என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கவர்னர், சிறப்பு விருந்தினர், துணை வேந்தர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
    • பட்டமளிப்பு விழாவில் 40622 பேர் பட்டம் பெறுகின்றனர். 459 பேர் கவர்னரிடம் நேரடியாக பட்டத்தை பெறுகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 30 வது பட்டமளிப்பு விழா இன்று கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் தொடங்கியது. கவர்னர், சிறப்பு விருந்தினர், துணை வேந்தர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

    இந்த பட்டமளிப்பு விழாவில் 40622 பேர் பட்டம் பெறுகின்றனர். 459 பேர் கவர்னரிடம் நேரடியாக பட்டத்தை பெறுகின்றனர்.

    இந்நிலையில், மனோன்மணி சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் புறக்கணித்துள்ளார்.

    • அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று காலை நடந்தது.
    • மத்திய சென்னை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி நிர்வாகிகளுடன் இன்று மாலை ஆலோசனை நடைபெறுகிறது.

    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று காலை நடந்தது. இந்த கூட்டத்தில் தென்சென்னை, வடசென்னை தொகுதி தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, சேகர் பாபு, மேயர் பிரியா மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடத்தி வருகிறது.

    நிர்வாகிகளுடன் 9-வது நாளாக தி.மு.க. ஒருங்கிணைப்பு குழு இன்று ஆலோசனை நடத்துகிறது. தென்சென்னை, வடசென்னை தொகுதி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினர்.

    மத்திய சென்னை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி நிர்வாகிகளுடன் இன்று மாலை ஆலோசனை நடைபெறுகிறது.

    தொகுதியில் தற்போதைய கள நிலவரம், வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்கள் யார் என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

    • வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது.
    • கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77-க்கும் பார் வெள்ளி ரூ.77,000-க்கு விற்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.

    தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,870-க்கும் சவரன் ரூ.46,960-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77-க்கும் பார் வெள்ளி ரூ.77,000-க்கு விற்கப்படுகிறது.

    • ஜெயலலிதா இருந்தபோது அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க நிறைய கட்சிகள் ஆர்வம் காட்டின, அது ஒரு காலம்.
    • தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்பதால் மக்கள், தி.மு.க. மீது கோபத்தில் உள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ஏழுமலை தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:-

    1972-ம் ஆண்டில் 11 லட்சம் தொண்டர்களுடன் அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கி வழிநடத்தினார். அனைத்து தரப்பு மக்களாலும் சாதி, மத வித்தியாசம் இன்றி இந்த இயக்கம் உருவாக்கப்பட்டது. இந்த இயக்கம் சிறப்பாக செயல்பட பல்வேறு சட்டவிதிகளை எம்.ஜி.ஆர். வகுத்துச்சென்றார்.

    அவரது மறைவுக்குப் பிறகு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் கொடுத்த பல்வேறு இடையூறுகளை தாண்டி 1½ கோடி தொண்டர்களுடன் கட்சியின் பொதுச்செயலாளராக 30 ஆண்டுகள் பணியாற்றி இந்த இயக்கத்தை வழிநடத்தினார் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.

    தற்போது எடப்பாடி பழனிசாமி, அடிப்படை தொண்டர்களின் உரிமையை காலில் போட்டு மிதித்து கபளீகரம் செய்துள்ளார்.

    இன்றைக்கு சாதாரண தொண்டர்கள், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட கூடிய சட்டவிதியை எடப்பாடி பழனிசாமி மாற்றியுள்ளார். அ.தி.மு.க.வின் அடிப்படை தொண்டருக்கும் உரிமையைப் பெற்றுத்தரும் நோக்கில், மாநிலம் முழுவதும் உரிமை மீட்பு பயணத்தை மேற்கொள்ள தொடங்கி, இதுவரை 24 மாவட்டங்களில் முடித்துள்ளேன்.

