search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தென் மாநிலங்களில் இந்தியா கூட்டணி 100 இடங்களில் வெற்றி பெறும்- காங்கிரஸ் நம்பிக்கை
    X

    தென் மாநிலங்களில் இந்தியா கூட்டணி 100 இடங்களில் வெற்றி பெறும்- காங்கிரஸ் நம்பிக்கை

    • தேர்தலில் இந்தியா கூட்டணி எப்படி சாதிக்கப் போகிறது என்ற எண்ணம் கூட்டணி கட்சிகளிடமும் இருக்கிறது.
    • காங்கிரசுக்கு அசட்டு நம்பிக்கை இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட இந்தியா கூட்டணி தேர்தல் வரையாவது நீடிக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

    இந்த கூட்டணி உருவாக காரணமாக இருந்தவர் நிதிஷ்குமார். அவரே கூட்டணியை உடைத்து விட்டு பா.ஜனதாவோடு ஐக்கியமாகிவிட்டார்.

    டெல்லி, பஞ்சாப், அரியானாவில் காங்கிரசுக்கு கை கொடுக்க அரவிந்த் கெஜ்ரிவால் மறுத்துவிட்டார்.

    மேற்கு வங்கத்திலும் மம்தா பானர்ஜி தனித்து போட்டி என்று அறிவித்துவிட்டார். தேர்தலில் இந்தியா கூட்டணி எப்படி சாதிக்கப் போகிறது என்ற எண்ணம் கூட்டணி கட்சிகளிடமும் இருக்கிறது.

    கேரளாவை பொறுத்தவரை இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி நடக்கிறது. இருந்தாலும் அங்கு காங்கிரசும் கம்யூனிஸ்டும் எதிரும், புதிருமாக இருக்கிறது.

    தேர்தல் பிரசாரத்தில் சிக்கல் ஏற்படும் என்பதற்காக ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவதை கூட கம்யூனிஸ்டு கட்சி விரும்பவில்லை. மற்ற வடமாநிலங்களிலும் மிக குறைந்த தொகுதிகளிலேயே போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்.

    இந்தியாவில் பாரம்பரியமான கட்சி. 60 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆண்ட கட்சி. இப்போது சீட்டுக்காக மற்ற கட்சிகளி டம் கையேந்தும் அளவுக்கு 'கை' பலவீனமாக உள்ளது.

    இந்த சூழ்நிலையிலும் காங்கிரசுக்கு அசட்டு நம்பிக்கை இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது தென் மாநில 100 தொகுதிகள் என்ற இலக்கை வைத்து உள்ளது. எந்தெந்த மாநிலங்களில எவ்வளவு தொகுதிகள் கிடைக்கும் என்று மேலிட தலைவர்கள் குத்து மதிப்பாக ஒரு கணக்கை போட்டு உள்ளார்கள்.

    தமிழ்நாடு, புதுவையில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன. இதில் 40-க்கு 40 என்று திட்டமிட்டுள்ளார்கள்.

    காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் கூட நூறு சதவீதம் வெற்றி பெறுமா என்று கள ஆய்வு நடத்தியே தி.மு.க. வழங்க உள்ளது. வெற்றி தான் முக்கியம் என்ற எண்ணத்தில் தி.மு.க.வின் வேண்டுகோளை காங்கிரசும் ஏற்றுக்கொண்டு உள்ளது.

    முக்கியமாக அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் தனித்து போட்டியிடுவதில் வாக்குகள் பிரியும். அது தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்குத் தான் சாதகமாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.

    கேரள மாநிலத்தை பொறுத்தவரை கம்யூனிஸ்டுக்கும், காங்கிரசுக்கும் தான் போட்டி. ஆனால் இரண்டில் எந்த கட்சி வெற்றி பெற்றாலும் அது இந்தியா கூட்டணிக்கே லாபம் என்று கருதுகிறார்கள்.

    எனவே மொத்தமுள்ள 20 தொகுதிகளும் தங்கள் கைக்கு வரும் என்று கணித்துள்ளார்கள்.

    கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 27 தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. எனவே அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஒரு தொகுதிக்கு ஒரு மந்திரி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.

    அதே நேரம் பா.ஜனதாவும் பலமாக இருப்பதால் குறைந்தபட்சம் 15 தொகுதி களாவது வெற்றி பெற முடியும் என்று நம்புகிறார்கள்.

    தெலுங்கானாவில் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 17. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஏற்கனவே 3 இடங்களில் வெற்றி பெற்றது.

    எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் 11 தொகுதிகள் குறையாமல் வெல்வோம் திட்டமிட்டுள்ளனர்.

    ஆந்திர மாநிலத்தை பொறுத்தவரையில் மொத்தம் 25 தொகுதிகள் அங்கு வலுவான நிலையில் இருப்பது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்தான். ஆனால் சமீபத்தில் அந்த மாநில முதல்-மந்திரி ஜெகனின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரசில் இணைந்தார். இது காங்கிரசுக்கு ஓரளவு வலு சேர்க்கும் என்று கருதுகிறார்கள்.

    எனவே 15 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கணித்துள்ளார்கள். எனவே 90 முதல் 100 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று கருதுகிறார்கள். இந்த கனவு நிறை வேறுமா? என்பது தேர்தலில்தான் தெரியும்.

    Next Story
    ×