என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தினமும் சரக்கு வாகனங்கள், பஸ், லாரி, இரு சக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
- வேலைக்கு செல்லும் விவசாயிகள் கடும் அவதி அடைந்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாகும். இந்த வனப்பகுதியை சுற்றி தலமலை, திம்பம், ஆசனூர் உள்பட பல்வேறு வன கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் பொதுமக்கள் பலர் வசித்து வருகிறார்கள். மேலும் பலர் விவசாய பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனால் திம்பம், தாளவாடி மற்றும் பண்ணாரி வனப்பகுதி எப்போதும் பசுமையாகவே இருந்து வருகிறது. மேலும் அடர்ந்த வனப்பகுதி என்பதால் இங்கு ஜில்லென குளிர்ந்த காற்று வீசி கொண்டே இருக்கும். மேலும் அதிகாலை நேரங்களில் பனி பெய்து கொண்டே இருக்கும்.
இந்த வனப்பகுதியில் மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த வழியாக தினமும் சரக்கு வாகனங்கள், பஸ், லாரி, இரு சக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சத்தி மற்றும் சுற்று வட்டார மலை கிராம பகுதிகளில் காலை நேரத்தில் வெயில் அடித்தாலும் நள்ளிரவு 12 மணிக்கு மேல் பனி பொழிவு இருந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திம்பம் மற்றும் தாளவாடி வனப்பகுதிகளில் பகல் நேரங்களில் வெயில் அடிக்கிறது. அதே போல் இரவு நேரங்களில் பனி பொழிவும் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை தாளவாடி, திம்பம், தலமலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு பனி பொழிவு இருந்தது.
இதனால் இந்த பகுதி முழுவதும் பனி துளிகள் படர்ந்து பசுமையாக காட்சி அளித்தது. மேலும் இந்த பகுதியில் குளிர்ந்த காற்று வீசி வருவதால் அதிகாலை நேரங்களில் வேலைக்கு செல்லும் மலை கிராம பொதுமக்கள் ஸ்சுவட்டர் மற்றும் குல்லா அணிந்த படியே சென்று வருகிறார்கள்.
மேலும் பனி பொழிவு காரணமாக இன்று காலை வரை வனப்பகுதி சாலைகள் இருட்டாகவே காணப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் இன்று அதிகாலை மற்றும் காலை நேரத்திலும் முகப்பு விள க்குகளை எரியவிட்டப்ப டியே சென்றனர். மேலும் அதிகாலை நேரத்தில் வேலைக்கு செல்லும் விவசாயிகள் கடும் அவதி அடைந்தனர்.
- தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான 16 ராம்சர் தளங்கள் உள்ளன.
- ஈர நிலங்களை பாதுகாக்க ஏரி, குளம், கன்வாய் நீர் வழிப் பாதைகளை ஆக்கிரமிப்பு இன்றியும், கழிவு பொருள்கள் கலக்காமலும் பாதுகாக்க வேண்டும்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் இருந்து, 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமம் கரைவெட்டி. இங்குள்ள ஏரியை நம்பி 50 ஆயிரம் ஏக்கரில் பாசன நிலங்கள் உள்ளன. இந்த ஏரி, பாசனத்துக்குப் பயன்படுவதோடு மட்டுமல்லாமல் பறவைகளுக்கும் புகலிடமாக விளங்குவதால், ஏரியை சுற்றியுள்ள வனப்பரப்பை இணைத்து கிட்டத்தட்ட, 20 கிலோ மீட்டர் பரப்பளவில், அதாவது 442.37 ஹெக்டேர் இடத்தை, பறவைகள் சரணாலயமாக கடந்த 1999-ம் ஆண்டில் அறிவித்தது தமிழக அரசு அறிவித்தது. தற்போது இந்த சரணாலயத்துக்கு ராம்சர் தளம் என்ற அங்கீகாரத்தை மத்திய அரசு வழங்கி உள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 75-லிருந்து 80-ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான 16 ராம்சர் தளங்கள் உள்ளன. 453.72 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய ஈரநிலங்களில் ஒன்றாகும். மேலும் இப்பகுதி நிலத்தடி நீர் செறிவூட்டலுக்கான குறிப்பிடத்தக்க ஆதாரமாக உள்ளது. நெல், கரும்பு, பருத்தி, சோளம் மற்றும் துவரை போன்ற வேளாண் பயிர்களை பயிரிடுவதற்கு கிராம மக்களால் சதுப்பு நிலநீர் பயன்படுத்தப்படுகிறது. கரைவெட்டியில் அதிக எண்ணிக்கையிலான நீர்ப்பறவைகள் உள்ளன. சுமார் 198 வகையான பறவைகளும் இங்கு உள்ளன.