    எஞ்சிய மாவட்டங்களிலும் பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திக்க உள்ளேன்.

    தமிழக முதலமைச்சர் பொறுப்பை எடப்பாடி பழனிசாமி ஏற்ற பிறகு ஊரக உள்ளாட்சி தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், மக்களவை தேர்தல் என 8 தேர்தல்களை சந்தித்தார். அத்தனை தேர்தல்களிலும் தோல்வியைத்தான் கண்டார்.

    ஜெயலலிதா இருந்தபோது அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க நிறைய கட்சிகள் ஆர்வம் காட்டின, அது ஒரு காலம். ஆனால் இப்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க யாரும் விரும்பவில்லை.

    தற்போது கூட்டணிக்கு யாரேனும் வருவார்களா என கட்சித்தலைமை அலுவலகத்தில் கதவை திறந்து வைத்துக்கொண்டு தலைவர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கூட்டணிக்கு வாருங்கள் வாருங்கள் என அழைத்தாலும், அவர்களை நம்பி யாரும் வருவதில்லை. அ.தி.மு.க.வில் இந்த நிலை உருவாக யார் காரணம். மிகவும் பரிதாப நிலையில் கட்சி உள்ளது.

    தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்பதால் மக்கள், தி.மு.க. மீது கோபத்தில் உள்ளனர். இந்திய அரசியலில் தமிழ்நாடு அனைத்து மாநிலத்திற்கும் வழிகாட்டியாக இருந்த காலம் மாறி விட்டது. தி.மு.க.வில் கருணாநிதி இருந்தார்.

    இப்போது ஸ்டாலின் உள்ளார். பிறகு அவரது மகன் உதயநிதி ஸ்டாலினை தயார்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், துணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ்பாண்டியன், கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி, மாநில வக்கீல் அணி செயலாளரும் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினருமான செஞ்சி கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, விஜய் சிறந்த திரைப்பட நடிகர். புதிய கட்சியை தொடங்கி உள்ள அவருக்கு எங்களுடைய இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். அவர் எதிர்வரும் சவால்களை சமாளித்து தமிழக அரசியலில் வலம் வருவார் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

    அதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் உறுதியாக நாங்கள் கூட்டணி அமைக்க இருக்கிறோம். ஏற்கனவே நாங்கள் பா.ஜனதாவுடன் தான் கூட்டணியில் இருக்கிறோம். 10 ஆண்டுகள் பிரதமர் மோடி சிறப்பான ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார்.

    உலகத்தில் இருக்கும் 20 வளர்ந்த நாடுகள், நரேந்திர மோடியின் நிர்வாகத்தையும், அயல்நாட்டின் அணுகுமுறையையும் பாராட்டியிருக்கிறார்கள். எனவே 3-வது முறையாக மீண்டும் மோடி பிரதமராக வர வேண்டும் என்ற பொதுவான கருத்து இந்தியாவில் நிலவி வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் உறுதியாக பா.ஜனதா பெரும்பான்மை பெற்று மீண்டும் மோடி, பிரதமராக வலம் வருவார் என்றார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூரில் பாதயாத்திரை நிறைவு விழா பிரம்மாண்ட பொதுக்கூட்டமாக நடைபெற உள்ளது.
    • 10 லட்சம் பேரை திரட்டி பிரம்மாண்டமாக மாநாடு போல் பொதுக்கூட்டத்தை நடத்த பா.ஜ.க.வினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    பல்லடம்:

    தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை என், என் மக்கள் என்ற தலைப்பில், மத்திய அரசின் சாதனைகள், திட்டங்களை விளக்கி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். வருகிற 18-ந்தேதியுடன் இந்த பயணம் நிறைவடைகிறது.

