என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழ்நாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை ஆளுநர் ரவி தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
- பிப்ரவரி 19-ந் தேதி தமிழ்நாடு பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
சென்னை:
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் பிப்ரவரி 12-ந்தேதி தொடங்கும் நிலையில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று திடீரென டெல்லி சென்றுள்ளார்.
தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க. அரசுடன் கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறார். தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிறுத்தி வைப்பது, திருப்பி அனுப்புவது உள்ளிட்டவைகளால் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
அதன் பிறகு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின் பேரில் கவர்னரும் முதலமைச்சரும் நேரடியாக அமர்ந்து பேசினார்கள். ஆனாலும் இதன் விவரம் வெளியிடப்படவில்லை.
அதே நேரத்தில் தமிழ்நாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை ஆளுநர் ரவி தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
தற்போது தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 12-ந் தேதி தொடங்க உள்ளது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த உள்ளார்.
கடந்த ஆண்டு கவர்னர் உரையில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, காமராஜர், திராவிட மாடல் ஆகியவற்றை தவிர்த்துவிட்டு கவர்னர் ரவி உரையாற்றினார். அத்துடன் அவராகவே சிலவற்றையும் கவர்னர் உரையில் சேர்த்து வாசித்தார். இதனால் தமிழ்நாடு சட்டசபையில் அரசின் உரை மட்டுமே இடம் பெறும். கவர்னர் தன்னிச்சையாக வாசித்த உரை இடம்பெறாது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீர்மானத்தை வாசித்தார். உடனே சட்ட சபையில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தது பெரும் சர்ச்சையானது.
அண்மையில் கேரளா சட்டசபையில் கவர்னர் முகமது ஆரிப் கான், மாநில அரசின் உரையை முழுமையாக வாசிக்காமல் 1.15 நிமிடம் மட்டுமே வாசித்து விட்டு வெளியேறியதும் பெரும் சர்ச்சையானது. இப்பின்னணியில் தமிழ்நாடு சட்டசபை வரும் 12-ந் தேதி கூடுகிறது. பிப்ரவரி 19-ந் தேதி தமிழ்நாடு பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
நடப்பாண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரை இடம்பெற உள்ளது. இம்முறை கவர்னர் ரவி என்ன மாதிரியான நிலைப்பாடு எடுக்கப் போகிறார்? என்பது எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இச்சூழலில் இன்று திடீரென கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றுள்ளார். டெல்லிக்கு 3 நாட்கள் பயணமாக செல்லும் கவர்னர் ரவி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார். இச்சந்திப்பின்போது தமிழ்நாடு நிலவரம் குறித்து கவர்னர் ரவி ஆலோசனை நடத்துவார் என கூறப்படுகிறது.
- தமிழகத்தை ஒப்பிட பா.ஜ.க. ஆளும் எந்த மாநிலத்திற்கும் தகுதி இல்லை என்று கூறினார்.
- இந்தியா கூட்டணியில் அனைவரும் ஊழல்வாதிகள்.
வேலூர்:
கன்னியாகுமாரி மாவட்டத்தில் சாலை பணிகளை தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்.
அப்போது பீகாரை விட தமிழகத்தின் ராமேஸ்வரம் உட்பட பல மாவட்ட மக்கள் பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தார்.
அண்ணாமலைக்கு தைரியம் உள்ளதா?. அவருக்கு தைரியம் இருந்தால் மனிதவள மேம்பாட்டு குறியீட்டு அறிக்கையை வைத்து, தமிழகத்தின் ஒரு குக் கிரமாமோ அல்லது மலை வாழ் பகுதி கூட உதாரணமாக வைத்து என்னோடு பொது மேடையில் விவாதிக்கட்டும். அதற்கு அண்ணாமலைக்கு தைரியம் உள்ளதா?, யோக்கியம் உள்ளதா?. நான் தயாராக உள்ளேன்.
