என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • நேரு விளையாட்டு அரங்கத்தை தரம் உயர்த்த ரூ.5.71 கோடி நிதி ஒதுக்கீடு.
    • வேளச்சேரி நீச்சல்குளம் வளாகத்தை ரூ.4.72 கோடியில் தரம் உயர்த்த திட்டம்.

    சென்னையில் விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.25 கோடி நிதி ஒதுக்கி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    விளையாட்டு உள்கட்டமைப்புகளை சர்வதேச அளவிற்கு மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கம் ரூ.11.34 கோடியில் தரம் உயர்த்தப்படும்.

    நேரு விளையாட்டு அரங்கத்தை தரம் உயர்த்த ரூ.5.71 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    வேளச்சேரி நீச்சல்குளம் வளாகத்தை ரூ.4.72 கோடியில் தரம் உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

    நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கம் ரூ.88 லட்சத்தில் மேம்படுத்தப்பட உள்ளது.

    • ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை.
    • கைது செய்யப்பட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    ராமேஸ்வரம் அருகே இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 4.36 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    குந்துகால் கடல் பகுதி வழியாக தங்க கட்டிகளை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    மேலும், கைது செய்யப்பட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • டி.எஸ்.பி., உடனடியாக அப்பெண்ணை மீட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் ஒப்படைக்க காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
    • திருச்சி பகுதியில் உள்ள கங்காரு கருணை இல்லத்தில் முறைப்படி சேர்த்து விட்டனர்.

    திருவெறும்பூர்:

    திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது திருவெறும்பூர் பஸ் நிலையம். இதில் பயணிகளின் இருக்கை பகுதியில் ஒரு பெண் கை, கால் செயல் இழந்த நிலையில் கடந்த சில தினங்களாக அங்கேயே படுத்து கிடந்தார்.

    இந்த பெண்ணால் எழுந்து அருகில் உள்ள பாத்ரூம் செல்ல முடியாததால் அங்கேயே அணைத்து செயல்களையும் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.

    இதனால் பயணிகள் இருக்கை பகுதி மிகவும் அசுத்தமாகவும் துர்நாற்றம் வீசும் பகுதியாகவும் மாறவே பயணிகள் சாலையில் நின்று பஸ் ஏறும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த சமூக நல ஆர்வலர் மனித நேயம் அன்பழகன், சமூக வலைதளத்தில், இப்பெண் குறித்து பதிவிட்டு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குறிப்பிட்டுள்ளார். இது சோசியல் மீடியாவில் வைரலானது.

    இதனை அறிந்த திருவெறும்பூர் டி.எஸ்.பி. அறிவழகன், உடனடியாக அப்பெண்ணை மீட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் ஒப்படைக்க திருவெறும்பூர் காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    இதனை அடுத்து காவலர்கள் ஜான்சன், பிரபு ஆகியோர் திருச்சி மாநகராட்சி அலுவலர் சிவக்குமார் உதவியுடன் அப்பெண்ணை மீட்டு சுத்தப்படுத்தி புதிய ஆடை அணிவித்தனர்.

    பின்னர் திருச்சி கிராப்பட்டி பகுதியில் உள்ள கங்காரு கருணை இல்லத்தில் முறைப்படி சேர்த்து விட்டனர்.

    இந்த பெண் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நாகராஜன் என்பவர் மனைவி ராஜேஸ்வரி (வயது 50) என்பதும், அவருக்கு ஒரு கை, கால் செயல் இழந்தவுடன், பராமரிக்க முடியாமல் கல் நெஞ்சம் கொண்ட அவரது மகன் இங்கே வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.

    உடனடி நடவடிக்கை எடுத்த டிஎஸ்பிக்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    • இரண்டு மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதியை கேட்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டம்.
    • 4 விருப்ப தொகுதிகள் பட்டியலை திமுகவிடம் இந்திய கம்யூனிட் கட்சி வழங்கியது.

    சென்னையில் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக உடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது.

