என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் இன்று கடை பிடிக்கப்பட்டது.
    • தமிழகம் முழுவதும் அண்ணா சிலை மற்றும் உருவபடத்துக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    சென்னை:

    பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் இன்று கடை பிடிக்கப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அவரது சிலை மற்றும் உருவபடத்துக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அண்ணா நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10.15 மணி அளவில் அண்ணாவின் உருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    அவைதலைவர் தமிழ்மகன் உசேன், துணை பொதுச் செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, தங்கமணி, ஜெயக்குமார், பெஞ்சமின், கோகுல இந்திரா, ஆர்.பி.உதயகுமார், ரமணா, மா.பா.பாண்டியராஜன், மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, மாதவரம் மூர்த்தி, வி.என்.ரவி, ஆதிராஜாராம், கே.பிரபாகரன், தி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ், இலக்கிய அணி இணை செயலாளர் டி.சிவராஜ், துணைச் செயலாளர் இ.சி.சேகர்,கொள்கைபரப்பு துணை செயலாளர் கலைப்புனிதன், வக்கீல் சதாசிவம், வக்கீல் அ.பழனி, வடபழனி சத்திய நாராயண மூர்த்தி, இஸ்மாயில் கனி மற்றும் ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • சம்பவத்தன்று கமலேஷ் வீட்டை சுத்தப்படுத்துவதற்காக ஒரு வாளியில் சோப்பு தண்ணீர் வைத்திருந்தார்.
    • குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள கீழமேடு அங்காளம்மன் தெருவை சேர்ந்தவர் கமலேஷ்(வயது 23). இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 22 நாட்களுக்கு முன்பு கமலேசுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று கமலேஷ் வீட்டை சுத்தப்படுத்துவதற்காக ஒரு வாளியில் சோப்பு தண்ணீர் வைத்திருந்தார். அந்த தண்ணீரை எதிர்பாராதவிதமாக கமலேசின் 2 வயது குழந்தை தடிவிட்டான். இந்த தண்ணீர் 22 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையின் மீது கொட்டியது. இதில் அந்த குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

    உடனே குழந்தையை அருகில் உள்ள அஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது. இதுபற்றி மண்டையூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    மத்தூர் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், மண்டையூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்கு பதிவு செய்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் சுடுகாடும் அந்த பகுதியிலேயே அமைந்துள்ளது.
    • சாலையோரம் அலட்சியமாக குப்பைகளை கொட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

    சென்னை குன்றத்தூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் சாலையோரம் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. குறிப்பாக வண்டலூர்-மீஞ்சூர் புறவழிச்சாலையில் சர்வீஸ் சாலை அருகே அதிக அளவில் குப்பைகள் மலை போல் குவிந்து காணப்படுகிறது. இவ்வாறு குவிந்து கிடக்கும் குப்பைகள் காரணமாக கடும் துர்நாற்றம் வீசி காணப்படுவதோடு, அந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது.

    இதனால் அந்த வழியே சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள், துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லும் நிலையே உள்ளது. மேலும், சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை அங்கு சுற்றித் திரியும் மாடுகள், நாய்கள் போன்றவை கிளறி விடுவதால் சாலை முழுவதும் குப்பைகள் சிதறி அந்த பகுதியே அலங்கோலமாக காட்சியளிக்கிறது.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் குப்பை கொட்டும் இடத்தின் அருகிலேயே பிரபல தனியார் பள்ளி மற்றும் கல்லூரியும் அமைந்துள்ளது. இதனால் இந்த குப்பைகளால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

    அத்துடன் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் சுடுகாடும் அந்த பகுத்யிலேயே அமைந்துள்ளது. இதுபோன்று மலை போல் குப்பைகள் குவிந்து தொடர்ந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் அந்த பகுதியில் கொடிய தொற்று நோய்கள் பரவும் அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, சாலையோரம் அலட்சியமாக குப்பைகளை கொட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், அங்கு மலைபோல் தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை முகாம்.
    • வேலை வாய்ப்பு முகாமில் கல்லூரி முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்க வசந்த் அன் கோ சார்பில் வேலை வாய்ப்பு முகாமை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தொடங்கி வைத்தார்.

    நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்கும் இந்த முகாமில் பொன் ஜெஸ்லி கல்லூரி தாளாளர் மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • வட சென்னை மற்றும் தென் சென்னை மக்களவைத் தொகுதிகளுக்குட்பட்ட கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்றது.
    • இந்தியா கூட்டணி வெற்றி பெற்றிட வேண்டும் என்ற லட்சியத்தோடு அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டோம்.

    சென்னை:

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பாராளுமன்றத் தேர்தலுக்கான கழக மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டங்கள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகின்றன.

    அந்த வகையில், வட சென்னை மற்றும் தென் சென்னை மக்களவைத் தொகுதிகளுக்குட்பட்ட கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், மாவட்ட அமைச்சர் - மாவட்டக் கழகச் செயலாளர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் - மாவட்ட - ஒன்றிய - பகுதி - நகர - பேரூர் கழக நிர்வாகிகள் - துணை மேயர் - மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினோம்.


    தொகுதியில் உள்ள கள நிலவரம் - நிர்வாகிகளை ஒருங்கிணைப்பது - தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் - பாக முகவர்களின் பணிகள் உள்ளிட்டவை குறித்து விரிவாகக் கேட்டறிந்தோம்.

    இந்தியாவை மீட்டெடுப்பதற்கான வாய்ப்பாக நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில், நிரூபிக்கிற வகையில் வட சென்னை - தென் சென்னை தொகுதிகளில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றிட வேண்டும் என்ற லட்சியத்தோடு அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனர்.
    • மலை கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களில் பணம், நகை, பொருட்களை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள்.

    திருத்தணி:

    முருகனின் அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாக திகழும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா என பல்வேறு மாநி லங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனர்.

    பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற காணிக்கையாக மலை கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களில் பணம், நகை, பொருட்களை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் திருத்தணி முருகன் கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த பகுதியில் பாதுகாப்புடன் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட திருக்கோவில் ஊழியர்கள் பங்கேற்று, துணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, நாகன் ஆகியோர் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். கடந்த 28 நாட்களில் பக்தர்கள் ரூ.1 கோடியே 31 லட்சத்து 82 ஆயிரத்து 988 ரூபாய் பணம், 711 கிராம் தங்கம், 8 ஆயிரத்து 880 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தியிருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • எம்.ஜி.ஆரை நீண்ட நேரம் காத்திருந்து அவர் அருகில் நின்று பார்த்த நினைவுகள் இன்று வரை பசுமையாக உள்ளது.
    • பெற்றெடுத்த பிள்ளைகள் கூட உதவாத நிலையில், தங்களது உழைப்பை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    நமது வாழ்க்கை முறையில் நமது ஆயுட்காலத்தை கணக்கிட்டு பார்த்தால் நமது முன்னோர்கள் அனைவரும் குறைந்தது 95 முதல் 102 வயது முடிந்தே இறந்தனர். நமது தாத்தா பாட்டியின் ஆயுட்காலம் 70 முதல் 90 வயது வரை இருந்தது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் 50 வயதை கடந்தாலே சாதனை என பார்க்கப்படுகிறது. இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 2022ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 70.19 ஆக உள்ளது. தமிழக மக்களின் சராசரி ஆயுட்காலம் 71.4 ஆண்டுகள். இதில். ஆண்களுக்கு 68.5 வயதும், பெண்களுக்கு 74.8 வயது என ஆய்வறிக்கை கூறுகிறது.

