருகிறார்.
* தேவையின்றி யாரையும் சந்திக்க வேண்டிய தேவை எனக்கில்லை.
* கூட்டணி குறித்து டிசம்பரில் தான் அறிவிப்போம்.
* கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்து நிதானமாகவே முடிவெடுத்தோம்.
* அ.ம.மு.க.வை சிறிய கட்சி என நயினார் நாகேந்திரன் நினைத்திருக்கலாம்.
* கூட்டணியை கையாள நயினார் நாகேந்திரனுக்கு தெரியவில்லை.
* விஜயுடன் கூட்டணி என பேசுவது தவறானது.
* தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் எனக்கூறினேனே தவிர அவருடன் இணையப்போகிறேன் எனக்கூறவில்லை.
* அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் வேட்பாளர் ஆவதில் எங்களுக்கு பிரச்சனை இல்லை என்றார்.
- கைதான சிறுவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு டவுன் பகுதியில் வெங்கடேஷ் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
நெல்லை:
நெல்லை டவுன் சுந்தரர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மகன் வெங்கடேஷ் என்ற ஆனந்த் (வயது 19). தாய்-தந்தை இறந்துவிட்ட நிலையில், வெங்கடேஷ் சென்னையில் கூலி வேலை செய்து வந்தார்.
சமீப காலமாக டவுனில் தனது பெரியப்பா வீட்டில் தங்கியுள்ள வெங்கடேஷ், கூலி வேலை செய்து வந்தார். நேற்று நள்ளிரவு 12 மணியளவில் வெங்கடேஷ் தனது நண்பர்கள் 2 பேருடன் சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்கு டீ குடிக்க சென்றார்.
அப்போது அங்கு மறைந்திருந்த 3 பேர் கும்பல், வெங்கடேசை நோக்கி அரிவாளுடன் ஓடிவரவே, அதனை பார்த்த வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர்கள் மோட்டார் சைக்கிளை திருப்பிக்கொண்டு த.மு. சாலையில் தப்பிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அந்த கும்பல் அவர்களை சுற்றி வளைக்கவே, மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் தவறி விழுந்தனர்.
உடனே அந்த கும்பல் வெங்கடேசை குறிவைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பல் உடனடியாக அங்கிருந்து தப்பிச்சென்றது.
இதனை பார்த்து அந்த பகுதி கடைக்காரர்களும், வெங்கடேசின் நண்பர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக சந்திப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வெங்கடேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் துணை போலீஸ் கமிஷனர் பிரசன்னகுமார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.
இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடந்த 2023-ம் ஆண்டு, டவுன் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சக்தி என்பவரை 2 கைகளையும் வெட்டிக்கொலை செய்யும் முயற்சியில், தற்போது கொலை செய்யப்பட்ட வெங்கடேசுக்கு தொடர்பு இருந்துள்ளது.
அந்த சம்பவத்திற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாமா என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர். இதனால் அந்த கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில், மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவின்பேரில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் பிரசன்னகுமார் தலைமையில் கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார், சந்திப்பு த.மு. சாலையில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் 3 பேர் கும்பல் வெங்கடேசை வெட்டிக்கொலை செய்தது உறுதியானது.
அதனை அடிப்படையாக கொண்டு விசாரித்ததில், நெல்லை டவுன் வயல் தெருவை சேர்ந்த இசக்கிராஜா(19) மற்றும் 2 சிறுவர்கள் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தை நடத்தியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் 2 சிறார்களை இன்று அதிகாலையில் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான இசக்கிராஜாவை தேடி வருகின்றனர்.
கைதான சிறுவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கடந்த சில நாட்களுக்கு முன்பு டவுன் பகுதியில் வெங்கடேஷ் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது கொலையாளிகள் தரப்பினரும் மோட்டார் சைக்கிளில் வரவே, 2 தரப்பினரின் மோட்டார் சைக்கிள்களும் மோதி கொண்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்படவே கைகலப்பு வரை சென்றதாகவும், அந்த பகுதி மக்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இசக்கிராஜா தரப்பினர் சமாதானம் அடையாமல், திட்டமிட்டு வெங்கடேசை கொலை செய்தது தெரியவந்தது.
கைதான 2 சிறுவர்களும் டவுனில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். தலைமறைவான இசக்கிராஜா பள்ளி படிப்பை முடித்துவிட்டு அரசு போட்டித்தேர்வுக்காக தனியார் அகாடமியில் படித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
- நடைபாதைக்கு மேலே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
- அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 7-வது நாளாக நீடிக்கிறது குறிப்பிடத்தக்கது.
ஒகேனக்கல்:
தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த 2 அணைகளும் முழுமையாக நிரம்பி விட்டன. அணைகளின் பாதுகாப்பு கருதி 2 அணைகளில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 33 ஆயிரத்து 122 கனஅடி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த நீர் கர்நாடக, தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் நேற்று காலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 43 ஆயிரம் கன அடியாக வந்தது.