    இதையடுத்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூரில் பாதயாத்திரை நிறைவு விழா பிரம்மாண்ட பொதுக்கூட்டமாக நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    இதற்காக மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில் எதிரில் உள்ள 400 ஏக்கர் தரிசு நிலத்தில் முட்செடிகள், புதர்கள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதன்பிறகு மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.10 லட்சம் பேரை திரட்டி பிரம்மாண்டமாக மாநாடு போல் பொதுக்கூட்டத்தை நடத்த பா.ஜ.க.வினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பது உறுதியான நிலையில், அவர் பங்கேற்கும் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. பிரதமர் எப்போது தேதி கொடுத்தாலும் அன்றைய தினம் பொதுக்கூட்டத்தை நடத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக திருப்பூர் மாவட்ட பா.ஜ.க.வினர் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் பிரதமர் மோடி வருகிற 25-ந்தேதி பல்லடம் மாதப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடு பணிகளை பா.ஜ.க.வினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இதனிடையே திருப்பூரில் 2 முறை ஒத்திவைக்கப்பட்ட என் மண், என் மக்கள் பாதயாத்திரையை 25-ந்தேதி திருப்பூரில் நடத்தவும் அண்ணாமலை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • விதி மீறலில் ஈடுபட்ட ஒரு நபருக்கு 7 நாட்களுக்குப் பிறகே அபராதம் தொடர்பான ரசீது அனுப்பப்படுவது உண்டு.
    • காவல்துறையில் இருந்து தொடர்ச்சியாக போன் செய்து மிரட்டும் வகையில் யாரும் பேசமாட்டார்கள்,

    சென்னை:

    சென்னை மாநகரில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்காக போலீசார் சாலைகளில் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் வாகன ஓட்டிகளை பிடித்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை மாநகரில் தினமும் 6 ஆயிரம் போலீசார் களப்பணியாற்றி வருகிறார்கள். 1500-ல் இருந்து 3 ஆயிரம் கேமராக்கள் வரையில் பொருத்தப்பட்டு அதன் மூலமாக போக்குவரத்து விதிமீறல்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    சில நேரங்களில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடாமல் முறையாக வாகனங்களை ஓட்டி செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு விடுகிறது. சென்னை மாநகரில் தினமும் 5 ஆயிரம் வழக்கு கள் பதிவு செய்யப்படும் நிலையில்15 பேர் மட்டுமே தாங்கள் விதிமுறைகளில் ஈடுபடவில்லை. இருப்பினும் எங்களுக்கு நோட்டீஸ் வந்துள்ளது என்று அப்பீல் செய்து வருகிறார்கள்.

    இதுபோன்று உண்மையிலேயே தவறு நடந்திருந்தால் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் 7 நாட்களுக்குள் அவர்கள் அப்பீல் செய்யலாம் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

    விதி மீறலில் ஈடுபட்ட ஒரு நபருக்கு 7 நாட்களுக்குப் பிறகே அபராதம் தொடர் ன ரசீது அனுப்பப்படுவது உண்டு. அதற்குள் சம்பந்தப்பட்ட நபர்கள் போக்குவரத்து காவல் துறையை அணுகி உரிய ஆதாரங்களை காட்டி அபராதம் கட்டுவதில் இருந்து விலக்கு பெறலாம் என்று போலீசார் தெரித்துள்ளனர்.

    இதற்காக புகைப்பட ஆதாரங்கள் வீடியோ ஆதா ங்கள் போன்றவற்றைக் காட்டி வாகன ஓட்டிகள் நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்று போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    சென்னை மாநகரில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடுபவர்களை முதலில் போலீசார் கேமராக்கள் மூலம் கண்டுபிடிக்கிறார்கள்.

