என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தேர்தலில் இந்தியா கூட்டணி எப்படி சாதிக்கப் போகிறது என்ற எண்ணம் கூட்டணி கட்சிகளிடமும் இருக்கிறது.
    • காங்கிரசுக்கு அசட்டு நம்பிக்கை இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட இந்தியா கூட்டணி தேர்தல் வரையாவது நீடிக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

    இந்த கூட்டணி உருவாக காரணமாக இருந்தவர் நிதிஷ்குமார். அவரே கூட்டணியை உடைத்து விட்டு பா.ஜனதாவோடு ஐக்கியமாகிவிட்டார்.

    டெல்லி, பஞ்சாப், அரியானாவில் காங்கிரசுக்கு கை கொடுக்க அரவிந்த் கெஜ்ரிவால் மறுத்துவிட்டார்.

    மேற்கு வங்கத்திலும் மம்தா பானர்ஜி தனித்து போட்டி என்று அறிவித்துவிட்டார். தேர்தலில் இந்தியா கூட்டணி எப்படி சாதிக்கப் போகிறது என்ற எண்ணம் கூட்டணி கட்சிகளிடமும் இருக்கிறது.

    கேரளாவை பொறுத்தவரை இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி நடக்கிறது. இருந்தாலும் அங்கு காங்கிரசும் கம்யூனிஸ்டும் எதிரும், புதிருமாக இருக்கிறது.

    தேர்தல் பிரசாரத்தில் சிக்கல் ஏற்படும் என்பதற்காக ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவதை கூட கம்யூனிஸ்டு கட்சி விரும்பவில்லை. மற்ற வடமாநிலங்களிலும் மிக குறைந்த தொகுதிகளிலேயே போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்.

    இந்தியாவில் பாரம்பரியமான கட்சி. 60 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆண்ட கட்சி. இப்போது சீட்டுக்காக மற்ற கட்சிகளி டம் கையேந்தும் அளவுக்கு 'கை' பலவீனமாக உள்ளது.

    இந்த சூழ்நிலையிலும் காங்கிரசுக்கு அசட்டு நம்பிக்கை இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது தென் மாநில 100 தொகுதிகள் என்ற இலக்கை வைத்து உள்ளது. எந்தெந்த மாநிலங்களில எவ்வளவு தொகுதிகள் கிடைக்கும் என்று மேலிட தலைவர்கள் குத்து மதிப்பாக ஒரு கணக்கை போட்டு உள்ளார்கள்.

    தமிழ்நாடு, புதுவையில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன. இதில் 40-க்கு 40 என்று திட்டமிட்டுள்ளார்கள்.

    காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் கூட நூறு சதவீதம் வெற்றி பெறுமா என்று கள ஆய்வு நடத்தியே தி.மு.க. வழங்க உள்ளது. வெற்றி தான் முக்கியம் என்ற எண்ணத்தில் தி.மு.க.வின் வேண்டுகோளை காங்கிரசும் ஏற்றுக்கொண்டு உள்ளது.

    முக்கியமாக அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் தனித்து போட்டியிடுவதில் வாக்குகள் பிரியும். அது தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்குத் தான் சாதகமாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.

    கேரள மாநிலத்தை பொறுத்தவரை கம்யூனிஸ்டுக்கும், காங்கிரசுக்கும் தான் போட்டி. ஆனால் இரண்டில் எந்த கட்சி வெற்றி பெற்றாலும் அது இந்தியா கூட்டணிக்கே லாபம் என்று கருதுகிறார்கள்.

    எனவே மொத்தமுள்ள 20 தொகுதிகளும் தங்கள் கைக்கு வரும் என்று கணித்துள்ளார்கள்.

    கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 27 தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. எனவே அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஒரு தொகுதிக்கு ஒரு மந்திரி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.

    அதே நேரம் பா.ஜனதாவும் பலமாக இருப்பதால் குறைந்தபட்சம் 15 தொகுதி களாவது வெற்றி பெற முடியும் என்று நம்புகிறார்கள்.

    தெலுங்கானாவில் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 17. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஏற்கனவே 3 இடங்களில் வெற்றி பெற்றது.

    எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் 11 தொகுதிகள் குறையாமல் வெல்வோம் திட்டமிட்டுள்ளனர்.

    ஆந்திர மாநிலத்தை பொறுத்தவரையில் மொத்தம் 25 தொகுதிகள் அங்கு வலுவான நிலையில் இருப்பது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்தான். ஆனால் சமீபத்தில் அந்த மாநில முதல்-மந்திரி ஜெகனின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரசில் இணைந்தார். இது காங்கிரசுக்கு ஓரளவு வலு சேர்க்கும் என்று கருதுகிறார்கள்.