ராம்சர் தளமாக அறிவிக்கப்பட்டதன் மூலம் சதுப்பு நிலங்களுக்குள் எந்தவிதமான ஆக்கிரமிப்பு, தொழில் நிறுவுதல், ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளை விரிவுபடுத்துதல், திடக்கழிவுகளை கொட்டுதல், சுத்திகரிக்கப்படாத கழிவுகள் மற்றும் கழிவுகளை வெளியேற்றுதல், வேட்டையாடுதல் மற்றும் நிரந்தரமான கட்டுமானம் ஆகியவை தடை செய்ய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக உலக ஈர நில தினத்தையொட்டி அரியலூர் அடுத்த தாமரைக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் வனத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் கூறியதாவது:-
அரியலூர் மாவட்டத்தில் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ராம்சார் ஈர நிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் பறவைகள் பாதுகாக்கப்படும். அதிகமான வெளிநாட்டு பறவைகளும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது .
ஈர நிலங்களை பாதுகாக்க ஏரி, குளம், கன்வாய் நீர் வழிப் பாதைகளை ஆக்கிரமிப்பு இன்றியும், கழிவு பொருள்கள் கலக்காமலும் பாதுகாக்க வேண்டும். நீர் நிலைகளால் தான் பல்லுயிரி பெருக்கம் ஏற்படுகிறது. இதனால் இயற்கை சமநிலை ஏற்படுகிறது . எனவே மாணவர்களே இவற்றை பாதுகாக்கும் அரண்கள் எனவே இயற்கையை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வரும் 8-ந்தேதி பாராளுமன்றத்தில் காந்தி சிலை முன்பு தி.மு.க. எம்.பி.க்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்துவர்.
- பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் தோழமைக் கட்சி எம்.பி.க்களும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளோம்.
சென்னை:
தி.மு.க. பாராளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
* வரும் 8-ந்தேதி பாராளுமன்றத்தில் காந்தி சிலை முன்பு தி.மு.க. எம்.பி.க்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்துவர்.
* தமிழகத்தின் மீதான பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையை கண்டித்தும், இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
* பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் தோழமைக் கட்சி எம்.பி.க்களும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளோம் என்று தெரிவித்தார்.
- தி.மு.க. மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
- தமிழகத்தில் மோடியை எதிர்ப்பது போல் காட்டிக் கொள்வார்கள்.
சென்னை:
மெரினா அண்ணா சமாதியில் மரியாதை செலுத்திய பிறகு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர் அண்ணா. அவரது வழியில் ஆட்சி நடத்துவதாக கூறும் தி.மு.க. மாநில உரிமைகளை தாரை வார்த்து விட்டு அண்ணாவின் கொள்கைகளை குழி தோண்டி புதைத்து விட்டது. இவர்களுக்கு அண்ணாவின் பெயரை சொல்ல எந்த தகுதியும் இல்லை. அண்ணா வழியில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்தார்கள்.
இப்போது அதே வழியில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தல் வேலைகளை அ.தி.மு.க. ஏற்கனவே தொங்கி விட்டது. எங்கள் தலைமையை ஏற்று கூட்டணிக்கு யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம். தி.மு.க. தொகுதி பங்கீடு செய்வதற்கு அவசரப்பட காரணம் யாரும் அவர்களை விட்டு பிரிந்து சென்று விடக்கூடாது என்பதற்காகத்தான்.