மேலும் மனிதவள மேம்பாட்டு குறியீட்டில் தமிழகத்தை ஒப்பிட பா.ஜ.க. ஆளும் எந்த மாநிலத்திற்கும் தகுதி இல்லை என்று கூறினார்.
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை, யோக்கியம் இருக்கிறதா? என்று ஒருமையில் மனோ தங்கராஜ் பேசிய விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கே.வி.குப்பம் பகுதியில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தலுக்கு நேரமும் காலமும் உள்ளது.
அமைச்சர் மனோ தங்கராஜ் விவாதிக்க வருகிறார் என்றால், நான் எங்களின் பா.ஜ.க. செய்தி தொடர்பாளரை அனுப்பி வைக்கிறேன். விவாதிப்பதற்கான இடத்தையும் ,நேரத்தையும் மனோ தங்கராஜ் முடிவு செய்யட்டும். மனோ தங்கராஜ் வருவதாக இருந்தால் எங்களின் செய்தி தொடர்பாளர்தான் வருவார். எங்கள் கட்சியின் செய்தி தொடர்பாளர் எப்போது வேண்டுமானாலும் பேசுவார்.
அவர்களின் தலைவர் மு.க.ஸ்டாலின் வருவதாக இருந்தால் பாஜக தலைவரான நான் வருகிறேன். அதற்கு நான் தயாராக உள்ளேன்.
இதுவரை எந்த தலைவரும் வெளிநாட்டிற்கு 10 நாள் சுற்றுலா போய் பார்த்ததில்லை. ஸ்டாலின் 10 நாட்கள் ஸ்பெயின் சென்றிருந்தார். நம்மை முட்டாள்கள் என தி.மு.க. நினைத்துக் கொண்டிருக்கிறது.
தற்போது உருவாகியுள்ள இந்தியா கூட்டணியில் அனைவரும் ஊழல்வாதிகள்.

இதில் முக்கிய ஊழல்வாதிகள் உள்ள இந்த கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக வெளியே வருகின்றனர். சிலர் கைதாகிறார்கள்.
இதற்கு தமிழகத்தில் அமர்ந்து கொண்டு ஸ்டாலின் ஏன் பதறுகிறார் என்று தெரியவில்லை.
தி.மு.க.வின் டெல்லி ஆசை நிராசையாக தான் இருக்கும். 2024-ம் ஆண்டு தேர்தல் முடிவுகளை பாருங்கள். இந்த முறை மக்கள் முடிவு செய்து விட்டார்கள் தனி பெரும்பான்மையுடன் பாரதிய ஜனதா கட்சியை 400 எம்.பி.க்களுக்கு தாண்டி அமர வைப்பார்கள்.
இத்தனை நாட்களாக தி.மு.க., எம்.பி. க்கள் டெல்லியில் இருந்தார்கள். அவர்கள் வெள்ளை அறிக்கை கொடுக்கட்டும் பாராளுமன்றத்தில் எத்தனை கேள்வி கேட்டார்கள்?, அவர்கள் தமிழக பிரச்சினை குறித்து என்ன பேசினார்கள்?, அவர்கள் மூலம் தமிழகத்திற்கு என்ன ஆதாயம் கிடைத்தது? என்ற வெள்ளை அறிக்கையை தி.மு.க. கொடுக்கட்டும்.
விரைவில் ஊழல் பட்டியல்களை வெளியிடுவோம். அண்ணாமலை லிமிட்டை தாண்டிவிட்டார் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.
நான் லிமிடுக்குள்ளே தான் உள்ளேன். ரோட்டில் கோடு போட்டு உள்ளார்களா?. இந்த கோட்டை தாண்டி நீ வரக்கூடாது, நானும் வரமாட்டேன் என்று கேட்பதற்கு.