தொடர்ந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடியாக நீடிகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது. ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் நடைபாதைக்கு மேலே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மீண்டும் தடைவிதித்து மாவட்ட கலெக்டர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார். அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 7-வது நாளாக நீடிக்கிறது குறிப்பிடத்தக்கது.
- ஒற்றை யானை ஒன்று கரும்பு வாகனத்தை எதிர்பார்த்து சாலையில் நின்று கொண்டிருந்தது.
- விவசாயிகள் கிராம மக்கள் ஒன்ற ணைந்து யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, மான், காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
குறிப்பாக தாளவாடி, ஆசனூர், பர்கூர் வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. சமீப காலமாக அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் சக்தி -மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து நின்று அங்கு கரும்புகளை ஏற்றி வரும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளை ருசிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
சில சமயம் வாகன ஓட்டிகளை துரத்தும் சம்பவமும் நடந்து வருகிறது.
இதனால் லாரியில் கரும்பு பாரங்களை ஏற்றி வரும் டிரைவர்கள் கரும்புகள் வெளியே தெரியாமல் இருப்பதற்காக லாரி சுற்றிலும் தார்ப்பாயை போட்டு மூடி வருகின்றனர். இருந்தாலும் கரும்பின் வாசனையை பிடித்து அந்த லாரிகளை யானைகள் வழிமறிப்பது நடந்து வருகிறது.
நேற்று தாளவாடி அடுத்த அரேப்பாளையம் பிரிவில் ஒற்றை யானை ஒன்று கரும்பு வாகனத்தை எதிர்பார்த்து சாலையில் நின்று கொண்டிருந்தது. அப்போது ஒரு லாரி கரும்பு பாரங்களை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது.
கரும்பை சுற்றியும் வெள்ளை கலர் தார்ப்பாய் போட்டு மூடப்பட்டிருந்தது. எனினும் கரும்பு வாசனையை பிடித்த அந்த ஒற்றை யானை அந்த லாரியை வழிமறித்து நிறுத்தி தார்பாயை தும்பிக்கையால் பிரித்து தூர எறிந்து கரும்பு கட்டிகளை எடுத்து கீழே போட்டு ருசித்தது.
இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை இருபுறமும் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. சுமார் 30 நிமிடங்களுக்கு யானை அந்த இடத்தை விட்டு சென்றதும் போக்குவரத்து சீரானது.
இதேபோல் நேற்று இரவு தாளவாடி அடுத்த அருள்வாடி கிராமத்துக்குள் ஒற்றை யானை புகுந்தது. அங்கு தோட்டங்களில் இருந்த பயிர்களை சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் கிராம மக்கள் ஒன்ற ணைந்து யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதன் காரணமாக இரவு நேர தூக்கத்தை தொலைத்து கிராம மக்கள் அவதி அடைந்தனர்.
- விளையாட்டின் ஒற்றுமை, ஊக்கம் ஆகியவற்றை இந்நிகழ்வு எடுத்துரைத்தது.
- பல துறைகளை சேர்ந்தவர்கள் இந்த நிகழ்வில் ஒன்றிணைந்தனர்.
சினிமா மற்றும் விளையாட்டு ஆகிய இரண்டின் கொண்டாட்டமாக சென்னை, தி.நகரில் உள்ள ஏஜிஎஸ் சினிமாஸில் RUC ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்டிவல் தொடங்கியது. இரண்டு நாட்கள் நடந்த இந்த விழாவில் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிளாக்பஸ்டர் மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்கள் ஒளிபரப்பப்பட்டன. இதன் மூலம் பார்வையாளர்கள் பெரிய திரையில் விளையாட்டின் சிலிர்ப்பை அனுபவித்தனர்.
இந்த நிகழ்வு ரைஸ் அப் சாம்பியன்ஷிப் ஃபவுண்டேஷனின் (RUC) அதிகாரப்பூர்வ தொடக்கமாக அமைந்தது. விளையாட்டு- கலாச்சாரம், பொழுதுபோக்கு மற்றும் லைஃப்ஸ்டைல் என பன்முகத்தன்மை கொண்ட நிகழ்வாகவும் இருந்தது. F1 சாம்பியன் நரேன் கார்த்திகேயன் இந்த நிகழ்வை தொடங்கி வைத்தார்.
மேலும், RUC-இன் அதிகாரப்பூர்வ ஜெர்சியை அவர் வெளியிட்டார். விளையாட்டு, சினிமா மற்றும் வணிகம் என பல்வேறு பின்னணிகளைக் கொண்ட குழுவால் நிறுவப்பட்டது RUC. விளையாட்டு மைதானத்திற்கு அப்பாற்பட்டு விளையாட்டின் ஒற்றுமை, ஊக்கம் ஆகியவற்றை இந்நிகழ்வு எடுத்துரைத்தது. தடகளம், சினிமா ரசிகர்கள், திரைத்துறையினர், வணிகம் மற்றும் விளையாட்டு என பல துறைகளை சேர்ந்தவர்கள் இந்த நிகழ்வில் ஒன்றிணைந்தனர்.
- மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி பங்கேற்க இருந்தார்.
- ராமதாஸ் ஆதரவாளர் ம.க.ஸ்டாலினை கொல்ல முயற்சி நடந்துள்ளது.
பா.ம.க. ராமதாஸ் அணியின் நிர்வாக குழு உறுப்பினர் ஸ்ரீகாந்தி கும்பகோணத்தில் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.
கும்பகோணத்தில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி பங்கேற்க இருந்தார்.
ராமதாஸ் ஆதரவாளர் ம.க.ஸ்டாலினை கொல்ல முயற்சி நடந்ததை அடுத்து ஸ்ரீகாந்தியின் கும்பகோணம் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- நேற்று சவரனுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.78,920-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- கடந்த 3 நாட்களில் சவரன் ரூ.3080 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு 680 ரூபாயும், நேற்றுமுன்தினம் சவரனுக்கு 160 ரூபாயும், நேற்று சவரனுக்கு 640 ரூபாயும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.78,440-க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து நேற்று சவரனுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.78,920-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று வரலாற்றில் இதுவரை இல்லாத உச்சமாக தங்கம் விலை தொட்டுள்ளது. கிராமுக்கு140 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,005-க்கும் சவரனுக்கு 1,120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.80,040-க்கும் விற்பனையாகிறது. கடந்த 3 நாட்களில் சவரன் ரூ.3080 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 138 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் உயர்ந்து பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 38ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
05-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.78,920
04-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.78,360
03-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.78,440
02-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.77,800
01-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.77,640
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
05-09-2025- ஒரு கிராம் ரூ.136
04-09-2025- ஒரு கிராம் ரூ.137
03-09-2025- ஒரு கிராம் ரூ.137
02-09-2025- ஒரு கிராம் ரூ.137
01-09-2025- ஒரு கிராம் ரூ.136
- பிரசார சுற்றுப்பயணத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி திண்டுக்கலில் தனியார் ஓட்டலில் தங்கி உள்ளார்.
- எஸ்.பி.வேலுமணி, முனுசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்துள்ளார்.
செங்கோட்டையன் விதித்த கெடுவை அடுத்து எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரசார சுற்றுப்பயணத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி திண்டுக்கலில் தனியார் ஓட்டலில் தங்கியிருக்கும் நிலையில், எஸ்.பி.வேலுமணி, முனுசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவதாக கூறப்படுகிறது.
- 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளன.
- மின்சார வாகனத்துறையில், இங்கிலாந்தின் இந்துஜா குழுமம் ரூ.7,500 கோடி முதலீடு செய்ய உள்ளது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஜெர்மனி, பிரிட்டன் பயணங்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ.15,516 கோடி மதிப்பில் முதலீடுகள் கிடைத்துள்ளன. 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளன.
மின்சார வாகனத்துறையில், இங்கிலாந்தின் இந்துஜா குழுமம் ரூ.7,500 கோடி முதலீடு செய்ய உள்ளது. தமிழ்நாட்டில் இந்துஜா குழுமம் முதலீடு செய்வதன் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு உருவாகும்.
இவை வெறும் எண்ணிக்கை அல்ல, வாய்ப்புகள், எதிர்காலம் மற்றும் கனவுகள். இது தான் திராவிட மாடல் அரசின் உத்வேகம் என்று பதிவிட்டுள்ளார்.
- சென்னை - ராமேஸ்வரம் விரைவு ரயில் வரும் 11ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
- சென்னை - மும்பை விரைவு ரயில் வரும் 11ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
சென்டைன எழும்பூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், சில ரெயில்கள் தாம்பரம் வரை மட்டுமே வந்து செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை - திருச்சி மலைக்கோட்டை விரைவு ரயில் வரும் 11ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாகவும் தாம்பரம் வரை மட்டுமே இயங்கும்.
மதுரை - சென்னை பாண்டியன் விரைவு ரயில் வரும் 10ம் தேதி முதல் நவம்பர் 9ம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயங்கும். எனினும், எழும்பூரில் இருந்து புறப்பாடு மாற்றமில்லை.
சென்னை - திருச்சி சோழன் விரைவு ரயில் வரும் 11ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும். எனினும், மறுமார்க்கமாக எழும்பூர் வரை இயங்கும்.
சென்னை - ராமேஸ்வரம் விரைவு ரயில் வரும் 11ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாகவும் தாம்பரம் வரை மட்டுமே இயங்கும்.
சென்னை - மும்பை விரைவு ரயில் வரும் 11ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக வழக்கம் போல எழும்பூர் வரை இயங்கும்.






