என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • 'லீக்' சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும்.
    • 'சூப்பர் 5' சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா ஒரு ஆட்டத்தில் விளையாடும்.

    சென்னை:

    பிரைம் வாலிபால் (கைப்பந்து) 'லீக்' போட்டி 2022-ம் ஆண்டு ஐதராபாத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 7 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் கொல்கத்தா தண்டர் போல்ட்ஸ் சாம்பியன் பட்டம் பெற்றது.

    கடந்த ஆண்டு பெங்களூர், ஐதராபாத், கொச்சி ஆகிய இடங்களில் நடந்தது. 8 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் அகமதாபாத் டிபென்டர்ஸ் அணி கோப்பையை வென்றது.

    3-வது ரூபே பிரைம் வாலிபால் லீக் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டி வருகிற 15-ந்தேதி முதல் மார்ச் 21-ந்தேதி வரை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கிறது.

    இதில் நடப்பு சாம்பியன் அகமதாபாத் டிபென்டர்ஸ், பெங்களூர் டார்படோஸ், கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை பிளிட்ஸ், ஐதராபாத் பிளாக் ஹாக்ஸ், கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், கொல்கத்தா தண்டர் போல்ட்ஸ், மும்பை மீட்டி யார்ஸ், புதிதாக இணைந்து உள்ள டெல்லி டூபான்ஸ் ஆகிய 9 அணிகள் கலந்து கொள்கின்றன.

    'லீக்' சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் முதல் 5 இடங்களை பிடிக்கும் அணிகள் 'சூப்பர் 5' சுற்றுக்கு முன்னேறும்.

    'சூப்பர் 5' சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா ஒரு ஆட்டத்தில் விளையாடும். இதன் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். 2-வது, 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

    போட்டிகள் மாலை 6.30 மணிக்கும், இரவு 8.30 மணிக்கும் நடக்கிறது. 15-ந்தேதி நடைபெறும் தொடக்க போட்டிகளில் சென்னை பிளிட்ஸ்-அகமதாபாத் டிபன்டர்ஸ் (மாலை 6.30 மணி), பெங்களூர்-கொல்கத்தா (இரவு 8.30) அணிகள் மோதுகின்றன.

    சோனிஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

    • உங்களின் தேவைகளை புரிந்துகொள்வதில் திமுக தேர்தல் அறிக்கைக் குழு மிகவும் ஆர்வமாக உள்ளது.
    • தொலைபேசி எண் தொடர்பு மூலம் திமுக தேர்தல் அறிக்கை குழு உங்கள் பரிந்துரைகளை அறிந்து கொள்ளத் தயாராக உள்ளது.

    சென்னை :

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தொடர்பாக தி.மு.க. மக்களிடம் கருத்து கேட்கிறது. இது தொடர்பாக தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் உங்கள் பதிவுகளை வரவேற்கிறது. DMKManifesto2024-க்கான உங்கள் பதிவுகளை வரவேற்கிறது.

    வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கவும், மாநில சுயாட்சியை உரத்துச் சொல்வதற்குமான தேர்தல்!

    பாராளுமன்றத் தேர்தல் 2024-க்கான திமுக தேர்தல் அறிக்கையை வடிவமைப்பதில் தமிழ்நாட்டு மக்களின் பங்களிப்பை தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு எதிர்பார்க்கிறது!

    தங்களின் கோரிக்கைகளை அனுப்பி வைத்து, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் பங்களிக்க முடியும்!

    • எழுத்துப்பூர்வமாக நீங்கள் சமர்ப்பிக்கலாம்:

    தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, அண்ணா அறிவாலயம், எண் 367/369, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 600018 என்ற முகவரிக்கு கடிதங்கள் மூலமாகவோ அல்லது dmkmanifesto2024@dmk.in-இற்கு மின்னஞ்சல்கள் அனுப்புவதன் மூலமாகவோ உங்கள் பரிந்துரைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களின் தேவைகளை புரிந்துகொள்வதில் திமுக தேர்தல் அறிக்கைக் குழு மிகவும் ஆர்வமாக உள்ளது.