பங்காளி கட்சிகள்தான் லிமிட்டை கிராஸ் செய்கிறார்கள். 2 பங்காளிகளும் சமரசமாக வண்டியை ஓட்டிக்கொண்டு இருந்தார்கள். இந்த 5 ஆண்டுகளுக்கு நாங்கள், அடுத்த 5 ஆண்டு உனக்கு என்று. இப்போது பங்காளி கட்சிகளுக்கு கோபம். உண்மையை பேசினால் லிமிட்டை கிராஸ் செய்கிறார் என்பதா?
2011-ம் ஆண்டு தி.மு.க கொடுத்த 511 வாக்குறுதிகளில், இதுவரை 20 வாக்குறுதிகள் கூட நிறைவேற்ற வில்லை இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவார்களா?

இந்த முறை தி.மு.க. அரசு தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்கு முன்பு கடந்த 2011-ம் ஆண்டு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடட்டும். கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்
பா.ஜ.க. கட்சி எங்களுக்கு பொருட்டு இல்லை என உதயநிதி ஸ்டாலின் கூறினார். அவர் சொல்லட்டும் நல்லது தானே. அவர்கள் கனவு உலகத்தில் வாழட்டும். இளைஞரணி மாநாட்டில் காவலா காவலா என்ற பாட்டை போட்டு நடனம் ஆடட்டும். நாங்கள் மக்களோடு நின்று கொண்டிருக்கிறோம். 2024 பாராளுமன்ற தேர்தலில் தெரியும் காவலா காவலா ஜெயிக்கிறதா?, இல்லை என் மண் என் மக்கள் ஜெயிக்கிறதா என்று பார்க்கலாம்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், கதவு திறந்திருக்கிறது, ஜன்னல் திறந்திருக்கிறது யாரையும் வர வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. விருப்பம் இருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.
11-ந் தேதி தமிழகத்திற்கு ஜே.பி நட்டா வருகிறார். சத்தியமூர்த்தி பவனில் தற்போது யார் சட்டை, வேட்டியை கிழிப்பது? என்று போட்டி நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள கட்சி பாரதிய ஜனதாவின் 'பி' டீம் என்று கூறப்படுகிறது. இருக்கட்டும், நாங்கள் மக்களோட 'ஏ' டீம், இந்திய மக்களுடைய 'ஏ' டீம், பாரதிய ஜனதா கட்சி தமிழக மக்களுடைய 'ஏ டீம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவருக்கு சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டது.
- தற்போது 2-வது முறையாக அப்பதவியை வகித்து வந்தார்.
தென்மேற்கு ஆப்பிரிக்க நாடான நமீபியாவின் அதிபர் ஹேஜ் கீங்கோப் இன்று அதிகாலை மரணம் அடைந் தார். அவருக்கு வயது 82. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவருக்கு சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தலைநகர் வின்ட்ஹோக்கில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அதிபர் ஹேஜ் கீங்கோப், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக துணை அதிபர் நங்கோலோ தெரிவித்தார். ஹேஜ் கீங்கோப் 2015-ம் ஆண்டு முதல் முறையாக அதிபர் ஆனார். தற்போது 2-வது முறையாக அப்பதவியை வகித்து வந்தார்.
