என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வைகை அணையின் நீர்மட்டம் 69.16 அடியாக உள்ளது.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.75 அடியாக உள்ளது.
கூடலூர்:
தொடர் மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இதனால் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி 134.20 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 296 கன அடி நீர் மட்டுமே வருகிறது. இருந்தபோதும் தமிழக பகுதிக்கு 1500 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து 1321 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1769 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 69.16 அடியாக உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.75 அடியாக உள்ளது. வருகிற 75 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. 29.29 கன அடி நீர் வருகிறது. 25 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டில் இருந்து திரும்பி வர வேண்டி உள்ளது.
- நல்ல உடன்பாடு பொருத்தமான நேரத்தில் நடைபெறும்.
சென்னை:
தி.மு.க.வுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க.வுடன் நடத்திய கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. இரு தரப்பினரும் மனம் திறந்து எங்களது கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம்.
ஒவ்வொரு கட்சிக்கு கூடுதலான இடங்களில் போட்டியிடுவதற்கு விருப்பம் இருக்கும். நாங்களும் கடந்த தேர்தலை விட கூடுதலான இடங்களில் போட்டியிட வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்தோம்.
இரு தரப்புக்கும் சுமூகமான நல்ல உடன்பாடு ஏற்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கேள்வி: எந்தெந்த தொகுதிகள் என்று விருப்ப பட்டியல் ஏதும் கொடுத்திருக்கிறீர்களா?
பதில்: அதெல்லாம் பொருத்தமான நேரத்தில் கொடுப்போம்.
கே: உங்கள் வசம் உள்ள கோவை தொகுதியை கூட்டணி கட்சிகள் கேட்பதாக சொல்கிறார்களே?
ப: அதை யாரும் கேட்பார்கள். எங்களுக்கும் தி.மு.க.வுக்கும் என்ன உடன்பாடு என்பதுதானே பிரச்சனை. அதனால் அதைப் பற்றி எங்களுக்கு பிரச்சனை இல்லை. யாருக்கு எந்த தொகுதி என ஒவ்வொரு கட்சியிலும் பதிலை கேட்பார்கள். எங்களை பொருத்தவரையில் நாங்கள் எங்கள் கருத்துக்களை தி.மு.க. தலைமையிடம் சொல்லி உள்ளோம். பேச்சுவார்த்தை முடிந்த பிறகு முடிவுகளை தெரிவிப்போம்.
கே: தொகுதி உடன்பாடு ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகும்?
ப: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டில் இருந்து திரும்பி வர வேண்டி உள்ளது. வந்த பிறகுதான் அதற்கான உடன்பாடு ஏற்படும். நல்ல உடன்பாடு பொருத்தமான நேரத்தில் நடைபெறும்.
கே: தி.மு.க.விடம் கூடுதல் இடங்களை கேட்டிருக்கிறீர்கள். அவர்களுக்கு தர மனம் உள்ளதா?
ப: அதெல்லாம் பேச்சுவார்த்தையில் பொருத்தமான முறையில் நாங்கள் முடிவெடுப்போம்.
கே: அடுத்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு இருக்கிறதா?
ப: வாய்ப்பு ஏற்பட்டால் அது ரொம்ப நல்லது.
கே: நீங்கள் கூடுதல் தொகுதியை கேட்பதாக கூறுகிறீர்கள்? கடந்த முறை மாதிரி இந்த முறையும் அதே இரண்டு தொகுதி ஒதுக்கப்பட்டால் உங்கள் நிலைப்பாடு என்ன?
ப: அது சம்பந்தமாக நாங்கள் அரசியலாக என்ன தேவையோ அதற்கேற்ப முடிவெடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் தேர்தல் வேலைகளை முடுக்கி விடுவதற்காகவும், அறிவுரைகள் வழங்குவதற்காகவும் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
- அ.தி.மு.க., தி.மு.க. தலைமையில் இல்லாத கட்சிகள் தமிழகத்தில் ஜெயிக்க முடியாது என்பது ஏற்கனவே பொய்யாகி இருக்கிறது.