    • தொலைபேசி எண் மூலம் பகிருங்கள்:

    நீங்கள் நேரடியாக தொலைபேசியில் அழைத்து உங்கள் கருத்துகளைத் தெரிவிப்பதற்காக 08069556900 -இல் ஒரு சிறப்பு ஹாட்லைன் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொலைபேசி எண் தொடர்பு மூலம் திமுக தேர்தல் அறிக்கை குழு உங்கள் பரிந்துரைகளை அறிந்து கொள்ளத் தயாராக உள்ளது.

    • சமூக ஊடகங்களில் பதிவிடுங்கள்:

    #DMKManifesto2024 என்ற ஹேஷ்டேக்குடன் (@DMKManifesto2024) ட்வீட் செய்யுங்கள் அல்லது உங்கள் பதிவுகளை பேஸ்புக் பக்கம் DMKManifesto2024 அல்லது வாட்ஸ்அப் எண் 9043299441 மூலம் உங்கள் பரிந்துரைகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    • டவுன் ஹால் கூட்டங்களில் பங்குபெறுங்கள்:

    வரவிருக்கும் நாட்களில், தமிழ்நாடு முழுவதும் தேர்தல் அறிக்கைக் குழு பயணித்து டவுன் ஹால் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது. குழுவின் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு, உங்கள் கருத்துகளை நேரில் தெரிவிக்கலாம்.

    • ஆன்லைன் படிவங்கள் மூலம் சமர்ப்பிக்கலாம்:

    QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம், உங்களின் தேர்தல் அறிக்கை பரிந்துரைகளை ஆன்லைனில் சமர்ப்பிக்க முடியும்!

    உங்களின் கோரிக்கைகள் அல்லது பரிந்துரைகள் திமுகவின் தேர்தல் அறிக்கையை வடிவமைக்க உதவிகரமாக இருக்கும். அவை நம் சமூகத்தின் பல்வேறு தேவைகள் மற்றும் விருப்பங்கள் தேர்தல் அறிக்கையில் எதிரொலிப்பதை உறுதிசெய்யும். வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மைக்கு திமுக அறிக்கை குழு அர்ப்பணிப்புடன் உள்ளது.

    தேர்தல் அறிக்கை பதிவீடுகளுக்கான காலக்கெடு 25/02/2024 வரை உள்ளது. அதன் பிறகு, ஒரு விரிவான அறிக்கையை உருவாக்க, பெறப்பட்ட அனைத்து பரிந்துரைகளையும் திமுக அறிக்கை குழு மதிப்பீடு செய்து அதிகாரப்பூர்வத் தேர்தல் அறிக்கையை வெளியிடும்.

    மக்களாட்சி நடைமுறையின் ஒருங்கிணைந்த பகுதியாக நீங்கள் இருப்பதற்கு நன்றி.

    தமிழ்நாட்டை சுயாட்சி மாநிலமாகவும், இந்தியாவின் முன்னோடி மாநிலமாகவும் நாம் ஒன்றிணைந்து உருவாக்குவோம்.

    சொன்னதைச் செய்வோம்! செய்வதைச் சொல்வோம்...

    • கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடைபெற்றது.
    • 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் நிறைவு நாளான வருகின்ற பிப்.12ம் தேதி காலை 6 மணிக்கு தேரோட்டம் நடை பெறுகிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த அதன் உப கோவிலான வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

    தொடர்ந்து திருவிழா கொடிப்பட்டமானது திருக்கோவிலிலிருந்து புறப்பட்டு, ரதவீதி மற்றும் மாடவீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலுக்கு வந்து காலை 5.28 மணிக்கு கொடிமரத்தில் காப்பு கட்டிய சரவணன் வல்லவராயர் திருவிழாக் கொடியினை ஏற்றினார். அதன்பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் திருக்கோயில் கண்காணிப்பாளர் அஜித், மணியம் செந்தில்குமார் உள்ளிட்ட திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் நிறைவு நாளான வருகின்ற பிப்.12ம் தேதி காலை 6 மணிக்கு தேரோட்டம் நடை பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில்முருகன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்துள்ளளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.