- யாத்திரைக்கு மக்களிடத்தில் குறிப்பாக பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
- தமிழகம் மட்டுமல்ல... இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் இந்த யாத்திரையின் நிறைவு பொதுக்கூட்டம் இருக்கும்,
திருப்பூர்:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண்,என் மக்கள்' பாத யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வருகிற 25-ந்தேதி நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேச உள்ளார். இது குறித்து பா.ஜ.க., மாநில பொது செயலாளர் முருகானந்தம் திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவின் 2-வது இரும்பு மனிதராக உள்ள அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. மாநில பா.ஜ.க., தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரை இதுவரை 180 தொகுதிகளில் முடிந்துள்ளது. மீதமுள்ள 54 தொகுதிகளையும், பல்லடத்தில் நடக்கும் நிறைவு விழாவுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். யாத்திரைக்கு மக்களிடத்தில் குறிப்பாக பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நிறைவு விழா பிரமாண்டமாக வருகிற 25-ந்தேதி பல்லடத்தில் நடக்கிறது. கட்சியினர் 10 லட்சம் பேர், பொதுமக்கள் 3 லட்சம் பேர் என 13 லட்சம் பேர் கலந்துகொள்ள இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த பொதுக்கூட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். 400 ஏக்கர் பரப்பளவில் கூட்டம் நடைபெற உள்ளது. வாகனங்களை நிறுத்த 600 ஏக்கர் மற்றும் மக்கள் வந்து செல்வதற்காக 300 ஏக்கர் என ஆயிரத்து 300 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டு வேலைகள் நடந்து வருகிறது. தமிழகம் மட்டுமல்ல... இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் இந்த யாத்திரையின் நிறைவு பொதுக்கூட்டம் இருக்கும் என நினைக்கிறோம். 25-ந்தேதி பிற்பகலுக்கு மேல் நடைபெறும் பொது க்கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க.தேசிய தலைவர்கள் பங்கேற்று பேச உள்ளனர்.
பொதுக்கூட்டத்துக்கு முன்னதாக திருப்பூரில் வருகிற 24-ந் தேதி யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளோம். திருப்பூர் மாநகராட்சியில் இருந்து தொடங்கி, புதிய பேருந்து நிலையம் வரை யாத்திரை நடைபெறும். பிரதமர் மோடியை பொறுத்தவரை நெருக்கமான மாநிலம், மிகவும் பிடித்த மாநிலம் தமிழகம். நேரடியாக ஆளும்கட்சியை கேள்வி கேட்கும் முதன்மை கட்சியாக பா.ஜ.க., உள்ளது. புள்ளி விபரத்துடன் அண்ணாமலை குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்.
தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் சொல்லி இருப்பதில், 100 சதவீதம் பொய் தான். குளறுபடிகளின் ஒட்டுமொத்த அம்சமாக தி.மு.க., உள்ளது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. சேவை செய்யக்கூடிய நபர்கள் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம். விஜய் அரசியல் வருகை வரவேற்கத்தக்கது. எங்களின் சித்தாந்தாம் வேறு. இது ஒரு இயக்கம். இங்கு யாரும் நிரந்தர தலைவர் கிடையாது. லட்சியமே பிரதானம். அரசியல் நகர்வு அண்ணாமலையை நோக்கி தான் செல்கின்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஏராளமான மீனவர்கள் தங்கள் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.
- உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் வந்து மீன்களை வாங்கி செல்வது வழக்கம்.
கடலூர்:
கடலூர் தேவனாம் பட்டினம், தாழங்குடா, அக்கரைகோரி உள்ளிட்ட பல்வேறு மீனவர் கிரா மங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான மீனவர்கள் தங்கள் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.
இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கி பரபரப்பாக காணப்பட்டு வரும். இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர் வியா பாரிகள் வந்து மீன்களை வாங்கி செல்வது வழக்கம். குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதி காணப்படும்.
அதன்படி ஞாயிற்றுக் கிழமையான இன்று அதிகாலை முதலே துறைமுகத்தில் மீன் விற்பனை தொடங்கியது. வழக்கமாக 250 ரூபாய்க்கு விற்கப்படும் சங்கரா மீன் இன்று 450 ரூபாய்க்கும், சீலா மீன் 400 ரூபாய்க்கும், பாறை மீன் 450 ரூபாய் முதல் 500 ரூபாய் வரைக்கும், வஞ்சிரம் மீன் 800 ரூபாய்க்கும், 100 ரூபாய்க்கு விற்கப்படும் கானாங்கத்தை கிலோ 200 ரூபாய்க்கும், 150 முதல் 200 ரூபாய் வரை விற்கப்படும் நெத்திலி மீன் 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. மீன் விலை அதிகரித்து காணப்பட்டாலும் விலை யை பொருட்படுத்தாமல் வியாபாரிகளும், பொது மக்களும் தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி சென்றனர்.