அதற்காகவே அவர்கள் கூட்டணி கட்சியினரை வாங்க... வாங்க.... சீக்கிரம் வாங்க உட்கார்ந்து பேசலாம் என்று அவரசப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எங்கள் அணிக்கும் வருபவர்கள் வரத்தான் செய்வார்கள். அதனை தடுக்க முடியாது. இன்னும் ஒரு மாதத்துக்கு மேல் கால அவகாசம் உள்ளது. கடைசி நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் அ.தி.மு.க. அணிக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
தி.மு.க. மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தமிழகத்தில் மோடியை எதிர்ப்பது போல் காட்டிக் கொள்வார்கள். ஆனால் மறைமுகமாக ஆதரிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோடியக்கரை 7 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீனவர்கள் 5 பேரும் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
- கொடூர தாக்குதலில் மீனவர் ராமன் உள்ளிட்ட 5 பேரும் காயமடைந்தனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுக்காட்டுறையில் இருந்து மீனவர்கள் ராமன் (வயது 51), ரமேஷ் (28), சிவக்குமார்(41) ஆகியோர் ஒரு பைபர் படகிலும், பொன்னுத்துரை (51), ஜெயசந்திரன் (40) ஆகியோர் மற்றொரு பைபர் படகு என 2 படகுகளில் நேற்று மாலை மீன்பிடிக்க புறப்பட்டனர்.
இன்று அதிகாலை கோடியக்கரை 7 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீனவர்கள் 5 பேரும் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் அத்துமீறி மீனவர்களின் 2 படகுகளிலும் ஏறினர். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் மீனவர்களை கத்தியால் குத்தி ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மீன், நண்டு, ஜி.பி.எஸ் கருவி, செல்போன் உள்ளிட்ட பொருட்களை கொள்ளை அடித்து அங்கிருந்து தப்பினர்.
இந்த கொடூர தாக்குதலில் மீனவர் ராமன் உள்ளிட்ட 5 பேரும் காயமடைந்தனர். இதையடுத்து வேக வேகமாக கரைக்கு திரும்பிய அவர்கள் 5 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கை கடற்கொள்ளையர்கள் அத்துமீறி இந்திய கடல்பகுதிக்குள் நுழைந்து தமிழக மீனவர்களை தாக்கி பொருட்களை கொள்ளையடித்து செல்லும் சம்பவம் அதிகரித்து வருவதால் மீனவர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
எனவே இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியத்திற்கு முற்றுபுள்ளி வைத்து கடலில் அச்சமின்றி மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- புதுச்சேரி மக்களுக்கு பல்வேறு வகைகளிலும் மத்திய அரசு துரோகம் இழைத்துவிட்டது.
- மக்களுக்கான பல திட்டங்கள், கோரிக்கைகளை நிறைவேற்றி தராத மாநில அரசைக் கண்டித்தும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி மாநிலத்திற்கு இதுநாள் வரையிலும் மாநில அந்தஸ்து வழங்காதது, மத்திய நிதிக் குழுவில் புதுச்சேரி மாநிலத்தை இணைக்காதது, மத்திய பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்காதது ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் அனைத்து வேலை வாய்ப்புகளிலும் புதுச்சேரிக்கென உரிய இடஒதுக்கீடு வழங்காதது.
முதலானவற்றிற்கு காரணமான மத்திய அரசைக் கண்டிப்பது புதுச்சேரியை ஆளும் அரசு ரேஷன் கடைகளைத் திறக்காது பொது விநியோகத்திட்டத்தை அமல்படுத்தாது அரசு சார்பு நிறுவனங்களை படிப்படியாக மூடியது. உள்ளாட்சி தேர்தலை நடத்தாதது. தாழ்த்தப்பட்ட மக்களுக்குரிய சிறப்பு கூறு நிதியை முறையாக செயல்படுத்தாதது, மீனவர்களுக்கு உரிய உள்ஒதுக்கீடு வழங்காதது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஐ.டி. பார்க் உள்ளிட்ட புதிய தொழிற்சாலைகளைக் கொண்டு வராதது, அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படாதது, சட்டமன்றத்தில்அறிவித்த திட்டங்கள் செயல்படுத்தப்படாதது மூடப்பட்டுள்ள அரசு பஞ்சாலைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்காதது மின் துறையை தனியார்மயமாக்கும் பிரச்சனை, மின் கட்டணம் வசூலிப்பத்தில் பிரிபெய்டு மீட்டர் சிஸ்டம் கொண்டுவரப்படுவது. ஸ்மார்ட் சிட்டி பணிகளில் குளறுபடிகள் அரசின் தவறான விவசாயக் கொள்கை முடிவு உள்ளிட்ட மாநிலம் சம்பந்தமாகன பல்வேறு பிரச்சனைகளில் பாராமுகமாக இருந்து வருவதை கண்டித்தும், புதுச்சேரி மாநில மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அனைத்து திட்டங்கள் மற்றும் கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்றித தர மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும், புதுச்சேரி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் 10-ந் தேதி காலை 10 மணிக்கு கடலூர் சாலை ஏ.எப்.டி. மைதானத்தில் இருந்து பேரணியாகப் புறப்பட்டு மறைமலையடிகள் சாலை, அண்ணாசாலை, நேரு வீதி வழியாக சட்டமன்ற பேரவை அருகில் சென்றடைந்து, அங்கே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தப் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விழுப்புரம் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சண்முகம் எம்.பி. தலைமையில் புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் முன்னாள் எம்.எல்.ஏ., முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தப் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கட்சியினரும் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும். பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
+2
- சிறப்பு விருந்தினராக ராஜஸ்தான் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் நளினா வியாஸ் கலந்து கொண்டார்.
