search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெயில் தாக்கம் அதிகரிப்பு: சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு
    X

    வெயில் தாக்கம் அதிகரிப்பு: சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு

    • சிறுவாணி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட வார்டுகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் லாரிகள் மூலமாக தண்ணீர் வினியோகிக்கப்பட்டது.
    • கோடை மழை அல்லது தென்மேற்கு பருவமழையால் சிறுவாணி அணை நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளது.

    கோவை:

    கோவை மாநகரில் 26 வார்டுகள், நகரையொட்டி உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சிறுவாணி அணை நீர் பிரதான குடிநீர் ஆதாரமாக உள்ளது.

    49.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இருந்து தினமும் குடிநீருக்காக 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது. கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதால் அணையின் நீர்மட்டம் 20 அடிக்கு உயராமல் காணப்பட்டது.

    இதனால் சிறுவாணி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட வார்டுகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் லாரிகள் மூலமாக தண்ணீர் வினியோகிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் அணையின் நீர்மட்டம் 32 அடி வரை உயர்ந்தது.

    அதற்கு மேல் நீர்மட்டம் உயரவில்லை. மேலும் மழை பெய்யாததாலும் குடிநீருக்காக அணையில் இருந்து தினமும் 7 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருவதாலும் சிறுவாணி அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது.

    குறிப்பாக கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 26 அடி(871 மீட்டர்) ஆக உள்ளது.

    இதுகுறித்து கோவை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    சிறுவாணி அணையின் நீர்மட்டம் குறைந்தாலும் மாநகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க பில்லூர் 1 மற்றும்2, ஆழியார் கூட்டுக் குடிநீர்திட்டம், வடவள்ளி-கவுண்டம்பாளையம் குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வழங்கலாம்.

    கோடை மழை அல்லது தென்மேற்கு பருவமழையால் சிறுவாணி அணை நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×