என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஈரோடு மாவட்ட ஆதரவாளர்கள் 7 பேரையும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.
    • அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.

    அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று வலியுறுத்திய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்தார். இதனை தொடர்ந்து, அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.

    இதன்பின்னர், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் செங்கோட்டையனை தொடர்ந்து அவரது ஈரோடு மாவட்ட ஆதரவாளர்கள் 7 பேரையும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.

    இந்நிலையில், அதிமுகவின் ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில், அந்த பொறுப்புக்கு தற்காலிகமாக ஏ.கே.செல்வராஜ் நியமனம் செய்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஈரோடு புழகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிற்கு ஒருவர் நியமிக்கப்படும் வரை, மாவட்டக் கழகப் பணிகளை மேற்கொள்வதற்காக, ஏ.கே.செல்வராஜ் (கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.

    கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக்கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் சரமாரியாக ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதலில் ஈடுபட்டனர்.
    • பட்டப்பகலில் காவலர்கள், பொதுமக்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் கண்டிக்கத்தக்கது.

    சென்னை கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகம் அருகில் வைத்து புரட்சி தமிழகம் கட்சித் தலைவரான ஏர்போர்ட் மூர்த்தி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே திடீர் மோதல் வெடித்தது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரான தொல். திருமாவளவன் பற்றி ஏர்போர்ட் மூர்த்தி யூடியூப்களில் அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் சரமாரியாக ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதலில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    டிஜிபி அலுவலக வளாகத்தில் ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல்: தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கு அவமானகரமான எடுத்துக்காட்டு!

    சென்னை காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலக வளாகத்தில், காவல்துறை பொறுப்பு தலைமை இயக்குனரை சந்திப்பதற்காக காத்திருந்த புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களை ஒரு கும்பல் சூழ்ந்து கொண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஏர்போர்ட் மூர்த்தி காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். பட்டப்பகலில் காவலர்கள், பொதுமக்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் கண்டிக்கத்தக்கது.

    காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்திற்கு வெளியில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு சமூக, அரசியல் கட்சித் தலைவர் மீது தாக்குதல் நடத்தப்படுவதிலிருந்தே தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமாக சீர்குலைந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஏர்போர்ட் மூர்த்தி அவர்களை ஒரு கும்பல் சூழ்ந்து கொண்டு தாக்கும் போது அங்கிருந்த காவலர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருந்தனர். மூர்த்தியைப் பாதுகாக்கவோ, குற்றவாளிகளை பிடிக்கவோ அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவது குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும், அதைத் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல முறை கூறிவிட்டேன். ஆனால், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சூழலை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணமோ, அக்கறையோ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இல்லை. தமிழகத்தில் கொலை, கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு இது தான் காரணம் ஆகும்.

    தமிழக அரசும், காவல்துறையும் இனியாவது விழித்துக் கொண்டு சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்; மூர்த்திக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை பகுதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    8-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    9-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராணிபேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    10-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம், நாமக்கல், மதுரை, திருச்சி, ராணிபேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    11 மற்றும் 12-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • காவலாளி கொடுத்த தகவலின் பேரில் கடை விற்பனையாளர்கள், சூப்பர்வைசர் விரைந்து வந்தனர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை திருச்சி சாலையில் அரசு மதுபான கடை உள்ளது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மது பிரியர்கள் அதிகளவில் வந்து மது அருந்துவார்கள்.

    இதனால் இக்கடையில் கூட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். மேலும் திருச்சி சாலையில் அமைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் லாரி டிரைவர்கள் இக்கடை அருகில் தங்கள் வாகனங்களை நிறுத்தி மது பாட்டில்களை வாங்கி செல்வார்கள்.

    இங்கு 2 விற்பனையாளர்களும், ஒரு சூப்பர்வைசர்களும் பணியில் உள்ளனர். இவர்கள் இரவு 10 மணிக்கு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றனர்.

    கடைக்கு காவலர் பணியில் அப்பதியை சேர்ந்தவர் ஈடுபட்டிருந்தார்.

    இந்தநிலையில் நேற்று மிலாடி நபியை முன்னிட்டு கடை திறக்காமல் இருந்தது. நள்ளிரவில் மர்ம நபர்கள் கடைக்கு வந்துள்ளனர். அவர்களை காவலாளி கேள்வி கேட்டுள்ளார். அதற்கு மர்ம நபர்கள் சத்தம் போட்டால் கொன்றுவிடுவோம் எனமிரட்டி கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பல ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை அள்ளிச் சென்றனர்.