- 459 பேர் கவர்னரிடம் நேரடியாக பட்டம் பெற அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
நெல்லை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 30-வது பட்டமளிப்பு விழா இன்று கவர்னர் ஆர். என். ரவி தலைமையில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ. சிதம்பரனார் கலையரங்கத்தில் நடைபெற்றது.
பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர், பதிவாளர் சாக்ரடீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ராஜஸ்தான் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் நளினா வியாஸ் கலந்து கொண்டார்.
முன்னதாக பட்டமளிப்பு விழாவிற்காக பல்கலைக்கழகம் வந்த கவர்னர் ஆர்.என்.ரவி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் பட்டம் பெறும் மாணவ-மாணவிகளுடன் கவர்னர் ஆர்.என். ரவி குழு புகைப்படம் எடுத்து கொண்டார்.
தொடர்ந்து விழா மேடைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வந்தார். சிறப்பு அழைப்பாளர் நளினா வியாஸ், துணைவேந்தர் சந்திரசேகர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
இந்த பட்டமளிப்பு விழாவில் 40 ஆயிரத்து 622 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இதில் தங்கப் பதக்கம் பெற்ற 108 மாணவர்களும், ஆராய்ச்சி படிப்பில் பட்டம் வென்ற 351 மாணவர்கள் என 459 பேர் கவர்னரிடம் நேரடியாக பட்டம் பெற அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதில் 27 பேர் கலந்து கொள்ளவில்லை.
இதைத்தொடர்ந்து 432 பேருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நேரடியாக பட்டம் வழங்கினார். பின்னர் பதக்கம் பெற்ற பல்கலைக் கழக மாணவ-மாணவிகளுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.
விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் பங்கேற்கவில்லை.
இதனையொட்டி பல்கலைக்கழக வளாகம் முழுவதுமாக போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
- அ.தி.மு.க.வில் எல்லோரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறேன்.
- தி.மு.க. அரசு மக்கள் விரோத அரசாகவே உள்ளது.
சென்னை:
மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியில் மரியாதை செய்வதற்காக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்
செல்வம், சசிகலா ஆகியோர் இன்று வருகை தந்தனர்.
ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தி விட்டு காரில் திரும்பியபோது எதிரே சசிகலா காரில் வந்து கொண்டிருந்தார். அவரை பார்த்ததும் ஓ.பி.எஸ். காரை நிறுத்திவிட்டு இறங்கினார். பின்னர் சசிகலாவின் காரை நோக்கி அவர் நடந்து சென்றார். இதனை பார்த்ததும் சசிகலாவும் தனது காரில் இருந்து இறங்கினார். இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டனர். ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். இதன் பின்னர் அண்ணா சமாதிக்கு சென்று மரியாதை செலுத்திய சசிகலா நிருபர்களிடம்
கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் எல்லோரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று நான்ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறேன். அதற்கான காலம் வரும் பொறுத்திருந்து பாருங்கள். மக்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர்.