    எனவே 15 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கணித்துள்ளார்கள். எனவே 90 முதல் 100 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று கருதுகிறார்கள். இந்த கனவு நிறை வேறுமா? என்பது தேர்தலில்தான் தெரியும்.

    • திருவிழாக்களில் பிரசித்தி பெற்றது தைப்பூச விழாவாகும்.
    • தெப்பத்தேரில் எழுந்தருளி தெப்ப உற்சவம் நடைபெற்றது.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனியில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் பிரசித்தி பெற்றது தைப்பூச விழாவாகும். இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

    இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த 19-ம் தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 24-ம் தேதி வள்ளிதெய்வானை முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம் இரவு வெள்ளி ரதத்தில் ரதவீதியில் தேரோட்டம் நடைபெற்றது. முக்கிய

    நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் 25ம் தேதி நடைபெற்றது. மேலும் வெள்ளி ஆட்டுக்கிடா உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி புறப்பாடு நடைபெற்றது.

    27-ம் தேதி இரவு பெரிய தங்கமயில் வாகனத்தில் சாமி எழுந்தருளினார். 10ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று காலை வள்ளி முத்துக்குமாரசாமி திருமண வைபவத்தால் தெய்வானை கோபித்துக்கொண்டு செல்ல தூதரான வீரபாகு சென்று சமாதானம் செய்து கோவில் கதவை திறக்கும் திருஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் தெப்பகுள மண்டபத்தில் சாமிக்கு தீபாராதனை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் எழுந்தருளி தெப்ப உற்சவம் நடைபெற்றது.

    நேற்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். இரவு கொடி இறக்குதலுடன் தைப்பூச திருவிழா நிறைவடைந்தது.

    • வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது.
    • கிராமுக்கு 20 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.70-க்கும் பார் வெள்ளி ரூ.77,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களாக எந்தவித மாற்றமுமின்றி விற்பனையானது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,760-க்கும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,845-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.70-க்கும் பார் வெள்ளி ரூ.77,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் இருப்பினும் பா.ஜனதாவுக்கு பிரதான எதிர்க்கட்சி தி.மு.க. தான்.
    • வேறு எந்த கட்சியும் இல்லை.

    உடுமலை:

    பா.ஜனதா கட்சி சார்பில் மோடி 3.0, வேண்டும் மோடி மீண்டும் மோடி என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஓ.பி.சி அணி, மருத்துவ பிரிவு, தொழில் பிரிவு, தமிழ் வளர்ச்சி பிரிவு, பிரசார பிரிவு சார்பில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச்செயலாளர் ராமசீனிவாசன் பேசியதாவது:-


    தமிழகத்திலேயே முதல் முறையாக உடுமலையில் மோடி 3.0 வேண்டும் மோடி மீண்டும் மோடி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் இருப்பினும் பா.ஜனதாவுக்கு பிரதான எதிர்க்கட்சி தி.மு.க. தான். வேறு எந்த கட்சியும் இல்லை. நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும். இந்தியா கூட்டணி வருகின்ற நாட்களில் காணாமல் போய்விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விடுதலை சிறுத்தைகள் கட்சி நாளை தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச உள்ளது.
    • வருகிற 3-ந்தேதி தி.மு.க.- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. முதலில் இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி நாளை தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச உள்ளது. வருகிற 3-ந்தேதி தி.மு.க.- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    இந்நிலையில் வருகிற 4-ந்தேதி திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    2019 பாராளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவை, மதுரை என 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    • 348 மாணவ, மாணவர்கள் நேரடியாக பட்டங்களை பெற்றனர்.
    • உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் ஏ.கார்த்திக் உள்பட அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக 34-வது பட்டமளிப்பு விழா பட்டமளிப்பு விழா கலையரங்கில் நடந்தது. பல்கலை துணைவேந்தர் ரவி வரவேற்றார்.

    விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். சென்னை இந்திய தொழில் நுட்ப கழக இயக்குனர் வீ.காமகோடி பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.

    இதில் 116 பேர் முனைவர் பட்டமும், பல்கலையின் பல்வேறு துறைகளில் பயின்ற 1863 மாணவர்கள், இணைப்புக் கல்லூரிகளில் பயின்ற 12,839 மாணவர்களும், இணைவுக் கல்லூரியில் பயின்ற 4181 மாணவர்களும், தொலை நிலைக் கல்வி இயக்ககத்தின் வாயிலாக பயின்ற 21,443 மாணவர்களும் பட்டங்கள் பெற்றனர். இதில் 348 மாணவ, மாணவர்கள் நேரடியாக பட்டங்களை பெற்றனர்.