    ஆனால் திண்டுக்கல் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் 105 வயது முதியவர் வாலிபரைப்போல் அங்கும் இங்கும் துணை ஏதும் இல்லாமல் நடைபோட்டு வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா, ரெட்டியார் சத்திரம் யூனியன் கன்னிவாடி அருகே உள்ள பாப்பங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்து (105). கோவில் பூசாரியான இவரது மனைவி மாரியம்மாள் (90). கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஆனந்த ராஜ் என்ற மகனும், ராமாயி, மல்லாயி என்ற 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வெளியூரில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு பேரன்கள், கொள்ளுப்பேரன்கள் ஆகியோரும் உள்ளனர்.

    ஊரில் சிறிய தகர செட் அமைத்து முத்து மாரியம்மன் சிலை வைத்து முத்து பூஜை செய்து வருகிறார். அங்கு வரும் பக்தர்களுக்கு குறி சொல்லி ஆசி வழங்குகிறார். இவரது வாக்கு பலிப்பதாக பக்தர்கள் தேடி வருகின்றனர். அவர்கள் கொடுக்கும் காணிக்கையே இவருக்கு சிறிய வருமானமாக உள்ளது. இவருக்கு மகன், மகள்கள் மற்றும் பேரன், கொள்ளு பேரன்கள் இருந்த போதிலும் யாருடைய உதவியும் இன்றி வயதான தம்பதியர் தளராது உழைத்து வாழ்ந்து வருகின்றனர்.

    தள்ளாத வயதிலும், தளராமல் உறவுகள் துணையின்றி வசித்து வரும் முத்து பூசாரி கூறுகையில், நான் கடந்த 1920ல் பிறந்தேன். 19-வது வயதில் திருமணம் முடிந்தது. விவசாய கூலி வேலை செய்து பிழைத்து வந்தேன். 40 வருடங்களுக்கு மேல் தனியாக மனைவியுடன் வசித்து வருகிறேன். உடன் பிறந்தவர்கள் மற்றும் பெற்றெடுத்த பிள்ளைகள் வரை உதவி கரம் கேட்காமல் நாங்கள் இருவரும் வசித்து வருகிறோம் என்றார்.

    திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற கசவனம்பட்டி மவுனகுரு நிர்வாண சுவாமிகளை நான் சிறு வயதாக இருக்கும்போதே பார்த்துள்ளேன். ஆடையின்றி நிர்வாணமாக யாரிடமும் பேசாமல் மவுனமாக சுற்றுவார். அவரிடம் நான் ஆசி பெற்றுள்ளேன். அதேபோல் காந்தி கிராமத்திற்கு வந்த மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, நேரு, சுந்தராம்பாள் ஆகியோரை அருகில் இருந்து பார்த்துள்ளேன்.

    திண்டுக்கல்லுக்கு முதல் முறையாக 1971ம் ஆண்டு வந்த எம்.ஜி.ஆரை நீண்ட நேரம் காத்திருந்து அவர் அருகில் நின்று பார்த்த நினைவுகள் இன்று வரை பசுமையாக உள்ளது.

    ஜவஹர்லால் நேரு, குல்ஜாரிலால் நந்தா, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், சரண் சிங், ராஜீவ் காந்தி, வி.பி. சிங், சந்திரசேகர், பி.வி. நரசிம்ம ராவ், அடல் பிகாரி வாஜ்பாய், தேவே கவுடா, இந்தர் குமார் குஜ்ரால், மன்மோகன் சிங், நரேந்திர மோடி ஆகிய 15 பிரதமர்களை பார்த்துள்ளேன்.

    அதேபோல் தமிழகத்தில் பி.டி. ராஜன், பொப்பிலி ராஜா, கர்மா வெங்கட ரெட்டி நாயுடு, ராஜ கோபாலச்சாரி, தெங்குட்டுரி பிரகாசம், ஓ.பி. ராமசாமி, பி.எஸ். குமாரசாமி, காமராஜ், எஸ். பக்தவத்சலம், வி.ஆர்.நெடுஞ்செழியன், கருணாநிதி, எம்.ஜி. ராமச்சந்திரன், ஜானகி, ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, மு.க.ஸ்டாலின் என 21 முதலமைச்சர்களையும் பார்த்துள்ளேன் என்றார்.