மத்திய மந்திரியாக இருந்த தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் புரட்சித்தலைவரை பற்றி தவறாக விமர்சித்துள்ளார். அவருக்கு பல வரலாறுகள் தெரியாது. எம்.ஜி.ஆர். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது கருணாநிதியும் முரசொலி மாறனும் எம்.ஜி.ஆரை சந்தித்து பேசினார்கள். அப்போது நிறைய கடன் வாங்கி கஷ்டத்தில் இருப்பதாகவும் தங்களுக்காக எங்களது நிறுவனத்துக்கு சம்பளம் வாங்காமல் ஒரு படம் நடித்து தரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
அதனை ஏற்று எம்.ஜி.ஆர். நடித்து கொடுத்த படம்தான் எங்கள் தங்கம். அந்த படத்தில் புரட்சி தலைவிதான் கதாநாயகியாக நடித்து இருந்தார். படத்தின் வெற்றி விழாவில் பேசிய முரசொலிமாறன், எம்.ஜி.ஆரை பார்த்து நீங்கள் சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்ததால் தான் கடனை எல்லாம் அடைத்து கோபாலபுரம் வீட்டையும் அடமானத்தில் இருந்து மீட்டு விட்டோம் என்று பேசினார். இந்த வரலாறு கூட தெரியாமலேயே அவர் பேசியுள்ளார். அவரது பேச்சு கண்டிக்கத்தக்கது. தி.மு.க. அரசு மக்கள் விரோத அரசாகவே உள்ளது. எம்.எல்.ஏ.க்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் சசிகலாவிடம் ஓ.பி.எஸ்.சுடனான சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பிய நிருபர்கள், இருவரும் பாராளுமன்ற தேர்தலில் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளதா? என்று கேட்டனர். இதற்கு பதில் அளித்த சசிகலா, ஓ.பி.எஸ். கட்சிக்காரர் மட்டுமல்ல எனது குடும்பத்திலும் ஒருவர். அ.தி.மு.க.வினர் ஒற்றுமையோடு இருந்து தீய சக்தி என்று அம்மா குறிப்பிட்ட தி.மு.க.வை ஆட்சியை விட்டு அகற்றுவதற்கும் வீழ்த்துவதற்கும் என்னென்ன வழிமுறைகளை யெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வேன் என்றார்.
- நினைவிடத்தில் விஜயகாந்த் புகைப்படம் மலர் தூவி அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
- தன்னை தேடி வந்தவர்களை சாப்பாடு போட்டு அனுப்பும் பழக்கம் உள்ளவராகவே இருந்து வந்துள்ளார்.
சென்னை:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார். உடல் நலக்குறைவால் உயிரிழந்த அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
விஜயகாந்த் மரணம் அடைந்து ஒரு மாதத்தை கடந்துவிட்ட நிலையிலும் அவரது நினைவிடத்தில் தினமும் பொதுமக்களும் தே.மு.தி.க. தொண்டர்களும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
குறிப்பாக வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பொதுமக்கள் தே.மு.தி.க. அலுவலகத்திற்கு சென்று விலை உயர்ந்த மாலைகளை வாங்கி வைத்து விஜயகாந்த் நினைவிடத்தில் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
நினைவிடத்தில் விஜயகாந்த் புகைப்படம் மலர் தூவி அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அங்கு வருபவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. இப்படி அஞ்சலி செலுத்த வரும் பொது மக்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு அதனை தங்களது முகநூல் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பதிவிடுவதையும் வழக்கமாகக் கொண்டு உள்ளனர்.
இதன் மூலம் விஜயகாந்த் உயிரிழந்த பிறகும் அவரது நினைவை போற்றும் வகையில் பொதுமக்கள் அவருக்கு தொடர்ச்சியாக மரியாதை செய்து வருவது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக தே.மு.தி.க. நிர்வாகி ஒருவர் கூறும்போது, "எந்த தலைவருக்கும் இல்லாத அளவுக்கு உயிரிழந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் தொடர்ச்சியாக பொதுமக்கள் நேரில் வந்து விஜயாந்த்துக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இது எங்களுக்கு நெகழ்ச்சியாகவே உள்ளது" என்று தெரிவித்தார்.