    அதில் 164 முனைவர் பட்ட ஆய்வாளர்கள், 184 பேர் பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்றவர்கள் ஆவார்கள். இதற்கான ஏற்பாடுகளை பல்கலை பதிவாளர் செந்தில்ராஜன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    இணைவேந்தரும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சருமான ராஜகண்ணப்பன் விழாவில் பங்கேற்பதாக அழைப்பிதழில் பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால் அவர் பட்டமளிப்பு விழாவுக்கு வராமல் புறக்கணித்தார். இதேபோல் உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் ஏ.கார்த்திக் உள்பட அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை.

    • குட்டி நடக்க முடியாததால் குட்டியை வாயில் கவ்வி கொண்டு குரங்கு செல்வதாக மக்கள் நினைத்திருந்தனர்.
    • குரங்கிடம் இருந்து இறந்த குரங்கு குட்டியை மீட்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது பேக்கோரை கிராமம். இந்த கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக இந்த கிராமத்தில் குரங்குகள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிந்து வருகின்றன. இந்த குரங்குகள் அவ்வப்போது, வீடுகளுக்குள்ளும் நுழைந்து வந்தன.

    இந்நிலையில் இந்த குரங்கு கூட்டத்தில் ஒரு குரங்கு மட்டும் வாயில் குட்டியை கவ்வி கொண்டு சுற்றியது. குட்டி நடக்க முடியாததால் குட்டியை வாயில் கவ்வி கொண்டு குரங்கு செல்வதாக மக்கள் நினைத்திருந்தனர்.

    ஆனால் அருகே சற்று தூரத்தில் இருந்து பார்த்த போது, குரங்கு குட்டி இறந்த நிலையில் இருந்தது. இறந்த தன் குட்டியை என்ன செய்வது என்று தெரியாமல், வாயில் கவ்வியபடி குட்டியுடன் அந்த கிராமத்தையை சுற்றி சுற்றி பாசப்போராட்டம் நடத்தி வருகிறது.

    சக குரங்குகள் பொதுமக்கள் யாரையும், குரங்கின் அருகே விடாமல் காத்து வருகின்றனர். பொதுமக்கள் யாராவது மீட்க சென்றால் குரங்கள் ஒன்றாக சேர்ந்து மக்களை நோக்கி வருகிறது.

    இதையடுத்து மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் இதுவரை வனத்துறையினர் அந்த பகுதிக்கு வரவே இல்லை. குரங்கு இறந்த தனது குட்டியுடன் அந்த பகுதியிலேயே சுற்றி திரிந்து வருகிறது.

    இதுகுறித்து மக்கள் கூறும்போது, குரங்கு இறந்த தனது குட்டியுடன் சுற்றி வருகிறது. இறந்த குரங்கு குட்டியில் இருந்து மற்ற குரங்குகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குரங்கிடம் இருந்து இறந்த குரங்கு குட்டியை மீட்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

    • அண்ணா அறிவாலயத்தில் 2 தொகுதி தி.மு.க. நிர்வாகிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தப்பட்டது.
    • சிவகங்கை, விருதுநகர் தொகுதியை இதுவரை காங்கிரசுக்கு ஒதுக்கியது போதும். இந்த முறை தி.மு.க.வுக்கு ஒதுக்க ஏற்பாடு செய்யுங்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு ஒவ்வொரு கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருவது போல் தி.மு.க.வும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    அந்த வகையில் தேர்தலுக்கான பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் தி.மு.க.வில் முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை கொண்ட குழுவினர் மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை அழைத்து தொகுதி நிலவரம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.

    வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? இப்போது எம்.பி.யாக இருப்பவரின் செயல்பாடு எப்படி இருக்கிறது? என்பது குறித்து உதயநிதி கருத்து கேட்டு வருகிறார். இதுவரை 10 தொகுதி வரை கருத்து கேட்கப்பட்டு உள்ளது.

    இன்று சிவகங்கை, விருதுநகர் ஆகிய 2 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தி.மு.க. நிர்வாகிகளை அழைத்து அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

    இந்த 2 தொகுதியும் கடந்த பாராளுன்ற தேர்தலில் காங்கிரஸ் வென்ற தொகுதியாகும். சிவகங்கையில் கார்த்தி சிதம்பரமும், விருதுநகரில் மாணிக்கம் தாகூரும் காங்கிரஸ் எம்.பி.யாக உள்ளனர்.

    இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் 2 தொகுதி தி.மு.க. நிர்வாகிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    அப்போது கட்சி நிர்வாகிகள் உதயநிதி ஸ்டாலினிடம் கூறும்போது சிவகங்கை, விருதுநகர் தொகுதியை இதுவரை காங்கிரசுக்கு ஒதுக்கியது போதும். இந்த முறை தி.மு.க.வுக்கு ஒதுக்க ஏற்பாடு செய்யுங்கள். காங்கிரசுக்கு வேறு தொகுதியை மாற்றிக் கொடுங்கள்.

    இந்த 2 மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க.வினர் எம்.பி.யாக வேண்டாமா? நம் கட்சி நிர்வாகிகளுக்கு இந்த தொகுதியை கேட்டு பெறுங்கள் என்று வலியுறுத்தினார்கள்.

    இன்றைய கூட்டத்தில் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகளுடன் விருதுநகர், சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர்களான பெரியகருப்பன், ரகுபதி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

    விருதுநகர் தொகுதியை இந்த முறை ம.தி.மு.க. கேட்டு பெற முயற்சி செய்து வருகிறது. காங்கிரசும் தொகுதியை தக்க வைக்க விரும்புகிறது. இந்த நிலையில்தான் தி.மு.க.வினரும் தங்களுக்கு இந்த தொகுதியை ஒதுக்குமாறு கோரிக்கை வைத்து உள்ளனர்.

    இன்று மாலை தென்காசி, நெல்லை தொகுதிகளுக்கான ஆலோசனை கூட்டம் அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. இதற்காக 2 மாவட்ட நிர்வாகிகளும் சென்னை வந்துள்ளனர்.

    • கடந்த 1 மாதத்தில் 20 பனை மரங்கள், 23 தென்னை மரங்கள், 15 வாழைகளை யானை சாய்த்துள்ளது.
    • ஒற்றை யானையின் தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரத்தில் காட்டு பத்து, மேலகாடு பகுதிகளில் ஏராளமான விளைநிலங்கள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து இடம் பெயர்ந்து வந்த ஒற்றை காட்டு யானை இப்பகுதியில் முகாமிட்டு தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றது.

    பகலில் மலையடி வார புதர்களில் தஞ்சமடையும் யானை இரவில் விளைநிலங்களுக்குள் புகுந்து தென்னை, பனை, வாழை மரங்களை சாய்த்து அட்டகாசம் செய்வதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.

    கடந்த 1 மாதத்தில் 20 பனை மரங்கள், 23 தென்னை மரங்கள், 15 வாழைகளை யானை சாய்த்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பல்லாயிரக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒற்றை யானையின் தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    மேலும் விவசாயிகளின் உயிருக்கு அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது. எனவே விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து, விவசாயிகளை அச்சுறுத்தி வரும் ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டவும், நாசமான வாழை, தென்னை, பனை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காக்கா பிரியாணி இல்லை, சிக்கன் பிரியாணி என குறிப்பிடப்பட்டிருந்தது.
    • பிரியாணி கடையை மூடிய போலீசார் கடை உரிமையாளரை எச்சரித்தனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் மாரிமுத்து சாலை பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 34). இவர் அங்குள்ள பழைய பஸ் நிலையத்தில் பிரியாணி கடை திறந்தார். இதற்கான திறப்பு விழா துண்டு பிரசுரத்தில் 10 ரூபாய் நாணயம் கொண்டு வந்தால் சிக்கன் பிரியாணி வழங்கப்படும். இது காக்கா பிரியாணி இல்லை, சிக்கன் பிரியாணி என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதையடுத்து காலை 11 மணிக்கு கடையை திறந்தபோது பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர். இதனால் அங்கு பிரியாணி வாங்குவதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையறிந்து அங்கு வந்த ஆத்தூர் டவுன் போலீசார் கூட்டத்தை கட்டுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால் கூட்டம் அதிகமாகவே பாதுகாப்பை கருத்தில் கொண்டு பிரியாணி கடையை மூடிய போலீசார் கடை உரிமையாளரை எச்சரித்தனர்.

    இதனை தொடர்ந்து உரிமையாளர், 10 ரூபாய் பிரியாணி தீர்ந்துவிட்டது என அறிவிப்பு பலகை வைத்தார். இதை பார்த்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • உறைபனியால் வாகனங்களை இயக்குவதிலும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் இருந்தது.
    • பல இடங்களில் காஷ்மீரை போன்று பனி கட்டி, கட்டியா படர்ந்து காணப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உறைபனியின் தாக்கம் அதிகமாக காணப்படும்.