    தள்ளாத வயதில் தளராது நடந்து வருகிறார் முத்து பூசாரி. இதுவரை அரசிடம் இருந்து எந்த சலுகையும் எதிர்பார்க்காமல் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். முதியோர் உதவித்தொகை கூட இதுவரை அவர்கள் பெறவில்லை. மேலும் தமிழக அரசின் மகளிர் உரிமை தொகை கூட ஒரு மாதம் மட்டுமே வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அதன் பிறகு அதுவும் வரவில்லை. பெற்றெடுத்த பிள்ளைகள் கூட உதவாத நிலையில், தங்களது உழைப்பை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

    அரசின் உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் கிடைக்க அதிகாரிகள் முன் வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆலம் விழுதுகள் போல் சொந்தம் 1000 இருந்தென்ன, வேரென நீயிருந்தால் நான் வீழ்ந்து விடாமல் இருப்பேன் என்ற வரிகளுக்கு ஏற்ப மனைவிக்கு கணவனும், கணவனுக்கு மனைவியும் தள்ளாத வயதில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்து வருவதை தற்கால தம்பதிகள் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.

    • குற்றவாளியான வடிவேல் சொகுசு காரில் ஸ்கேன் மெஷின் உடன் தப்பிச் சென்றார்.
    • விசாரணையில் இவர்கள் இடைத்தரகர்களாக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த பரிகம் காட்டுவளவு கிராமத்தில் தனியாக உள்ள புஷ்பாகரன் என்பவரின் விவசாயி வீட்டில் நேற்று கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என கண்டறியும் சோதனை நடப்பதாக பாலின தேர்வை தடை செய்யும் மாநில கண்காணிப்பு குழுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதன்பேரில், மருத்துவம் மற்றும் ஊராட்சிகளின் பணிகள் டி.எஸ்.பி. சரவணகுமார், ஏ.ஓ. கமலக்கண்ணன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் தருமபுரி சுகாதாரத்துறை இணை இயக்குனர் சாந்தி தலைமையில் திடீர் சோதனைக்கு சென்றனர். அப்போது மருத்துவக் குழு வருவதை அறிந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியான வடிவேல் சொகுசு காரில் ஸ்கேன் மெஷின் உடன் தப்பிச் சென்றார்.

    இந்தநிலையில் வீட்டை சுற்றி வளைத்து சோதனை செய்ததில் வடிவேலுக்கு உதவிய தருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டி பகுதியை சேர்ந்த வனிதா மற்றும் கருவுற்ற பெண்களை காரில் அழைத்து வந்த டிரைவர் முருகன் ஆகிய இடைத்தரகர்கள் 2 பேரை அதிகாரிகள் சுற்றி வளைத்தனர்.

    தருமபுரி, கிருஷ்ணகிரி, மேட்டூர், ஓசூர், பெங்களூர், பகுதிகளில் இருந்து வர வழைக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் உள்பட 15 பேரை மருத்துவக் குழுவினர் விசாரித்தனர். இதில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வடிவேலு, சட்ட விரோதமாக கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் உள்ள குழந்தை ஏற்கனவே ஆணா, பெண்ணா என கண்டறிந்த சம்பவத்தில் 4 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இவருக்கு பெரியாம்பட்டி பகுதியை சேர்ந்த வனிதா மற்றும் கார் டிரைவர் முருகன் ஆகிய இருவரும் இடைத்தரகர்களாக செயல்பட்டு வந்துள்ளனர். இந்த 2 பேர் மூலம் கருவுற்ற பெண்களின் கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என கண்டறிய நினைக்கும் பெண்களை ஏற்கனவே கருவில் இருப்பது என்ன குழந்தை என்று கண்டறிந்து சென்ற கர்ப்பிணிப் பெண்களின் உதவியோடு கண்டறிந்தனர்.