    இதில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் அமைச்சர் கே.என்.நேரு, ஆ.ராசா உள்ளிட்டோர் அடங்கிய குழுவுடன் இந்திய கம்யூனிட்ஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது.

    இந்த கூட்டத்தில், 4 விருப்ப தொகுதிகள் பட்டியலை திமுகவிடம் இந்திய கம்யூனிட் கட்சி வழங்கியது. இதில், இரண்டு மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதியை கேட்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த முறையை விட கூடுதலாக தொகுதிகளைக் கேட்டுள்ளோம் என்று தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் குழு பேட்டியளித்தது.

    • மஞ்சள் நிற உரசாக்குடன் நின்றிருந்த ஒருவர் போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்றார்
    • சட்ட விரோதமாக நாட்டுத் துப்பாக்கியை வைத்து வனப்பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாடி வருவதும் தெரியவந்தது.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் வெள்ளி திருப்பூரை ஒட்டியுள்ள வனப்பகுதிகளான மாத்தூர், வட்டக்காடு, செல்லம்பாளையம் ஆகிய பகுதிகளில் சட்ட விரோத செயல்கள் நடைபெறுகிறதா என வெள்ளித்திருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது வட்டக்காடு பகுதியில் மஞ்சள் நிற உரசாக்குடன் நின்றிருந்த ஒருவர் போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்றார். சந்தேகமடைந்த போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். மேலும் அவரிடம் சோதனை நடத்தினர்.

    இதில் அவர் கையில் வைத்திருந்த உரசாக்கில் மொசுகோந்தி வகை குரங்கின் தோல் உரித்த நிலையில் இரண்டாக வெட்டப்பட்டு இருந்தது.

    மேலும் விசாரணையில் அவர் சங்கராபாளையம் அருகே உள்ள காக்காயனூரை சேர்ந்த மாதன் என்கிற துரையன் (45) என்பதும், சட்ட விரோதமாக நாட்டுத் துப்பாக்கியை வைத்து வனப்பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாடி வருவதும் தெரியவந்தது.

    மேலும் சாணிமடுவு வனப்பகுதியில் மொசுக்கோந்தியை சுட்டதாகவும் அதற்கு பயன்படுத்திய உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி மற்றும் மருந்து பொருட்களை அங்குள்ள ஒரு மறைவான பகுதியில் வைத்துள்ளதாகவும், அதனை கடந்த 5 வருடங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து வாங்கியதாகவும் மாதன் தெரிவித்தார்.

    இதை அடுத்து மாதனை போலீசார் கைது செய்து துப்பாக்கி மற்றும் இறைச்சியை பறிமுதல் செய்தனர்.

    • முப்புடாதி மாட்டுச்சாணம் கொட்டும் பகுதியில் இறந்து கிடந்தார்.
    • தொடர் விசாரணையில் சம்பவத்தன்று மூதாட்டியிடம் பாலியல் துன்புறுத்தலில் ராமர் ஈடுபட்டுள்ளார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி பழனி ஆண்டவர் கோவில் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி முப்புடாதி (வயது 65).

    இவரது கணவர் கிருஷ்ணன் இறந்து விட்டதால் மகன் ராமருடன் வசித்து வந்தார். ராமருக்கு திருமணமாகியதால் அருகில் உள்ள ஆவுடையானூரில் மனைவியுடன் அவர் வசித்து வருகிறார். இதனால் மூதாட்டி மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில் முப்புடாதி அங்குள்ள மாட்டுச்சாணம் கொட்டும் பகுதியில் இறந்து கிடந்தார். இதனை அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் மற்றும் ஆலங்குளம் டி.எஸ்.பி. பர்ணபாஸ், தென்காசி ஏ.டி.எஸ்.பி. ரமேஷ் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

    அப்போது அவர் ஆடை இன்றி நிர்வாண நிலையில் காணப்பட்டார். இதனால் அவர் பாலியல் துன்புறுத்தலில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் அதே பகுதி தெற்கு தெருவை சேர்ந்த ராமர் (72) என்பவர் மூதாட்டியை கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    தொடர் விசாரணையில் சம்பவத்தன்று மூதாட்டியிடம் பாலியல் துன்புறுத்தலில் ராமர் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த ராமர் மூதாட்டியை கொலை செய்தது தெரியவந்தது.

    தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.
    • மஹாசிவராத்திரி நாளன்று கோவை ஈஷா யோக மையத்தை இந்த ரதங்கள் வந்தடைய உள்ளன.

    தென் கைலாய பக்தி பேரவை சார்பில், மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஆதியோகி ரத யாத்திரை சுமார் 35,000 கி.மீ தூரம் பயணிக்க உள்ளது. இந்த ரதம் 60 நாட்களில் ஆயிரக்கணக்கான கிராமங்களில் வலம் வர இருக்கிறது.

    இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் இன்று (பிப் 3) நடைபெற்றது. இதில் தென் கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர் திரு மகேந்திரன் அவர்கள் பங்கேற்று பேசியதாவது:

    கோவை ஈஷா யோக மையத்தில் 30 ஆவது ஆண்டாக மஹாசிவராத்திரி விழா மார்ச் 8 ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், மஹாசிவராத்திரி விழாவிற்கு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ரத யாத்திரை கோவையில் உள்ள ஆதியோகி முன்பு கடந்த ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது. 4 ஆதியோகி ரதங்களை உள்ளடக்கிய இந்த யாத்திரையை பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் தொடங்கி வைத்தார். அங்கிருந்து புறப்பட்ட ரதங்கள் தமிழ்நாடு மற்றும் புதுவையின் நான்கு திசைகளிலும் வலம் வந்து கொண்டிருக்கிறது.

    ஜனவரி 5 முதல் மார்ச் 8 ஆம் தேதி வரையிலான இரண்டு மாதங்களில், ஆயிரக்கணக்கான கிராமங்கள் மற்றும் நகரங்கள் வழியாக இந்த ரதங்கள் பயணிக்க உள்ளன. இந்த யாத்திரையை அந்தந்த ஊர்களிலுள்ள பெருமக்கள் வரவேற்று தொடங்கி வைக்கின்றனர். அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் ஆதியோகிக்கு பூ, பழம் மற்றும் ஆரத்தி உள்ளிட்டவற்றை அர்ப்பணித்து சிறப்பாக வரவேற்று வருகிறார்கள். கோவைக்கு நேரில் வந்து தரிசிக்க முடியாத மக்கள் அவர்கள் இருக்கும் இடத்தின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்து அருள் பெறுவதற்கு இந்த ரத யாத்திரை பயனுள்ளதாக உள்ளது.

    அந்த வகையில் தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களுக்கு ஆதியோகி ரதம் இந்த மாதம் வருகை தர உள்ளது. சென்னையை பொருத்த வரை வரும் பிப் 21ஆம் தேதி தொடங்கி மார்ச் 7 ஆம் தேதி வரையில் அம்பத்தூர், போரூர், கோடம்பாக்கம், அண்ணாநகர், புரசைவாக்கம், மயிலாப்பூர், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இந்த ரதம் பயணிக்க உள்ளது. மேலும் திருவள்ளூரில் பிப் 22 ஆம் தேதியும் மற்றும் செங்கல்பட்டில் வரும் மார்ச் 4 ஆகிய தேதியிலும் ஆதியோகி ரதங்கள் வலம் வர இருக்கின்றன. திட்டமிட்ட படி அனைத்து பகுதிகளையும் வலம் வந்த பின்னர் இறுதியாக மார்ச் 8 ஆம் தேதி, மஹாசிவராத்திரி நாளன்று கோவை ஈஷா யோக மையத்தை இந்த ரதங்கள் வந்தடைய உள்ளன.

    இதோடு, சிவ யாத்திரை எனும் பாதயாத்திரையையும் சிவாங்கா பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இருந்து சிவன் திருவுருவம் தாங்கிய 7 தேர்களை இழுத்தபடி மொத்தம் 7 குழுக்களாக, வருகின்றனர். பிப்ரவரி 16 அன்று தொடங்கப்படும் இந்த யாத்திரை மார்ச் 6 ஆம் தேதி கோவை ஈஷா யோக மையத்தில் முடிவடைய உள்ளது.