    ஆனால் இந்த ஆண்டு சற்று தாமதமாக ஜனவரி மாத தொடக்கத்திலேயே உறைபனியின் தாக்கம் ஆரம்பித்தது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலுமே உறைபனியின் தாக்கம் உள்ளது. உறைபனியுடன் அவ்வப்போது நீர்ப்பனியும் சேர்ந்து கொட்டி வந்தது.

    இதுதவிர காலை நேரங்களிலேயே மேக கூட்டங்கள் அதிகளவில் திரண்டு காலை 11 மணி வரை பகல் நேரமே இரவாக காட்சியளிக்கிறது. அதன்பிறகு குறைந்து வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

    மாலையில் மீண்டும் உறைபனியின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விடுகிறது. இப்படி தினந்தோறும் காணப்படும் உறைபனியால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஊட்டியில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை கடுமையான உறைபனி காணப்பட்டது. காந்தல், தலைகுந்தா, பிங்கர் போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    உறைபனி காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள புல்தரைகள், குதிரை பந்தய சாலையில் உள்ள புல் தரைகள் மற்றும் சாலையோரங்களில் உள்ள செடிகள், கொடிகள், புல் தரைகள் மீதும் உறைபனி படர்ந்து காணப்பட்டது.

    இதனால் அந்த பகுதிகள் முழுவதும் புற்கள் இருந்த தடமே மறைந்து வெள்ளை கம்பளிஆடை போர்த்தியது போன்று வெண்மை நிறத்தில் காட்சியளித்தன. இதுதவிர வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள், கார்கள் மீதும் உறைபனி கொட்டியிருந்தது. இதனை வாகன உரிமையாளர்கள் அகற்றினர். உறைபனியால் வாகனங்களை இயக்கு வதிலும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் இருந்தது.

    காஷ்மீரில் தான் அதிகளவு குளிர் காணப்படும். ஆனால் தமிழகத்தில் உள்ள ஊட்டியிலும் தற்போது உறைபனியின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக கடுமையான குளிர் நிலவுகிறது. இதனால் ஊட்டி தற்போது மினி காஷ்மீராகவே மாறி காணப்பட்டது. பல இடங்களில் காஷ்மீரை போன்று பனி கட்டி, கட்டியா படர்ந்து காணப்பட்டது.

    உறைபனியின் தாக்கம் அதிகமாக இருந்ததுடன் கடும் குளிரும் காணப்பட்டது இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியில் வர முடியாத நிலை காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்கள் பொதுமக்கள் வீட்டிற்கு ள்ளேயே முடங்கினர். வீட்டிற்குள்ளும் குளிர் வாட்டியதால் தீ மூட்டி குளிர் காய்ந்தனர்.

    பள்ளி, கல்லூரி செல்லும் குழந்தைகள் மற்றும் அதிகாலையில் வேலைக்கு செல்வோர், தேயிலை தோட்ட பணிக்கு செல்வோர் குளிரை தாங்கும் ஆடைகளை அணிந்து கொண்டு சென்றனர். சில இடங்களில் பொது மக்கள், ஆட்டோ, சுற்றுலா வாகன டிரைவர்கள் குளிரில் இருந்து தப்பிக்க ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். ஊட்டியில் இன்று அதிகபட்ச வெப்பநிலையாக 23.2 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 0.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகி உள்ளது.

    மேலும் மாவட்டத்தின் பல இடங்களில் காலை முதலே பனிமூட்டமும் காணப்படுகிறது. இதனால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை.

    வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே வாகனத்தை இயக்கி செல்கின்றனர். தொடர்ந்து உறைபனியின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்வதால், தேயிலை, மலைக்காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களும் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் ஆகியோர் அடங்கிய குழு ஆலோசனை நடத்தி வருகிறது.
    • தொகுதி பங்கீட்டு குழுவை தொடர்ந்து, அதிமுக பிரசாரக் குழு, விளம்பரக் குழுவின் ஆலோசனை கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு செய்வது குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன.

    அ.தி.மு.க. சார்பில் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரசார பணிகுழு, விளம்பர பணி குழு தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆகியவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த குழுவில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், தலைமை கழக மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த குழுக்களில் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் குழு கடந்த வாரம் ராயப்பேட்டை யில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கூடி ஆலோசனை நடத்தியது.

    இந்த கூட்டத்தில் மாவட்டம் வாரியாக சுற்றுப் பயணம் செய்து பொது மக்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டுக் குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் இன்று காலை அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடங்கியுள்ளது.

    கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் ஆகியோர் அடங்கிய குழு ஆலோசனை நடத்தி வருகிறது.

    தொகுதி பங்கீட்டு குழுவை தொடர்ந்து, அதிமுக பிரசாரக் குழு, விளம்பரக் குழுவின் ஆலோசனை கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

    ×