    இது குறித்து காவலாளி கொடுத்த தகவலின் பேரில் கடை விற்பனையாளர்கள், சூப்பர்வைசர் விரைந்து வந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் புதுக்கோட்டையில் இருந்து மோப்ப நாய் தீரன் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை போன மதுபான கடையில் இருந்து திருச்சி சாலை வரை ஓடிச் சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்க வில்லை. இது குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு மதுபான கடையில் கொள்ளை அடித்த மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • முந்தைய உரிமையாளரின் ஒப்புதல் பெறும் படிவம் 2-ஐ, நுகர்வோரிடம் இருந்து பெற வேண்டியதில்லை என அறிவுறுத்தப்படுகிறது.
    • பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமைப் பொறியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழ்நாடு மின் உற்பத்திக் கழக வணிகப் பிரிவு சார்பில் அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விண்ணப்பதார்களிடம் இருந்து ஏராளமான ஆவணங்களைக் கேட்பதால் வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய தேவையற்ற கால தாமதம் ஏற்படுகிறது. இப்பணிகளை விரைவுப்படுத்தும் வகையில், முந்தைய உரிமையாளரின் ஒப்புதல் பெறும் படிவம் 2-ஐ, நுகர்வோரிடம் இருந்து பெற வேண்டியதில்லை என அறிவுறுத்தப்படுகிறது.

    அதேநேரம் விற்பனை பங்கு பிரித்தல், பரிசளித்தல் போன்றவற்றில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமானால் விற்பனை பத்திரம், சொத்து வரி ரசீது, நீதிமன்ற தீர்ப்பு உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றையும், ஒப்புதல் கடிதம் ஆகியவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் உயிரிழந்தால், பெயர் மாற்றம் செய்ய வாரிசு சான்றிதழ் அல்லது அண்மைக் காலத்தில் பெறப்பட்ட சொத்து வரி ரசீது மற்றும் இழப்பீடு பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

    இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமைப் பொறியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    • மக்களுக்கு நன்மை செய்வதாகக் கூறி ஊழலை ஊக்குவிக்கும் செயலில் திராவிட மாடல் அரசு ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
    • மொத்தத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் உங்களுடன் ஊழல் முகாம்களாக மாறிவிட்டன.

    தமிழகம் முழுவதும் நடத்தி வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

    இதுதொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு 46 வகையான சேவைகளை வழங்கப்போவதாகக் கூறி நடத்தப்பட்டு வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் ஊழல் தலைவிரித்தாடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மக்களுக்கு நன்மை செய்வதாகக் கூறி ஊழலை ஊக்குவிக்கும் செயலில் திராவிட மாடல் அரசு ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் கடந்த ஜூலை 15-ஆம் தேதி தொடங்கப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நவம்பர் 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. மொத்தம் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை ஐந்தாயிரம் முகாம்கள் நடத்தப்பட்டு, அவற்றின் வாயிலாக 40 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

    மகளிர் உரிமைத் தொகை கோரி மட்டும் 22 லட்சத்திற்கும் கூடுதலான மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மொத்தமாகப் பெறப்பட்ட மனுக்களில் 80% மனுக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்த ஒருவருக்குக் கூட இதுவரை உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. அந்த வகையில் இந்தத் திட்டம் பெரும் தோல்வி அடைந்துள்ளது.

    மக்களுக்கு சேவை வழங்குவதை வெற்றிகரமாக செய்ய முடியாத திமுக அரசு, ஊழலை மட்டும் வெற்றிகரமாக செய்து வருகிறது. பட்டா மாற்றம் கோரியும், மின்சார இணைப்பு கோரியும் பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக வருவாய்த்துறை மற்றும் மின் துறை அதிகாரிகள் கட்டாயக் கையூட்டு பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பட்டா மாற்றம் செய்வதற்காக நிலங்களின் மதிப்புக்கு ஏற்ற வகையில் கையூட்டு நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுவதாக உழவர் அமைப்புகளில் தலைவர்களே குற்றஞ்சாட்டியுள்ளனர்.

    அதைவிடக் கொடுமை என்னவென்றால், கையூட்டு கொடுத்தால் சர்ச்சைக்குரிய இடங்கள், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கும் மின்சார இணைப்பு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மொத்தத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் உங்களுடன் ஊழல் முகாம்களாக மாறிவிட்டன.

    உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் வழங்கப்படும் சேவைகள் அனைத்தும் இயல்பாக அரசு அலுவகங்களில் வழங்கப்படும் சேவைகள் ஆகும். இந்த சேவைகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையிலும், அனைத்து சேவைகளையும் இணைய வழியில் வழங்கும் வகையிலும் சேவை உரிமைச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதை செய்திருந்தால் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை நடத்த வேண்டிய தேவையும் இல்லை; மக்கள் கையூட்டு வழங்க வேண்டிய கட்டாயமும் இல்லை. ஆனால், அதை செய்யத் தவறிய திமுக அரசு, இப்போது முகாம்களை நடத்தி ஊழலை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது.

    மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் விளம்பரங்களின் மூலமாகவே மக்களை ஏமாற்ற திமுக அரசு முயன்று வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் விழித்துக் கொண்டதுடன், திமுகவின் ஏமாற்று நாடகங்களையும் புரிந்து கொண்டனர். அதனால், வரும் தேர்தலில் அவர்கள் திமுகவுக்கு மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • எதிர்க்கட்சியைச் சார்ந்தோர் மீதெல்லாம் தாக்குதல் நடத்தப்படும் நிலையில், இனியாவது சட்டம் ஒழுங்கை சீர்செய்ய அரசு முன்வர வேண்டும்.
    • எந்தவொரு அரசியல் சார்புமின்றி, சகோதரர் ஏர்போர்ட் மூர்த்தியை தாக்கிய குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்.

    சென்னை:

    சென்னை கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகம் அருகில் வைத்து புரட்சி தமிழகம் கட்சித் தலைவரான ஏர்போர்ட் மூர்த்தி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே திடீர் மோதல் வெடித்தது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரான தொல். திருமாவளவன் பற்றி ஏர்போர்ட் மூர்த்தி யூடியூப்களில் அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் சரமாரியாக ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதலில் ஈடுபட்டனர்.

    அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் ஏர்போர்ட் மூர்த்தியை காலணியால் தாக்கி சட்டையையும் கிழித்தனர்.

    பதிலுக்கு ஏர்போர்ட் மூர்த்தியும் அவர்களை திருப்பி தாக்கினார். டி.ஜி.பி. அலுவலக வாசலில் நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தை பார்த்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் அதிர்ச்சி அடைந்து வேடிக்கை பார்த்தபடியே கடந்து சென்றனர்.

    டி.ஜி.பி. அலுவலக வாசலில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரே ஒரு போலீஸ்காரர் மட்டும் தாக்குதலில் ஈடுபட்டவர்களை விலக்கி விடுவதற்கு முயற்சி செய்தார். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

    இரு தரப்பை சேர்ந்தவர்களும் மாறி மாறி தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தனர். அப்போது ஏர்போர்ட் மூர்த்தி தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்து பாதுகாப்புக்காக எதிர்தாக்குதலில் ஈடுபட்டார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதன் பின்னர் ஒரு வழியாக மோதல் முடிவுக்கு வந்தது. ஏர்போர்ட் மூர்த்தி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் கலைந்து சென்றனர்.

    தஞ்சை மாவட்டம் ஆடுதுறை பா.ம.க பிரமுகரான ம.கா. ஸ்டாலின் மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தை கண்டித்து பா.ம.க.வினர் டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று புகார் அளித்தனர்.

    அவர்களோடு செல்வதற்காகவே ஏர்போர்ட் மூர்த்தி டி.ஜி.பி அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

    அப்போதுதான் அவருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இதனை அங்கிருந்த தொலைக்காட்சியினர் வீடியோவாகவும் பதிவு செய்தனர். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த மோதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஏர்போர்ட் மூர்த்தி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்க முடிவு செய்து உள்ளனர். டி.ஜி.பி. அலுவலகம் அருகே ஏற்பட்ட இந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    இதனிடயே, எர்போர்ட் மூர்த்தி தாக்கப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், எதிர்க்கட்சியினர் பாதுகாப்பை அச்சுறுத்துவது தான் திராவிட மாடலா? என பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

    சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் வைத்தே புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது விசிகவினர் தாக்குதல் நடத்தியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