    சேலம்:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.

    * தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் கர்நாடக காவிரி படுகையில் எதுவும் கட்ட முடியாது.

    * இன்று பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள். தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்பது அண்ணாவின் ஆசை.

    * அண்ணா நினைவு நாளில் மதுவிலக்கு குறித்த அறிவிப்பு வருமா என ஏங்கி கொண்டிருக்கிறோம்.

    * தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த முதலமைச்சரும், காவல்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். கட்சி தொடங்கினால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்கள் சிறுபான்மையினருக்கு உரிய முறையில் அதிகமாகவே சென்றடைந்துள்ளன.
    • கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அரசு பணிகளில் 4.5 சதவீதம் தான் சிறுபான்மையினர் இருந்தார்கள்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வலைத்தள பதிவில் குறிப்பிட்டு இருப்பதாவது:-

    ஆங்கிலேயர் அன்று செய்த அதே பிரிவினையை தி.மு.க.வும், காங்கிரசும் செய்து வருகிறது.

    வாக்கு அரசியலுக்காக தமிழகத்தில் மதவெறியை ஊட்டி வளர்த்துள்ளது. சிறுபான்மையினரை பாதுகாக்கும் கட்சி என்று போலியாக கூறுகிறது. சிறுபான்மையினருக்கு தி.மு.க.-காங்கிரஸ் என்ன செய்தது?

    கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அரசு பணிகளில் 4.5 சதவீதம் தான் சிறுபான்மையினர் இருந்தார்கள்.

    தற்போது அது 10.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 31 சதவீத வீடுகள் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு உள்ளது. முத்ரா கடன் வழங்கும் திட்டத்தில் பயனடைந்தவர்களில் 36 சதவீதம் பேர் சிறுபான்மையினர். உஜ்வாலா திட்டத்தில் பயன் பெறுபவர்களில் 37 சதவீதம் பேர் சிறுபான்மையினர். காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியை விட பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்கள் சிறுபான்மையினருக்கு உரிய முறையில் அதிகமாகவே சென்றடைந்துள்ளன.

    வருகிற பாராளுமன்ற தேர்தல் ஊழலற்ற மோடிக்கும் ஊழல் ஒன்றையே குறிக்கோளாக வைத்திருக்கும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கும் எதிரான தேர்தல்.

    இவ்வாறு அதில் கூறி இருக்கிறார்.

    • தமிழ்த்தாயின் தலைமகனாகப் பிறந்து, நமக்கெல்லாம் அண்ணனாக அறிவு மன்னனாக வழிகாட்டிய பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் நினைவுநாள்.
    • அண்ணா சொன்ன கடமை -கண்ணியம்-கட்டுப்பாட்டோடு உழைத்து மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் மக்களுக்கான அரசு ஒன்றியத்தில் அமைய ஓய்வின்றி உழைக்க வேண்டும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனியில் பேரறிஞர் அண்ணா படத்துக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அந்த படத்துடன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்த்தாயின் தலைமகனாகப் பிறந்து, நமக்கெல்லாம் அண்ணனாக அறிவு மன்னனாக வழிகாட்டிய பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் நினைவுநாள்.

    இன்று அமைதிப் பேரணியாகச் சென்ற கழக உடன்பிறப்புகள், பேரறிஞர் அண்ணா சொன்ன கடமை -கண்ணியம்-கட்டுப்பாட்டோடு உழைத்து மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் மக்களுக்கான அரசு ஒன்றியத்தில் அமைய ஓய்வின்றி உழைக்க வேண்டும்.

    எண்ணித் துணிக கருமம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகம் கண்ட எளிமையான தலைவர்களில் ஒருவர்.
    • மது மூலம் கிடைக்கும் வருவாய் என்பது, தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெயை வாங்குவதற்குச் சமம் என மதுவிலக்குக் கொள்கையில் உறுதியாக இருந்தவர்.

