search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தொகுதி பங்கீடு: ம.தி.மு.க-மார்க்சிஸ்டு கம்யூ. கட்சிகளுடன் தி.மு.க. பேச்சுவார்த்தை
    X

    தொகுதி பங்கீடு: ம.தி.மு.க-மார்க்சிஸ்டு கம்யூ. கட்சிகளுடன் தி.மு.க. பேச்சுவார்த்தை

    • கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடனும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
    • தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட தி.மு.க. கூட்டணி தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

    தி.முக. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.

    தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் மேலிட தலைவர்கள் முகுல் வாஸ்னிக், சல்மான்குர்ஷித் ஆகியோர் சென்னை வந்து இருந்தனர். அவர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு நேரில் சென்று தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட தலைவர்களும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

    தி.மு.க. கூட்டணியில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் 9 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 8 இடங்களில் வெற்றி பெற்றது.

    இந்த முறை அதைவிட கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த தேர்தலை விட குறைவான இடங்களே காங்கிரசுக்கு கிடைக்க வாய்ப்பு இருப்ப தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்ற கட்சிகளுடனும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க.வுடன் இன்று முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீட்டு குழுவில் இடம் பெற்றுள்ள டி.ஆர்.பாலு, ராசா, பொன்முடி, ஐ.பெரியசாமி ஆகியோருடன் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு குழுவில் இடம் பெற்றுள்ள சம்பத், சண்முகம், கனக ராஜ், குணசேகரன் ஆகியோர் இன்று பேச்சு நடத்தினர்.

    இந்த பேச்சுவார்த்தையின்போது மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு போட்டியிட விரும்பும் தொகுதிகளின் விருப்ப பட்டியலை கொடுத்தனர்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மதுரை, கோவை ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி இந்த முறை கூடுதலாக தொகுதிகளை கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, கோவை, நாகப்பட்டினம் ஆகிய 5 தொகுதிகளின் விருப்ப பட்டியலையும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வழங்கியுள்ளது.

    இன்று காலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், அதைத் தொடர்ந்து

    ம.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ம.தி.மு.க. நிர்வாகிகள் அர்ஜுனராஜ், செந்தில் அதிபன், ஆவடி அந்தரிதாஸ், சேஷன் ஆகியோர் தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையின்போது ம.தி.மு.க. சார்பில் 2 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேல்-சபை எம்.பி. பதவி ஒன்றை தர வேண்டும் எனவும் கேட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    திருச்சி, விருதுநகர், காஞ்சிபுரம், கடலூர், ஈரோடு உள்பட 6 தொகுதிகளை விருப்ப தொகுதிகளாக தேர்வு செய்து அதற்கான பட்டியலை ம.தி.மு.க. நிர்வாகிகள் வழங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    அடுத்த கட்டமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி. முஸ்லிம் லீக் கட்சியுடன் 12-ந்தேதி பேச்சு நடத்தப்படுகிறது.

    கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடனும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இப்படி கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை விரைந்து முடிப்பதற்கு தி.மு.க. தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    காங்கிரஸ் கட்சியுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ள நிலையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற உள்ளது. இதற்கிடையே அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலை வர் மல்லிகாார்ஜூன கார்கே வருகிற 13-ந்தேதி சென்னை வருகிறார். அப்போது காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.

    சென்னை வரும் கார்கே தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்புக்கு பிறகு தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை பற்றிய விவரங்கள் மற்றும் போட்டியிடும் தொகுதிகள் ஆகியவை பற்றிய விவரங்கள் வெளியாக உள்ளது.

    இதைத் தொடர்ந்து கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் பற்றிய விவரங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த மாத இறுதிக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடித்து போட்டியிடும் தொகுதிகளை பிரித்துக்கொள்ள தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் முடிவு செய்து உள்ளன. இதன் பின்னர் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட தி.மு.க. கூட்டணி தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி இருக்கும் தி.மு.க. தேர்தல் அறிக்கையை தயாரிப்பதிலும் முழு கவனம் செலுத்தி வருகிறது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொது மக்களின் கருத்துக்களை கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு தூத்துக்குடியில் இருந்து சுற்றுப்பயணத்தை நாளை தொடங்குகிறது. இதன் பின்னர் பல்வேறு ஊர்களுக்கு சென்று இந்த குழு கருத்துக்களை கேட்கிறது.

    இதன் மூலம் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணி ஆகியவற்றை இறுதி செய்யும் பணிகளில் தி.மு.க. வேகம் காட்டி உள்ளது. இதனால் தேர்தல் களம் களை கட்டியுள்ளது.

    Next Story
    ×