    தலைநகர் சென்னையில், காவல்துறை அலுவலகத்தில் வைத்தே, ஒரு கட்சித் தலைவர் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கு யார் துணிச்சல் அளித்தது? நேற்று ஒரு பேரூராட்சி அலுவலகத்தில் அரசியல் கட்சி நிர்வாகி ஒருரைக் கொலை செய்ய முயற்சித்த நிலையில், இன்று காவல்துறை அலுவகத்தில் மற்றொரு கட்சித் தலைவரைத் தாக்கியிருப்பது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஏட்டளவில் கூட இல்லை என்பதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. அதிலும் ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சியினரே தாக்குதலில் ஈடுபட்டிருப்பதும், அதனைத் தடுக்க இயலாமல் காவல்துறையினர் கைகட்டி நிற்பதும், தமிழகத்தை வன்முறைப் பாதையில் அழைத்துச் செல்வது தான் திமுக அரசின் திட்டமோ என்ற சந்தேகம் எழுகிறது.

    தொடர்ந்து எதிர்க்கட்சியைச் சார்ந்தோர் மீதெல்லாம் தாக்குதல் நடத்தப்படும் நிலையில், இனியாவது சட்டம் ஒழுங்கை சீர்செய்ய அரசு முன்வர வேண்டும். மேலும், எந்தவொரு அரசியல் சார்புமின்றி, சகோதரர் ஏர்போர்ட் மூர்த்தியை தாக்கிய குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்றார். 

    • திமுக பெண் ஊராட்சி மன்றத் தலைவர் பாரதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
    • நகைத் திருட்டு வழக்கில் அரசியல் குறுக்கீடு இன்றி உரிய விசாரணை நடத்தப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சென்னை நெற்குன்றம் பகுதியில் 4 சவரன் நகை திருட்டு வழக்கில், திருப்பத்தூர் மாவட்டம், நரியம்பட்டு திமுக பெண் ஊராட்சி மன்றத் தலைவர் பாரதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    "திருடர் கையில் சாவி கொடுத்தாற்போல்" திமுக கையில் ஆட்சியைக் கொடுத்துவிட்டோமே என்று தமிழக மக்கள் வருந்தும் அளவிற்கு சட்டம் ஒழுங்கை ஸ்டாலின் அரசு காக்கத் தவறுவதும், குற்றச்செயல்களில் திமுக-வினருக்கு தொடர்பு இருப்பதும் தொடர்கதையாக உள்ளது.

    ஏற்கனவே இந்த ஊராட்சி மன்றத் தலைவர் மீது பல வழக்குகள் இருப்பதாக செய்திகள் வருகின்றன.

    திருட்டு, கொள்ளை எல்லாம் தெரிந்திருந்தால் தானே அரசுப் பொறுப்புகளுக்கு வந்து, திமுக-வின் கொள்கையான கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷனை முறையாக செயல்படுத்த முடியும்?

    இப்படிப்பட்டவர்களைக் கொண்டிருக்கும் கட்சி நடத்தும் ஆட்சி இனியும் தேவையா? என்ற கேள்விக்கு நான் செல்லும் தொகுதிகளில் எல்லாம் மக்கள் சொல்லும் பதில்- "இல்லை"!

    நகைத் திருட்டு வழக்கில் அரசியல் குறுக்கீடு இன்றி உரிய விசாரணை நடத்தப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கான நிரந்தர தீர்வு- #ByeByeStalin! என்று பதிவிட்டுள்ளார்.

    • என்னை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியதால் பாதிப்பா என்றால் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
    • கட்சி நலன் மற்றும் ஆட்சி அமைப்பதற்காக தான் அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க வேண்டும் என கருத்து தெரிவித்தேன்.

    கோபி:

    பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் தனது பணி தொடரும் என செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

    * அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் என்னிடம் தொலைபேசியில் பேசினர்.

    * அ.தி.மு.க. தொண்டர்களின் உணர்வை தான் நான் வெளிப்படுத்தினேன்.

    * அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து என்னை நீக்குவதற்கு முன்னதாக என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும்.

    * என்னிடம் விளக்கம் கேட்காமல் கட்சி பொறுப்பில் இருந்து என்னை நீக்கியுள்ளனர்.

    * கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்குவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

    * காலில் விழுகிறோம் என கூறியவர்களையே ஏற்காமல் புறக்கணித்து விட்டனர்.

    * என்னை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியதால் பாதிப்பா என்றால் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

    * கட்சி நலன் மற்றும் ஆட்சி அமைப்பதற்காக தான் அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க வேண்டும் என கருத்து தெரிவித்தேன்.