விஜயகாந்தை பொருத்தவரையில் எல்லோருக்கும் உதவும் எண்ணம் கொண்டவராகவும் தன்னை தேடி வந்தவர்களை சாப்பாடு போட்டு அனுப்பும் பழக்கம் உள்ளவராகவே இருந்து வந்துள்ளார். மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் செய்துள்ளார். இது போன்ற நல்ல உள்ளம் கொண்டவராக அவர் திகழ்ந்ததன் காரணமாகவே விஜயகாந்த் மீது பொதுமக்கள் அளவு கடந்த அன்பு வைத்திருப்பதாகவும் அதுதான் தற்போது வெளிப்பட்டு வருவதாகவும் தே.மு.தி.க. நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
- கல்வியை நாம் மகிழ்ச்சிகரமானதாக மாற்ற வேண்டும்.
- மாணவர்கள் படிக்கும் பழக்கத்தை வழக்கத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.
அன்னூர்:
கோவை அன்னூரில் உளள முத்துக்கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்களால் கட்டப்பட்ட புதிய வகுப்பறை திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் தமிழக தலைமை செயலாளரும், எழுத்தாளருமான இறையன்பு பங்கேற்று கட்டிடத்தை திறந்து வைத்தார்.
சாமிகளுக்குள் சண்டையில்லை. மனிதர்களுக்குள் தான் சண்டை. மனிதன் வாழும் வரை மாணவர்கள் தான். வாழ்வின் கடைசி வரை மனிதர்கள் கற்றுக் கொண்டு தான் உள்ளனர்.
மாணவர்கள் படித்தால் மட்டும் போதாது ஒரு கைத்திறணையும் கற்று கொள்ள வேண்டும். இதற்காக கைத்திறண் வகுப்பு மாணவர்களுக்கு எடுக்கப்படுகிறது. கல்வியை நாம் மகிழ்ச்சிகரமானதாக மாற்ற வேண்டும்.
தரையில் அமர்ந்து படித்தால் தான் மாணவர்களின் உடலுக்கு நல்லது. வயதானவர்களுக்கு மூட்டு வலி வருவதற்கு முக்கிய காரணம் தரையில் அமர்வதை தவிர்ப்பதால் தான். இளைஞர்கள் வரை இந்த வலி வருகிறது.
ஒரு பள்ளியின் சிறப்பு கட்டிடங்களால் உயர்ந்தது இல்லை. அதன்மூலம் சிறந்த மனிதர்களை உருவாக்குவதில் தான் உள்ளது. பாடப்புத்தகத்தில் உள்ள தை மட்டும் படிக்கும் ஒருவர் ஒருபோதும் காலப்போக்கை கற்று கொள்ள முடியாது.
பள்ளியின் பாடப்புத்தகம் தவிர வேறு புத்தகங்களையும் படித்தால் தான் சிறந்த அறிவை பெற முடியும். மாணவர்கள் படிக்கும் பழக்கத்தை வழக்கத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.
எப்போதும் விழிப்புடன் இருப்பவர்கள் தான்வெற்றி பெறுவார்கள். இன்றைய சிறுவர்களிடம் அதிக புத்திசாலித்தனம் உள்ளது.
அதற்கு காரணம் இன்றைய நிலையில் செல்போனில் அனைத்து தகவல்களையும் பெற முடிந்ததால் தான். அதனை நீங்கள் சரியான பணிகளுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்.
அன்றைய மாணவர்களுக்கு நூலகம் இருந்தது. அன்று மாணவர்களின் மனதில் லட்சியத்தை விதைப்பதற்கு யாரும் இல்லை. படிப்பின் மூலம் எந்தெந்த பணிகள் கிடைக்கும் என்று கூட தெரியாது.
சரியாக படிக்காத மாணவர்களை ஆசிரியர்கள் உதா சீனம் படுத்தாமல் அவர்களுக்கு முன்னுரிமை அளித்து படிப்பை கற்று கொடுக்க வேண்டும்.
அப்போது தான் சராசரி மாணவர்கள் தானாக படிப்பார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் தாங்கள் எவ்வளவு சிரமப்பட்டு பணம் சம்பாதிக்கிறோம் என்பதை கூற வேண்டும். அப்போது தான் அவர்களை மேன்மைபடுத்த முடியும். பள்ளியில் படிக்கும் போது செல்போனுக்கு அடிமையாகாமல் பார்த்து கொள்ள வேண்டும். மாணவர்கள் போதை வஸ்துகளை பயன்படுத்துவரிடம் இருந்து விலகி செல்லுங்கள். இதனால் மாணவர்கள் சிறந்த இடத்தை அடைய முடியும்.