    அதன் பிறகு எந்த விதிமுறைகளில் சம்பந்தப் பட்ட வாகனம் ஈடுபட்டுள்ளது என்பதை கண்டறிந்து சென்னை காவல்துறை கட்டுப்பாட்டறை மூலமாக அவர்களுக்கு உரிய அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகிறது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஒரு நாளைக்கு 3 ஆயிரத்து 500 ரசீதுகள் அனுப்பப்பட்டு வருகின்றன என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே சென்னை மாநகர காவல்துறையை போன்ற போலியான முகவரிகளை உருவாக்கி மர்ம நபர்கள் சிலர் பணம் பறிக்கும் வேலையிலும் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. எனவே அது போன்ற நபர்களிடம் உஷாராக இருக்குமாறு போலீசார் எச்சரித்துள்ளனர்.

    காவல்துறையில் இருந்து தொடர்ச்சியாக போன் செய்து மிரட்டும் வகையில் யாரும் பேச மாட்டார்கள் என்றும் பணம் பறிக்கும் நோக்கத்தில் இருப்பவர்கள் அது போன்று பேசுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் எனவே பொதுமக்கள் இணையதள முகவரியிலேயே அபராதங்களை கட்டிக் கொள்ளலாம் இது போன்ற மோசடி ஆசாமிகளிடம் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு உள்ளனர்.

    • 2017-ம் ஆண்டு சந்தேகப்படும்படியாக கிடைத்த 60 செல்போன் எண்கள் 19 செல்போன் டவர்களில் இருந்து பதிவான தகவல்களை எடுக்க முடிவு செய்யப்பட்டது.
    • குஜராத் மாநிலத்தில் உள்ள தடயவியல் பல்கலைக்கழகத்திலிருந்து 2 தடயவியல் நிபுணர்கள் மிஸ்ப்ரி, ஜாலா ஆகியோர் திருச்சி வந்தனர்.

    திருச்சி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான பங்களா உள்ளது. இங்கு கடந்த 2017 ஆண்டு மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூர் படுகொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ், கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உட்பட 11 பேரை கைது செய்தனர். இதில் கனகராஜ் சாலை விபத்தில் பலியானார். அதைத் தொடர்ந்து வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விசாரணையில் பல்வேறு தகவல்களை சேகரித்தனர். அந்த வகையில் கொள்ளை சம்பவம் நடந்தபோது சம்பந்தப்பட்ட நபர்கள் பயன்படுத்திய செல்போன்களிலிருந்து யார்? யாரை தொடர்பு கொண்டார்கள் என்கிற விவரங்களை போலீசார் சேகரிக்க முடிவு செய்தனர்.

    2017-ம் ஆண்டு சந்தேகப்படும்படியாக கிடைத்த 60 செல்போன் எண்கள் 19 செல்போன் டவர்களில் இருந்து பதிவான தகவல்களை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

    இந்த தகவல்கள் அனைத்தும் திருச்சி பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகத்தில் தான் பதிவாகும். ஆகவே பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை போலீசார் நாடினர். ஆனால் செல்போன் அழைப்புகள் குறித்த விவரங்களை 2 ஆண்டுகள் மட்டுமே பாதுகாக்கும் வசதி உள்ளதாக பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்.

    அதைத்தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் குஜராத்தில் உள்ள தேசிய தடயவியல் ஆய்வக பல்கலைக்கழக உதவியை நாடினர்.

    அந்த வகையில் நிபுணர் குழு நேற்று திருச்சி சிங்காரத் தோப்பில் உள்ள பி.எஸ்.என்.எல். தென் மண்டல மைய அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் உள்ள தடயவியல் பல்கலைக்கழகத்திலிருந்து 2 தடயவியல் நிபுணர்கள் மிஸ்ப்ரி, ஜாலா ஆகியோர் திருச்சி வந்தனர். பின்னர் அவர்கள் திருச்சி சிங்காரத்தோப்பு பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு நேரில் சென்று கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் நடந்த தினத்தன்று பதிவாகியிருந்த செல்போன் மற்றும் தொலைபேசி டவர்களின் தகவல்களை சேகரிக்க தொடங்கினர்.