    பின்னர் அவர்களை மாவட்டத்தில் செல்போன் சிக்னல் கிடைக்காத காட்டுப் பகுதிகளை தேர்வு செய்து, அப்பகுதிகளில் உள்ளவர்களுக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக திருவிழா, கல்யாணம், காதுகுத்து, நடக்கும் பகுதிகளை பார்த்து அப்பகுதியில் ஒரு வீட்டை தேர்வு செய்து, விசேஷத்திற்கு வந்தது போல் கணவர்கள் சம்மதத்துடன் அவர்களை அழைத்து வந்து ஒரே இடத்தில் வைத்து கருவில் உள்ளது ஆணா, பெண்ணா என கண்டறிந்து உள்ளனர்.

    இதை கண்டறிய ஒரு நபரிடம் ரூ. 13 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை பெற்றுள்ளனர். ஒரு பெண்ணை அழைத்து வந்தால் இடைத்தரகரான வனிதாவிற்கு ரூ. 5 ஆயிரம் கமிஷனாக கொடுத்து உள்ளனர். இதே பாணியில் தான் நேற்று வனிதாவும் முருகனும் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்திற்கு உட்பட்ட பரியம் காட்டுவளவு கிராமத்தில் உள்ள புஷ்பாகரன் வீட்டில் அரங்கேற்றி உள்ளனர்.

    தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், மேட்டூர், பெங்களூர் பகுதிகளில் இருந்து வரவழைத்த பெண்களை வீட்டில் தரையில் படுக்க வைத்து ஸ்கேன் மெஷின் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வடிவேலு கர்ப்பிணி பெண்களுக்கு ஆணா, பெண்ணா என 12 பேருக்கு கண்டறிந்து உள்ளார்.

    மேலாண்மை குழு வருவதை அறிந்த வடிவேலு ஸ்கேனிங் மெஷினுடன் சொகுசு காரில் தப்பி சென்றுள்ளார். பின்னர் வனிதாவும் டிரைவர் முருகனும் ஒரே காரில் தப்பிச் செல்ல முற்பட்ட போது பாலின தேர்வை தடை செய்யும் குழுவினரிடம் சிக்கிக் கொண்டனர்.

    இது குறித்து தொப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து விரைந்து வந்த போலீசார் வனிதா மற்றும் கார் டிரைவர் முருகன் இருவரையும் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இவர்கள் இடைத்தரகர்களாக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.

    இதனைத்தொடர்ந்து விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வடிவேல் என்பவர் உடன் சேர்ந்து இத்தொழிலை தொடர்ந்து செய்து வருவதும் தெரியவந்தது.

    இதையடுத்து தொப்பூர் போலீசார் 2 பேரையும் கைது செய்து இன்று சிறையில் அடைத்தனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • டாக்டராக இருந்தாலும் சரி, ஆக்டராக இருந்தாலும் சரி யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்,
    • பசுமை பூங்காவை தவிர வேறு என்ன கொண்டு வந்தாலும் நானே முதல் ஆளாக இறங்கி கடுமையாக போராடுவேன்.

    சேலம்:

    சேலத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்றத் தேர்தலுக்கு பா.ம.க. தயாராக உள்ளதாகவும், விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்போம். மேலும் தமிழகத்தில் குறுவை சம்பா பாதிப்பு காரணமாக அரிசி விலை இன்னும் ஏற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத தி.மு.க.விற்கு சமூகநீதி குறித்து பேச தகுதியில்லை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த எந்த சமூகத்தினரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் முதலமைச்சருக்குதான் மனசு இல்லை.

    நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அன்புமணி, டாக்டராக இருந்தாலும் சரி, ஆக்டராக இருந்தாலும் சரி யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், ஆனால் பா.ம.க. போல சாதனைகளை செய்ய வேண்டும்.