    மேலும் கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவாரத்திரி நடக்கும் அதே வேளையில், மற்ற ஊர் மக்களும் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் மொத்தம் 36 இடங்களில் மஹாசிவராத்திரி நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கும் பக்தர்கள் திரளாக பங்கேற்க இருக்கிறார்கள். அவர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி, கோவைக்கு வர விரும்பும் வெளி மாவட்ட மக்களுக்கு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது." இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது அவரோடு திரு. சீனிவாசன், வழக்கறிஞர் இந்து மற்றும் மருத்துவர் திரு. பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • வண்ணார்பேட்டையில் கவர்னர் வரும் போது கருப்பு கொடி போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.
    • கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 800 போலீசார் நெல்லை மாநகர பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நெல்லை மனோணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து இன்று காலை தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்தார்.

    அவர் அங்கிருந்து கார் மூலமாக நெல்லை மாநகர பகுதி வழியாக நெல்லை-தென்காசி 4 வழிச்சாலையில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக வளாகத்திற்கு வந்தார். அவரது வருகையை ஒட்டி மாநகரப் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்நிலையில் சமீபத்தில் மகாத்மா காந்தி குறித்து அவர் பேசியதை கண்டித்து நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் வண்ணார்பேட்டையில் கவர்னர் வரும் போது கருப்பு கொடி போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.

    இதனைத்தொடர்ந்து வண்ணார்பேட்டை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தை போலீசார் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். காங்கிரஸ் அலுவலகம் முன்பு இரும்பு தடுப்பு வேலிகள் கொண்டு அடைத்ததுடன் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்ட கண்காணிப்பு வாகனம் நிறுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி நடந்தது.

    இந்நிலையில், கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரசார் மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் கட்சி அலுவலகம் முன்பு கருப்பு சட்டை அணிந்து திரண்டனர். பின்பு அலுவலகம் முன்பு அமர்ந்து காந்தி பற்றி கவர்னர் பேசியதை கண்டித்து காந்தியின் புகழ் பாடும் ரகுபதி ராகவ ராஜாராம் என்ற பஜனை பாடலை பாடி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

    நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 800 போலீசார் நெல்லை மாநகர பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • நமது சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மிகுந்த மதிப்பிற்குரிய அரசியல்வாதியும், பாரத தேசத்தின் வளர்ச்சிக்கு அயராது உழைத்தவருமான அப்பழுக்கற்றவர்.
    • தேசம் முழுவதும் ரத யாத்திரைகள் நடத்தி பாரத ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டவர்.

    சென்னை:

    மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    அடிப்படையிலிருந்து உழைப்பால் உயர்ந்து தேசத்தின் ஏழாவது துணைப் பிரதமராகவும், மத்திய அமைச்சரவையின் முக்கியமான துறைகளை கையாண்ட நிர்வாக திறன் படைத்தவர். நமது சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மிகுந்த மதிப்பிற்குரிய அரசியல்வாதியும், பாரத தேசத்தின் வளர்ச்சிக்கு அயராது உழைத்தவருமான அப்பழுக்கற்றவர்.

    மேலும், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அய்யா அவர்கள், அத்வானி ஜி அவர்களின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றை சுயசரிதையாக வெளியிட்டுள்ளார்.

    தேசம் முழுவதும் ரத யாத்திரைகள் நடத்தி பாரத ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டவர்.

    தன்னுடைய வயதளவு இருக்கும் அனுபவங்களை வைத்து, தேசத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் பிரதமர்களை வழிநடத்திக் கொண்டிருக்கும், பெருமதிப்பிற்குரிய மூத்த அரசியல்வாதியான எல்.கே.அத்வானி ஜி அவர்களுக்கு, தேசத்தின் மிக உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என கூறியுள்ளார்.

    • பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் இன்று கடை பிடிக்கப்பட்டது.
    • தமிழகம் முழுவதும் அண்ணா சிலை மற்றும் உருவபடத்துக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    சென்னை:

    பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் இன்று கடை பிடிக்கப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அவரது சிலை மற்றும் உருவபடத்துக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அண்ணா நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10.15 மணி அளவில் அண்ணாவின் உருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    அவைதலைவர் தமிழ்மகன் உசேன், துணை பொதுச் செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, தங்கமணி, ஜெயக்குமார், பெஞ்சமின், கோகுல இந்திரா, ஆர்.பி.உதயகுமார், ரமணா, மா.பா.பாண்டியராஜன், மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, மாதவரம் மூர்த்தி, வி.என்.ரவி, ஆதிராஜாராம், கே.பிரபாகரன், தி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ், இலக்கிய அணி இணை செயலாளர் டி.சிவராஜ், துணைச் செயலாளர் இ.சி.சேகர்,கொள்கைபரப்பு துணை செயலாளர் கலைப்புனிதன், வக்கீல் சதாசிவம், வக்கீல் அ.பழனி, வடபழனி சத்திய நாராயண மூர்த்தி, இஸ்மாயில் கனி மற்றும் ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • சம்பவத்தன்று கமலேஷ் வீட்டை சுத்தப்படுத்துவதற்காக ஒரு வாளியில் சோப்பு தண்ணீர் வைத்திருந்தார்.
    • குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள கீழமேடு அங்காளம்மன் தெருவை சேர்ந்தவர் கமலேஷ்(வயது 23). இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 22 நாட்களுக்கு முன்பு கமலேசுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று கமலேஷ் வீட்டை சுத்தப்படுத்துவதற்காக ஒரு வாளியில் சோப்பு தண்ணீர் வைத்திருந்தார். அந்த தண்ணீரை எதிர்பாராதவிதமாக கமலேசின் 2 வயது குழந்தை தடிவிட்டான். இந்த தண்ணீர் 22 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையின் மீது கொட்டியது. இதில் அந்த குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

    உடனே குழந்தையை அருகில் உள்ள அஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது. இதுபற்றி மண்டையூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    மத்தூர் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், மண்டையூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்கு பதிவு செய்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் சுடுகாடும் அந்த பகுதியிலேயே அமைந்துள்ளது.
    • சாலையோரம் அலட்சியமாக குப்பைகளை கொட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

    சென்னை குன்றத்தூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் சாலையோரம் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. குறிப்பாக வண்டலூர்-மீஞ்சூர் புறவழிச்சாலையில் சர்வீஸ் சாலை அருகே அதிக அளவில் குப்பைகள் மலை போல் குவிந்து காணப்படுகிறது. இவ்வாறு குவிந்து கிடக்கும் குப்பைகள் காரணமாக கடும் துர்நாற்றம் வீசி காணப்படுவதோடு, அந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது.

    இதனால் அந்த வழியே சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள், துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லும் நிலையே உள்ளது. மேலும், சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை அங்கு சுற்றித் திரியும் மாடுகள், நாய்கள் போன்றவை கிளறி விடுவதால் சாலை முழுவதும் குப்பைகள் சிதறி அந்த பகுதியே அலங்கோலமாக காட்சியளிக்கிறது.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் குப்பை கொட்டும் இடத்தின் அருகிலேயே பிரபல தனியார் பள்ளி மற்றும் கல்லூரியும் அமைந்துள்ளது. இதனால் இந்த குப்பைகளால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

    அத்துடன் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் சுடுகாடும் அந்த பகுத்யிலேயே அமைந்துள்ளது. இதுபோன்று மலை போல் குப்பைகள் குவிந்து தொடர்ந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் அந்த பகுதியில் கொடிய தொற்று நோய்கள் பரவும் அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, சாலையோரம் அலட்சியமாக குப்பைகளை கொட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், அங்கு மலைபோல் தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×