    இதில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு மாதவன் தலைமையில் 10 பேர் கொண்ட குழு ஈடுபட்டது. பின்னர் அவர்கள் பி.எஸ்.என்.எல். அலுவலக 2-ம் தளத்தில் உள்ள சர்வரில் பதிவான ஆடியோ பதிவுகள் மற்றும் விவரங்கள் குறித்து ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வு பல மணி நேரம் நீடித்தது.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆய்வுகள் தொடர இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவித்தன.

    • அரசியலில் வெற்றி பெற ரசிகர்களின் பலம் மட்டும் போதாது.
    • ‘‘நான் ஒரு தடவ முடிவு பண்ணிட்டா..; அப்புறம்... என் பேச்ச நானே கேட்கமாட்டேன்னு’’ வேற சொல்லி இருக்காரு.

    புலி வருது... புலி வருது... என்று கடைசியில் வந்தேவிட்டது...!

    ஆம்... தமிழகத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் 'தளபதி' விஜய், ''தமிழக வெற்றி கழகம்'' என்ற பெயரில் கட்சி தொடங்கி அரசியலில் குதித்துவிட்டார்.

    கடந்த சில ஆண்டுகளாகவே விஜய்க்கு அரசியல் ஆசை இருந்ததை மறுக்க முடியாது. தனது படங்களில் 'பஞ்ச் டயலாக்' மூலம் அவ்வப்போது அவர் அதை வெளிப்படுத்த தயங்கியது இல்லை. அவரது ரசிகர்களும் தேர்தல்களின்போது தங்கள் அரசியல் ஈடுபாட்டை காட்டி வந்துள்ளனர்.

    இதுவரை 'டிரெய்லராகவே' இருந்து வந்த அவர்களுடைய அரசியல் ஆசை இப்போது, புதிய கட்சியின் வடிவில் முழுமையாக வெளியாகி இருக்கிறது. இதனால் நேற்று முன்தினம் வரை நடிகராக இருந்த விஜய் நேற்று முதல் அரசியல் தலைவர் ஆகி இருக்கிறார்; அவரது ரசிகர்கள் தொண்டர்கள் ஆகி இருக்கிறார்கள்.

    இந்தியாவில், சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து கட்சி தொடங்கி ஜெயித்தவர்கள் 2 பேர்தான், ஒருவர் தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., மற்றொருவர் ஆந்திராவில் என்.டி.ராமராவ். ஜெயலலிதா திரைத்துறையைச் சேர்ந்தவர்தான் என்ற போதிலும் எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க.வில் ஐக்கியமாகி அந்த கட்சியை வளர்த்தெடுத்து முதலமைச்சர் பதவிக்கு வந்தவர்.

    இவர்கள் தவிர திரைத்துறையைச் சேர்ந்த எத்தனையோ பேர் கட்சி தொடங்கி அரசியலில் மூழ்கி காணாமல் போய் இருக்கிறார்கள். சிலர் பாதி கிணறு, முக்கால் கிணறு தாண்டியதோடு சரி. இன்னும் சிலர் ''சீச்சீ இந்த பழம் புளிக்கும்'' என்று ஓடி இருக்கிறார்கள். மேலும் சிலர் சூடுகண்ட பூனையாக கடையை சாத்திவிட்டு, ''தெரிந்த தொழிலையே செய்வோம்'' என்று நடையை கட்டி இருக்கிறார்கள்.

    மேற்கண்ட அத்தனை பேருக்கு கிடைத்த அனுபவங்களையும் நன்கு அறிந்தே, நிதானமாகவும், தெளிவாகவும் விஜய் அடியெடுத்து வைத்து இருக்கிறார்.

    விஜய் யாரை எதிர்க்கப்போகிறார்? அவரது அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும்? என்பது மக்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இதுவரை எல்லோருக்கும் வேண்டப்பட்டவராக-யாரையும் எதிர்க்காதவராக இருந்து வந்திருக்கலாம்.