இவ்வாறு அவர் என பேசினார்.
இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கட்சி பெயர் முடிவாகி விட்ட நிலையில் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் தெளிவுப்படுத்த விஜய் விரும்புகிறார்.
- 2026-ம் ஆண்டு தேர்தல்தான் இலக்கு என்பதால் ஒவ்வொரு நடவடிக்கையையும் பொறுமையாக செய்வதற்கு நடிகர் விஜய் திட்டமிட்டு இருக்கிறார்.
சென்னை:
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக திகழும் விஜய் மக்கள் நலப்பணிகளில் தனது ரசிகர்களை ஈடுபடுத்தி வந்தார். இதற்காக அவர் "விஜய் மக்கள் இயக்கம்" என்ற பெயரில் ஏற்கனவே அமைப்பு ஒன்றை நடத்தி வந்தார்.
தமிழ்நாடு விஜய் ரசிகர்கள் இந்த அமைப்பு மூலம் மக்கள் நலப்பணிகளை செய்து வந்தனர். இந்த இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற அவர் முடிவு செய்தார்.
கடந்த சில மாதங்களாக இதற்காக அவர் பல்வேறு பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தினார். தமிழக அரசியல் கள நிலவரம் பற்றிய ஆய்வு ஒன்றையும் அவர் மேற்கொண்டார். பிறகு தனது விஜய் மக்கள் இயக்கத்தை பலப்படுத்தினார்.
அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து நேற்று அவர் புதிய அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார். அவர் தொடங்கிய கட்சிக்கு "தமிழக வெற்றி கழகம்" என்று பெயரிட்டுள்ளார். நேற்று மதியம் தேர்தல் ஆணையத்திலும் இந்த புதிய கட்சியை பதிவு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின.
பாராளுமன்றத்துக்கு வருகிற ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. நடிகர் விஜய் தொடங்கி உள்ள கட்சி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவது இல்லை என்று நடிகர் விஜய் தனது திட்டத்தை வெளியிட்டுள்ளார்.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலே தனது இலக்கு என்றும் அவர் தெளிவுப்படுத்தி உள்ளார். பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு புதிய கட்சியின் நடவடிக்கைகள் செயல்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் விஜய் சுட்டிக்காட்டி உள்ளார்.
கட்சியின் கொள்கைகள், கொடி, சின்னம் மற்றும் செயல் திட்டங்களை முன் வைத்து அரசியல் பயணம் தொடங்கும் என்றும் நேற்று நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருந்தார்.

அரசியலில் ஈடுபட போவதாகவும் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும் விஜய் கூறியிருக்கிறார். தற்போது அவர் கைவசம் உள்ள படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் முடிவடைய உள்ளன. அதன் பிறகு நடிகர் விஜய் தீவிரமாக தேர்தல் களத்துக்கு வருவார் என்று தெரியவந்துள்ளது.
கட்சி பெயர் முடிவாகி விட்ட நிலையில் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் தெளிவுப்படுத்த விஜய் விரும்புகிறார். மேலும் கட்சிக்காக வலுவான சட்ட விதிகளை உருவாக்கும் முயற்சிகளிலும் மேற்கொண்டு உள்ளார். திராவிட கழகங்கள், இஸ்லாமிய கட்சிகள், தலித் கட்சிகளின் கொள்கைகளின் அடிப்படையில் விஜய் கட்சியின் கொள்கைகள் அமையும் என்று தெரியவந்துள்ளது.
