என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    செங்கோட்டையன் முழுமையாக மனம் திறக்கவில்லை- திருமாவளவன்
    X

    செங்கோட்டையன் முழுமையாக மனம் திறக்கவில்லை- திருமாவளவன்

    • ஜி.எஸ்.டி. மறுசீரமைப்பு அறிவிப்பு வரவேற்கத்தக்க வடிவில் இல்லை.
    • செங்கோட்டையனின் அறிவிப்பு அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம்.

    மதுரை:

    சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இன்று முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள், ஆசிரியர் தினம். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இஸ்லாமிய மக்களுக்கு மிலாடி நபி வாழ்த்துகள்.

    மதுரையில் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றிய ராமகிருஷ்ணன் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்திருக்கிறார். குப்பை கிடங்கில் அவர் தூக்கில் தொங்கவிடப்பட்டு இருக்கிறார். அந்த மரணம் தற்கொலை அல்ல, கொலை என சந்தேகிக்கும் நிலையில் உள்ளது. ஆகவே அவரின் மனைவி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்து உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் இன்று பிரேத பரிசோதனை நடைபெற உள்ளது.

    அவர் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் சொல்வதற்காக மதுரை வந்திருக்கிறேன். அந்த மரணத்தில் கொலைக்கான முகாந்திரம் இருப்பதாக தெரிகிறது. வழக்கமாக காவல்துறை விசாரிப்பதை போல் இல்லாமல் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு ஆணை இடவேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். அந்த குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதற்கும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

    ஜி.எஸ்.டி. மறுசீரமைப்பு அறிவிப்பு வரவேற்கத்தக்க வடிவில் இல்லை. அமெரிக்க பேரரசு நமது மீது விதித்திருக்கிற 50 சதவீத வரி தொடர்பாக மடை மாற்றம் செய்வதற்கு இந்திய அரசு அல்லது பிரதமர் முயற்சிக்கிறார் என்று விமர்சனங்கள் வெளி வந்துள்ளது. 28 சதவீதமாக இருந்த வரி 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சிறுகுறு, நடுத்தர தொழில் செய்யக்கூடியவர்கள் சிறு வணிகர்கள், எளிய மக்கள் பெரிதும் பயன்பட போவதில்லை என வல்லுனர்கள் கூறியிருக்கிறார்கள்.

    செங்கோட்டையனின் அறிவிப்பு அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம். அ.தி.மு.க. ஒருங்கிணைய வேண்டும் என கட்சிக்குள் செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளார்கள். அவர் இன்று மனம் திறந்து பேச போவதாக சொன்னார், ஆனால் அவர் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை என்று அவரின் பேட்டியில் தெரியவருகிறது. அவர் இன்னும் வெளிப்படையாக சொல்லலாம். இருந்தாலும் அவர்களின் உட்கட்சி விவகாரம், பெரியார் இயக்கம் என்கிற முறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அ.தி.மு.க.வை பெரிதும் மதிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×