- கோவையில் இன்று பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பா.ஜ.க. மூத்த நிர்வாகிகள் கூடி ஆலோசனை மேற்கொள்கிறார்கள்.
- கூட்டத்தில் முக்கிய முடிவுகள் பல எடுக்கப்பட உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை:
பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அதனை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தம் வருகின்றன.
தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் தேர்தலை சந்திக்க பல்வேறு வியூகங்கள் அமைத்து களத்தில் இறங்கி உள்ளனர். தேர்தல் அறிக்கை தயாரிப்பது, கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை என பல்வேறு பணிகளில் அவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
இந்தநிலையில் கோவையில் இன்று பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பா.ஜ.க. மூத்த நிர்வாகிகள் கூடி ஆலோசனை மேற்கொள்கிறார்கள். கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் இன்று மாலை 3 மணிக்கு இந்த கூட்டம் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் பா.ஜ.க.வின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் பங்கேற்கிறார். தேசிய தலைவர் நட்டாவுக்கு அடுத்து பெரிய பொறுப்பில் உள்ள இவர் இன்று கோவை வருகை தந்து தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
கூட்டத்தில் மத்திய மந்திரி எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா, தேசிய மகளிர் அணி தலைவியும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். மேலும் 39 தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அவர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் பல எடுக்கப்பட உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகிய நிலையில் வேறு எந்த கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது, தமிழகத்தில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எத்தனை, வேட்பாளர்களை எப்படி தேர்வு செய்வது, தேர்தல் அறிக்கையை எவ்வாறு அமைப்பது? என்பது போன்ற விவரங்கள் ஆலோசிக்கப்பட்டு இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.
ஒவ்வொரு தொகுதியிலும் பா.ஜ.க.வின் பலம் என்ன, குறிப்பிட்ட சில தொகுதிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி பா.ஜ.க.வின் வாக்கு எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வழிகள் பற்றியெல்லாம் இந்த கூட்டத்தில் பி.எல். சந்தோஷ் ஆலோசிக்கிறார். வெற்றி வாய்ப்பு குறித்து தமிழக பா.ஜ.க.வினருக்கு அவர் பல ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்.
தேர்தல் பிரசாரத்துக்கு பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் வர உள்ளனர். அவர்கள் எந்தெந்த தேதிகளில் பிரசாரத்தை வைத்துக் கொள்வது என்பது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் கணிசமான தொகுதிகளில் வெற்றியை பெற்று விடுவது என்ற முனைப்பில் ஆலோசிக்கப்பட உள்ளதால் கோவையில் இன்று நடைபெறும் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- கூட்டணி நிலைபாடு குறித்து வருகிற 12-ந் தேதி செயற்குழு-பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளி நாடு பயணம் குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
குன்னத்தூர்:
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் இன்று த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம் மற்றும் குட்டைகளை 2-வது திட்டத்தில் இணைக்க வேண்டும். மத்திய அளவில் பெரும்பான்மையாகவும் பல்வேறு மாநிலங்களில் ஆளுங்கட்சியாகவும் உள்ள பாரதிய ஜனதா கட்சி, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்காக மற்ற கட்சிகளை அழைக்க வேண்டிய அவசியம் இல்லை.
தி.மு.க. அரசு மத்திய அரசை கண்டித்து பாராளுமன்றத்தில் நடத்தும் போராட்டம் தேர்தலுக்கான நாடகத்தை தொடங்கியதாகவே அர்த்தம். 2021 சட்டமன்றத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி யில் இருந்த கட்சிகளுடன் நட்புறவில் இருக்கிறோம்.