இதற்கிடையே கட்சி கொடியை வடிவமைத்து மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் திட்டத்தையும் நடிகர் விஜய் வைத்துள்ளார். கட்சி கொடியை வடிவமைக்கும் விஷயத்தில் மற்றவர்களின் கருத்துகளை கேட்டாலும் விஜய்யின் முடிவுதான் இறுதி முடிவாக இருக்கும் என்று அவரது கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
கட்சி கொள்கை, கட்சி கொடி போன்றவற்றை வெளியிட்ட பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லும் திட்டத்தையும் நடிகர் விஜய் வைத்துள்ளார். வருகிற ஜூலை அல்லது ஆகஸ்டு மாதம் நடிகர் விஜய் சுற்றுப்பயணம் தொடங்குவார் என்று தெரிகிறது. நடிகர் விஜய்யின் சுற்றுப்பயணத்தை வரையறுத்து வருகிறார்கள். 234 தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் விஜய்யின் சுற்றுப்பயணம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2011-ம் ஆண்டு நாகப்பட்டினத்தில் விஜய் தனது ரசிகர்கள் கூட்டத்தை திரட்டினார். மீனவர்களுக்கு ஆதரவாக நடந்த அந்த கூட்டம் திராவிட கட்சிகளை அதிர்ச்சி அடைய செய்யும் வகையில் இருந்தது. அதன் பிறகு விஜய் அந்த அளவுக்கு தனது ரசிகர்களை எந்த இடத்திலும் கூட்டவில்லை.
தற்போது அரசியலுக்கு வந்து இருப்பதால் ரசிகர்கள், பொதுமக்களை ஒரே இடத்தில் திரட்டி மிக பிரமாண்டமான பொதுக்கூட்டத்தை நடத்த விஜய் திட்டமிட்டு இருக்கிறார். அந்த முதல் பொதுக்கூட்டம் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று நடிகர் விஜய் கருதுகிறார். இதற்காக தனி குழு ஒன்று திட்டமிட்டு வருகிறது.
ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை திரட்டும் அந்த மாநாடு வழக்கமாக திராவிட கட்சிகள் நடத்தும் மாநாடு போல அமையாமல் மாறுபட்ட வகையில் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று விஜய் கருதுகிறார். குறிப்பாக இளைஞர்களை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்று திட்டமிடுகிறார்.
அந்த வகையில் திருச்சி அல்லது கடலூரில் முதல் மாநாட்டை நடத்த நடிகர் விஜய் விரும்புகிறார். இந்த 2 நகரங்கள் தவிர வேறு ஏதாவது இடத்தில் முதல் மாநாட்டை நடத்தலாமா? என்றும் ஆலோசனை நடந்து வருகிறது.
முதல் மாநாட்டுக்கான தேதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. 2026-ம் ஆண்டு தேர்தல்தான் இலக்கு என்பதால் ஒவ்வொரு நடவடிக்கையையும் பொறுமையாக செய்வதற்கு நடிகர் விஜய் திட்டமிட்டு இருக்கிறார்.
அரசியலில் அவரது ஒவ்வொரு நகர்வும் "கப்பு முக்கியம் பிகிலு" என்று அவர் ஒரு படத்தில் உச்சரிக்கும் வசனத்தை பிரதிபலிப்பது போல அமைந்துள்ளது.
- கட்சியின் நலன் அடிப்படையில் கூட்டணி குறித்து ஆலோசித்து முறைப்படி முடிவு அறிவிக்கப்படும்.
- நாங்களும் பொதுக்குழுவில் கலந்து பேசி தாமதமில்லாமல் சரியான நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்போம்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் த.மா.கா. யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து தான் முடிவு எடுக்க வேண்டும். இதற்காக வருகிற 12-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை எழும்பூரில் த.மா.கா. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் உள்பட பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள். அவர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிப்பார்கள். பொதுக்குழு கூட்டத்தில் த.மா.கா.வின் தேர்தல் வியூகம், யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும். கட்சியின் நலன் அடிப்படையில் கூட்டணி குறித்து ஆலோசித்து முறைப்படி முடிவு அறிவிக்கப்படும்.
கடந்த தேர்தலில் எங்களுடன் கூட்டணியில் இருந்த தே.மு.தி.க., புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புதிய நீதிக் கட்சி, ஐ.ஜேகே., புரட்சி பாரதம் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தங்களின் பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தி அந்தந்த கட்சியின் கோட்பாடுகளுக்கு ஏற்றவாறு தேர்தல் வியூகங்களை அமைத்து கூட்டணி தொடர்பாக அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பார்கள்.
இதேபோல் நாங்களும் பொதுக்குழுவில் கலந்து பேசி தாமதமில்லாமல் சரியான நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.