    * ஒன்றிணைந்தால் சட்டமன்ற தேர்தலில் எளிதாக வெற்றி பெறலாம் என அ.தி.மு.க. தொண்டர்கள் நினைக்கிறார்கள்.

    * அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற தொண்டர்களின் எண்ணத்தை யார் தான் வெளிப்படுத்துவது? என வினா எழுப்பினார்.

    அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது முதல் அவரது ஆதரவாளர்கள் கோபிசெட்டிபாளையத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    • செங்கோட்டையனை அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து நீக்கியது விபரீத முடிவு.
    • எம்ஜிஆர் காலம் முதல் அதிமுகவின் முக்கிய முகமாக பார்க்கப்பட்டு வருபவர் செங்கோட்டையன்.

    முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அ.தி.மு.க.வில் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து செங்கோட்டையனின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என உற்று நோக்கப்படுகிறது.

    இதனிடையே, செங்கோட்டையன் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறுகையில்,

    செங்கோட்டையனை அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து நீக்கியது விபரீத முடிவு. செங்கோட்டையனை பதவியில் இருந்து நீக்கியது அவருக்கு பின்னடைவு அல்ல, அதை செய்தவருக்குத்தான் பின்னடைவு என்பதை காலம் உணர்த்தும்.

    எம்ஜிஆர் காலம் முதல் அதிமுகவின் முக்கிய முகமாக பார்க்கப்பட்டு வருபவர் செங்கோட்டையன். கெடுவான் கேடு நினைப்பான் என்பது போன்று செங்கோட்டையன் மீது எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என்றார். 

    • வேறு வேறு இ-மெயில் முகவரி மூலம் அந்த நபர் மிரட்டல் அனுப்பி வருகிறார்.
    • போலீசார் சென்று 4 முறை சோதனை நடத்தினர்.

    கோவை:

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலம் அனுப்பப்பட்டு வந்தது. இதுகுறித்து கோவை வெடி குண்டு தடுப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான போலீசார் சென்று 4 முறை சோதனை நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சைபர் கிரைம் போலீசில் இ-மெயில் கடிதம் அனுப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்து உள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று மதியம் மீண்டும் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வேறு ஒரு இ-மெயில் முகவரி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. உடனே போலீசார் சென்று சோதனை நடத்தினர்.

    தொடர்ந்து வரும் வெடிகுண்டு மிரட்டல்களால் கோவை வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் ஓய்வு இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    நேற்று மாலை கோவை விமான நிலையம் அருகே விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள டைட்டல் பார்க் கட்டிடத்திற்கும் வெடி குண்டு மிரட்டல் இ-மெயில் மூலம் விடப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அங்கு வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் அங்கு சென்று சோதனை நடத்தினர். டைடல் பார்க் பகுதியில் 2 கட்டிடங்களில் ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    அங்கு வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் மோப்ப நாய்கள் மலர் மற்றும் அயன் ஆகிய மோப்ப நாய்கள் கொண்டு போலீசார் ஒவ்வொரு அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர்.

    கட்டிடங்களின் கார் பார்க்கிங் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் என அனைத்து பகுதிகளிலும் சோதனை நடந்தது. 2 மணி நேர சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் மீண்டும் புரளி என்றுதெரிய வந்தது. இந்த சோதனையால் அங்கு பரபரப்பு நிலவியது.

    கலெக்டர் அலுவலகம் மற்றும் கோவை பாஸ்போர்ட் அலுவலகம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் அனுப்பிய அதே நபர்தான் டைட்டல் பார்க்கிற்கும் அனுப்பியதாக கூறப்படுகிறது. வேறு வேறு இ-மெயில் முகவரி மூலம் அந்த நபர் மிரட்டல் அனுப்பி வருகிறார்.

    அவரை பிடிக்க போலீ சார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    • எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்து இருந்தார்.
    • திண்டுக்கலில் அ.தி.மு.க. மூத்த தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.

    சென்னை:

    அ.தி.மு.க. அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    முன்னதாக, அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்து இருந்தார். இதனை தொடர்ந்து திண்டுக்கலில் அ.தி.மு.க. மூத்த தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.



    இந்த ஆலோசனையை தொடர்ந்து, அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் விடுவிக்கப்பட்டுள்ளார். 

    ×