கோவை:
கோவையில் இன்று நடைபெறும் பா.ஜ.க. ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பா.ஜ.க. தேசிய அமைப்பு செயலாளர் சந்தோஷ் மற்றும் மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோர் விமானம் மூலம் கோவை வந்தனர்.
விமான நிலையத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவையில் இன்று 2-வது முறையாக பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் தேர்தல் வேலைகளை முடுக்கி விடுவதற்காகவும், அறிவுரைகள் வழங்குவதற்காகவும் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
கூட்டணி குறித்து, வேட்பாளர்கள் குறித்து தேசிய தலைவர்கள் அறிவிப்பார்கள். மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிட்டால் அதற்கான பணியை செய்யவும் தயாராக உள்ளோம்.
விஜய் புதிய கட்சி தொடங்கினாலும், பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை அவர்கள் பார்வையாளர்களாக இருப்பர் என அவரே சொல்லிவிட்டார். பாராளுமன்ற தேர்தலில் அவருடைய பங்கு குறைவாக தான் இருக்கும்.
கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க. தலை மையில் 19 சதவீத வாக்குகள் மற்றும் தர்மபுரி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் வெற்றி என பார்த்தோம். அ.தி.மு.க., தி.மு.க. தலைமையில் இல்லாத கட்சிகள் தமிழ கத்தில் ஜெயிக்க முடியாது என்பது ஏற்கனவே பொய்யாகி இருக்கிறது.
நாட்டை பாதுகாக்கும் முக்கிய அமைப்பு என்.ஐ.ஏ. நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக செயல்படுவோருக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
அவர்களின் வேலை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
- 5-ந்தேதி வேலூர் மண்டலம், 6-ந்தேதி விழுப்புரம் மண்டலத்தில் மக்களை சந்திக்கிறோம்.
- மக்கள் தங்கள் பரிந்துரை, கருத்துகளை இ-மெயில் மூலமாகவோ, கொரியர் மூலமாகவோ அனுப்பலாம்.
சென்னை:
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* நாளை முதல் சுற்றுப்பயணம் செய்து மக்களிடம் கருத்து கேட்க உள்ளோம்.
* மண்டலம் வாரியாக மக்களை சந்தித்து கருத்து கேட்கிறோம்.
* 5-ந்தேதி வேலூர் மண்டலம், 6-ந்தேதி விழுப்புரம் மண்டலத்தில் மக்களை சந்திக்கிறோம்.
* மக்கள் தங்கள் பரிந்துரை, கருத்துகளை இ-மெயில் மூலமாகவோ, கொரியர் மூலமாகவோ அனுப்பலாம்.
* 10 பேர் கொண்ட குழுவும், நேரடியாக சென்று மக்களை சந்தித்து கருத்து கேட்க உள்ளோம்.
* நாளை சென்னை, வேலூர் மண்டலங்களில் கருத்து கேட்க உள்ளோம் என்று தெரிவித்தார்.
- கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க.வுடன் இன்று முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
தி.முக. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க.வுடன் இன்று முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
தொகுதி பங்கீட்டு குழுவினர் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அதைத்தொடர்ந்து ம.தி.மு.க.வினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுடன் வரும் 12-ந்தேதி தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது குறித்த தி.மு.க. தலைவர் முடிவு செய்வார் என்றும் அவர் தெரிவித்தார்.
- மூலப்பட்டறை அருகே மாரியம்மன் என்ற கோவில் உள்ளது.
- அம்மனின் கண்கள் மூடி திறந்தது.
ஈரோடு:
ஈரோடு மூலப்பட்டறை அருகே உள்ள காந்திபுரம் மில் வீதி பகுதியில் ரோட்டில் எல்லை மாரியம்மன் என்ற கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுமிகள் என ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். மேலும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தினமும் அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்தும் வழிபட்டு வருகிறார்கள்.