    சென்னை:

    பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழகம் கண்ட எளிமையான தலைவர்களில் ஒருவர், மது மூலம் கிடைக்கும் வருவாய் என்பது, தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெயை வாங்குவதற்குச் சமம் என, மதுவிலக்குக் கொள்கையில் உறுதியாக இருந்தவர், தான் தொடங்கிய கட்சியில் கூட, தனக்குப் பின் தனது வாரிசுகள் வர வேண்டும் என்பதை விரும்பாதவர்.

    திமுக நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாதுரை அவர்களது நினைவைப் போற்றி வணங்குகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 4 மணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
    • 2 மக்களவை தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் கேட்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 4 மணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    இந்நிலையில், மக்களவை தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணியில் கூடுதல் தொகுதி கேட்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    4 விருப்பத் தொகுதிகளை குறிப்பிட்டு 2 மக்களவை தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் கேட்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதனிடையே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • விபத்து ஏற்பட்ட அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    • போலீசார் விபத்து ஏற்பட்ட அரசு பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

    திருப்பூர்:

    தேனியில் இருந்து திருப்பூர் நோக்கி புறப்பட்ட சிறப்பு அரசு பேருந்து இன்று காலை சுமார் 6 மணி அளவில் திருப்பூர் கோவில் வழி பஸ் நிலையம் வந்தடைந்தது. முருகேசன் என்பவர் பேருந்தை ஓட்டி வந்தார். திருப்பூர் கோவில் வழி பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு பஸ் டெப்போவிற்கு பேருந்தை எடுத்து சென்றுள்ளார்

    அப்போது அதிவேகமாக வந்த பேருந்து திருப்பூர் தாராபுரம் ரோடு, சந்திராபுரம் அருகே வைக்கப்பட்டிருந்த ரோட்டின் மையப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது.

    அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் பாதிப்பு எதுவும் இல்லை. இருப்பினும் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு போலீசார் விபத்து ஏற்பட்ட அரசு பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஜெயராமன் நோயாளிகளுக்கு சிகிச்சை பார்த்து மருந்து கொடுத்தது தெரியவந்தது.
    • வருவாய் துறை அலுவலர்கள் ஜெயராமன் நடத்தி வந்த கிளினிக்கை பூட்டி சீல் வைத்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமி புரத்தை சேர்ந்தவர் ஜீவா (வயது 35) என்ற பெண் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது கணவர் ஜெயராமன்(38) டிப்ளமோ பார்மசி முடித்துள்ளார். இவர்களது கிளினிக் நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலையில் சிவகாமிபுரம் விலக்கில் இயங்கி வந்தது.

    மருத்துவர் ஜீவா அரசு மருத்துவமனைக்கு பணிக்கு செல்லும் நேரங்களில் அவரது கணவர் ஜெயராமன் கிளினிக்கில் மருத்துவராக செயல்பட்டு வந்துள்ளார். பல நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்ததில் அவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு அவர்கள் மற்றொரு மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இது குறித்து முதலமைச்சரின் தனி பிரிவிற்கு புகார் சென்றது

    அதன் பேரில் தென்காசி ஆர்.டி.ஓ. லாவண்யா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பிரேமலதா, ஆலங்குளம் தாசில்தார் கிருஷ்ணவேல் ஆகியோர் கிளினிக்கில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் ஜெயராமன் நோயாளிகளுக்கு சிகிச்சை பார்த்து மருந்து கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து பாவூர்சத்திரம் போலீசார் அவரை கைது செய்தனர்.

    மேலும் ஜெயராமன் கைது செய்யப்பட்ட நிலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவின் பெயரில் ஆர்.டி.ஓ. லாவண்யா, சுகாதாரத்துறை இணை இயக்குனர் பிரேமலதா மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் ஜெயராமன் நடத்தி வந்த கிளினிக்கை பூட்டி சீல் வைத்தனர்.

    • கண்மாயில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் வயல்கள் பாசன வசதி பெற்று வந்தன.
    • சிங்கம்புணரி சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு இல்லாததால் தண்ணீர் வேகமாக குறையத் தொடங்கியது.

    சிங்கம்புணரி:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மட்டிக்கரைப்பட்டி கிராமத்தில் மட்டி கண்மாய் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் உள்ளது பெரிய கண்மாய் ஆகும்.