    அரசியலுக்கு வந்துவிட்ட பிறகு எல்லோருக்கும் நல்ல பிள்ளையாக இருக்கமுடியாது? இருக்க நினைத்தால் கட்சியை வளர்க்க முடியாது. இது அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

    கட்சி தொடங்கியபோது அ.தி.மு.க.வின் கொள்கைகள், அண்ணாயிசம் பற்றியெல்லாம் எம்.ஜி.ஆர். பேசிய போதிலும், தி.மு.க.வை எதிர்ப்பதுதான் அ.தி.மு.க.வின் அடிப்படை கொள்கையாக இருந்தது; இப்போதும் இருக்கிறது. இதனால்தான் தி.மு.க.வுக்கு எதிரான கருத்துகளை கொண்டவர்கள் எம்.ஜி.ஆர். கட்சியின் பக்கம் நின்றனர்.

    கொள்கைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு, சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப அங்கே-இங்கே என்று தாவிக் கொண்டிருக்கும் கட்சிகளெல்லாம் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துவிடுகின்றன.

    இதையெல்லாம் கூர்ந்து கவனித்து வரும் விஜய், தனது கட்சியின் கொள்கைகள், அரசியல் நிலைப்பாட்டில் தெளிவாக இருப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

    சட்டசபை தேர்தலை குறிவைத்தே ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைக்கும் விஜய் ''வருகிற பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடாது'' என்று அறிவித்து இருக்கிறார். தேர்தல் பணியாற்ற அவரது தொண்டர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கும்போது, விஜய்யின் இந்த முடிவு அவர்களுக்கு சிறிது ஏமாற்றத்தை தரக்கூடும் என்பதில் சந்தேகம் இல்லை. களத்தில் குதிப்பது என்று முடிவு செய்துவிட்டபின் தள்ளிப்போடுவது தொண்டர்களின் வேகத்தையும், உற்சாகத்தையும் குறைப்பதாக அமைந்துவிடும். ஏனெனில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகளுக்கு மேல் இருக்கிறது.

    1972 அக்டோபர் 17-ந்தேதி அ.தி.மு.க.வை தொடங்கிய எம்.ஜி.ஆர். அடுத்த ஆறு மாதங்களில் அதாவது 1973 மே 20-ந்தேதி திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் வேட்பாளரை களம் இறக்கி மகத்தான வெற்றி கண்டது இங்கு நினைவு கூரத்தக்கது.

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடமாட்டோம் என்று விஜய் அறிவித்து இருப்பதால், அந்த தேர்தலில் அவரது கட்சியின் நிலை என்னவாக இருக்கும்? அவரது தொண்டர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள்? என்பதும் தற்போதைய நிலையில் தெரியவில்லை. போகப் போகத்தான் தெரியும்.

    இதுவரை விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் மக்கள் பணியாற்றிய அவரது ரசிகர்கள், இப்போது கட்சி தொண்டர்களாகி மக்களுக்கு சேவை செய்ய இருக்கிறார்கள். அவர்களுடைய நற்செயல்களால் வரும் பெருமைகள் அனைத்தும் விஜய்யை வந்து சேரும். அதேசமயம், ஏதாவது குறைபாடுகள் என்றாலும், அதனால் வீசப்படும் கணைகளையும் அவர்தான் தாங்கிக்கொள்ள நேரிடும். இதையெல்லாம் நன்கு உணர்ந்திருக்கும் 'தளபதி' விஜய் தனது 'சிப்பாய்களை' நல்வழியில் நடத்திச்செல்வார் என்று உறுதியாக நம்பலாம்.

    அரசியலில் வெற்றி பெற ரசிகர்களின் பலம் மட்டும் போதாது. ரசிகர்கள் வட்டத்தை தாண்டி சமானிய மக்களின் ஆதரவையும் பெற்றால்தான் கோட்டைக்கு செல்ல முடியும். தனது செயல்கள்-அணுகுமுறைகள் மூலம் மக்கள் மனங்களை வெல்லும் திட்டங்களை அவர் வைத்திருக்கக்கூடும்.