சாலையோரம் கோவில் அமைந்துள்ளதால் எல்லை தெய்வமாக நினைத்து மக்கள் காலை, மாலை என இரு வேளைகளிலும் தரிசனம் செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில் நேற்று மாலை வழக்கம் போல் பெண்கள் மற்றும் சிறுமிகள் அந்த கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது அந்த அம்மனின் கண்கள் மூடி திறந்தது.
இதைக்கண்டு அந்த சிறுமி பக்தியில் உறைந்தார். இதை பற்றி அந்த சிறுமி அக்கம் பக்கம் இருந்தவர்களிடம் கூறினார். இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் வந்து பார்த்து பக்தி பரவசம் அடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் அம்மா, தாயே, மாரியம்மா என பக்தி கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர். இது பற்றி தகவல் ஊர் முழுவதும் பரவியது. இதையடுத்து இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் மற்றும் சிறுமிகள் என கூட்டம், கூட்டமாக 100-க்கும் மேற்பட்டவர்கள் குவிய தொடங்கினர்.
நேரம், செல்ல, செல்ல மக்களின் கூட்டம் கோவி லில் அதிகளவில் குவிந்த னர். நள்ளிரவு 12 மணி வரை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வந்து பக்தி கோஷம் முழங்க அம்மனை வழிபட்டு சென்றனர்.
- நேற்று மாலை நீண்ட நேரம் பப்ஜி கேம் விளையாடியதை அவரது தாய் கண்டித்ததாக கூறப்படுகிறது
- தற்கொலை சம்பவம் தொடர்பாக வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை கோடம்பாக்கத்தில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர், தினமும் நண்பர்களுடன் சேர்ந்து பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளார்.
நேற்று மாலை நீண்ட நேரம் பப்ஜி கேம் விளையாடியதை அவரது தாய் கண்டித்ததாக கூறப்படுகிறது. மனமுடைந்த மாணவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பப்ஜி கேம் விளையாடிய கல்லூரி மாணவரை தாய் கண்டித்ததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
- அலகு குத்தியும், கிரி வீதிகளில் நடனமாடியும் வந்தனர்.
பழனி:
தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். முக்கிய விழாவான தைப்பூச திருவிழா கடந்த 25-ந் தேதி நடைபெற்றது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பறவைக்காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்தும் அலகு குத்தியும், கிரி வீதிகளில் நடனமாடியும் வந்தனர்.
தற்போது தைப்பூச திருவிழா முடிந்தபின்னரும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில் இருந்து குறவர் இன மக்கள் சீர்வரிசை பொருட்களுடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் பாரம்பரிய நடனமாடி பல்வேறு வேடம் அணிந்து வந்தனர். இன்றும் விடுமுறை தினம் என்பதால் கிரி வீதி, அடிவாரம், யானைப்பாதை, படிப்பாதை, ரோப்கார் நிலையம், மின் இழுவை நிலையம் ஆகியவற்றில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மலைக்கோவிலில் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- இங்கிலாந்து அணியில் அதிக ரன் எடுத்தவர் கிராலி ஆவார்.
- பும்ராவின் பந்து வீச்சு நம்ப முடியாத வகையில் அபாரமாக இருந்தது.
இங்கிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் ஜெய்ஸ்வால் 209 ரன் குவித்து முத்திரை பதித்தார். தனது 6-வது டெஸ்டில் முதல் முறையாக இரட்டை சதத்தை பதிவு செய்தார். இதேபோல பும்ரா 45 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார்.
இந்த இருவரது பங்களிப்பையும் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் கிராலி பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஜெய்ஸ்வாலின் ஆட்டம் அபாரமாக இருந்தது. நம்ப முடியாத இன்னிங்ஸ் அவர் ஒரு அற்புதமான வீரராக திகழ்கிறார். அவர் நட்சத்திர வீரராக உருவெடுப்பார்.