    மேலும் தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே இருக்கும் ஈகோ பிரச்சனையால் பொதுமக்களுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் தான் பாதிப்பு என்ற அவர் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு குறித்து அரசு கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை திட்டமிட்டு திறந்திருக்க வேண்டும். கோயம்பேடு பஸ் நிலையத்தை அவசரம் அவசரமாக அப்புறப்படுத்த பார்க்கிறார்கள். இங்கு பசுமை பூங்காவை தவிர வேறு என்ன கொண்டு வந்தாலும் நானே முதல் ஆளாக இறங்கி கடுமையாக போராடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்

    பேட்டியின்போது எம்.எல்.ஏக்கள் அருள், சதாசிவம், வன்னியர் சங்க மாநில செயலாளர் கார்த்தி, துணை தலைவர் தேவதாஸ் மாவட்ட செயலாளர்கள் ராஜசேகர், நாராயணன் மற்றும், கதிர் ராசரத்தினம், சத்திரிய சேகர் விஜயராசா, உள்பட பலர் உள்ளனர்.

    • கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    நாளை முதல் 9-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சிவரஞ்சனி புகார் கொடுத்தார்.
    • திருமணம் செய்து கொள்ள மறுத்த பிரபாகரன் வீட்டு முன்பு சிவரஞ்சனி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள ஓடைமேடு பகுதியை சேர்ந்த சிவக்குமார், மாலதி தம்பதியினரின் மகள் சிவரஞ்சனி (24). பி.இ. பட்டதாரி.

    அந்தியூர் அடுத்த சமத்துவபுரம் அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் முருகன், சரசு தம்பதியினரின் மகன் பிரபாகரன் (30). டெல்லியில் தனியார் கம்பெனியில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில், சிவரஞ்சனி- பிரபாகரன் ஆகிய இருவரும் கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வருவதாக தெரிகிறது. இவர்கள் காதல் விவகாரம் வீட்டில் தெரிய வந்ததால், பிரபாகரனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பிரபாகரன் சிவரஞ்சனியை திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறியதாக தெரிகிறது.

    இந்நிலையில் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சிவரஞ்சனி புகார் கொடுத்தார். 2 பேரையும் அழைத்து பேசிய போலீசார், அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க முடிவு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2 பேருக்கும் கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அப்போதும் பிரபாகரன், சிவரஞ்சனியை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியதாக தெரிகிறது.

    தொடர்ந்து மீண்டும் இன்று மதியம் 12 மணிக்கு மேல் கவுன்சிலிங் வழங்க அதிகாரிகள் முடிவு செய்து அழைப்பு விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள மறுத்த பிரபாகரன் வீட்டு முன்பு சிவரஞ்சனி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • மாணவர்கள் படிகளின் அருகே உள்ள ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கியபடி பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
    • அறிவுரைக்கு பின்னும் ஆபத்தான பயணம் மேற்கொண்டால், அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்.

    சென்னை:

    பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அறிவுரை வழங்கி உள்ளார். மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    * மாநகர பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க வேண்டும்.

    * அரசு பேருந்துகளில் பயணிகள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    * மாணவர்கள் படிகளின் அருகே உள்ள ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கியபடி பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

    * முன் மற்றும் பின் பக்கங்களில் உள்ள படிக்கட்டுகளின் அருகே உள்ள ஜன்னல்களுக்கு கண்ணாடி நிரந்தரமாக பொருத்த வேண்டும்.

    * ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தக்க அறிவுரை வழங்க வேண்டும்.

    * அறிவுரைக்கு பின்னும் ஆபத்தான பயணம் மேற்கொண்டால், அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்.

    * பேருந்து சாலை சந்திப்பு, கூட்ட நெரிசல் பகுதிகளில் மெதுவாக செல்லும்போது இறங்க முயற்சிக்கும் பயணிகளுக்கு நடத்துநர் எச்சரிக்கை செய்ய வேண்டும்.

    * பேருந்து நிறுத்தம் வருவதை நடத்துநர் குரல் மூலம் முன் கூட்டியே தெரிவித்து பயணிகளை இறக்க தயார்ப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×