மாநிலங்களவை உறுப்பினர் என்ற முறையில் எதிர்க்கட்சி தலைவரை சந்தித்து நாட்டின் சூழல் குறித்து ஆலோசனை நடத்தினேன். தேர்தல் கூட்டணி நிலைபாடு குறித்து வருகிற 12-ந் தேதி செயற்குழு-பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
இந்தியா கூட்டணி தொடக்கத்திலேயே முரண்பாடுடன் தொடங்கப்பட்டது. அதன் உண்மை முகத்தை மக்கள் அறிவார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளி நாடு பயணம் குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- சாலையோர வியாபாரிகளை நிரந்தரமாக அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- மறியல் போராட்டத்தின் காரணமாக பல்லடம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் தென்னம் பாளையத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் தென்னம் பாளையம் பகுதியில் சாலையோரம் வியாபாரிகள் பலர் கடைகள் அமைத்து காய்கறிகள் விற்பனை செய்வதால் விவசாயிகளுக்கு விற்பனை பாதிக்கப்பட்டு வருவதாகவும் , இதனால் சந்தை பகுதிகளில் வியாபாரிகள் ரோட்டோரம் காய்கறி கடைகளை அமைக்க கூடாது என விவசாயிகள் அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.
மேலும் கடந்த ஒரு வார காலமாக விவசாயிகள் உழவர் சந்தைக்கு செல்லாமல் சாலையோர வியாபாரிகளுக்கு போட்டியாக திருப்பூர் பல்லடம் சாலையிலேயே கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று முன்தினம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது .
பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் இன்று காலை திருப்பூர் பல்லடம் சாலை தென்னம் பாளையத்தில் சாலையோர வியாபாரிகளை நிரந்தரமாக அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் காய்கறிகளை சாலையில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தின் காரணமாக பல்லடம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் சாலையோர வியாபாரிகளை அப்புறப்படுத்தக் கூடாது எனவும் மாநகராட்சி நிர்வாகம் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல்லடம் சாலை டி.கே.டி பேருந்து நிறுத்தம் அருகே சாலையோர வியாபாரிகளும் போட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.
- பாராளுமன்ற தேர்தலுக்காக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் திமுக ஈடுபட்டு வருகிறது.
- திமுக உடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
சென்னை :
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக உடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்காக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் திமுக ஈடுபட்டு வருகிறது.

இதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் மத்திய அரசு சார்ந்த நிறுவனங்களில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளது? பாராளுமன்றத்தில் வலியுறுத்த வேண்டிய பிரச்சனைகள் என்னென்ன? மக்களின் கோரிக்கைகள் என்னென்ன? என்பதை அறிந்து அதற்கேற்ப தேர்தல் அறிக்கையை தயாரிக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.
பொதுமக்கள், வணிகர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரையும் சந்தித்து கருத்து கேட்க திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் பிப்ரவரி 23ஆம் தேதி வரை திமுக தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
கனிமொழி எம்.பி. தலைமையிலான 11 பேர் கொண்ட குழு நாளை தூத்துக்குடியில் பொதுமக்களை சந்தித்து கருத்து கேட்கின்றனர்.
- சினிமா துறையில் இருந்து வந்த பாக்கியராஜ் கட்சி ஆரம்பித்தார்.
- சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும்.
மதுரை:
மதுரை விளாங்குடியில் முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
சினிமா துறையில் இருந்து வந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஒருவர் தான் கட்சி ஆரம்பித்து அரசியலில் சாதித்தவர்.
31 ஆண்டு காலம் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி செய்து, வரலாறு படைத்தது. சினிமா துறையில் இருந்து வந்த சிவாஜி கணேசன் கட்சி ஆரம்பித்தார். அவர் சினிமாவில் அழுதால் மக்கள் அழுவார்கள். அவர் சிரித்தால் மக்கள் சிரிப்பார்கள். நடிப்பால் அவர் புகழ் பெற்றவர். ஆனால் கட்சி தொடங்கி அவரால் வெற்றி பெற முடியவில்லை.
அதேபோல் சினிமா துறையில் இருந்து வந்த பாக்கியராஜ் கட்சி ஆரம்பித்தார். அடுக்குமொழியில் பேசும் டி.ராஜேந்தர் கட்சி ஆரம்பித்தார். போணியாகவில்லை. ரஜினி கட்சி அறிவித்தார். ஆனால் வாபஸ் வாங்கிவிட்டார்.