பும்ராவின் பந்து வீச்சு நம்ப முடியாத வகையில் அபாரமாக இருந்தது. இது மாதிரியான ஆடுகளத்தில் சிறப்பாக வீசியது பாராட்டத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
இங்கிலாந்து அணியில் அதிக ரன் எடுத்தவர் கிராலி ஆவார். தனது 26-வது பிறந்தநாளில் அவர் 76 ரன்கள் எடுத்தார்.
- கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடனும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
- தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட தி.மு.க. கூட்டணி தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
தி.முக. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.
தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் மேலிட தலைவர்கள் முகுல் வாஸ்னிக், சல்மான்குர்ஷித் ஆகியோர் சென்னை வந்து இருந்தனர். அவர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு நேரில் சென்று தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட தலைவர்களும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
தி.மு.க. கூட்டணியில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் 9 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 8 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்த முறை அதைவிட கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த தேர்தலை விட குறைவான இடங்களே காங்கிரசுக்கு கிடைக்க வாய்ப்பு இருப்ப தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்ற கட்சிகளுடனும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க.வுடன் இன்று முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீட்டு குழுவில் இடம் பெற்றுள்ள டி.ஆர்.பாலு, ராசா, பொன்முடி, ஐ.பெரியசாமி ஆகியோருடன் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு குழுவில் இடம் பெற்றுள்ள சம்பத், சண்முகம், கனக ராஜ், குணசேகரன் ஆகியோர் இன்று பேச்சு நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு போட்டியிட விரும்பும் தொகுதிகளின் விருப்ப பட்டியலை கொடுத்தனர்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மதுரை, கோவை ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி இந்த முறை கூடுதலாக தொகுதிகளை கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, கோவை, நாகப்பட்டினம் ஆகிய 5 தொகுதிகளின் விருப்ப பட்டியலையும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வழங்கியுள்ளது.
இன்று காலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், அதைத் தொடர்ந்து
ம.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ம.தி.மு.க. நிர்வாகிகள் அர்ஜுனராஜ், செந்தில் அதிபன், ஆவடி அந்தரிதாஸ், சேஷன் ஆகியோர் தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையின்போது ம.தி.மு.க. சார்பில் 2 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேல்-சபை எம்.பி. பதவி ஒன்றை தர வேண்டும் எனவும் கேட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருச்சி, விருதுநகர், காஞ்சிபுரம், கடலூர், ஈரோடு உள்பட 6 தொகுதிகளை விருப்ப தொகுதிகளாக தேர்வு செய்து அதற்கான பட்டியலை ம.தி.மு.க. நிர்வாகிகள் வழங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
அடுத்த கட்டமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி. முஸ்லிம் லீக் கட்சியுடன் 12-ந்தேதி பேச்சு நடத்தப்படுகிறது.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடனும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இப்படி கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை விரைந்து முடிப்பதற்கு தி.மு.க. தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
காங்கிரஸ் கட்சியுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ள நிலையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற உள்ளது. இதற்கிடையே அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலை வர் மல்லிகாார்ஜூன கார்கே வருகிற 13-ந்தேதி சென்னை வருகிறார். அப்போது காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.
சென்னை வரும் கார்கே தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்புக்கு பிறகு தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை பற்றிய விவரங்கள் மற்றும் போட்டியிடும் தொகுதிகள் ஆகியவை பற்றிய விவரங்கள் வெளியாக உள்ளது.
இதைத் தொடர்ந்து கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் பற்றிய விவரங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாத இறுதிக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடித்து போட்டியிடும் தொகுதிகளை பிரித்துக்கொள்ள தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் முடிவு செய்து உள்ளன. இதன் பின்னர் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட தி.மு.க. கூட்டணி தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி இருக்கும் தி.மு.க. தேர்தல் அறிக்கையை தயாரிப்பதிலும் முழு கவனம் செலுத்தி வருகிறது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொது மக்களின் கருத்துக்களை கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு தூத்துக்குடியில் இருந்து சுற்றுப்பயணத்தை நாளை தொடங்குகிறது. இதன் பின்னர் பல்வேறு ஊர்களுக்கு சென்று இந்த குழு கருத்துக்களை கேட்கிறது.