    இந்த கண்மாயில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் வயல்கள் பாசன வசதி பெற்று வந்தன. கடந்த 3 ஆண்டுகளாக நல்லமழை பொழிந்ததால் கண்மாயில் நீர் வற்றாமல் போதிய நீர் இருந்து அதனை விவசாயிகள் நெல் வயலுக்கு பாசனத்திற்கு பயன்படுத்தி வந்தனர்.

    இந்த ஆண்டு சிங்கம்புணரி சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு இல்லாததால் தண்ணீர் வேகமாக குறையத் தொடங்கியது.

    அதனைத்தொடர்ந்து மட்டிக்கண்மாயில் வேகமாக தண்ணீர் வற்றியதால் ஊர் முக்கியஸ்தர்கள் ஒன்று கூடி மழைவரம் வேண்டியும் மீண்டும் விவசாயம் செழிக்கவும் இலவசமாக மீன்களை பிடித்து செல்ல சுற்று வட்டார கிராம மக்களுக்கு வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனர்.

    அதனை தொடர்ந்து பிரான்மலை குமரத்த குடிப்பட்டி, வையாபுரிபட்டி, செல்லியம்பட்டி, வேங்கைபட்டி, அணைக்கரைப்பட்டி, காளாப்பூர் , சிங்கம்புணரி, மருதிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் அதிகாலை முதலே இருசக்கர வாகனங்களில் சாரை சாரையாக கண்மாயை சுற்றி அனைத்து சமுதாய மக்கள் ஒன்று கூடி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காத்திருந்தனர்.

    இவர்கள் ஊத்தா, கச்சா, கொசுவலை, அரிகூடை உள்ளிட்ட உபகரணங்களுடன் மீன்களை பிடிக்க கொக்கு காத்திருப்பது போல் காத்திருந்தனர். அங்கு வந்த ஊர் முக்கியஸ்தர்கள் ஒற்றுமையை பறைசாற்றும் பாரம்பரிய மீன்பிடி திருவிழாவை வாணவெடி போட்டு வெள்ளை வீசி துவக்கி வைத்தனர்.

    3 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மீன்பிடி திருவிழா என்பதால் எதிர்பார்ப்புடன் காத்திருந்த கிராம மக்கள் வெடி வெடித்து வெள்ளை வீசிய உடனே கண்மாயை சுற்றி காத்திருந்த ஆயிரக்கணக்கான கிராம மக்கள் ஆர்ப்பரித்து மீன்களை அள்ள துள்ளி குதித்து கண்மாய்க்குள் இறங்கினர். தாங்கள் கொண்டு வந்த மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்களை சல்லடை போட்டு தேடியதில் விரால், ஜிலேபி, கெண்டை, கட்லா, ரோகு, சிசி, மசரைகெழுத்தி உள்ளிட்ட அதிக ருசியான நாட்டுவகை மீன்கள் கிலோ கணக்கில் சிக்கியதால் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

    சிங்கம்புணரி பகுதியில் வடகிழக்கு பருவமழை முடிந்த ஒரே மாதத்தில் நடக்கும் முதல் மீன்பிடி திருவிழா இதுவே என்பதால் குடும்பம் குடும்பமாக சாரை சாரையாக ஆயிரக்கணக்கானோர் மீன்பிடிக்க குவிந்ததால் இந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

    • கவர்னர், சிறப்பு விருந்தினர், துணை வேந்தர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
    • பட்டமளிப்பு விழாவில் 40622 பேர் பட்டம் பெறுகின்றனர். 459 பேர் கவர்னரிடம் நேரடியாக பட்டத்தை பெறுகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 30 வது பட்டமளிப்பு விழா இன்று கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் தொடங்கியது. கவர்னர், சிறப்பு விருந்தினர், துணை வேந்தர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

    இந்த பட்டமளிப்பு விழாவில் 40622 பேர் பட்டம் பெறுகின்றனர். 459 பேர் கவர்னரிடம் நேரடியாக பட்டத்தை பெறுகின்றனர்.

    இந்நிலையில், மனோன்மணி சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் புறக்கணித்துள்ளார்.

    ×