    சினிமாவில் விஜய் 'புலி'தான் என்பதில் சந்தேகமே இல்லை. அவரது படங்கள் நல்ல வசூலை கொடுக்கின்றன.

    வெள்ளித்திரையில் உச்சத்தில் இருக்கும் அவர், அரசியலில் குதித்து இருப்பதால், சினிமாவுக்கு முழுக்கு போடப்போவதாக அறிவித்து இருப்பது எதிர்பாராத ஒன்றுதான்.

    ஏனெனில், முதலமைச்சர் ஆகும் வரை எம்.ஜி.ஆர்., சினிமா-அரசியல் என்ற இரட்டை குதிரைகளில் வெற்றிகரமாக சவாரி செய்தார். முதலமைச்சர் பதவி, சினிமாவில் நடிக்க அனுமதிக்காததால்தான் வேறு வழியில்லாமல் அவர், திரையுலகத்தை விட்டு விலகினார். அப்படி இருக்கும் போது விஜய், சினிமாவுக்கு 'பேக்கப்' சொல்ல தீர்மானித்து இருப்பது திரைத்துறையினருக்கு ஒருபுறம் ஆச்சரியம் அளிப்பதாகவும், மற்றொருபுறம் அதிர்ச்சி அளிப்பதாகவும் உள்ளது.

    என்றாலும் அவர் நன்றாக யோசித்தே முடிவு எடுத்து இருப்பார் என்று நம்புவோம். ஏன்னா?... ''நான் ஒரு தடவ முடிவு பண்ணிட்டா..; அப்புறம்... என் பேச்ச நானே கேட்கமாட்டேன்னு'' வேற சொல்லி இருக்காரு. எனவே அவரது இந்த முடிவு தீர்க்கமானதாகத்தான் இருக்கும்.

    ஓகே... சினிமா புலி விஜய், அரசியலிலும் தான் புலிதான் என்பதை நிரூபிப்பாரா? அல்லது....; வேண்டாம்..., வேண்டாம்.... பொறுத்திருந்து பார்ப்போம். 

    • சிறுவாணி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட வார்டுகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் லாரிகள் மூலமாக தண்ணீர் வினியோகிக்கப்பட்டது.
    • கோடை மழை அல்லது தென்மேற்கு பருவமழையால் சிறுவாணி அணை நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளது.

    கோவை:

    கோவை மாநகரில் 26 வார்டுகள், நகரையொட்டி உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சிறுவாணி அணை நீர் பிரதான குடிநீர் ஆதாரமாக உள்ளது.

    49.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இருந்து தினமும் குடிநீருக்காக 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது. கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதால் அணையின் நீர்மட்டம் 20 அடிக்கு உயராமல் காணப்பட்டது.

    இதனால் சிறுவாணி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட வார்டுகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் லாரிகள் மூலமாக தண்ணீர் வினியோகிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் அணையின் நீர்மட்டம் 32 அடி வரை உயர்ந்தது.

    அதற்கு மேல் நீர்மட்டம் உயரவில்லை. மேலும் மழை பெய்யாததாலும் குடிநீருக்காக அணையில் இருந்து தினமும் 7 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருவதாலும் சிறுவாணி அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது.

    குறிப்பாக கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 26 அடி(871 மீட்டர்) ஆக உள்ளது.

    இதுகுறித்து கோவை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    சிறுவாணி அணையின் நீர்மட்டம் குறைந்தாலும் மாநகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க பில்லூர் 1 மற்றும்2, ஆழியார் கூட்டுக் குடிநீர்திட்டம், வடவள்ளி-கவுண்டம்பாளையம் குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வழங்கலாம்.