இதன் மூலம் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணி ஆகியவற்றை இறுதி செய்யும் பணிகளில் தி.மு.க. வேகம் காட்டி உள்ளது. இதனால் தேர்தல் களம் களை கட்டியுள்ளது.
- இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவை திடீரென சந்தித்தார்.
- பெண்கள் பிரச்சினை மற்றும் பல்வேறு சமூக பிரச்சினைகளுக்காக அடிக்கடி குரல் கொடுத்து வருகிறார்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக திகழ்பவர் குஷ்பு. பாரதிய ஜனதா கட்சியில் தேசிய செயற்குழு உறுப்பினராகவும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார். பெண்கள் பிரச்சினை மற்றும் பல்வேறு சமூக பிரச்சினைகளுக்காக அடிக்கடி குரல் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் குஷ்பு நேற்று முன்தினம் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவை திடீரென சந்தித்தார். சந்திப்பின்போது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பெண்கள் பிரச்சினைகள் பற்றியும் ஜனாதிபதி முர்முவுடன் குஷ்பு விவாதித்துள்ளார். ஜனாதிபதி முர்முவை சந்தித்த புகைப்படங்களை குஷ்பு தனது வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
- தமிழ்நாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை ஆளுநர் ரவி தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
- பிப்ரவரி 19-ந் தேதி தமிழ்நாடு பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
சென்னை:
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் பிப்ரவரி 12-ந்தேதி தொடங்கும் நிலையில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று திடீரென டெல்லி சென்றுள்ளார்.
தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க. அரசுடன் கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறார். தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிறுத்தி வைப்பது, திருப்பி அனுப்புவது உள்ளிட்டவைகளால் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
அதன் பிறகு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின் பேரில் கவர்னரும் முதலமைச்சரும் நேரடியாக அமர்ந்து பேசினார்கள். ஆனாலும் இதன் விவரம் வெளியிடப்படவில்லை.
அதே நேரத்தில் தமிழ்நாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை ஆளுநர் ரவி தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
தற்போது தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 12-ந் தேதி தொடங்க உள்ளது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த உள்ளார்.
கடந்த ஆண்டு கவர்னர் உரையில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, காமராஜர், திராவிட மாடல் ஆகியவற்றை தவிர்த்துவிட்டு கவர்னர் ரவி உரையாற்றினார். அத்துடன் அவராகவே சிலவற்றையும் கவர்னர் உரையில் சேர்த்து வாசித்தார். இதனால் தமிழ்நாடு சட்டசபையில் அரசின் உரை மட்டுமே இடம் பெறும். கவர்னர் தன்னிச்சையாக வாசித்த உரை இடம்பெறாது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீர்மானத்தை வாசித்தார். உடனே சட்ட சபையில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தது பெரும் சர்ச்சையானது.
அண்மையில் கேரளா சட்டசபையில் கவர்னர் முகமது ஆரிப் கான், மாநில அரசின் உரையை முழுமையாக வாசிக்காமல் 1.15 நிமிடம் மட்டுமே வாசித்து விட்டு வெளியேறியதும் பெரும் சர்ச்சையானது. இப்பின்னணியில் தமிழ்நாடு சட்டசபை வரும் 12-ந் தேதி கூடுகிறது. பிப்ரவரி 19-ந் தேதி தமிழ்நாடு பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
நடப்பாண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரை இடம்பெற உள்ளது. இம்முறை கவர்னர் ரவி என்ன மாதிரியான நிலைப்பாடு எடுக்கப் போகிறார்? என்பது எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இச்சூழலில் இன்று திடீரென கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றுள்ளார். டெல்லிக்கு 3 நாட்கள் பயணமாக செல்லும் கவர்னர் ரவி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார். இச்சந்திப்பின்போது தமிழ்நாடு நிலவரம் குறித்து கவர்னர் ரவி ஆலோசனை நடத்துவார் என கூறப்படுகிறது.






