search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மீன்பிடி திருவிழா: குடும்பம் குடும்பமாக கண்மாயில் இறங்கி போட்டி போட்டு மீன்பிடித்த கிராம மக்கள்
    X

    மீன்பிடி திருவிழா: குடும்பம் குடும்பமாக கண்மாயில் இறங்கி போட்டி போட்டு மீன்பிடித்த கிராம மக்கள்

    • கண்மாயில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் வயல்கள் பாசன வசதி பெற்று வந்தன.
    • சிங்கம்புணரி சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு இல்லாததால் தண்ணீர் வேகமாக குறையத் தொடங்கியது.

    சிங்கம்புணரி:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மட்டிக்கரைப்பட்டி கிராமத்தில் மட்டி கண்மாய் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் உள்ளது பெரிய கண்மாய் ஆகும்.

    இந்த கண்மாயில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் வயல்கள் பாசன வசதி பெற்று வந்தன. கடந்த 3 ஆண்டுகளாக நல்லமழை பொழிந்ததால் கண்மாயில் நீர் வற்றாமல் போதிய நீர் இருந்து அதனை விவசாயிகள் நெல் வயலுக்கு பாசனத்திற்கு பயன்படுத்தி வந்தனர்.

    இந்த ஆண்டு சிங்கம்புணரி சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு இல்லாததால் தண்ணீர் வேகமாக குறையத் தொடங்கியது.

    அதனைத்தொடர்ந்து மட்டிக்கண்மாயில் வேகமாக தண்ணீர் வற்றியதால் ஊர் முக்கியஸ்தர்கள் ஒன்று கூடி மழைவரம் வேண்டியும் மீண்டும் விவசாயம் செழிக்கவும் இலவசமாக மீன்களை பிடித்து செல்ல சுற்று வட்டார கிராம மக்களுக்கு வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனர்.

    அதனை தொடர்ந்து பிரான்மலை குமரத்த குடிப்பட்டி, வையாபுரிபட்டி, செல்லியம்பட்டி, வேங்கைபட்டி, அணைக்கரைப்பட்டி, காளாப்பூர் , சிங்கம்புணரி, மருதிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் அதிகாலை முதலே இருசக்கர வாகனங்களில் சாரை சாரையாக கண்மாயை சுற்றி அனைத்து சமுதாய மக்கள் ஒன்று கூடி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காத்திருந்தனர்.

    இவர்கள் ஊத்தா, கச்சா, கொசுவலை, அரிகூடை உள்ளிட்ட உபகரணங்களுடன் மீன்களை பிடிக்க கொக்கு காத்திருப்பது போல் காத்திருந்தனர். அங்கு வந்த ஊர் முக்கியஸ்தர்கள் ஒற்றுமையை பறைசாற்றும் பாரம்பரிய மீன்பிடி திருவிழாவை வாணவெடி போட்டு வெள்ளை வீசி துவக்கி வைத்தனர்.

    3 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மீன்பிடி திருவிழா என்பதால் எதிர்பார்ப்புடன் காத்திருந்த கிராம மக்கள் வெடி வெடித்து வெள்ளை வீசிய உடனே கண்மாயை சுற்றி காத்திருந்த ஆயிரக்கணக்கான கிராம மக்கள் ஆர்ப்பரித்து மீன்களை அள்ள துள்ளி குதித்து கண்மாய்க்குள் இறங்கினர். தாங்கள் கொண்டு வந்த மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்களை சல்லடை போட்டு தேடியதில் விரால், ஜிலேபி, கெண்டை, கட்லா, ரோகு, சிசி, மசரைகெழுத்தி உள்ளிட்ட அதிக ருசியான நாட்டுவகை மீன்கள் கிலோ கணக்கில் சிக்கியதால் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

    சிங்கம்புணரி பகுதியில் வடகிழக்கு பருவமழை முடிந்த ஒரே மாதத்தில் நடக்கும் முதல் மீன்பிடி திருவிழா இதுவே என்பதால் குடும்பம் குடும்பமாக சாரை சாரையாக ஆயிரக்கணக்கானோர் மீன்பிடிக்க குவிந்ததால் இந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

    Next Story
    ×