ஊழலை ஒழிப்பேன், நீதி கேட்பேன் என கமல்ஹாசன் கட்சி தொடங்கினார். ஒரு தொகுதிக்காக தனது வாயை இப்போது வாடகைக்கு விட்டுவிட்டார்.
தற்போது விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார். அவர் இளைஞர். நல்ல மனம் படைத்தவர். ஒரு லட்சியத்தோடு வருவதாக சொல்கிறார்.
ஆனாலும் வருகின்ற 2026-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் மட்டுமல்லாமல், எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் ஆவார்.
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும். இதற்கு, வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் ஒரு முன்னோட்டமாக அமையும். கூட்டணி பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எங்களது கையே எங்களுக்கு பலம். தொண்டர்களின் பலம் எங்களுக்கு இருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கனமழையால் உள்ளூரில் விளைச்சல் பாதிக்கப்பட்டு, விளைபயிர்கள் நாசமானது.
- அரிசியை பொறுத்தவரை 26 கிலோ கொண்ட ஒரு சிப்பம் சாப்பாடு அரிசி விலை ரூ.1,400-ல் இருந்து ரூ.1,600 ஆக விலை அதிகரித்துள்ளது.
சென்னை:
மளிகை பொருட்கள் மீதான விலையேற்றம் ஏற்படும் போதெல்லாம் குடும்பத்தினரின் 'பட்ஜெட்'டில் துண்டு விழும். அப்போது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியே மேலோங்கும். இதனால் சமையலில் பயன்படுத்தும் பொருட்களின் அளவும் குறைய தொடங்கும். அப்படி ஒரு நிலைதான் தற்போது ஏற்பட்டு இருக்கிறது. அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை அதிகரித்திருக்கிறது.
தமிழகத்தில் விளைச்சல் இருந்தாலும் ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா போன்ற அண்டை மற்றும் வெளிமாநிலங்களின் வரத்துதான் இங்கு மளிகை பொருட்களின் விலையை தீர்மானிப்பதில் முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கிடையில் கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கனமழையால் உள்ளூரில் விளைச்சல் பாதிக்கப்பட்டு, விளைபயிர்கள் நாசமானது. இதனால் அண்டை மாநிலங்களின் வரத்தை தான் நம்பியிருக்க வேண்டியுள்ளது.
அதேவேளை அண்டை மாநிலங்களில் விளைச்சல் குறைந்திருப்பதின் எதிரொலியாக தமிழகத்துக்கு வரும் மளிகை பொருட்களின் வரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பருப்பு வகைகள் விலை ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்ந்திருக்கிறது.
அரிசியை பொறுத்தவரை 26 கிலோ கொண்ட ஒரு சிப்பம் சாப்பாடு அரிசி விலை ரூ.1,400-ல் இருந்து ரூ.1,600 ஆக விலை அதிகரித்துள்ளது. பச்சரிசியும் ரூ.1,400-ல் இருந்து ரூ.1,600 ஆக அதிகரிக்கிறது. பாசுமதி அரிசி (30 கிலோ கொண்ட சிப்பம்) ரூ.3,200-ல் இருந்து ரூ.3,500 ஆக உயர்ந்துள்ளது. அந்தவகையில் ஒரு கிலோ சாப்பாடு அரிசியின் விலை ரூ.8 வரை உயர்ந்துள்ளது என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, வண்டி-ஆட்கள் கூலி போன்ற காரணங்களால் வெளிசந்தையில் மளிகை பொருட்களின் விலை 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.
- எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
ராமேஸ்வரம்:
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட 23 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றது இலங்கைக் கடற்படை.
இதனால் கவலை அடைந்துள்ள தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, கடலில் அச்சமின்றி மீன் பிடிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