    கோடை மழை அல்லது தென்மேற்கு பருவமழையால் சிறுவாணி அணை நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • மாநில சுயாட்சிக்கான காரணங்கள் இன்னும் காலமாகிவிடவில்லை.
    • நிழல் விழுந்தால் பொருள் இருக்கிறது என்று பொருள்.

    சென்னை:

    பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கவிஞர் வைரமுத்து எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இருமொழிக்கொள்கை

    இறந்துபடவில்லை

    மாநில சுயாட்சிக்கான

    காரணங்கள் இன்னும்

    காலமாகிவிடவில்லை

    பகுத்தறிவின் வேர்கள்

    பட்டுவிடவில்லை

    இனமானக் கோட்டை

    இற்றுவிடவில்லை

    சமூக நீதிக்கொள்கை

    அற்றுவிடவில்லை

    மதவாத எதிர்ப்பு

    மாண்டுவிடவில்லை

    எப்படி நீமட்டும்

    இறந்துபடுவாய் அண்ணா?

    நிழல் விழுந்தால்

    பொருள் இருக்கிறது

    என்று பொருள்

    லட்சியம் வாழ்ந்தால்

    அந்த மனிதன் வாழ்கிறான்

    என்று பொருள்

    இன்னும் நீ இருக்கிறாய்

    அண்ணா!

    எங்கள் கொள்கை வணக்கம்

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


    • ஏராளமான ரசிகர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு கிடா விருந்தை மகிழ்ச்சியுடன் சுட சுட சாப்பிட்டனர்.
    • சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் வெற்றி பெற உழைக்க தயாராக வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.

    சின்னசேலம்:

    நடிகர் விஜய் தனது கட்சியின் பெயரை அறிவித்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

    இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியம், நகரம் சார்பில் புதிய பஸ் நிலையத்தில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். இதனை தொடர்ந்து நைனார்பாளையம் முனியப்பன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு கிடா வெட்டி ரசிகர்களுக்கு விருந்து வைத்தனர்.

    இதில் ஏராளமான ரசிகர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு கிடா விருந்தை மகிழ்ச்சியுடன் சுட சுட சாப்பிட்டனர். இந்த விருந்து சின்னசேலம் ஒன்றிய தலைவர் செல்வசுதா, நகரத் தலைவர் கில்லி செல்வம், ஒன்றிய அமைப்பாளர் மகேந்திரன், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது மேலும் கட்சி நிர்வாகிகளிடையே 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் வெற்றி பெற உழைக்க தயாராக வேண்டும் என அறிவுறுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் சின்னசேலம் நகரம் மற்றும் ஒன்றியம் சார்பில் ஏராளமான ரசிகர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். 

    • ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு, பொருளாதாரத் துறையில் சமதர்மம் என்பதை குறிக்கோளாய் கொண்டு இயங்கிய பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவுதினம் இன்று.
    • எதிரிகள் தாக்கித் தாக்கி தங்களின் வலுவை இழக்கட்டும்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்று முக்கிய கொள்கைகளை முன்னிறுத்தி முழங்கியதோடு, ஆதிக்கமற்ற சமுதாயம், ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு, பொருளாதாரத் துறையில் சமதர்மம் என்பதை குறிக்கோளாய் கொண்டு இயங்கிய பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவுதினம் இன்று.

    "எதிரிகள் தாக்கித் தாக்கி தங்களின் வலுவை இழக்கட்டும். நீங்கள் தாங்கி தாங்கி வலுவைப் பெற்றுக் கொள்ளுங்கள்" என்ற பேரறிஞர் அண்ணாவின் வரிகளுக்கேற்ப நம்முடைய எதிரிகளும் துரோகிகளும் நம்மை எவ்வளவு பலவீனமாக்க முயற்சி செய்தாலும் அவற்றை துணிச்சலுடன் எதிர்கொண்டு அண்ணாவின் கனவுகளை, லட்சியங்களை நிறைவேற்ற உறுதியேற்போம் என கூறியுள்ளார்.

    ×